செய்தி வெளியான இதழ்: 2017 நவம்பர்.
பூச்சிகள் என்றால் மற்ற உயிரினங்களுக்கு உணவாகக் கூடியவை என்றே நாம் அறிந்து வருகிறோம். இதற்கும் மேலாகச் சில பூச்சிகள் செய்யும் வேலைகள் மகத்தானவை. அவற்றுள் தேனீக்களும் அடங்கும். வேளாண்மையின் உயிர்ப்புக்கும் ஊட்டத்துக்கும் வழிகாட்டும் நோக்கில் அமைந்தது தேனீ வளர்ப்பு. இத்தகைய தேனீக்கள் மற்றும் தேனீ வளர்ப்பைப் பற்றிப் பார்க்கலாம்.
தேனீக்களின் வகைகள்
தேனீக்கள் உருவத்தில் சிறியவை. இவற்றில் நான்கு வகைகள் உள்ளன. அவையாவன: ஏபிஸ் டார்சோட்டா, ஏபிஸ் ஃப்ளோரியே, ஏபிஸ் இண்டிகா, மெலிபோனா இரிடிபென்னிஸ்.
ஏபிஸ் டார்சோட்டா: இது, இராட்சதத் தேனீ என அழைக்கப்படுகிறது. தேனீ வகைகளில் இதுதான் மிகப் பெரியது. ஒரு தேனீக் கூட்டம், ஆண்டுக்கு 37 கிலோ தேனைக் கொடுக்கும்.
ஏபிஸ் ஃப்ளோரியே: இது, சிறிய தேனீ என அழைக்கப்படுகிறது. ஒரு தேனீக் கூட்டம், ஆண்டுக்கு 0.5-1.0 கிலோ தேனைக் கொடுக்கும்.
ஏபிஸ் இன்டிகா: இது, இந்தியத் தேனீ என அழைக்கப்படுகிறது. ஒரு தேனீக் கூட்டம், ஆண்டுக்கு 2.0-5.0 கிலோ தேனைக் கொடுக்கும்.
மெலிபோனா இரிடிபென்னிஸ்: இது, கொசுத்தேனீ எனப்படுகிறது. ஒரு தேனீக் கூட்டம், ஆண்டுக்கு 60-180 மில்லி தேனைக் கொடுக்கும்.
தேனீக்களின் உட்பிரிவுகள்
இராணித் தேனீ – பெண் தேனீ.
ஆண் தேனீ அல்லது டிரோன்கள்.
பெண் தேனீ அல்லது வேலைக்கார தேனீ. இந்தத் தேனீக்கள் பெரும்பாலும் மலட்டுத் தன்மையைக் கொண்டிருக்கும்.
தேனீக்களில் உள்ள சிறப்பு உறுப்புகள்
இறக்கை: தேனீக்கள் பறக்கும் போது அவற்றின் இறக்கைகள் ஒரு நொடிக்கு 400 அதிர்வுகளை உண்டாக்கும்.
மெழுகு சுரப்பிகள்: தேனீக்களின் மெழுகு சுரப்பிகளில் உருவாக்கப்படும் தேன்மெழுகு தேன்கூட்டைக் கட்ட உதவுகிறது.
கொடுக்கு: கொடுக்கு என்னும் இவ்வுறுப்பு, இராணித்தேனீ மற்றும் மரபுவழி பெண் வேலைக்கார தேனீக்களில் மட்டுமே காணப்படும்.
தேனீ வளர்ப்பு
மனிதன் சர்க்கரையை உற்பத்திச் செய்வதற்கு முன்பு, அவன் இனிப்புச் சுவைக்காகத் தேனைச் சார்ந்திருந்தான். எனவே, வேளாண்மையில் தேனீ வளர்ப்பும் இடம் பெற்றிருந்தது. நவீன அறிவியல் மற்றும் வணிக முறைகளைப் பயன்படுத்தி, தேனுக்காகவும் தேன் மெழுகுக்காகவும், தேனீக்களை வளர்த்தல் தேனீ வளர்ப்பு எனப்படுகிறது.
தொடக்கக் காலத்தில் தேன்கூட்டிலுள்ள தேனீக்களை நெருப்பிட்டுக் கொன்று விட்டுத் தேன் கூட்டைச் சேகரிப்பார்கள். பிறகு, கூட்டைப் பிரித்துப் பிழிந்து தேனை எடுப்பார்கள். இதனால், இந்தத் தேன் பண்பட்டதாகவும், சுத்தமானதாகவும் இருப்பதில்லை.
ஆகவே, 1951 ஆம் ஆண்டு லாங்ஸ்டோத் என்பவர் கண்டுபிடித்த செயற்கைக் கூடுகளில், இப்போது தேனீக்கள் வளர்க்கப்படுகின்றன. இம்முறையில், உருவாக்கப்பட்ட கூட்டின் அடித்தளத்தில் கூட்டையும் அறைகளையும் உருவாக்கத் தேனீக்கள் கவர்ந்திழுக்கப் படுகின்றன. பிறகு, அக்கூடு தேனைப் பிரித்தெடுப்பதற்காக நீக்கப்படுகிறது.
தேனைப் பிரித்தெடுப்பதற்காக, தேன்கூடு முதலில் பிரித்தெடுப்பானில் வைக்கப்படுகிறது. இந்தப் பிரிப்பான், மையவிலக்கு விசை காரணமாகத் தேனை வெளியே தள்ளுகிறது. இந்நிகழ்வின் போது, தேன் கூட்டுக்கு எவ்விதப் பாதிப்பும் ஏற்படாது. இந்தச் செயல்முறை திரும்பத் திரும்பச் செயல்படுத்தப் படுகிறது. எனவே, சுத்தமான தேன் அதிகளவில் பெறப்படுகிறது.
அமெரிக்கா, ஆஸ்திரேலியா, கனடாவில் தேனீ வளர்ப்பு நடைமுறையில் உள்ளது. இந்தியாவிலும் வளர்ந்து வரும் குடிசைத் தொழிலாகத் தேனீ வளர்ப்பு உள்ளது. கேவிஐசி என்னும் காதி மற்றும் கிராமத் தொழில் குழுமமும், ஐசிஏஆர் என்னும் இந்திய வேளாண்மை ஆராய்ச்சிக் கழகமும், இந்தியாவில் தேனீ வளர்ப்பை முன்னேற்றும் முயற்சியைச் செய்து வருகின்றன.
ம.த.கௌரி, ஆராய்ச்சி மாணவி, முனைவர் மா.சி.நளினசுந்தரி, உதவிப் பேராசிரியர், விலங்கியல் துறை, இராணிமேரி கல்லூரி, சென்னை – 600 004.
சந்தேகமா? கேளுங்கள்!