கத்தரி சாகுபடி!

கத்தரி சாகுபடி kaththiri

செய்தி வெளியான இதழ்: 2017 மார்ச்.

வெப்ப மண்டலப் பகுதிகளில் விளையும் முக்கியக் காய்கறிப் பயிர்களில் கத்தரியும் ஒன்றாகும். இந்தியாவில் தென் மாநிலங்களில் அதிகளவில் பயிராகிறது. தமிழ்நாட்டில் இது முக்கியமான காய்கறிப் பயிராக விளங்குகிறது. ஆனால், இதன் சராசரி உற்பத்தித் திறன் பல்வேறான சாகுபடி சார்ந்த சிக்கல்களால் குறைவாக உள்ளது.

எனவே, கத்தரி சாகுபடியில் உயர் விளைச்சல் மற்றும் அதிக இலாபத்தைப் பெற, விவசாயிகள் நவீனத் தொழில் நுட்பங்களைக் கையாள வேண்டியது அவசியம். இவற்றைப் பற்றி இங்கே காணலாம்.

இரகங்கள்

கோ.1, 2, பி.எல்.ஆர்.1, 2, அண்ணாமலை, வி.ஆர்.எம்.1 என்னும் முள் இரகம் ஆகிய சாதாரண இரகங்களும், கோ.பி.எச்.2, அர்க்கா ஆனந்த் ஆகிய வீரிய ஒட்டு இரகங்களும் கத்தரியில் உள்ளன.

மண்வாகு

நல்ல வடிகால் வசதியுள்ள, அங்ககப் பொருள்கள் நிரம்பிய மண் வகைகள், கத்தரி சாகுபடிக்கு மிகவும் ஏற்றவை. மண்ணின் கார, அமிலத் தன்மை 6.5-7.5 அளவில் இருந்தால், காய்ப்பிடிப்புத் திறன் அதிகமாக இருக்கும்.

பருவம் மற்றும் விதையளவு

கத்தரி விதைப்புக்கும் நடவுக்கும், டிசம்பர் ஜனவரி மற்றும் மே ஜூன் ஆகிய மாதங்கள் ஏற்றவை. சாதாரண இரகங்கள் என்றால், ஏக்கருக்கு 60 கிராம் விதைகளும், வீரிய ஒட்டு இரகங்கள் என்றால், ஏக்கருக்கு 80 கிராம் விதைகளும் தேவைப்படும்.

விதைநேர்த்தி

ஒரு கிலோ விதைகளுடன் 4 கிராம் டிரைக்கோடெர்மா விரிடி அல்லது 10 கிராம் சூடோமோனாஸ் ப்ளோரசன்சைக் கலந்து, விதைப்பதற்கு 24 மணி நேரத்துக்கு முன் விதை நேர்த்தி செய்ய வேண்டும். மேலும், விதைப்பதற்கு முன், விதைகளை உயிர் உரமான அசோஸ் பயிரில்லத்தை, 100 கிராம் விதைகளுக்கு 10 கிராம் வீதம் எடுத்து, தேவையான அளவு அரிசிக் கஞ்சியில் கலந்து விதைகளை நேர்த்தி செய்து, 20-30 நிமிடங்கள் நிழலில் உலர்த்தி விதைக்க வேண்டும்.

நாற்றங்கால் பராமரிப்பு

தொழுவுரம், மணல், செம்மண் ஆகியவற்றைச் சமமாகக் கலந்து மேட்டுப் பாத்திகளை அமைக்க வேண்டும். பிறகு, சதுர மீட்டருக்கு நன்கு மட்கிய தொழுவுரம் 10 கிலோ, வேப்பம் புண்ணாக்கு 1 கிலோ, கார்போ பியூரான் 10 கிராம், ஊட்டமேற்றிய சூப்பர் பாஸ்பேட் 100 கிராம் வீதம் இட வேண்டும்.

இந்தப் பாத்திகளில் 10 செ.மீ. இடைவெளியில், கோடுகளைக் கிழித்து, ஒவ்வொரு விதையாக விதைக்க வேண்டும். பிறகு, லேசாக மண் அல்லது மணலைக் கொண்டு விதைகளை மூட வேண்டும். விதைகள் நன்கு முளைப்பதற்கு ஏற்ற வகையில் உடனே பூவாளியைக் கொண்டு நீரைத் தெளிக்க வேண்டும்.

மேலும், நாற்றங்கால் ஈரம் குறையாமலும், மழையால் பாதிக்காமலும் இருக்க, பாத்திகளின் மீது தென்னங்கீற்று அல்லது வைக்கோலால் மூடாக்குப் போட வேண்டும். பிறகு, ஈரப்பதத்தைப் பொறுத்து, தினமும் நீரைத் தெளிக்க வேண்டும். நாற்றழுகல் நோயைக் கட்டுப்படுத்த, தாமிர ஆக்சி குளோரைடு மருந்தை, ஒரு லிட்டர் நீருக்கு 2.5 கிராம் வீதம் கலந்து, விதைகள் முளைத்து வரும் போதும், பிறகு ஏழு நாட்கள் கழித்தும் ஊற்ற வேண்டும்.

இடைவெளி

சாதாரண இரகங்கள் என்றால், 60×60 செ.மீ. இடைவெளியில், வீரிய ஒட்டு இரகங்கள் என்றால், 90×60 செ.மீ. இடைவெளியில் நட வேண்டும்.

நிலத்தயாரிப்பும் நடவும்

நிலத்தை நன்கு உழுது பண்படுத்த வேண்டும். பின்பு, ஏக்கருக்கு 10 டன் வீதம் மட்கிய தொழுவுரத்தை இட்டு, முன்பு கூறியுள்ள அளவுகளில் பார்களை அமைக்க வேண்டும். பிறகு, ஏக்கருக்கு 800 கிராம் பாஸ்போ பாக்டீரியாவை 20 கிலோ தொழுவுரத்தில் கலந்து இட வேண்டும். பிறகு, பார்களில் நீரைப் பாய்ச்சி, 30-35 நாட்கள் வயதுள்ள நாற்றுகளை முன்பு கூறியுள்ள இடைவெளியில் நடவேண்டும்.

ஒருங்கிணைந்த சத்து மேலாண்மை

முன்பு கூறியுள்ள அளவில் தொழுவுரம் மற்றும் உயிர் உரங்களான அசோஸ் பயிரில்லம், பாஸ்போ பாக்டீரியாவை இட வேண்டும். மேலும், ஏக்கருக்கு 800 கிலோ மண்புழு உரத்தையும், 100 கிலோ வேப்பம் புண்ணாக்கையும் இடலாம். அடுத்து, கீழே கூறியுள்ள அளவுகளில் இரசாயன உரங்களையும் இட வேண்டும்.

சாதாரண இரகங்களுக்கு அடியுரமாக, ஏக்கருக்கு 20 கிலோ தழைச்சத்தைக் கொடுக்கவல்ல 45 கிலோ யூரியாவையும், 20 கிலோ மணிச்சத்தைக் கொடுக்கும் 125 கிலோ சூப்பர் பாஸ்பேட்டையும், 12 கிலோ சாம்பல் சத்தைக் கொடுக்கும் 20 கிலோ பொட்ட்டசையும் இட வேண்டும். மேலுரமாக, நடவு செய்த 30 நாளில், 45 கிலோ யூரியாவை இட வேண்டும்.

வீரிய ஒட்டு இரகங்களுக்கு அடியுரமாக, ஏக்கருக்கு 40 கிலோ தழைச்சத்தைக் கொடுக்கும் 90 கிலோ யூரியாவையும், 60 கிலோ மணிச்சத்தைக் கொடுக்கும் 375 கிலோ சூப்பர் பாஸ்பேட்டையும், 40 கிலோ சாம்பல் சத்தைக் கொடுக்கும் 67 கிலோ பொட்டாசையும் இட வேண்டும்.

மேலுரமாக, நடவு செய்த 30 நாளில், 90 கிலோ யூரியாவை இட வேண்டும். இந்த உரங்களைச் செடியில் இருந்து 10 செ.மீ. இடைவெளியில் பட்டையாக மண்ணிலிட்டு, செடிகளுக்கு மண்ணை அணைத்து உடனே நீரைப் பாய்ச்ச வேண்டும்.

நுண்ணூட்டக் கலவைத் தெளிப்பு

காய்கறிப் பயிர்களுக்கு எனத் தயாரிக்கப்பட்ட நுண்ணூட்டக் கலவையை, ஒரு லிட்டர் நீருக்கு 5 கிராம் வீதம் கலந்து, நடவு செய்த 30 நாளில் தொடங்கி, 15 நாள் இடைவெளியில் தெளித்து வர வேண்டும். இதனால், 30 சதவீதம் அளவுக்குக் கூடுதல் மகசூலைப் பெற முடியும்.

நீர் நிர்வாகம்

நடவு செய்த மூன்றாம் நாளில் உயிர் நீர் பாய்ச்ச வேண்டும். பிறகு, ஏழு நாட்களுக்கு ஒருமுறை பாசனம் கொடுக்க வேண்டும். மழைக் காலத்தில் நிலத்தில் நீர்த் தேங்காமல் பார்த்துக் கொள்ள வேண்டும்.

களை நிர்வாகம்

கத்தரி நாற்றுகளை நடுவதற்கு முன், களைக்கொல்லியை இடுதல் அவசியம். களைகளை முளைக்கு முன் கட்டுப்படுத்த, புளுகுளோரலின் என்னும் களைக்கொல்லியை ஏக்கருக்கு 900 மில்லி அல்லது பென்டிமெத்தலின் ஒரு லிட்டர் வீதம் எடுத்து, சீராகத் தெளிக்க வேண்டும். உடனே பாசனம் செய்ய வேண்டும். அடுத்து, மேலுரம் இடுவதற்கு முன், அதாவது 30 நாளில் கைக்களை எடுக்க வேண்டும்.

வளர்ச்சியூக்கித் தெளிப்பு

நடவு செய்த 15 ஆம் நாள் மற்றும் பூக்கும் பருவத்தில், டிரைய காண்டனால் என்னும் வளர்ச்சி ஊக்கியை, ஒரு லிட்டர் நீருக்கு 2 மில்லி வீதம் கலந்து தெளிக்க வேண்டும். மேலும், பஞ்சகவ்யா 3 சதவீதக் கரைசலை, நடவு செய்த 15, 30, 45 ஆகிய நாட்களில் தெளிக்கலாம்.

பூச்சி மற்றும் நோய் மேலாண்மை

ஒரு கிலோ விதைகளுக்கு 4 கிராம் டிரைக்கோடெர்மா விரிடி அல்லது 10 கிராம் சூடோமோனாஸ் கொண்டு விதைநேர்த்தி செய்ய வேண்டும். ஏக்கருக்கு 10 பறவைத் தாங்கிகளை வைக்க வேண்டும். ஒரு லிட்டர் நீருக்கு 10 கிராம் கணக்கில் கலந்து நாற்றங்காலில் தெளிப்பதுடன், நாற்றுகளின் வேர்களை 30 நிமிடம் நனைத்து நட வேண்டும். ஏக்கருக்கு 100 கிலோ வேப்பம் புண்ணாக்கை இட வேண்டும். மக்காச் சோளத்தை வரப்புப் பயிராக வளர்த்து, சாற்றை உறிஞ்சும் பூச்சிகளின் நடமாட்டத்தைத் தடுக்க வேண்டும்.

ஏக்கருக்கு 10 மஞ்சள் ஒட்டுப் பொறிகளை வைத்து, சாற்றை உறிஞ்சும் பூச்சிகளைக் கட்டுப்படுத்த வேண்டும். தண்டுத் துளைப்பான்கள் தாக்கிய செடிகளின் பாகங்களைச் சேகரித்து அழிக்க வேண்டும். தண்டுத் துளைப்பான்களைக் கட்டுப்படுத்த, ஏக்கருக்கு 5 இனக்கவர்ச்சிப் பொறிகளை வைக்க வேண்டும். ஏக்கருக்கு 40,000 டிரைக்கோடெர்மா முட்டை ஒட்டுண்ணிகளை விட்டுத் தண்டுத் துளைப்பான்களைக் கட்டுப்படுத்த வேண்டும்.

வேப்பெண்ணெய் 10,000 பி.பி.எம். கலவை ஒரு சதம் அல்லது வேப்பங் கொட்டைச்சாறு 5 சத அளவில் தெளிக்க வேண்டும். தண்டு மற்றும் காய்த் துளைப்பான்களின் தாக்குதல் 5 சதத்தைத் தாண்டினால், ப்ளுபெண்டையாமைடு 20 WDG மருந்தை, ஏக்கருக்கு 150 கிராம் அளவில் தெளிக்க வேண்டும்.

மகசூல்

நடவு செய்த 70 நாளில் முதல் அறுவடையைச் செய்யலாம். நன்கு விளைந்த காய்களை அறுவடை செய்து, பூச்சித் தாக்குதல் உள்ள காய்களை நீக்கி விட்டு விற்பனை செய்ய வேண்டும். நன்கு பராமரிக்கும் வயலில் இருந்து, இரகத்தைப் பொறுத்து, ஏக்கருக்கு 20 முதல் 56 டன்கள் வரையில் மகசூல் கிடைக்கும்.


கத்தரி சாகுபடி RAMESH RAJA 2

ந.ரமேஷ்ராஜா, வேளாண்மை அறிவியல் நிலையம், கீழ்நெல்லி, வெம்பாக்கம் வட்டம், திருவண்ணாமலை மாவட்டம் – 604 410.

Share:

விவசாயம் / கால்நடை வளர்ப்புக் குறித்து

சந்தேகமா? கேளுங்கள்!


இன்னும் படியுங்கள்!