செய்தி வெளியான இதழ்: 2017 பிப்ரவரி.
இப்போதெல்லாம், நோய்களால் ஏற்படும் பாதிப்பைத் தடுக்கவும், குறைக்கவும், நன்மை தரும் உணவில் மக்கள் ஆர்வம் காட்டுகின்றனர். உடல் நலத்தில் உணவில் உள்ள சத்துகள் முழுப் பங்கு வகிக்கின்றன. இப்போது செயல்பாட்டு உணவுப் பொருள்கள் சந்தையில் கிடைக்கின்றன. அவற்றுள், கோதுமை, மக்காச்சோளம், அரிசி, பார்லி மற்றும் சோளத்துக்கு அடுத்து ஓட்ஸ் உள்ளது.
மற்ற பொருள்களுடன் ஒப்பிடுகையில், பண்புகள் மற்றும் பயன்களால், ஓட்ஸ் தனியிடத்தைப் பெறுகிறது. இதில், நமது உடல் வளர்ச்சிக்கு ஏற்ற சத்துகள் இருப்பதால், பல்வேறு வகை பதப்படுத்தப்பட்ட உணவுகளில் பயன்படுகிறது.
உடைத்த ஓட்ஸ், ஓட்ஸ் தவிடு, ஓட்ஸ் மாவு போன்றவை, கஞ்சி, ரொட்டி, அவல் போன்ற காலை உணவு மற்றும் பல உணவுகள் தயாரிப்பில் பயன்படுகின்றன. இந்த ஓட்ஸானது, புல்லரிசிக் குடும்பத்தைச் சார்ந்தது. இது, ஜெய் அல்லது ஜவி என அழைக்கப்படுகிறது.
அவினா சட்டைவர் என்னும் ஓட்ஸ் இரகம், உலகில் அதிகமாக உற்பத்தி செய்யப்படுகிறது. அர்ஜென்டீனா, ஆஸ்திரேலியா, கனடா, ஐரோப்பா, அமெரிக்கா போன்ற நாடுகளில் ஓட்ஸ் அதிகமாக விளைகிறது. இந்தியாவில், உத்தரபிரதேசம், மத்தியபிரதேசம், இராஜஸ்தான், பீகார், குஜராத், ஆந்திரம் மற்றும் தமிழ்நாட்டில் ஓட்ஸ் சாகுபடி நடக்கிறது.
ஓட்ஸில், புரதம், கரையும் நார்ச்சத்து, தாதுப்புகள் அதிகமாக உள்ளன. அதனால், கெட்ட கொழுப்பு மற்றும் சர்க்கரையைக் குறைக்க, நோயெதிர்ப்பு சக்தியைக் கூட்ட, இதய நோய்களைத் தடுக்க ஓட்ஸ் பயன்படுகிறது. இதில், பால்மிடிக், ஓலிக், லினோலியிக் ஆகிய கொழுப்பு அமிலங்கள் உள்ளன.
நூறு கிராம் ஓட்ஸில், 10.7 சதம் ஈரப்பதம், 13.6 சதம் புரதம், 76 சதம் கொழுப்பு, 1.8 சதம் தாதுப்புகள், 3.5 சதம் நார்ச்சத்து, 62.8 சதம் கார்போஹைடிரேட், 50 மில்லி கிராம் கால்சியம், 380 மில்லி கிராம் பாஸ்பரஸ், 3.8 மில்லி கிராம் இரும்புச்சத்து ஆகியன உள்ளன.
ஊட்டமிக்க நார்ச்சத்து, கொழுப்பு அமிலங்கள், அமினோ அமிலம் நிறைந்த புரதம், முதன்மையான பீட்டா குளுக்கான் ஆகியனவும் ஓட்ஸில் உள்ளன. இதில், முக்கியக் கொழுப்பு அமிலமான லினோலியிக்கும், எதிர் ஆக்ஸிஜன் ஏற்றியான டோகோஃபெரால், அல்கைல் ரிசோர்சினால், பீனாலிக் அமிலங்கள் மற்றும் அவற்றின் உட்பொருள்களான அவினான், திராமைட்ஸ், அவினலுமிக அமிலம் போன்ற, மற்ற தானியங்களில் இல்லாத பொருள்கள் உள்ளன.
பீட்டா குளுக்கான்
ஓட்ஸில் உள்ள முக்கியமான செயல்பாட்டுக்கூறு பீட்டா குளுக்கான் ஆகும். கெட்ட கொழுப்பு மற்றும் இதய நோய்களின் பாதிப்புகளைக் குறைக்க ஓட்ஸ் உதவுகிறது. இரத்தத்தில் உள்ள மொத்தக் கொழுப்பு மற்றும் குறைந்த அடர்த்தியுள்ள கொழுப்புச் செறிவை, பீட்டா குளுக்கான் குறைக்கிறது. மேலும், பெருங்குடலில் நன்மை பயக்கும், ஃபைபிடோ பாக்டீரிய வளர்ச்சியை பீட்டா குளுக்கான் தூண்டுகிறது.
கொழுப்பின் அளவைக் குறைத்தல்
உணவு மற்றும் மருத்துவ அமைப்பானது, நார்ச்சத்து மிக்க பீட்டா குளுக்கான், கெட்ட கொழுப்பு மற்றும் இதய நோயின் அளவைக் குறைக்கிறது என, 2004 ஆம் ஆண்டு அறிவித்துள்ளது. இதன் மூலம், ஒரு நாளைக்கு 8 கிராம் அளவுக்கு பீட்டா குளுக்கானை உண்ண வேண்டும் எனக் கூறப்பட்டுள்ளது.
இரத்தச் சர்க்கரையைக் கட்டுப்படுத்தல்
ஓட்ஸில் உள்ள பீட்டா குளுக்கான், இரத்தத்தில் உள்ள குளுக்கோஸ் மீது நேர்மறை விளைவுகளை உடையது. இதன் மீது பீட்டா குளுக்கானின் திறன் அதிகரித்து, குடலால் உணவு உறிஞ்சப்படும் அளவைத் தாமதம் செய்கிறது. இதனால், இரத்தச் சர்க்கரை சமநிலை ஆகிறது.
எடைக் குறைப்பு
ஓட்ஸ் உணவு, அதைச் சுற்றியுள்ள திரவ உறிஞ்சித் தொகுதியைச் சேர்க்கிறது. இதன் இழைகள் செரிமானச் செயலை மெதுவாகக் குறைத்து, நீண்ட நேரம் உணவு இருப்பதைப் போன்ற உணர்வைக் கொடுக்கிறது.
தூக்கமின்மையைக் குறைத்தல்
ஓட்ஸில் அவசியமான அமினோ அமிலமான டிரிப்டோபேன் உள்ளது. இது, மெலடோனின் உருவாக ஆதாரமாகச் செயல்படுகிறது. எனவே, மெலடோனின் அளவில் குறைபாடு ஏற்படும் போது, தூக்கமின்மை உண்டாகும். இந்த நேரத்தில், டிரிப்டோபேனின் அளவு அதிகமாகி, ஆழ்ந்த தூக்கம் கிடைக்க, ஓட்ஸ் உணவு உதவுகிறது.
ஓட்ஸ் ஓர் உயிர்ச்செயலி
ஓட்ஸிலுள்ள பீட்டா குளுக்கான் ஆக்ஸிஜனேற்றச் செயல்களில் முக்கியப் பங்கு வகிக்கிறது. ஓட்ஸில் உள்ள கொழுப்பு அமிலங்கள், பல்வேறு வழிகளில் ஆன்ட்டி ஆக்ஸிடென்ட்களாகச் செயல்படுகின்றன.
ஓட்ஸில், ஆக்ஸிஜனேற்ற முக்கிய ஆதாரமான டோகோபெரால் அல்லது வைட்டமின் இ, ஹைட்ராக்ஸி சின்னமிக் அமிலங்கள் மற்றும் ஃப்ளேவனாய்டுகளின் பீனாலிக் கலவைகள் உள்ளன.
இந்த பீனாலிக் உட்பொருள்கள், புற்றுநோய், பக்கவாதம் மற்றும் இதய நோய்களைத் தடுக்கும் தன்மை மிக்கவை. பொதுவாக ஓட்ஸ் மாவில், 87 மி.கி./கி.கி. பீனாலிக் அமிலங்கள், பைருவிக் அமிலம் ஆகியன உள்ளன.
ஓட்ஸ் மற்றும் ஓட்ஸ் பொருள்களில், தையமின், பேன்டேதெனிக் ஆகிய அமிலங்கள் அதிகமாக உள்ளன. மேலும், ஓட்ஸை மற்ற தானியங்களுடன் ஒப்பிடுகையில், பயோட்டின் என்னும் வைட்டமின் பி7 அதிகமாக உள்ளது. ஓட்ஸ் தவிட்டில் டிரைசின் அதிகமாக உள்ளது. டிரைசின், புற்றுநோய்க் காரணியாகச் செயல்படுகிறது.
ஓட்ஸ் பல்வேறு உணவுப் பொருள்கள் தயாரிப்பில் மூலப்பொருளாக விளங்குகிறது. பேபி ஓட்ஸ், உடனடி ஓட்ஸ், ஓட்ஸ் தவிடு, ஓட்ஸ் மாவு, ஓட்ஸ் மீல் ஆகியன, இன்று நாம் அனைவரும் வாங்கிப் பயனடையும் வகையில் சந்தையில் கிடைக்கின்றன.
முனைவர் க.சு.ஞானலெட்சுமி, க.பிரசன்னா, த.பாஸ்கரன், உணவு மற்றும் பால்வளத் தொழில் நுட்பக் கல்லூரி, கொடுவள்ளி, சென்னை – 600 052.
சந்தேகமா? கேளுங்கள்!