My page - topic 1, topic 2, topic 3

வெள்ளாடுகளைத் தாக்கும் நோய்கள்!

டுகளை நினைத்த நேரத்தில் விற்றுக் காசாக்க முடியும் என்பதால், இவற்றை நடமாடும் வங்கியென்று அழைப்பர். அதனால், அனைத்து வீடுகளிலும் ஆடுகள் இருக்கும். வெள்ளாடுகளை விவசாயிகள் விரும்பி வளர்ப்பார்கள்.

இவற்றை நோயின்றி வளர்த்தால், நல்ல இலாபத்தை அடைய முடியும். அதனால், வெள்ளாடுகளைத் தாக்கும் நோய்களைப் பற்றியும், அவற்றைத் தடுக்கும் முறைகளைப் பற்றியும், விவசாயிகள் தெரிந்து வைத்துக் கொள்ள வேண்டும்.

நுண்ணுயிரிகளால் ஏற்படும் நோய்கள்

அடைப்பான்: இந்நோய், பேசில்லஸ் ஆந்திரோசிஸ் என்னும் நுண் கிருமியால் உண்டாகிறது. இதனால் பாதிக்கப்பட்ட ஆடுகளில், காய்ச்சல் உண்டாகும். எனவே, தீவனம் எடுக்காது.

உடல் முழுவதும், குறிப்பாக, கழுத்துப் பகுதியில் வீக்கம் இருக்கும். திடீரென்று ஆடுகள் இறந்து விடும். இறந்த ஆடுகளின் வாய், நாசித்துளை, காது அல்லது ஆசனவாயில் இருந்து உறையாத இரத்தம் வெளியேறும்.

சிகிச்சை முறை: பருவமழை தொடங்குவதற்கு முன்பே தடுப்பூசியைப் போட்டுவிட வேண்டும். ஆடுகள் மூன்று மாதக் குட்டியாக இருக்கும் போதே முதல் தடுப்பூசியைப் போட்டு விட வேண்டும்.

தொண்டை அடைப்பான்: இந்நோய், பாஸ்டுரெல்லா மல்டோசிடா என்னும் நுண் கிருமியால் உண்டாகிறது. இது, திடீரென்று தோன்றும். இதனால், வெள்ளாடுகளின் நாக்கில் வலியுடன் கூடிய வீக்கம் இருக்கும். எனவே, சுவாசிக்கத் திணறும்.

சிகிச்சை முறை: ஆண்டுதோறும் பருவமழை தொடங்கு முன், தடுப்பூசியைப் போட்டு விட வேண்டும்.

நிமோனியா: இந்நோய், பல்வேறு நுண் கிருமிகள், சுத்தமற்ற குடிநீர், தீவனம், காற்றோட்டம் இல்லாத கொட்டில் போன்றவற்றால் உண்டாகிறது. இதனால், முதலில் குளிர் நடுக்கம், அதைத் தொடர்ந்து காய்ச்சல் ஏற்படும். சுவாசிப்பதில் சிரமம் இருக்கும். இருமல் உண்டாகி மூக்கிலிருந்து சளி ஒழுகத் தொடங்கும்.

சிகிச்சை முறை: கொட்டில் சுத்தமாகவும், காற்றோட்டம் மிக்கதாகவும் இருக்க வேண்டும். வெய்யில் மற்றும் மழையில் ஆடுகளை அதிகளவில் திரிய விடக் கூடாது. நுண்மக் கொல்லிகள் மூலம் இந்நோயைக் கட்டுப்படுத்தலாம்.

துள்ளுமாரி நோய்: இந்நோய், கிளாஸ் டிரிடியம் பெர்பெரிஞ்சனஸ் என்னும் நுண் கிருமியால் உண்டாகிறது. இது, அனைத்து வயது ஆடுகளையும் தாக்கும். ஆனால், இளவயது ஆடுகளே அதிகமாகப் பாதிக்கப்படும். மழைக்குப் பிறகு முளைக்கும் பசும்புல்லை மேயும் ஆடுகளை இந்நோய் தாக்கும்.

பாதிக்கப்பட்ட ஆடுகள் மேயாமல் சோர்ந்து வயிற்று வலியால் பற்களைக் கடிக்கும். சாணம் இளக்கமாக, இரத்தம் கலந்து இருக்கும். நடக்கும் போது கால்கள் பின்ன, கழுத்து விறைக்க, கண்கள் பிதுங்க, அப்படியே மயங்கித் தலையைச் சாய்த்துக் கீழே விழுந்து விடும்.

தடுப்பு முறை: சூரியன் உதித்து ஒரு மணி நேரம் கழித்துத் தான், ஆடுகளை மேய்ச்சலுக்கு விட வேண்டும். பருவமழைக்கு முன், தடுப்பூசியைப் போட்டு விட வேண்டும்.

நச்சுக் கிருமிகளால் உண்டாகும் நோய்கள்

ஆட்டுக்கொல்லி நோய் (பிபிஆர்): இது, மார்பிலி வகை நச்சுயிரியால் உண்டாகிறது. இதனால், ஆடுகளில் 41 டிகிரி செல்சியஸ் அளவுக்குக் கடும் காய்ச்சல் இருக்கும். ஆடுகள் சோர்வாக இருக்கும். தீவனம் எடுக்காது.

மூக்கில் சளி வடிந்து உறைந்திருக்கும். கண்களில் பீளை தள்ளியிருக்கும். வாயில் ஈறு மற்றும் நாக்கில் புண்கள் உண்டாகி உமிழ்நீர்ச் சுரக்கும். இருமலும் கழிச்சலும் இருக்கும். இந்நோயால் குட்டிகள் அதிகளவில் இறக்கும்.

சிகிச்சை முறை: நோயுற்ற ஆடுகளை உடனே கால்நடை மருத்துவரிடம் காட்டி சிகிச்சை அளிக்க வேண்டும். இந்நோய் வராமல் தடுக்க, கொட்டிலும் சுற்றுப்புறமும் சுத்தமாக இருக்க வேண்டும்.

வெளியில் இருந்து புதிதாக வாங்கி வந்த ஆடுகளை, குறைந்தது இரு வாரங்கள் தனியே வைத்து, நோய் எதுவும் இல்லை என உறுதி செய்த பிறகே மந்தையில் சேர்க்க வேண்டும்.

ஆண்டுக்கு ஒருமுறை ஆடுகளுக்கு, குறிப்பாக 3-6 மாதக் குட்டிகளுக்கு, கண்டிப்பாகத் தடுப்பூசியைப் போட்டு விட வேண்டும்.

ஆட்டம்மை: இது, ஒருவகை நச்சுயிரியால் உண்டாகிறது. இதனால் பாதிக்கப்பட்ட ஆடுகளின் உடல் முழுவதும் வலியுடன் கூடிய கொப்புளங்கள் தோன்றும். இவை, பத்து நாட்களில் சிதைந்து காயத் தொடங்கும். குறிப்பாக, முகம், மடிப்பகுதி, சுவாச மற்றும் செரிமான உறுப்புகள் பாதிக்கப்படும்.

சிகிச்சை முறை: தடுப்பூசியைப் போட வேண்டும். நோயுற்ற ஆடுகளை மற்ற ஆடுகளுடன் சேர்க்காமல் தனியாகப் பிரித்து வைக்க வேண்டும். சுகாதாரமான முறையில் பராமரிக்க வேண்டும்.

கோமாரி நோய்: இது, 3-4 கோமாரி வகை நச்சுயிரிகளால் உண்டாகிறது. இதனால், வாயிலும், காலிலும் கொப்புளங்கள் தோன்றும். எச்சில் ஒழுகிக் கொண்டே இருக்கும். உண்ண இயலாது. கொப்புளங்கள் உடைந்து புண்கள் உருவாகும்.

சிகிச்சை முறை: ஆண்டுதோறும் பருவமழை தொடங்கும் முன்னும், கோடைக்காலம் தொடங்கும் முன்னும் என, இரண்டு முறை, தடுப்பூசியைப் போட்டு விட வேண்டும்.

நோயுற்ற ஆடுகளை, நல்ல ஆடுகளுடன் சேர்க்காமல் பிரித்து வைக்க வேண்டும். கொப்புளங்களால் வரும் புண்களைக் கிருமி நாசினியால் சுத்தம் செய்து மருந்திட வேண்டும். புண்களில் ஈக்கள் உட்காராமல் இருக்க, வேப்ப எண்ணெய்யைத் தடவலாம்.

நீலநாக்கு நோய்: இந்நோய், ஆர்பி வைரஸ் என்னும் நச்சுயிரியால் உண்டாகிறது. இது, செம்மறி ஆடுகளை அதிகளவில் தாக்கும். இதனால், காய்ச்சல், சளி, தும்மல், இருமல், சுவாசிப்பதில் சிரமம், சளி கெட்டியாவதால் மூக்கடைப்பு ஆகியன ஏற்படும்.

மேலும், நான்கு நாட்களில் உதடு, மூக்கு, நாக்கு, குளம்பின் மேற்பகுதி மற்றும் கீழ்த்தாடை வீங்குதல், நாக்கு நீல நிறமாக மாறுதல், உண்ணாமல் இருத்தல் ஆகிய நிகழ்வுகள் உண்டாகி, ஒரு வாரத்தில் ஆடுகள் இறந்து விடும்.

சிகிச்சை முறை: போரிக் பொடியைத் தேங்காய் எண்ணெய்யில் கலந்து, புண்களில் தினமும் இருமுறை போட வேண்டும். நோயெதிர்ப்பு மருந்துகளை ஐந்து நாட்கள் தர வேண்டும். மென்மையான தீவனங்களை இட வேண்டும்.

தக்க தடுப்பூசியைப் போட்டு, நோய்ப் பரவலைத் தடுக்க வேண்டும். கொட்டிலில் நீர்த் தேங்கக் கூடாது. தேங்கியுள்ள நீரில் ம.எண்ணெய் அல்லது ப்யூடாக்ஸ் மருந்தைத் தெளித்து, கொசுக்களின் வளர்வதைக் கட்டுப்படுத்த வேண்டும்.

தடுப்பூசிகள்

ஆட்டுக்கொல்லி: முதல் தடுப்பூசி: 3-4 மாதம். தொடர் தடுப்பூசி: ஆண்டில் ஒருமுறை.

கோமாரி நோய்: முதல் தடுப்பூசி: 2 மாதத்தில். தொடர் தடுப்பூசி: ஆண்டில் ஒருமுறை.

துள்ளுமாரி: முதல் தடுப்பூசி: 6 மாதத்தில். தொடர் தடுப்பூசி: ஆண்டில் ஒருமுறை.

ஆட்டம்மை: முதல் தடுப்பூசி: 3-6 மாதத்தில். தொடர் தடுப்பூசி: நோயுள்ள இடங்களில் மட்டும் ஆண்டுக்கு ஒருமுறை.

தொண்டை அடைப்பான்: முதல் தடுப்பூசி: 6 மாதத்தில். தொடர் தடுப்பூசி: நோயுள்ள இடங்களில் மட்டும் ஆண்டுக்கு ஒருமுறை.

அடைப்பான் நோய் : முதல் தடுப்பூசி: 6 மாதத்தில். தொடர் தடுப்பூசி: நோயுள்ள இடங்களில் மட்டும் ஆண்டுக்கு ஒருமுறை.

டெட்டனஸ் ஜன்னி: முதல் தடுப்பூசி: ஈனுவதற்கு 6-8 வாரம் இருக்கும் போது. தொடர் தடுப்பூசி: ஆண்டில் ஒருமுறை.


மரு. இரா.அருண், முனைவர் இரா.உமாராணி, மரு. க.அருளானந்தம், முனைவர் சி.சௌபரண்யா, முனைவர் இரா.பு.விஷ்ணுராகவ், கால்நடை சிகிச்சை வளாகம், கால்நடை மருத்துவக் கல்லூரி, தேனி – 625 602.

Share:

  சந்தேகமா? கேளுங்கள்!  

 

இன்னும் படியுங்கள்!

Enable Notifications OK No thanks