My page - topic 1, topic 2, topic 3

ஈற்றுக்கு முன் மாடுகளில் ஏற்படும் சிக்கல்கள்!

செய்தி வெளியான இதழ்: 2017 டிசம்பர்.

மாடும் ஆடும் கருத்தரித்து ஈனுவது இயற்கை. ஆனால், வளர்ந்து வரும் கால்நடை மருத்துவ அறிவியலைப் பயன்படுத்தியும், எதிர்காலச் சூழ்நிலையைக் கருத்தில் கொண்டும், மாடுகள் ஆண்டுதோறும் ஈனவும், ஆடுகள் இரண்டு ஆண்டுகளில் மூன்று முறை ஈனவும் வகை செய்ய வேண்டியது அவசியம். ஆனால், இந்த இலக்கை அடைவதற்குத் தடங்கலாக, ஈற்றுக்கு முன்பும் பின்பும் மாடுகளில் பல்வேறு இடையூறுகள் ஏற்படுகின்றன. அந்த இடையூறுகளைப் பற்றியும், அவற்றுக்கான தீர்வுகளைப் பற்றியும் இங்கே காணலாம்.

பிறப்புறுப்பின் முன்பகுதி வெளித்தள்ளுதல்

வஜனைல் புரொலாப்ஸ் (Vaginal Prolapse) என்னும் பிறப்புறுப்பின் முன்பகுதி பெரிய முலாம் பழம் அளவுக்கு அறையை விட்டு வெளியே வந்து விடும். இது பார்ப்பதற்குச் சிவப்பாக இருக்கும். இந்த நிலை, மாடு படுக்கும் போது மட்டுமே உண்டாகும். மாடு எழுந்ததும் உள்ளே சென்று விடும். இதை உடனடியாகக் கால்நடை மருத்துவரிடம் காட்டிச் சிகிச்சையளிக்க வேண்டும். வெளித்தள்ளுதல் சிக்கல் 6-7 மாதங்களில் ஏற்படும்.

கமலமும் முன்பகுதியும் வெளித்தள்ளுதல்

செர்வைகோ வஜனைல் புரொலாப்ஸ் (Cervico Vaginal Prolapse) என்னும், கமலமும் முன்பகுதியும் அறைக்கு வெளியே வந்து விடும் நிலை 8-9 மாதங்களில் ஏற்படும். இது, பார்ப்பதற்குக் கால்பந்து பிளாடர் (Foot Ball Bladder) போன்று பார்ப்பதற்குச் சிவப்பாக இருக்கும். இதைக் கிராம மக்கள், அடித்தள்ளுதல், அடிக்காணுதல், நாத்தலைத் தள்ளுதல் என்று கூறுவார்கள். ஈற்றுக்குப் பிறகும்கூட இந்நிலை உண்டாக வாய்ப்புண்டு.

நாத்தலை ஏற்படக் காரணங்கள்: மாடுகள் வலுவில்லாமல் மெலிந்திருத்தல். ஈஸ்ட்ரஜன் என்னும் ஹார்மோன் சுரப்பு அதிகமானால், கருப்பையைத் தாங்கியிருக்கும் தசை நார்கள் தளர்ந்து விடுதல். மாடு படுக்கும் போது பனிக்குட நீரின் அழுத்தம் அதிகமாதல். முன்னங் கால்களை விடப் பின்னங் கால்கள் இருக்கும் பகுதி பள்ளமாக இருத்தல். சத்துள்ள தீவனங்களை அதிகமாகக் கொடுத்தல். உடற்பயிற்சியே கொடுக்காமல் ஒரே இடத்தில் கட்டி வைத்தல். 4-5 தடவை ஈன்ற மாடுகள். பசு மாடுகளை விட எருமைகளில் நாத்தலை நிலை அதிகம்.

தீர்வு: தொங்கிக் கொண்டிருக்கும் உறுப்பை, காக்கை, நாய் போன்றவை கடித்து விட்டால் புண்ணாகி இரத்தம் வழிய, உயிருக்கே ஆபத்தாகி விடும். எனவே, இதைத் தடுக்க, பொட்டாசியம் பர்மாங்கனேட் கலந்த நீரால் சுத்தம் செய்து, சுத்தமான ஈரத்துணியால் மூட வேண்டும். சில நேரங்களில் வெளிவந்த பகுதி, மாட்டின் தொடைமீது தொங்கும். இதனால், இரத்த ஓட்டம் தடைபட்டு உறுப்பு வீங்கி விடும். மேலும், காய்ந்து வறண்டு விடும். வெளிவந்த பகுதியின் அழுத்தம் காரணமாக, சிறுநீர்ப் பையில் அழுத்தம் உண்டாகிச் சிறுநீர் போக முடியாத நிலை வரும்.

எனவே, முதலில் பொட்டாசியம் பர்மாங்கனேட் கரைசலால் சுத்தம் செய்ய வேண்டும். அடுத்து, உப்பு அல்லது அஸ்கா சர்க்கரையை நீரில் கரைத்து சாச்சுரேடட் நிலைக்கு (Saturated Solution) வந்ததும் அந்த நீரால் சுத்தம் செய்தால், உள்ளுக்குள் தள்ளும் வகையில் உறுப்பு உடனடியாகச் சுருங்கும். பிறகு, தையல் போட்டு, ஈனும் வரையில் தையலைப் பிரிக்காமல் இருக்க வேண்டும். இந்நிலையில், மாட்டுக்கு வயிறு முட்டத் தீனியைக் கொடுக்கக் கூடாது. மாட்டின் பின்புறம் உயரமாக இருக்கும் இடத்தில் கட்டி வைக்க வேண்டும்.

தையல் போட்ட இடத்தை அன்றாடம் நீரால் சுத்தம் செய்து வேப்ப எண்ணெய்யைத் தடவ வேண்டும். மழை மற்றும் குளிர் காலமாக இருந்தால் மேகட்ஸ் (Maggots) என்னும் பூச்சிகள் வைத்து இரத்தம் வடியத் தொடங்கி விடும். ஈற்றின் போது மருத்துவர் தான் தையலைப் பிரித்து விட்டு, கன்று பிறந்ததும் நஞ்சுக்கொடியை எடுத்துச் சுத்தம் செய்ய வேண்டும். குளுக்கோஸ் மற்றும் கால்சிய ஊசியையும், நோயெதிர்ப்பு மருந்துகளையும் கொடுக்க வேண்டும். நாத்தலை தள்ளிய மாடுகளில் நஞ்சுக்கொடி தங்குவது சாதாரணமாக நடக்கும் என்பதால், கன்று பிறந்ததும் நஞ்சுக்கொடியை எடுத்துவிட வேண்டியது அவசியம்.

கருச்சிதைவு

நோயாலும் விபத்தாலும் கருச்சிதைவு என்னும் அபார்ஷன், (Abortion) விப்ரியோ பீடஸ் (Vibryo fetus) டிரைகோமோனஸ் பீடஸ் (Trichomonos fetus) புருசெல்லா அபார்ட்ஸ் (Brucella abortus) போன்ற நுண்ணுயிரிகளால் ஏற்படுகிறது. மாடு சினையாக இருக்கும் போது மற்ற மாடுகளுடன் சண்டை போடுதல் மற்றும் விபத்துகளால் கருச்சிதைவு உண்டாகும். கருச்சிதைவு ஏற்பட்டதும் தக்க சிகிச்சையளிக்க வேண்டும்.

கருவின் உறுப்புகள் எலும்புக்கூடு போல ஆதல்

மம்மிபைட் பீடஸ் (Mummified fetus) என்னும் கருவின் உறுப்புகள் எலும்புக்கூடு போலாகும் நிலை, பன்றி, நாய், பூனை, செம்மறியாடு ஆகியவற்றில் ஏற்படும். கறவை மாடுகளிலும் இந்நிலை உண்டாக வாய்ப்புண்டு. தொற்றுநோய், சத்தற்ற உணவு, பரம்பரை ஆகிய காரணங்களால் இந்நிலை 6-8 மாதங்களில் ஏற்படுகிறது. தாயையும் கன்றையும் இணைக்கும் நஞ்சுக்கொடி தனது பணியைச் செய்யாததும் (Failure of Placental Function), நஞ்சுக்கொடியில் ஏற்படும் இரத்தக்கசிவும் (Inter Placental Haemorrhage) இதற்கான முக்கியக் காரணங்களாகும்.

புரொஜெஸ்டிரான் ஹார்மோன் சுரப்புக் குறைந்து, ஈஸ்ட்ரஜென் ஹார்மோன் சுரப்பு அதிகமாவதும் ஒரு காரணமாகும். இந்த நிலையில், கருச்சிதைவுக்கான அறிகுறி ஏதும் இல்லாமல், சினைமாடு நலமாகவே இருக்கும். ஆனால், பனிக்குட நீர் வற்றிப் போவதால், கன்றின் எலும்புகளுடன் இருக்கும் பனிக்குடம் எலும்பு மூட்டையைப் போல ஆகிவிடும். மாட்டில் ஈனும் அறிகுறி எதுவும் இருக்காது. மாடு பருவத்துக்கும் வராது. இந்நிலையில், கால்நடை மருத்துவரிடம் காட்டி, சிசேரியன் அறுவைச் சிகிச்சை செய்ய வேண்டும்.

கருப்பைச் சுழற்சி

கருப்பைச் சுழற்சி அல்லது கருப்பை முறுக்கிக் கொள்ளுதல் என்னும் யுடிரைன் டார்சன் (Uterine Torsion) மாடு சினையாக இருக்கும் போது, உறுப்புத் தள்ளுவதற்கு அடுத்த நிலையில் ஏற்படுகிறது. கருப்பை கன்றோடு சேர்ந்து முறுக்கிக் கொள்வதே கருப்பைச் சுழற்சி எனப்படுகிறது. இந்தச் சிக்கல் எருமை மாடுகளில் தான் அதிகமாக உண்டாகிறது. மாடு ஈனப்போகும் மாதத்தில் தான் கருப்பை முறுக்கிக் கொள்தல் நிகழ்கிறது. இதனால், கன்று வெளிவரும் பாதை அடைபட்டு விடுகிறது. கன்றுக்குச் செல்லும் இரத்தம் தடைபட்டுப் போவதால், பெரும்பாலும் கன்று இறந்து விடும்.

மடிவீக்க நோய்

மடிவீக்க நோயால் (Mastitis) இந்தியாவில் ஆண்டுக்கு ஆறாயிரம் கோடி ரூபாய் இழப்பு ஏற்படுகிறது. பத்து சதவீதக் கறவை மாடுகள் இந்நோயால் பாதிக்கப்படுகின்றன. கறவையில்லாத சமயத்திலேயே, இந்நோய் வராமல் தடுப்பதற்கான சிகிச்சையை எடுத்துவிட வேண்டும். பெரும்பாலும் கலப்பின மாடுகளில் தான் மடிவீக்கம் உண்டாகிறது. இதனால், 30% பால் குறைந்து விடும். ஈ கொலை (E.coli) ஸ்டிரெப்டோ காக்கஸ் (Strepto cocus) ஸ்டெபைலோ காக்கை (Staphylo cocci) கொரினி பாக்டீரியம் (Cornye bacterium) போன்ற நுண்ணுயிரிகளால் மடிவீக்கம் ஏற்படுகிறது. தொழுவமும், மாடுகளும் சுத்தமில்லாமல் இருப்பதே இதற்குக் காரணமாகும்.

பால் காய்ச்சல்

ஈனும் நேரத்திலும், ஈன்ற 48 மணி நேரத்துக்குள்ளும், சில நேரங்களில் ஈற்றுக்குச் சில வாரங்கள் இருக்கும் போதும், பால் காய்ச்சல் (Milk Fever) வரும். கறவை மாட்டின் இரத்தத்தில் கால்சியம் திடீரெனக் கூடுவதும் குறைவதும் காரணமாகும். அதேநேரம் சர்க்கரை அளவு அதிகமாகி விட்டால், பால் காய்ச்சல் தீவிரமாகும். சர்க்கரை குறைந்து விட்டால், பால் காய்ச்சலுடன், கீடோசிஸ் (Ketosis) என்னும் நிலையும் உண்டாகும்.

பூச்சி வைத்தல்

நாத்தலை தள்ளிய மாடுகளிலும், கருப்பைச் சுழற்சி ஏற்பட்ட மாடுகளிலும், பிறப்புறுப்பில் ஏற்படும் காயங்களாலும், தையல் போட்ட இடங்களிலும், பொரி போன்ற வெள்ளைப் பூச்சிகள் உருவாகி விடும். இதனால், புண்ணிலிருந்து இரத்தம் வடிந்தபடி இருக்கும். இதைத் தவிர்க்க, கிராமங்களில் மஞ்சளையும் வசம்பையும் அரைத்துப் பூசுவார்கள். சிலர், பினாயில், மண்ணெண்ணெய், டெட்டால், சுடவைத்த நல்லெண்ணெய்யை ஊற்றுவார்கள். இப்படிச் செய்வதால் எந்தப் பலனும் ஏற்படாது என்பதுடன், மேலும் பூச்சிகள் அதிகமாகி, இரத்தக் கசிவு ஏற்படும்.

தீர்வு: மருத்துவரிடம் காட்டித் தகுந்த சிகிச்சையளிக்க வேண்டும். முதலில், பாதிப்புள்ள பகுதியை, பொட்டாசியம் பர்மாங்கனேட் கரைசலால் சுத்தம் செய்ய வேண்டும். பிறகு, டர்பன்டைன் எண்ணெய்யில் பஞ்சை நனைத்து அந்தப் புண்ணில் வைத்தால், அடுத்த நாள் அந்தப் பூச்சிகள் இறந்து விடும். அவற்றை அகற்றி விட்டு, ஹிமாக்ஸ் (himax) என்னும் களிம்பைத் தடவ வேண்டும். நாப்தலின் பால்ஸ் என்னும் அந்துருண்டை அல்லது கட்டிக் கற்பூரத்தைப் புண்ணில் வைத்தாலும் பூச்சிகள் இறந்து விடும். புண் ஆறும் வரையில் இப்படிச் செய்வதுடன், பாதிப்புள்ள பகுதியைச் சுற்றி, வேப்ப எண்ணெய்யைத் தினந்தோறும் தடவ வேண்டும்.

ஈனும் காலத்தில் உள்ள மாடுகள் மீது அதிகக் கவனத்தைச் செலுத்துவதுடன், இதுவரை கூறியுள்ள சிக்கல்கள் ஏதேனும் ஏற்பட்டால், உடனே கால்நடை மருத்துவர் மூலம் சிகிச்சை செய்வது அவசியம்.


டாக்டர் A.R.ஜெகத் நாராயணன், மேனாள் மண்டல இணை இயக்குநர், கால்நடைப் பராமரிப்புத்துறை, சேலம் – 636 008.

Share:

  சந்தேகமா? கேளுங்கள்!  

 

இன்னும் படியுங்கள்!

Enable Notifications OK No thanks