சிறந்த பால் உற்பத்திக்கான தீவன மேலாண்மை!

பால் cow 1

ரு மாட்டின் தீவனத் தேவையில், மூன்றில் ஒரு பங்கு அடர் தீவனமாக இருக்க வேண்டும். அடுத்த இரண்டு பங்கு, பசும்புல், வைக்கோல், சோளத்தட்டை, கம்பந்தட்டை போன்றவற்றில் இருந்து கிடைக்க வேண்டும்.

உலர் தீவனம்

இதே போன்று வைக்கோல், சோளத்தட்டை, கம்பந்தட்டை, கேழ்வரகுத் தாள், கடலைச்செடி, கரும்புச்சக்கை போன்றவற்றை, மாட்டின் உடல் எடைக்கு ஏற்ப, தினமும் 4-5 கிலோ கொடுக்கலாம்.

கலப்புத் தீவனம்

கலப்புத் தீவன மாதிரி-1: நூறு கிலோ கலப்புத் தீவனத்தைத் தயாரிக்கத் தேவையான பொருள்கள்: கடலைப் புண்ணாக்கு 30 கிலோ, எள் புண்ணாக்கு 10 கிலோ, அரிசித் தவிடு 30 கிலோ, மக்காச்சோளம் 27 கிலோ, தாதுப்புகள் 2 கிலோ, உப்பு 1 கிலோ.

கலப்புத் தீவன மாதிரி-2: எள் புண்ணாக்கு 20 கிலோ, தேங்காய்ப் புண்ணாக்கு 15 கிலோ, மக்காச்சோளம் 32 கிலோ, கோதுமைத் தவிடு 30 கிலோ, தாதுப்புகள் 2 கிலோ, உப்பு 1 கிலோ.

உடல்நலப் பாதுகாப்புக்கு என, ஒவ்வொரு மாட்டுக்கும் தினமும் 1.5 கிலோ கலப்புத் தீவனம் கொடுக்கப்பட வேண்டும். தினமும் 2.5 கிலோ பாலைத் தரும் பசுக்களுக்கு அதிகப்படியான தீவனம் தேவையில்லை. உடல் பாதுகாப்புக்குக் கொடுக்கப்படும் தீவனமே போதுமானது.

அதற்கு மேல் கறக்கும் பசுவுக்கு, ஒவ்வொரு 2.5 கிலோ பாலுக்கு ஒரு கிலோ கலப்புத் தீவனம் வீதம், உடல் பாதுகாப்புக்குக் கொடுக்கப்படும் தீவனத்துடன் சேர்த்துக் கொடுக்க வேண்டும்.

சினை மாடாக இருந்தால், ஏற்கெனவே கொடுத்து வரும் தீவனத்துடன், கருவிலுள்ள கன்றின் வளர்ச்சிக்காக, ஏழு மாதம் முதல் 1.5 கிலோ தீவனத்தைச் சேர்த்துக் கொடுக்க வேண்டும். பால் வற்றிச் சினையின்றி உள்ள பசுக்களுக்கு 1.5 கிலோ தீவனம் போதுமானதாகும்.

தீவனக் கலவையில் தாதுப்புகளும், சாதாரண உப்பும் சேர்ந்திராவிடில், தினமும் சாதாரண உப்பு 30 கிராம், தாதுப்புக் கலவை 30 கிராம் சேர்க்கப்பட வேண்டும். மேலும், 15-25 கிலோ பச்சைப்புல், 4-5 கிலோ வைக்கோல் கொடுக்கப்பட வேண்டும். ஒரு மாட்டுக்குத் தினமும் சுமார் 20 லிட்டர் குடிநீர் தேவைப்படும்.

பசும்புல்

கறவை மாடுகளின் எடையைப் பொறுத்தும், கறக்கும் பாலின் அளவைப் பொறுத்தும், தினமும் 15-25 கிலோ பசும்புல்லைத் தர வேண்டும். நேப்பியர் புல், கம்பு நேப்பியர் ஒட்டுப்புல், கினியாப்புல் ஆகியன, எல்லா மண்ணிலும், தட்பவெப்ப நிலையிலும் வளரக் கூடியவை. இவற்றைப் பற்றிய விளக்கங்களைக் காணலாம்.

தீவனப் பயிர்களின் வகைகள்

புல்வகைத் தீவனப் பயிர்கள்: இறவைப் பயிர்கள்: கம்பு நேப்பியர் ஒட்டுப்புல், கினியாப் புல். மானாவாரிப் பயிர்கள்: கொழுக்கட்டைப் புல், தீனாநாத் புல்.

தானிய வகைத் தீவனப் பயிர்கள்: இறவைப் பயிர்கள்: தீவன மக்காச்சோளம், தீவனச்சோளம், தீவனக்கம்பு. மானாவாரிப் பயிர்கள்: தீவனச்சோளம், தீவனக் கம்பு.

பயறுவகைத் தீவனப் பயிர்கள்: இறவைப் பயிர்கள்: வேலி மசால், குதிரை மசால், தட்டைப்பயறு, கொத்தவரை, சோயா மொச்சை, சென்ட்ரோ.

மானாவாரிப் பயிர்கள் – நீண்டகாலப் பயிர்கள்: வேலிமசால், முயல் மசால், டெஸ்மோடியம், சிராட்ரோ, சங்கு புஷ்பம்.

மானாவாரியில் குறுகிய காலப் பயிர்கள்: துவரை, கொள்ளு, அவரை, தட்டைப்பயறு, கொத்தவரை.

மரவகைத் தீவனம்: சவுண்டல், கிளைரிசிடியா, அகத்தி, சித்தகத்தி, கருவேல், வெள்வேல்.

கால்நடைகளுக்கு அளிக்கும் முறை

இந்தத் தீவன வகைகளை, மாடுகள், செம்மறியாடுகள், வெள்ளாடுகள் போன்ற அனைத்துக் கால்நடைகளுக்கும் அளிக்கலாம். மாட்டுக்குத் தினமும் 20-25 கிலோ தர வேண்டும். கன்றுக்குத் தினமும் 5-10 கிலோ தர வேண்டும். ஆட்டுக்குத் தினமும் 3-5 கிலோ இட வேண்டும்.

வேலி மசால்

டெஸ்மான்தஸ் என்னும் வேலிமசால், தென் அமெரிக்காவைத் தாயகமாகக் கொண்ட, சிறந்த, பல்லாண்டுப் பயறுவகைத் தீவனமாகும். நேராகவும், அடர்த்தியாகவும் வளரும் இச்செடி, வெட்ட வெட்ட மறுபடியும் துளிர்த்து, சுவையான பசுந்தீவனத்தைத் தரும்.

இது, எல்லா மண் வகைகளிலும், எல்லாப் பருவங்களிலும் நன்கு வளரும். குதிரைமசாலைப் போல, குளிர்பிரதேசப் பயிராக இல்லாமல், இதை எல்லாப் பகுதிகளிலும் பயிரிடலாம்.

இறவையில் நன்கு வளரும் இப்பயிர், மானாவாரியில் சுமாராகத் தான் வளரும். சுமார் 2 மீட்டர் உயரம் வரை வளரக்கூடிய வேலிமசால், விதைத்த 60-65 நாட்களில் அறுவடைக்குத் தயாராகி விடும்.

இதன் இளம் இலைகள் வெளிர் பச்சையாகவும், முதிர்ந்த இலைகள் கரும் பச்சையாகவும் இருக்கும். மேலும், இலைகள் மிகச் சிறியளவில், மென்மையாக இருக்கும்.

இதைப் பல்லாண்டுப் பயிரான கோ.1, கோ.3, கோ.4 ஆகிய கம்பு நேப்பியர் ஒட்டுப் புல்லுடன் இணைத்து, கலப்புப் பயிராக இறவையில் சாகுபடி செய்யலாம். அதிகமான விதைப்பிடிப்புத் தன்மை இதன் மற்றொரு சிறப்பாகும்.

புரதச்சத்து நிறைந்த வேலிமசால் எளிதில் செரிக்கும். மேலும், பல சத்துகளைக் கொண்டுள்ள வேலிமசாலைக் கால்நடைகள் மிகவும் விரும்பி உண்ணும். எளிதில் செரித்து, சத்துகள் விரைவாக உடலில் சேர்வதால், பால் மற்றும் மாமிச உற்பத்தி பெருகும்.

கால்நடைகளுக்கு அளிக்கும் முறை: இதை, கறவை மாட்டுக்குத் தினமும் 10 கிலோ தர வேண்டும். கன்றுக்குத் தினமும் 5 கிலோ தர வேண்டும். செம்மறியாடு மற்றும் வெள்ளாட்டுக்குத் தினமும் 2 கிலோ தர வேண்டும். இளம் ஆட்டுக் குட்டிக்குத் தினமும் 0.5-1 கிலோ தர வேண்டும்.

ஊறுகாய்ப் புல்

தமிழ்நாட்டில் புல் வகைகள் மழைக்காலத்தில் அதிகமாகவும், வெய்யில் காலத்தில் குறைவாகவும் கிடைக்கும். அதிகமாகக் கிடைக்கும் காலத்தில் இவற்றை அறுவடை செய்து, சேமித்து வைத்துப் பயன்படுத்துவது ஊறுகாய்ப் புல்லாகும். தீவனச் சோளம், தீவன மக்காச்சோளம், கம்பு நேப்பியர் ஒட்டுப்புல் ஆகியவற்றை ஊறுகாய்ப் புல்லாக மாற்றலாம்.

தயாரிக்கும் முறை: தீவனப் பயிர்களின் கதிர்கள், பால் பருவத்தில் இருக்கும் போது அறுவடை செய்ய வேண்டும். அறுவடை செய்த பயிர்களை வயலில் உலரவிட வேண்டும். பிறகு, சிறு கட்டுகளாகக் கட்டி அடுக்கடுக்காகக் குழியில் நிரப்ப வேண்டும்.

அடுக்கும் போது, இவற்றை நன்கு மிதித்து இடையிலுள்ள காற்றை வெளியேற்ற வேண்டும். ஒரு டன் தீவனப் பயிருக்கு 20 கிலோ மொலாசஸ் மற்றும் 8 கிலோ உப்பைச் சேர்க்க வேண்டும்.

தொட்டி நிரம்பியதும் அதை பாலித்தீன் தாளால் மூடி, அதன் மேல் மண்ணைக் கொட்டி, காற்றுப் புகாமல் பூச வேண்டும். மழைக் காலத்தில் விரிசல் ஏற்பட்டு, நீர் உள்ளே செல்லாமல் இருக்க, மணலைப் போட்டு மூடிப் பாதுகாக்க வேண்டும். மூன்று மாதங்களுக்குப் பின் மாடுகளுக்குக் கொடுப்பதற்குத் தயாராகி விடும்.

வைக்கோலை மதிப்பூட்டுதல்

நெல் வைக்கோல், கேழ்வரகு வைக்கோல் போன்றவை புரதச்சத்து குறைந்த தீவனங்களாகும். அசை போடும் விலங்குகளான ஆடு, மாடு போன்றவை புரதமல்லாத, நைட்ரஜன் கலந்த பொருளான யூரியா போன்றவற்றைப் பயன்படுத்தி, புரதத்தைத் தயாரித்துக் கொள்ளும் ஆற்றல் மிக்கவை.

எனவே, தமிழ்நாட்டில் அதிகளவில் பயன்படும் வைக்கோல் போன்ற தீவனங்களை; புரதமல்லாத நைட்ரஜன் பொருள்களான யூரியா, மொலாசஸ் என்னும் வெல்லச்சாறு போன்றவற்றுடன் கலந்து, எளிதில் பயன்படும் மாவுப் பொருள்கள் நிறைந்த, தரம் உயர்ந்த தீவனங்களாக மாற்றிப் பயன்படுத்தலாம்.

செய்முறை: நூறு கிலோ வைக்கோலை, 20 அடி நீளம், 20 அடி அகலம் உள்ள தளத்தில் சூரிய ஒளிபடுமாறு சமமாகப் பரப்ப வேண்டும்.

அடுத்து, 2 கிலோ யூரியா, 10 கிலோ நீர், 10 கிலோ மொலாசஸ் ஆகியவற்றை ஒன்றாகச் சேர்த்து நன்றாகக் கலக்க வேண்டும்.

இந்தக் கலவையில் பாதியை, தெளிப்பான் அல்லது பூவாளி மூலம் வைக்கோல் மீது பரவலாகத் தெளிக்க வேண்டும். பிறகு, வைக்கோலை உலர வைக்க வேண்டும்.மேற்புறம் நன்றாக உலர்ந்த பிறகு வைக்கோலைத் திருப்பிப் போட்டு மீதமுள்ள கலவையைத் தெளிக்க வேண்டும்.

பிறகு, முற்றிலும் உலர்ந்த வைக்கோலைப் பாதுகாப்பாகச் சேமித்து வைக்க வேண்டும். மதிப்பூட்டம் செய்யப்பட்ட இந்த வைக்கோலை, மாட்டுக்கு 8 கிலோ வீதம் அளித்தால், அந்த மாடு, தனக்கான புரதத்தைத் தயாரிக்கத் தேவைப்படும் நைட்ரஜனைப் பெற்று விடும்.


பால் DR.VINODH

மரு. பா.வினோத், ச.கோகிலவாணி, முனைவர் வே.எ.நேதாஜி மாரியப்பன், ஹேன்ஸ் ரோவர் வேளாண்மை அறிவியல் நிலையம், பெரம்பலூர்.

Share:

விவசாயம் / கால்நடை வளர்ப்புக் குறித்து

சந்தேகமா? கேளுங்கள்!


இன்னும் படியுங்கள்!

Discover more from பச்சை பூமி

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading