பால் பண்ணை இலாபத்தில் இயங்க வேண்டுமெனில், ஒவ்வொரு பசுவும் ஆண்டுக்கு ஒரு கன்றை ஈன வேண்டும்.
பால் பண்ணையை இலாபத்தில் நடத்த முடியாமல் போவதற்குக் காரணம், கருத்தரிப்பு வீதம் குறைவது தான்.
கருத்தரிப்பு என்பது, சீரான பருவச் சுழற்சியில் பசுக்கள் சினையாதல் ஆகும்.
ஆனால், கடந்த பத்து ஆண்டுகளுக்கு மேல், கருத்தரிப்புக் குறைபாடு அதிகளவில் உள்ளது.
இந்தக் குறை பல்வேறு காரணிகளால் ஏற்பட்டாலும், சத்துக்குறை மிக முக்கியக் காரணியாக உள்ளது.
சத்தில் ஏற்படும் மாற்றங்கள், கால்நடைகளின் உற்பத்தியில், பெரிய பாதிப்பை உண்டாக்கும்.
இந்தப் பாதிப்பு, வேறுபட்ட பண்ணைகள் இடையிலும், ஒரே பண்ணையில் இருக்கும் பசுக்களுக்கு இடையிலும் ஏற்படும்.
பசுவின் உடல் எடை மற்றும் தரப்படும் தீவன அளவைப் பொறுத்தும் கருத்தரிப்பு வீதம் மாறுபடும்.
இனப்பெருக்க வயது மற்றும் உடல் எடையை அடையாத பசுக்களில் சத்துக்குறை மிகப்பெரிய பாதிப்பை ஏற்படுத்தும்.
சத்துக் குறையால், கன்றை ஈன்ற பிறகு, கால்நடையின் உடல் எடை குறைதல் அல்லது அதிகப் பால் உற்பத்திக்கு வேண்டிய சத்தான தீவனம் இல்லாமல் போவதால், சீரான பருவச் சுழற்சி ஏற்படுவதில்லை.
கன்றின் வளர்ச்சியில் குறை, சரியான வயதில் இனப்பெருக்கச் சுழற்சி ஏற்படாமல் போதல் ஆகியவற்றால், ஒரு கன்றின் வாழ்நாளில் தகுதியான பாலுற்பத்தித் திறன் குறைந்து விடுகிறது.
சத்துக் குறையால் ஏற்படும் பாதிப்புகள், பருவ நிலையைப் பொறுத்தும் மாறுபடும்.
மாவுச்சத்து, புரதம், வைட்டமின் மற்றும் தாதுப்புகள் பற்றாக் குறையால், கருத்தரிப்புக் குறைபாடு ஏற்படுகிறது.
கிடேரிகள் பருவமடைவதில் சத்தின் தாக்கம்
சத்துக் குறையால், கிடேரிகளில் பருவச் சுழற்சி மற்றும் கருத்தரிப்பு வீதம் பாதிக்கப்பட்டு, அதிகளவில் கருச்சிதைவு ஏற்படுகிறது.
மேலும், ஏற்கெனவே பருவமடைந்த கிடேரிகளின் அண்டகச் செயல் பாதிக்கிறது.
சரியான அளவில் அடர் தீவனத்தை மாடுகளுக்கு அளித்தால், அவற்றின் சினைப்பருவச் சுழற்சி விரைவாகவும், முதன் முதல் கருத்தரிப்பு 6-18 மாதங்களுக்கு உள்ளும் ஏற்படும்.
சத்து நிறைந்த தீவன முறையில் வளர்க்கப்படும் கிடேரிகள் பருவமடைதல், சீரான உடல் எடையை எட்டியதும் ஏற்படுகிறது.
மேலும், சரியான சத்துமிக்க தீவனத்தில் வளர்க்கப்படும் கிடேரிகளில், இனப்பெருக்கம் சார்ந்த சிக்கல்கள் மிகக் குறைவாகவே உள்ளன.
கிடேரிகளின் உடல் எடைக்கு ஏற்ப, கலப்புத் தீவனத்தைத் தர வேண்டும்.
எடுத்துக் காட்டாக, 150-200 கிலோ எடையுள்ள கிடேரிக்கு, 2.25 முதல் 2.50 கிலோ கலப்புத் தீவனத்தைத் தர வேண்டும்.
மேலும், 15 முதல் 20 கிலோ வைக்கோலைக் கொடுக்க வேண்டும்.
ஈன்ற மாடுகளில் சத்தின் முக்கியம்
ஈன்ற மாடுகளின் இனப்பெருக்கத் திறன், அவற்றின் சத்தைப் பொறுத்து அமையும்.
இந்த மாடுகளுக்குப் புரதம் மிகுந்த தீவனத்தை அளித்தால், அடுத்த கன்றுக்கான பருவச் சுழற்சி மற்றும் கருத்தரித்தல் விரைவாக நடக்கும்.
கன்றை ஈன்ற இரண்டு வாரங்களுக்குப் பிறகு, மாட்டின் உடல் எடையில் ஏற்படும் மாற்ற அளவு, அதன் கருமுட்டை வெளியேறும் நாட்களுடன் எதிர்மறை தொடர்பை உடையது.
எனவே, கன்றை ஈன்ற பசுக்களுக்குப் போதுமான மாவுச்சத்தும், புரதச்சத்தும் நிறைந்த தீவனத்தைத் தர வேண்டும்.
எடுத்துக் காட்டாக, 6-10 லிட்டர் பாலைத் தரும் பசுக்களுக்கு, 20-30 கிலோ பசுந்தீவனம், 5-7 கிலோ உலர் தீவனம், 3-4.5 கிலோ அடர் தீவனம் தரப்பட வேண்டும்.
அடர் தீவனக் கலவைத் தயாரிப்பு: மாதிரி 1
கடலைப் புண்ணாக்கு: 32 சதம்,
நெல் தவிடு: 35 சதம்,
உலர் மரவள்ளிக் கிழங்குச் செதில்: 25 சதம்,
எள்ளுப் புண்ணாக்கு: 5 சதம்,
தாதுப்புக் கலவை: 2 சதம்,
உப்பு: 1 சதம்.
மாதிரி 2
கடலைப் புண்ணாக்கு: 30 சதம்,
நெல் தவிடு: 30 சதம்,
தேங்காய்ப் புண்ணாக்கு: 10 சதம்,
மக்காச்சோளம்: 27 சதம்,
தாதுப்புக் கலவை: 2 சதம்,
உப்பு: 1 சதம்.
மாவுச்சத்துச் சமநிலையும் கருத்தரிப்பும்
ஆரம்பக் கறவைக் காலத்தில் ஏற்படும் மாவுச்சத்துக் குறையால், கருத்தரிப்புத் திறன் குறையும்.
உடல் செயலியல் அடிப்படையில், பார்க்கும் போது, மாவுச்சத்துக் குறையுள்ள பசுக்களில், இரத்தக் கணையச் சுரப்புநீர்க் குறை உண்டாகும்.
இதனால், கருமுட்டை வளரத் தேவையான மாவுச் சத்துக் கிடைக்காமல், கரு முட்டையின் வளர்ச்சித் தடைபடுகிறது.
எனவே, இத்தகைய சிக்கல்களைத் தவிர்க்க, போதுமான மாவுச் சத்துள்ள பொருள்களைப் பசுக்களுக்குக் கொடுக்க வேண்டும்.
மேலும், கொழுப்பு அமிலம், சுண்ணாம்புச் சத்து, கொழுப்புச் சத்துள்ள துணைத் தீவனங்களைத் தருவதன் மூலம், முதல் இனச் சேர்க்கையிலேயே கருத்தரிப்பு ஏற்பட்டு விடும்.
துணைத் தீவனங்களில் இருந்து உருவாகும் நிறைவுறாத கொழுப்பு அமிலம், பல்வேறு வகையில் கருத்தரிப்புத் திறன் அதிகரிக்க ஏதுவாக உள்ளது.
நிறைவுறாத கொழுப்பு அமிலம், இரத்தத்தின் மாவுச்சத்து அளவைக் கூட்டி, நேர்மறை விளைவை, கருமுட்டை வெளிப்படுதலை, ஊக்கப்படுத்தும் இயக்குநீர் மீது ஏற்படுத்தும்.
புரோஜஸ்டிரான் இயக்கு நீரின் முன்னோடியான குருதிக் கொழுப்பின் அளவை உயர்த்தும்.
புரோஸ்டா கிளான்டின் ஆல்பா மற்றும் ஈஸ்ட்ராடையாலைக் கட்டுப்படுத்தி, கார்பஸ் லூட்டியத்தின் வாழ்நாளை அதிகரிக்கச் செய்கிறது.
தாதுப்புக் கலவையின் அவசியம்
கோபால்ட், காப்பர், இரும்பு, மேங்கனீஸ், செலினியம், ஜின்க் கலந்த தாதுப்புக் கலவை மற்றும் கொழுப்பில் கரையும் ஏ, டி, ஈ, கே வைட்டமின்கள், கருத்தரிப்பு நிகழ்வில் முக்கியப் பங்கு வகிக்கின்றன.
தாதுப்புக் கலவையின் தேவை, தமிழகத்தில் மாவட்டத்துக்கு மாவட்டம் மாறுபடுகிறது.
இதைக் கருத்தில் கொண்டு, பசுக்களை வளர்ப்போரின் வளர்ச்சிக்காக, பல்வேறு ஆய்வுகளைச் செய்து, ஒவ்வொரு மாவட்டத்துக்கும் ஏற்ற வகையில்,
தானுவாசு தாதுப்புக் கலவை என்னும் பெயரில் தயாரித்து, தமிழகத்தில் உள்ள மாவட்டக் கால்நடை ஆராய்ச்சி நிலையங்கள் மூலம்.
குறைந்த விலையில் விற்பனை செய்து வருகிறது, தமிழ்நாடு கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக் கழகம்.
தாதுப்புக் கலவை, கன்றை ஈனுவதற்கு முன்பு, அதாவது, ஈற்றுக்கு 30 முதல் 45 நாட்களுக்கு முன்பே தொடங்கி,
ஈற்றுக்குப் பிறகு 90 நாட்கள் வரையிலும் பசுக்களுக்குத் தரப்பட வேண்டும்.
தாதுப்புக் கலவையில் போதியளவில், கரிம நிலை, காப்பர், மேங்கனீஸ், ஜிங்க் ஆகியன சேர்ந்திருக்க வேண்டும்.
வைட்டமின்களின் அவசியம்
இந்திய ஆராய்ச்சிக் கழக அறிவுரைக்கு ஏற்ப, ஒவ்வொரு கிலோ உடல் எடைக்கும் வைட்டமின் ஏ-யானது, 100 ஐயு, வைட்டமின் டி-யானது 30 ஐயு, வைட்டமின் ஈ-யானது 25 முதல் 70 ஐயு வீதம் தரப்பட வேண்டும்.
அண்டப்பைச் சிக்கலுள்ள பசுக்களுக்கு, வைட்டமின் ஈ மற்றும் செலினியத்தைத் தந்தால், அண்டப்பை விரைவில் சுருங்கி, கருத்தரிப்புத் திறன் அதிகமாகும்.
கருத்தரிப்புத் திறன் குறையுள்ள பசுக்களுக்கு, வைட்டமின் ஏ-யைக் கொடுத்தால், கருத்தரிப்புத் திறன் மேம்படும்.
கறவை மாடுகளின் பாலுற்பத்தித் திறனுக்கு ஏற்ப, போதியளவு கோ.3, கோ.4, போன்ற பசுந்தீவனம், வைக்கோல் போன்ற உலர் தீவனம்,
அரைத்த கம்பு, சோளம், உடைத்த கோதுமை, கேழ்வரகு போன்றவை அடங்கிய அடர் தீவனம்,
புரதமுள்ள புண்ணாக்கு, தவிடு ஆகியவற்றைச் சரியான விகிதத்தில், தீவனத்துடன் சேர்த்தால், பால் பண்ணைத் தொழில் சிறப்பாக விளங்கும்.
ஏ.சபரிநாதன், சீ.ரங்கசாமி, ரோஜா, து.கோபிகிருஷ்ணன், கால்நடை மருத்துவக் கல்லூரி, சென்னை – 600 007.
சந்தேகமா? கேளுங்கள்!