தமிழகத்தில் புறக்கடையில் வளர்க்கப்பட்ட கோழிகள், இன்று தீவிர முறையில் பண்ணைகளில் வளர்க்கப்படுகின்றன. தீவிர முறையில் திறந்த வெளிக் கொட்டகைகளில் வளர்க்கப்படும் கோழிகளில்;
குறைந்த இட வசதியில் பல்வேறு வயது கோழிகளை அதிகளவில் வளர்ப்பது, அருகருகே பெருகி வரும் பண்ணைகள், புறக்கடைக் கோழிகளைப் பண்ணைக்கருகே மேய விடுவது மற்றும் தகுந்த மேலாண்மை முறைகளைப் பண்ணையாளர்கள் அறியாமலிருத்தல் போன்ற காரணங்களால், கோழிகளை நோய்கள் தாக்குகின்றன.
இதனால், இறப்பு, மருத்துவச் செலவு மற்றும் குறைந்த உற்பத்தித் திறன் போன்றவற்றால் பெரும் பொருளாதார இழப்பு, பண்ணையாளர்களுக்கு ஏற்படுகிறது. கோழிகளில் உயிரிழப்பை ஏற்படுத்தும் காரணிகளில் மிக முக்கியமானவை,
நச்சுயிரி நோய்கள், நுண்ணுயிர் நோய்கள், பூஞ்சைக் காளான் நோய்கள், ஒட்டுண்ணி நோய்கள், சத்துப் பற்றக்குறை மற்றும் பிற நோய்கள் ஆகும். எனவே, கோழிகளைத் தாக்கும் நோய்களில், நுண்ணுயிர் நோய்கள் மற்றும் அவற்றைத் தடுக்கும் முறைகளைப் பற்றி அறிந்து கொள்வது மிகவும் அவசியமாகும்.
நுண்ணுயிர் நோய்களில் முக்கியமானவை
கோலை நுண்ணுயிரி நோய். நுண்ணுயிரி வெள்ளைக் கழிச்சல் நோய். கொரைசா என்னும் தலைவீக்க நோய். நாள்பட்ட சுவாச நோய். கோழிக் காலரா. திசுச்சிதைவு குடல் அயர்ச்சி நோய். இறக்கை அழுகல் நோய்.
கோலை நுண்ணுயிரி நோய்: இது, கோழிகளைத் தாக்கும் நோய்களில் முக்கியமானது. ஈகோலைக் கிருமிகள், கோழிகளில் மஞ்சள் கரு அயர்ச்சி நோய், கோலி நச்சு நோய், முட்டை உடைவினால் ஏற்படும் உடல் உள்ளறை அயர்ச்சி நோய், மூட்டு வீக்க நோய், கோலை நுண்ணுயிரிப் புற்று நோய், தலை வீக்க நோய் போன்றவற்றை உண்டாக்கும்.
நலமான கோழிகளின் எச்சத்தில் ஈகோலைக் கிருமிகள் இருக்கும். இந்தக் கோழிகளிலிருந்து வெளியாகும் கிருமிகள் 37 டிகிரி செல்சியஸ் வெப்ப நிலையில் 1-2 நாட்கள் உயிர் வாழும்.
கிருமிநாசினிகள் இக்கிருமிகளை எளிதில் செயலிழக்கச் செய்யும். கோழிக் கொட்டகை சுத்தமாக இல்லாத நிலையில், ஈகோலைக் கிருமிகளின் எண்ணிக்கை கூடும். கோழி எச்சத்தால் மாசடைந்த நீர் மற்றும் தீவனத்தை அளிக்கும் போதும்,
கோழிக் கொட்டகையில் அம்மோனிய அளவு அதிகமாகும் போதும், ஈகோலைக் கிருமிகள் பிற கோழிகளில் பரவி நோய்த் தாக்கத்தை ஏற்படுத்தும். அயர்ச்சி, இராணிக்கெட் நோய், சிறு மூச்சுக்குழல் நோய், கம்போரா நோய் போன்ற நச்சுயிரி நோய்கள், மைக்கோபிளாஸ்மா கிருமிகள் போன்றவை இந்நோயைத் தூண்டும் காரணிகளாக உள்ளன.
நோய் அறிகுறிகள்: இதனால் பாதிக்கப்பட்ட பண்ணைகளில் 5-20% கோழிகளில் நோய் அறிகுறிகள் தென்படும். கோழிகள் சோர்வுறுதல், தீவனம் உண்ணும் அளவு குறைதல், உடல் எடை குறைதல், மூக்கில் சளி வடிதல், இருமல், தும்மல் போன்ற அறிகுறிகள் காணப்படும். இளம் குஞ்சுகளில் தொப்புள் வீங்கி வயிறு பெருத்திருக்கும்.
தடுப்பு முறைகள்: முதலில் கோலை நுண்ணுயிரி நோய்கள் உருவாகக் காரணமான தூண்டு காரணிகளை நீக்க வேண்டும். கோழிக் கொட்டிலைச் சுத்தமாக வைத்துக் கொள்வதுடன், கிருமி நாசினி மருந்துகளைக் குறிப்பிட்ட கால இடைவெளியில் தெளிக்க வேண்டும்.
குளோரின் கலந்த நீரைக் கோழிகளுக்கு அளிக்கும் போது, நீர் மாசைக் குறைத்து, எச்சம் மூலம் வெளியேறும் ஈகோலைக் கிருமிகளைக் குறைத்து, சுற்றுப்புற மாசையும் கட்டுப்படுத்தலாம். நோயுற்ற கோழிகளுக்கு, கால்நடை மருத்துவரின் ஆலோசனைப்படி, தகுந்த எதிர் உயிர் மருந்துகளை அளிக்க வேண்டும்.
சால்மனெல்லோசிஸ்: இக்கிருமிகள், கோழிகளில் மட்டுமின்றி, மனிதர்களுக்கும் நோய்களை உண்டாக்கும். கோழிகளில், கோழி டைபாய்டு, புல்லோரம் கழிச்சல் நோய், பாரா டைபாய்டு காய்ச்சல் போன்ற நோய்களை ஏற்படுத்தும்.
சால்மனெல்லாக் கிருமிகள், தாய்க் கோழிகளின் முட்டைகள் மூலம் குஞ்சுகளுக்குப் பரவும். நோயுற்ற கோழியெச்சம் வழியே வெளியாகும் கிருமிகள், தீவனம் மற்றும் நீரை மாசுபடுத்திப் பிற கோழிகளுக்கும் பரவும்.
நோய் அறிகுறிகள்: நோயுற்ற கோழிக் குஞ்சுகளில் சோர்வு. ஒன்றோடென்று அணைந்து கொண்டிருத்தல். குறைவாகத் தீவனம் எடுத்தல்.
வளர்ச்சிக் குறைவு மற்றும் ஆசன வாயைச் சுற்றி வெள்ளை நிற எச்சம் ஒட்டிக் கொண்டிருத்தல். 2-3 வாரக் குஞ்சுகளில் இறப்பு அதிகளவில் இருக்கும்.
மூச்சுவிடச் சிரமப்படுதல் அல்லது வாயைத் திறந்து மூச்சு விடுதல், பார்வை இழப்பு, தொப்புள் மற்றும் முட்டி வீங்குதல் போன்ற அறிகுறிகளும் தென்படும்.
வளரும் கோழிகளிலும், வளர்ந்த கோழிகளிலும், நோய் அறிகுறிகள் நன்கு வெளிப்படுவதில்லை. இந்நோயால் பாதிக்கப்பட்ட கோழிகளின் இறகுகள் சிலிர்த்தும், கொண்டை வெளுத்துச் சுருங்கியும் இருக்கும். முட்டையிடும் கோழிகள் குறைவாக உண்பதால், முட்டை உற்பத்தியும் குறைந்து, பெரும் பொருளாதார இழப்பு ஏற்படும்.
தடுப்பு முறைகள்: சுத்தமான தீவனம் மற்றும் குடிநீரைக் கோழிகளுக்கு அளிக்க வேண்டும். கொட்டகையைச் சுத்தமாக வைத்திருக்க வேண்டும். சால்மனெல்லாக் கிருமிகள் தாக்காத தாய்க் கோழிகளிருந்து குஞ்சுகளை வாங்கி வளர்க்க வேண்டும்.
நோயுற்ற கோழிகளை ஆய்வகச் சோதனைகள் மூலம் கண்டறிந்து கழித்திட வேண்டும். ஆதரவு நுண்மக் கலவை மருந்துகளைக் கோழிகளுக்கு அளித்தும் சால்மனெல்லாக் கிருமிகளைக் கட்டுப்படுத்தலாம். மேலும், கால்நடை மருத்துவர் ஆலோசனைப்படி, தகுந்த எதிர் உயிர் மருந்துகளை அளிக்க வேண்டும்.
தொற்றும் கொரைசா என்னும் தலைவீக்க நோய்: இதுவொரு தொற்று நோயாகும். ஏவிய பாக்டீரியம் பாராகேலினேரம் நுண்ணுயிரிகளால் ஏற்படும். குளிர் காலத்தில் இந்நோயின் தாக்கம் அதிகமாக இருக்கும். அனைத்து வயது கோழிகளையும் தாக்கும்.
பலவகை வயதுள்ள கோழிகளை ஒரே இடத்தில் வளர்க்கும் போது, இக்கிருமிகள், வளர்ந்த கோழிகளிலிருந்து இளம் குஞ்சுகளுக்கு எளிதில் காற்றின் மூலம் பரவும்.
நோய் அறிகுறிகள்: நோயுற்ற கோழிகளின் மூக்கிலிருந்து முதலில் நீர் போன்ற திரவமும், பிறகு தடித்த சளி போன்ற திரவமும் வடியும். இந்தத் திரவம் துர்நாற்றத்துடன் இருக்கும்.
மூச்சுக்குழலறை அயர்ச்சி காரணமாக, தலையின் ஒரு பக்கமோ அல்லது இரு பக்கமோ வீங்கி விடுவதால், கோழிகள் கண்களை மூடிக் கொண்டிருக்கும்.
மேலும், மூச்சு விடச் சிரமப்படும். முட்டை உற்பத்தியும் 10-40 சதம் குறைவதால், பெரும் பொருளாதார இழப்பு ஏற்படும்.
தடுப்பு முறைகள்: நோயுற்ற கோழிகளைப் பிரித்துத் தனிமைப்படுத்த வேண்டும். இந்நோய் வராமல் தடுக்க, 5 மற்றும் 10 வார வயதுள்ள கோழிகளின் கழுத்துப் பகுதி தோலுக்கடியில், உயிரற்ற தடுப்பூசி மருந்தைப் போட வேண்டும்.
பல்வேறு வயதுள்ள கோழிகளை ஒரே இடத்தில் வளர்ப்பதைத் தவிர்க்க வேண்டும். நோயுற்ற கோழிகளுக்கு, கால்நடை மருத்துவரின் ஆலோசனைப்படி, சல்பா, எரித்ரோமைசின், டெட்ராசைக்ளின் போன்ற மருந்துகளை அளிக்கலாம்.
நாள்பட்ட சுவாச நோய்: மைக்கோ பிளாஸ்மா கேலிசெப்டிகம் என்னும் நுண் கிருமிகளால், மிகவும் மெதுவாகப் பரவக்கூடிய நாள்பட்ட சுவாச நோய் ஏற்படும்.
இக்கிருமிகள், காற்று மற்றும் சுத்தமற்ற அசையா உபகரணங்கள் மூலம், பாதிக்கப்பட்ட கோழிகளிலிருந்து பிற கோழிகளுக்கு எளிதில் பரவும். மேலும், இக்கிருமிகள் தாய்க் கோழிகளின் முட்டைகள் மூலம் குஞ்சுகளுக்குப் பரவும்.
நோய் அறிகுறிகள்: கோழிகளில் உற்பத்தித் திறன் குறையும். மற்ற நுண் கிருமிகளும் தாக்குவதால், பண்ணையாளர்களுக்குப் பெரும் பொருளாதார இழப்பு ஏற்படும். கோழிகளின் மூக்கில் சளி ஒட்டிக் கொண்டிருக்கும்.
தும்மலும், தவளை கத்துவதைப் போன்ற சத்தமும் கேட்கும். குறைவாக உண்பதால், உடல் எடையும், முட்டை உற்பத்தியும் குறையும். முட்டைக் கோழிகளில் கண்விழிப் பாவை அயர்ச்சி ஏற்படும். தலை மற்றும் கண்களைச் சுற்றியுள்ள திசுக்களில் வீக்கம் காணப்படும்.
தடுப்பு முறைகள்: பல்வேறு வயதுள்ள கோழிகளை ஒரே இடத்தில் வளர்க்கக் கூடாது. மைக்கோபிளாஸ்மா நுண்கிருமிகள் தாக்காத தாய்க் கோழிகளின் முட்டைகளில் உருவான குஞ்சுகளை வாங்கி வளர்க்க வேண்டும்.
மேலும், கோழிகளுக்கு, கால்நடை மருத்துவரின் ஆலோசனைப்படி, டைலோசின், டையமுடின் போன்ற மருந்துகளைக் கொடுக்கலாம்.
கோழிக்காலரா: இது, பாசுரெல்லா மல்டோசிடா நுண் கிருமிகள் மூலம் ஏற்படும். இக்கிருமிகள், கோழிகளின் மேல் மூச்சுக்குழல் பகுதியில் இயல்பாகவே இருக்கும். கிருமிநாசினி மருந்துகள் இக்கிருமிகளை எளிதில் அழிக்கும்.
எலியும் பூனையும் இக்கிருமிகளின் புகலிடமாகத் திகழ்வதால், இவற்றின் நடமாட்டம் பண்ணைகளில் அதிகமாகும் போது, கோழிகளில் நோய்த் தாக்கமும் தென்படும்.
குறைந்த இடத்தில் அதிகமான கோழிகளை வளர்ப்பது, இராணிக்கெட், சிறுமூச்சுக் குழல் போன்ற நச்சுயிரி நோய்க் கிருமிகளின் பாதிப்பு ஆகியவற்றால், கோழிக் காலரா நோய் ஏற்படும்.
நோய் அறிகுறிகள்: இந்நோயினால் பாதிக்கப்பட்ட கோழிகள் சோர்வுற்றும், இறகுகளைச் சிலிர்த்துக் கொண்டும் இருக்கும்.
கோழிகளில் பசியின்மை, குறைவாக உண்ணுதல், மூக்கிலிருந்து சளி வடிதல், தும்மல் வருதல், தாடை மற்றும் முகம் வீங்கியிருத்தல், கால் மூட்டுகள் வீங்கி விடுவதால் நடக்க தடுமாறுதல் ஆகியன காணப்படும்.
இந்நோயினால் பாதிக்கப்பட்ட கோழிகள் திடீரென இறக்கும். இறந்த கோழிகளின் கல்லீரலில் வெண்ணிறப் புள்ளிகள் இருக்கும்.
தடுப்பு முறைகள்: கோழிப் பண்ணைகளில், பூச்சி, எலி மற்றும் பூனைகளின் நடமாட்டத்தைக் கட்டுப்படுத்த வேண்டும். கோழிகளில் அயர்ச்சி ஏற்படுவதைத் தடுக்க வேண்டும். நோயுற்ற கோழிகளைத் தனியாகப் பிரித்து வளர்க்க வேண்டும்.
மேலும், கால்நடை மருத்துவரின் ஆலோசனைப்படி, சல்பா, டெட்ராசைக்ளின், பென்சிலின் போன்ற மருந்துகளை அளிக்க வேண்டும்.
திசுச்சிதைவு குடல் அயர்ச்சி நோய்: கிளாஸ்ட்ரிடியம் பெர்பிரின்ஜன்ஸ் என்னும் நுண்ணுயிரிகள் இந்நோயை ஏற்படுத்தும். இக்கிருமிகள் கோழிகளின் குடலில் இயல்பாகவே இருக்கும். இந்நோயை ஏற்படுத்தும் தூண்டு காரணி, இரத்தக் கழிச்சல் நோயாகும்.
நார்ச்சத்து மிக்க தீவனம் மற்றும் தீவனத்தை அடிக்கடி மாற்றினால், குடலிலுள்ள நுண் கிருமிகளின் விகிதாச்சாரம் மாறுபடும்.
இதனால், இந்நோய்க் கிருமிகள் பெருகி நோயை ஏற்படுத்தும். விலங்கினப் புரதப் பொருள்களை அதிகமாக அளித்தாலும் நோய் ஏற்படும். கோழிகள் வளரும் இடத்தில் ஈக்கள் அதிகமாக இருந்தால், இந்நோய்க் கிருமிகள் எளிதில் பரவும்.
நோய் அறிகுறிகள்: கோழிகள் சோர்வுடன் இருக்கும். இறகுகள் சிலிர்த்துக் கொண்டிருக்கும். நடக்க முடியாமல் ஒரே இடத்தில் நின்றபடி இருக்கும். குறைவாக உண்ணும். உடலில் நீர் வற்றி விடும். கோழிகள் ஒன்றொடென்று அணைந்து கொண்டிருக்கும்.
கொண்டை கருத்திருக்கும். கோழிகள் திடீரென இறக்கும். இறந்த கோழிகளின் குடல் வீங்கியும், குடல் உட்சவ்வு கை துடைக்கும் துண்டைப் போன்ற தோற்றத்தில் இருக்கும்.
தடுப்பு முறைகள்: கோழிகளுக்குத் தரமான தீவனத்தை அளிக்க வேண்டும். கொட்டகையைச் சுத்தமாக வைத்திருக்க வேண்டும். இரத்தக் கழிச்சல் நோய் ஏற்படாமல் கோழிகளைப் பாதுகாக்க வேண்டும்.
இந்நோயினால் பாதிக்கப்பட்ட கோழிகளுக்கு, நியோமைசின் அல்லது லிங்கோமைசின் மருந்தைத் தரலாம். மேலும், அமிலமாக்கி மற்றும் நன்மை பயக்கும் நுண்கிருமிக் கலவை மருந்துகளையும் கொடுக்கலாம்.
இறக்கை அழுகல் நோய்: இது, கிளாஸ்டீரிடியம் மற்றும் ஸ்டபைலொகாக்கஸ் போன்ற நுண் கிருமிகளால் ஏற்படும். இந்தக் கிருமிகள் கோழிகளின் எச்சம் மற்றும் சுற்றுப்புறத்தில் இயல்பாகவே இருக்கும். இந்நோய் 6-16 வயதுள்ள கோழிகளில் ஏற்படும்.
கோழிகள் மிரள்வதால் உடலில் ஏற்படும் சிராய்ப்புகள் மூலம், நோய்க் கிருமிகள் தோலுக்குள் சென்று திசுக்களைச் சிதைத்து, அழுகல் நோயை ஏற்படுத்தும்.
நோய் அறிகுறிகள்: கோழிகள் சோர்வுடன் சிறகுகளைச் சிலிர்த்தபடி இருக்கும். குறைவாக உண்ணும். தலை, தாடை மற்றும் கால்கள் வீங்கி நீர்க் கோர்த்துக் கொண்டிருக்கும்.
இறந்த கோழிகளில் தோல் அழுகி எளிதில் உரியும் தன்மையில் இருக்கும். இந்நோயுள்ள பண்ணைகளில் 50 சதம் வரை இறப்பு இருக்கும்.
தடுப்பு முறைகள்: கோழிக் கொட்டகையில் கிருமிகளைக் கட்டுப்படுத்த, கிருமிநாசினி மருந்துகளைத் தெளிக்க வேண்டும். கோழிகளுக்கு நோய் எதிர்ப்பு சக்தியைப் பெருக்கும் உயிர்ச் சத்துகளான ஈ, செலினியம், சி போன்றவற்றைத் தீவனத்தில் கலந்து கொடுக்க வேண்டும்.
கால்நடை மருத்துவரின் ஆலோசனைப்படி, அமாக்ஸிலின் எதிர் உயிர் மருந்தை அளிக்கலாம்.
இதுவரை கூறப்பட்ட நுண்ணுயிர் நோய்களையும், அவற்றைத் தடுக்கும் முறைகளையும் நன்றாகப் புரிந்து கொண்டு, பண்ணையைப் பராமரித்தால், கோழிகள் மூலம் சிறந்த உற்பத்தித் திறனை, மிகக் குறைந்த செலவில் பெற்று அதிக இலாபம் அடையலாம்.
முனைவர் க.பிரேமவல்லி, இணைப் பேராசிரியர், கோழி இனவிருத்திப் பிரிவு, கால்நடை அறிவியல் முதுகலை ஆராய்ச்சி நிலையம்,
காட்டுப்பாக்கம், செங்கல்பட்டு மாவட்டம்.
சந்தேகமா? கேளுங்கள்!