My page - topic 1, topic 2, topic 3

ஆடுகளின் பருவங்களும் தீவன முறைகளும்!

செய்தி வெளியான இதழ்: 2017 டிசம்பர்.

டுகள் இறைச்சிக்காகத் தான் வளர்க்கப்படுகின்றன. எனவே, அதிகளவில் குட்டிகளை ஈனும் ஆடுகளை வளர்ப்பதும், குட்டிகளின் எடையைக் கூட்டுவதும் அவசியம். இதற்கு, குட்டிகள் பிறந்தது முதல் அவற்றின் வளர் பருவங்களுக்குத் தகுந்த தீவனத்தைக் கொடுக்க வேண்டும். அந்த முறைகளைப் பற்றி இங்கே காணலாம்.

ஏழைகள், பெரிய பண்ணையாளர்கள் என அனைவரும் விரும்பும் தொழில் ஆடு வளர்ப்பு. இதில் இலாபத்தை அதிகரிப்பதில் தீவனம் முக்கியப் பங்கை வகிக்கிறது. உற்பத்திச் செலவில் 65-70 சதவீதம் தீவனத்துக்காக ஆகிறது. ஆகையால், ஆடுகளின் வயது, உற்பத்தித் திறன், வளர் பருவங்களைக் கருத்தில் கொண்டு, சத்துகளின் தேவைக்கு ஏற்ப, தீவனத்தில் மாற்றம் செய்து சரிவிகிதத் தீவனத்தை அளித்தால், உற்பத்திச் செலவைக் குறைத்து இலாபத்தைக் கூட்டலாம்.

ஆடுகளுக்குத் தேவையான சத்துகள்

ஆடுகளின் வளர்ச்சிக்கும் உற்பத்திக்கும், எரிசக்தி, புரதம், நார்ச்சத்து, கொழுப்பு, உயிர்ச்சத்து, தாதுப்புகள், நீர் ஆகியன மிகவும் முக்கியம். வளர்ப்பு முறைக்கேற்ப ஆடுகளின் வளர்ச்சியும் உற்பத்தியும் வேறுபடுகின்றன. எடுத்துக்காட்டாக, மேய்ச்சல் முறையில் வளரும் ஆடுகளுக்குப் புரதச்சத்து, தாதுப்புகள், உயிர்ச் சத்துகள் போதியளவில் கிடைப்பதில்லை. ஆகையால், வளர்ச்சியும் உற்பத்தியும் குறைகின்றன. கொட்டில் முறையில் வளரும் ஆடுகளுக்குப் பசுந்தீவனம், உலர் தீவனம், மரத்தழை மற்றும் அடர் தீவனத்தை 150-200 கிராம் கொடுத்தால், வளர்ச்சியும் உற்பத்தியும் அதிகமாகும்.

பொதுவாக, ஆடுகள் அவற்றின் உடல் எடையில் 3-5 சதம் வரை உலர் தீவனத்தை உண்ணும். ஆடுகளின் வளர்ச்சியும் உற்பத்தித் திறனும், அவற்றின் வயது மற்றும் பருவத்துக்குத் தகுந்து மாறுபடும். அதற்கேற்ப, தீவனத்தின் அளவும், சத்துகளின் தேவையும் வேறுபடும். ஆகையால், ஆடுகளின் பருவங்களுக்குத் தகுந்து, அளவிலும் சத்திலும் மாற்றமுள்ள தீவனத்தைக் கொடுத்தால், உற்பத்தித் திறன் கூடும்; தீவனச் செலவு குறையும்; பண்ணை இலாபத்தில் இயங்கும்.

ஆடுகளின் பருவங்கள்

பிறந்த குட்டிகள், தாயுடன் இருக்கும் குட்டிகள், தாயில்லாக் குட்டிகள், வளர்பருவக் குட்டிகள், பருவமடைந்த பெட்டையாடுகள், சினையாடுகள், தாய் ஆடுகள், பால் வற்றிய ஆடுகள், இனப்பெருக்கக் கிடாக்கள், இறைச்சிக் கிடாக்குட்டிகள்.

அடர் தீவனத்தின் அவசியம்

பசுந்தீவனம், உலர் தீவனம் மூலம், உடல் வளர்ச்சிக்குத் தேவையான சத்துகள் ஆடுகளுக்குக் கிடைத்தாலும், சிறந்த உற்பத்திக்கான சத்துகள் கிடைக்க, அடர் தீவனத்தையும் கொடுக்க வேண்டும். அடர் தீவனத் தயாரிப்பில் முக்கியமாகக் கவனிக்க வேண்டியவை, வயது, பருவம் மற்றும் வளர்ச்சி. மேலும், 14-18% புரதமும், 65-75% மொத்தச் செரிமானச் சத்துகளும் இருக்கும் வகையில், அருகில் கிடைக்கும் பொருள்களைக் கொண்டு குறைந்த செலவில் தயாரிக்க வேண்டும்.

அடர் தீவனத்துக்கான மூலப்பொருள்கள்

எரிசக்தி மிக்கவை: மக்காச்சோளம், வெள்ளைச்சோளம், அரிசிக் குருணை, மரவள்ளிக் கிழங்கு மாவு, சர்க்கரையாலைக் கழிவு.

புரதச்சத்து மிக்கவை: நிலக்கடலை, எள், சோயா, தேங்காய், பருத்திக்கொட்டை, புண்ணாக்கு வகைகள்.

எரிசக்தி மற்றும் குறைந்த புரதமுள்ள பொருள்கள்: அரிசி, கோதுமைத் தவிடு, உளுந்து நொய், பாசிப்பயறு நொய், துவரம் பொட்டு, கருவேலங் காய்கள், மரவள்ளிக் கிழங்குத் திப்பி. தாதுப்புகள், சமையல் உப்பு.

அடர் தீவனத்தில் இருக்க வேண்டிய சத்துகள்

ஆரம்பக்காலக் குட்டித் தீவனம்: புரதம் 18 சதம், எரிசக்தி 75 சதம்.

வளரும் பருவ ஆடுகள்: புரதம் 16 சதம், எரிசக்தி 70 சதம்.

வளர்ந்த ஆடுகளுக்கான தீவனம்: புரதம் 14 சதம், எரிசக்தி 65 சதம்.

பிறந்த குட்டிகளுக்கான தீவனம்

முதல் மூன்று நாட்களுக்குச் சீம்பாலைக் கட்டாயம் கொடுக்க வேண்டும். இது, ஒரு நாளைக்கு ஒரு கிலோ உடல் எடைக்கு 100 மி.லி. வீதம் இருக்க வேண்டும். ஒரு நாளைக்கு 0.7- 0.9 லிட்டர் தாய்ப்பால் அல்லது புட்டிப்பாலை, முதல் இரு வாரத்துக்கு 3-5 முறை கொடுக்க வேண்டும். மூன்று வாரத்துக்கு மேல், பால்குடி மறக்கும் காலமான 3 மாதம் வரை, காலை மாலையில் மட்டும் பாலைக் குடிக்கவிட வேண்டும்.

மூன்று குட்டிகள் இருப்பின், இரண்டு குட்டிகள் பாலைக் குடித்த பின், மூன்றாவது குட்டியைக் குடிக்கவிட வேண்டும். தேவை ஏற்படின் பாலைக் கறந்து புட்டி அல்லது பாத்திரம் மூலம் கொடுக்கலாம். 3-4 வாரங்களில் ஆரம்பக்காலக் குட்டித் தீவனத்தைக் கொடுத்துப் பழக்க வேண்டும். சிறிது சிறிதாக அளவைக் கூட்ட வேண்டும். செரிமானக் கோளாறு, வயிற்றுப்போக்கு ஏற்படாமல் பார்த்துக்கொள்ள வேண்டும். இளம்புல், தளிர் இலைகளை 3-4 வார வயதில் கொடுக்கத் தொடங்கலாம். உண்ணப் பழகியதும் சிறிது சிறிதாக அளவைக் கூட்டலாம். மூன்று மாதத்தில் பால்குடியை முற்றிலுமாக நிறுத்தி விட வேண்டும்.

வளர் பருவக் குட்டிகள்

3 முதல் 4 மாதம் வரை, வேலிமசால், கினியாப்புல், கோ.4, அகத்தி போன்றவற்றை, அன்றாடம் ஒரு கிலோ கொடுக்கலாம். பிறகு, அளவைக் கூட்டி 6 மாதம் வரை, 2 கிலோ கொடுக்கலாம். 6-9 மாதம் வரை 3 கிலோ கொடுக்கலாம். 3-4 மாதம் வரை அன்றாடம் 50 கிராம், 5-6 மாதத்தில் 100 கிராம், 7-9 மாதத்தில் 200 கிராம் வீதம் அடர் தீவனத்தைக் கொடுக்கலாம்.

பருவமடைந்த பெட்டையாடுகளுக்கான தீவனம்

பத்து மாதத்தில் தொடங்கி ஓராண்டுக்குள் பெட்டையாடுகள் பருவமடைகின்றன. இப்பருவத்தில் இனவிருத்திக்காக வளர்க்கும் பெட்டைகளைத் தனியாகப் பிரித்துத் தீவனமளிக்க வேண்டும். பருவம் தொடங்குவதற்கு முன் கூடுதல் சத்துள்ள தீவனங்களைக் கொடுத்தால், பருவ அறிகுறிகள், கருத்தரிக்கும் தன்மை போன்றவை சிறப்பாக வெளிப்பட்டு, இரட்டைக் குட்டிகளை ஈனும் அளவு அதிகரிக்கும். இது செழுமைப்படுத்துதல் எனப்படும். அன்றாடம் பசுந்தீவனம் 3-4 கிலோ, உலர் தீவனம் 1 கிலோ, அடர் தீவனம் 250 கிராம் கொடுத்துச் செழுமைப்படுத்த வேண்டும்.

சினை ஆடுகளுக்கான தீவனம்

சினையாடுகளைத் தனியாகப் பிரித்துத் தீவனமளிக்க வேண்டும். முதல் 3 மாதங்களை விட, கடைசி 2 மாதங்களில் கருவின் வளர்ச்சி வேகமாக இருக்கும். ஆகையால், இக்காலத்தில் வழக்கத்தைக் காட்டிலும் 1-2 மடங்கு அதிகமாகத் தீவனத்தைக் கொடுக்க வேண்டும். கூடுதலாகக் கொடுத்தால், குட்டிகளில் சிறந்த பிறப்பு எடை, குட்டிகள் இறத்தல் குறைதல், தாய் ஆடுகளில் சிறந்த பால் சுரப்பு, அதன் மூலம் குட்டிகளின் வளர்ச்சி அதிகரித்தல் போன்ற நன்மைகள் ஏற்படும்.

முதல் 3 மாதம் வரையில் பெட்டையாட்டுத் தீவனத்தைக் கொடுக்கலாம். அதாவது, பசுந்தீவனம் 3-4 கிலோ, உலர் தீவனம் 1 கிலோ, அடர் தீவனம் 250 கிராம். சினைப் பிடித்த 4-5 மாதங்களில் அளவைக் கூட்டலாம். அதாவது, பசுந்தீவனம் 5-6 கிலோ, உலர் தீவனம் 1 கிலோ, அடர் தீவனம் 350-400 கிராம் கொடுக்கலாம். இதனை 2-3 வேளைகளில் பிரித்துக் கொடுக்க வேண்டும். சுத்தமான குடிநீர் மற்றும் தாதுப்புகள் எப்போதும் ஆடுகளுக்குக் கிடைக்க வேண்டும். ஈனும் போது அல்லது ஈன்ற பிறகு, தானியங்களின் அளவைக் குறைத்து, உலர் தீவனத்தைத் தேவையான அளவு கொடுக்கலாம்.

தாய் ஆடுகளுக்கான தீவனம்

தாய் ஆட்டுக்கு, சுத்தமான, வெதுவெதுப்பான குடிநீரைக் கொடுக்க வேண்டும். மெதுவாகத் தீவன அளவைக் கூட்ட வேண்டும். அன்றாடம் தேவைப்படும் தீவனத்தை 6-7 தடவையாகப் பிரித்துக் கொடுக்க வேண்டும். எளிதில் செரிக்கும் நார்ச்சத்துள்ள தீவனத்தைக் கொடுக்க வேண்டும். பாலுற்பத்திக்குக் கூடுதல் சத்துகள் தேவைப்படுவதால், பால் கொடுக்கும் 3 மாதங்களுக்குத் தீவன அளவைக் கூட்ட வேண்டும். அதாவது, அன்றாடம் பசுந்தீவனம் 5-6 கிலோ, உலர் தீவனம் 1 கிலோ, அடர் தீவனம் 400-500 கிராம் கொடுக்க வேண்டும்.

பால் வற்றிய ஆடுகளுக்கான தீவனம்

வெற்று ஆடுகளைத் தனியாகப் பிரித்துத் தீவனமளிக்க வேண்டும். இக்காலத்தில் சத்துக் குறைவான தீவனங்களை அளித்துச் செலவைக் குறைக்கலாம். மேய்ச்சல் முறை ஆடுகளுக்குக் கூடுதல் தீவனம் தேவைப்படாது. ஆனால், வெற்று ஆடுகள் சினையாவதற்கு முன், முந்திய சினை மற்றும் பாலுற்பத்திக் காலத்தில் ஏற்பட்ட அழுத்தத்தில் இருந்து விடுபட்டு உடல் தேறுவதற்கு ஏதுவாக, தீவன அளவில் மாற்றம் செய்து செழுமைப்படுத்த வேண்டும். இதனால், சினைத்திறன் கூடுவதுடன், இரண்டு மூன்று குட்டிகளை ஈனுவதற்கான கரு முட்டைகள் உற்பத்தியாகி அதிகளவில் குட்டிகளை ஈனும்.

இனப்பெருக்கக் கிடாக்களுக்கான தீவனம்

கிடாக்கள் இனவிருத்திக்கான உடலமைப்புடன் இருக்க, தேவையான சத்துள்ள தீவனங்களைக் கொடுக்க வேண்டும். உடல் பருத்து அதிகக் கொழுப்புடன் இருக்கும் கிடாக்களுக்கு இனச்சேர்க்கையில் நாட்டம் இருக்காது. உடல் மெலிந்து இருந்தாலும் இனச் சேர்க்கைக்கு அதிகமாகப் பயன்படாது. உடலை நன்கு பராமரிக்க உடற்பயிற்சி மிகவும் அவசியமாதலால், திறந்த வெளியில் கிடாக்களை உலவவிட வேண்டும்.

இறைச்சிக் கிடாக்குட்டிகளுக்கான தீவனம்

மூன்று மாத கிடாக்குட்டிகளைத் தாயிடமிருந்து பிரித்துத் தீவனம் அளிக்கலாம். தாதுப்புக் கட்டிகளைக் கொட்டகையில் தொங்கவிட வேண்டும். 15 நாட்களுக்கு ஒருமுறை உடல் எடையைக் கவனித்து, பசுந்தீவனம், உலர்தீவனம், அடர் தீவனத்தைக் கொடுக்க வேண்டும். இப்படி ஆடுகளை, அவற்றின் வயது, உற்பத்தித் திறனுக்கு ஏற்ப, அளவிலும் சத்திலும் மாற்றம் செய்து சரிவிகிதத் தீவனத்தைக் கொடுத்தால், ஆடுகள் மூலம் நல்ல வருமானத்தை அடையலாம்.


மருத்துவர் வ.குமரவேல், முனைவர் சு.செந்தூர்குமரன், வேளாண்மை அறிவியல் நிலையம், குன்றக்குடி, சிவகங்கை – 630 206.

Share:

  சந்தேகமா? கேளுங்கள்!  

 

இன்னும் படியுங்கள்!

Enable Notifications OK No thanks