My page - topic 1, topic 2, topic 3

கறவை மாடுகளில் பேறுகாலப் பராமரிப்பு!

றவை மாடு வளர்ப்பின் மிக முக்கிய நிகழ்வு, அதன் பேறுகாலம் ஆகும். இந்த நேரத்தில் ஏற்படும் கவனக் குறையால், பிறக்கும் கன்றுகள் இறக்க நேரிடுகிறது. சில நேரங்களில் தாய்ப் பசுக்களும் கூட இறக்க நேரிடுகிறது. இதனால், பேரிழப்பைச் சந்திக்கும் நிலை உண்டாகிறது. இந்த நிலையைத் தவிர்க்க, ஈற்றுக் காலத்தில் கவனமாக இருப்பது மிகவும் அவசியம்.

ஈற்றுப் பருவத்தில் உள்ள மாட்டை மற்ற மாடுகளில் இருந்து பிரித்துத் தனியிடத்துக்கு மாற்ற வேண்டும். அந்த இடம், கிருமி நாசினியால் தூய்மை செய்யப்பட்டிருக்க வேண்டும். தரையில், மென்மையான, சுத்தமான, ஈரத்தை உறிஞ்சும் குப்பையைப் பரப்ப வேண்டும்.

ஈற்றுக் காலத்துக்கு ஓரிரு வாரத்துக்கு முன், சத்தான தீவனம், தாதுப்புக் கலவை, வைட்டமின் இ, செலினியம் ஆகியவற்றைத் தர வேண்டும். இதனால், கன்றை ஈன்ற பிறகு நஞ்சுக்கொடி எளிதாக வெளியேறும்.

ஈனும் காலத்தில் பால்மடி பெரிதாகவும், அகன்றும் காணப்படும். இடுப்பின் இரு பக்கமும் குழிவாகவும், தளர்ந்தும் இருக்கும். இனப்பெருக்க உறுப்பின் உதடுகள் தளர்ந்தும் வீங்கியும் இருக்கும்.

அடர்ந்த சளியைப் போன்ற திரவம் இனப்பெருக்க உறுப்பில் இருந்து வெளிப்படும். ஈற்றுக்காலம் நெருங்கும் போது, மாடானது பதட்டமாகவும், அமைதியற்றும் காணப்படும்.

கன்றை ஈனப்போகும் நிலையில், தாய்மாடு அடிக்கடி படுப்பது எழுவதுமாக இருக்கும். ஈற்று வலியால் இயல்பற்ற நிலையில் இருக்கும். இந்த அறிகுறிகள் தெரிந்ததும், சற்றுத் தள்ளியிருந்து மாட்டைக் கவனித்துக் கொண்டிருக்க வேண்டும். சாதாரண நிலையில், கன்று பிறக்க, 2-3 மணி நேரமாகலாம். இதுவே முதல் ஈற்றென்றால் 4-5 மணி நேரமாகலாம்.

கன்று வெளிவரும் முன், அண்டலாய்க் திரவம் அடங்கிய பனிக்குடம் வெளியில் தெரிந்த சிறிது நேரத்தில் உடையும். உடனே, கன்றின் கால் மற்றும் தலைப்பகுதி, மாட்டின் யோனியில் இருந்து வெளியே தெரியும்.

பிறகு, மாட்டின் கருப்பை மற்றும் வயிற்றின் அழுத்தம் காரணமாக, கருப்பையில் இருந்து கன்று வெளியே தள்ளப்படும். இந்த நிலையில், ஏதேனும் மாற்றம் தெரிந்தால், உடனே கால்நடை மருத்துவரின் உதவியை நாடவேண்டும்.

கன்று பிறந்த 8-12 மணி நேரத்தில் நஞ்சுக்கொடி வெளியேறி விட வேண்டும். அப்படி நடக்காத நிலையில், உடனே கால்நடை மருத்துவரின் உதவியை நாட வேண்டும். தாயும் கன்றும் இளஞ்சூடான நீரைப் பருகச் செய்ய வேண்டும்.

வெளியே வரும் நஞ்சுக் கொடியை மாடு உண்டு விடாமல் அகற்ற வேண்டும். இளஞ்சூடான வெந்நீரால் கன்றைக் குளிப்பாட்ட வேண்டும். ஈரத்தவிடு, கச்சா சர்க்கரை கலந்த கலவையை, மாட்டுக்குத் தர வேண்டும்.

சீம்பாலைக் கன்று குடிக்கும் போது சுரக்கும் கணநீர், மாட்டின் கருப்பையைச் சுருங்கச் செய்கிறது. முதன் முதலாகப் பாலைக் கறப்பதற்கு முன், பால் காம்புகளின் அனைத்து அடைப்புகளும் நீங்கியுள்ளதை உறுதி செய்து கொள்ள வேண்டும்.

பாலைக் கறப்பதற்கு முன், கிருமி நாசினி மூலம் மடியைச் சுத்தம் செய்ய வேண்டும். இது, மடிநோய் வராமல் தடுக்கும். பால் மடியின் வீக்கம் வற்றும் வரையில், ஒரு நாளைக்கு மூன்று நேரம் கூடப் பாலைக் கறக்கலாம். மேலும், பனிக்கட்டி ஒத்தடமும் தரலாம்.


தொகுப்பு: பசுமை

Share:

  சந்தேகமா? கேளுங்கள்!  

 

இன்னும் படியுங்கள்!

Enable Notifications OK No thanks