கறவை மாடுகளில் நிலைமாறும் காலம்!

கறவை மாடு Kangayam 01 93fe5a540c948041d01edb8ea15ea098

செய்தி வெளியான இதழ்: 2018 நவம்பர்.

றவை மாடுகளில் நிலைமாறும் காலம் என்பது, ஈனுவதற்கு மூன்று வாரத்துக்கு முந்தைய மற்றும் மூன்று வாரத்துக்குப் பிந்தைய காலமாகும். இக்காலமே பாலுற்பத்தி மற்றும் இலாபத்தை நிர்ணயிக்கும் காலம்.

ஏனெனில், இந்தக் காலத்தில் தான் கறவை மாடுகள் அதிகளவில் வளர்சிதை மாற்றக் கோளாறு மற்றும் பாலுற்பத்தி தொடர்பான சிக்கல்களுக்கு உள்ளாகின்றன. மேலும், இக்காலத்தில் தான் கறவை மாடுகள், சினைக்காலம் முடிந்து கறவைக்கும் வருகின்றன.

எனவே, இந்தக் காலத்தில் அவற்றைச் சரியாகப் பராமரித்தால், பால் உற்பத்தியைக் கூட்டி வருமானத்தைப் பெருக்கலாம்.

தீவன மேலாண்மை

பால் வற்றிய காலத்தில் பால் உற்பத்திக்கான புரதமும் எரிசக்தியும் கறவை மாடுகளுக்குத் தேவையில்லை. இவற்றின் உடல் நலத்துக்கும் கன்றின் வளர்ச்சிக்கும் மட்டுமே இவை தேவைப்படும்.

சினைக் காலத்தின் கடைசி மூன்று மாதத்தில் கன்றின் வளர்ச்சி மிகுதியாக இருப்பதால், பெரிய அசையூண் வயிற்றின் அளவு குறைந்து விடும். இதனால், சரியான அளவில் தீவனம் எடுப்பதும் குறைந்து விடும்.

எனவே, இக்காலத்தில், கறவை மாடுகளுக்கு அடர் தீவனம் மற்றும் பசுந்தீவனத்தைத் தேவையான அளவில் அளிக்க வேண்டும். காலை, மாலையில் 2.5 கிலோ வீதம் அடர் தீவனம், 35 கிலோ பசுந்தீவனம், போதிய குடிநீர் அளிக்கப்பட வேண்டும். தீவனம் நொதிக்கவும் செரிக்கவும், தேவையான வைக்கோலையும், செரிக்கத் தூண்டும் மருந்தையும் கொடுக்கலாம்.

சினைக்கால எடைப் பராமரிப்பு

தீவனம் மூலம் போதுமான எரிசக்தியும் புரதமும் கிடைக்காத போது, இவற்றை, தமது உடலில் சேமித்து வைத்திருக்கும் கொழுப்புச் சேமிப்புக் கிடங்கில் இருந்து கறவை மாடுகள் எடுத்துக் கொள்ளும். இதனால், மாடுகளின் எடை குறையும்.

பால் வற்றிய காலத்தில் கறவை மாடுகளின் உடல் எடைப் பராமரிப்பு 3-3.25 வீதம் இருக்க வேண்டும். அதாவது, மாடு திடமாகவும், கன்றின் வளர்ச்சிக்குத் தேவையான எடையையும் கொண்டிருக்க வேண்டும்.

சினைக்காலத்தில் பாலை வற்றச் செய்தல்

அடுத்த ஈற்றில் கூடுதல் பால் உற்பத்திக்கும், பால் சுரக்கும் தசைகளின் மறு சுழற்சிக்கும் சினை மாடுகளில், சரியான காலத்தில் பாலை வற்றச் செய்தல் மிகவும் அவசியம்.

சினைக் காலத்தின் கடைசி 45-60 நாட்களில், பால் கறவையை முற்றிலும் நிறுத்திவிட வேண்டும். எடுத்துக்காடாக, ஒரு நாளில் ஆறு லிட்டருக்குக் குறைவாகக் கறக்கும் மாடுகளில், கறவையை முற்றிலும் நிறுத்திவிட வேண்டும்.

மிகுதியாகக் கறக்கும் மாடுகளில் ஒருவேளைப் பாலை மட்டும் கறக்கலாம். அல்லது ஒருநாள் விட்டு ஒருநாள் கறந்து, 2-3 வாரத்தில் கறவையை முழுவதும் நிறுத்திவிட வேண்டும்.

நிலைமாறும் காலத்தில் மடிப் பராமரிப்பு

ஈனுவதற்கு 7-10 நாட்களுக்கு முன், காம்புத் துளைகள் திறக்கத் தொடங்குவதால், அவற்றின் வழியே நுண்ணுயிரிகள் புகுந்து மடிநோயை உண்டாக்க வாய்ப்புண்டு. எனவே, இந்தக் காலத்தில் மடி மற்றும் காம்பில் அல்லது தசை வழியே நோயெதிர்ப்பு மருந்தை அளிக்க வேண்டும்.

மேலும், தேவையான அளவு பசுந்தீவனம், வைட்டமின் இ மற்றும் செலினியம் போன்ற சத்துகள் உணவில் மிகுந்திருக்க வேண்டும். இப்படிப் பராமரித்தால், சினைக்காலம் மற்றும் நிலைமாறும் காலத்தில் மடிநோய் வராமல் தடுக்கலாம்.

தொழுவப் பராமரிப்பு

சினை மாடுகளை, மற்ற மாடுகளிடம் இருந்து தனியாகப் பிரித்து வைக்க வேண்டும். ஏனெனில், மற்ற மாடுகளுடன் சண்டையிட்டு, கருச்சிதைவு, ஈனுவதில் சிரமம் ஏற்படுதல் ஆகியவற்றைத் தடுக்கலாம்.

கண்டிப்பாக 60 நாட்கள் பாலைக் கறக்கக் கூடாது. ஏனெனில், இக்காலத்தில் தான் பால் சுரக்கும் தசைகள் புத்துணர்வைப் பெற்று, அதிக நோயெதிர்ப்புத் தன்மையுள்ள புரதங்களை உற்பத்தி செய்யும் ஆற்றலைப் பெறும்.

ஈனும் நிலையில் உள்ள மாடுகளை, இடவசதியுள்ள கொட்டகைக்கு மாற்றிட வேண்டும். தென்னங் கீற்றால் ஆன தொழுவம் வெப்ப அதிர்ச்சியில் இருந்து மாடுகளைக் காக்க உதவும். தீவனத் தொட்டியை 1.5 அடி அகலம் மற்றும் 1.5 அடி நீளத்தில் அமைக்க வேண்டும்.

வளர்சிதை மாற்றக் கோளாறுகள்

பால் காய்ச்சல்: கால்சியம் 300 கிராம் அளவில் 3 முறை வாய்வழியாக அளிக்கலாம். வைட்டமின் டி, கால்சியம், பாஸ்பரஸ், அமோனியம் குளோரைடு போன்ற தாதுகள் நிறைந்த தீவனத்தைக் கொடுக்க வேண்டும்.

மடிவீக்கம்: சோடியம் மற்றும் பொட்டாசிய உப்புகளை, தீவனத்தில் கூடுதலாகச் சேர்க்கக் கூடாது. ஒரு நாளைக்கு வைட்டமின் இ-யை 1000 ஐ.யு. அளித்து வந்தால் நீர்க்கோத்த மடிவீக்கத்தைத் தடுக்கலாம்.

நச்சுக்கொடி உள்ளிருத்தலைத் தவிர்த்தல்: தீவனத்தில் தினமும் 100,000 ஐ.யு. வைட்டமின் ஏ, 400 ஐ.யு. வைட்டமின் இ மற்றும் செலினியத் தாது 3 மி.கி. வீதம், பால் வற்றிய சினை மாடுகளுக்கு அளித்து வந்தால், ஈற்றுக்குப் பிறகு நச்சுக்கொடி இயல்பாக வெளியேறி விடும்.

அமிலநோய்: அடர் தீவனத்தில் மாவுச்சத்து மிகுதியாக இருக்கக் கூடாது. தீவனத்தில் அமிலத் தன்மையைக் குறைக்க, சோடியம் கார்போனேட், பொட்டாசியம் கார்போனேட், மெக்னீசியம் ஆக்சைடு, சோடியம் ஹைட்ராக்சைடு 2-4 சதம் சேர்த்தல் அவசியம்.

வயிறு ஒதுங்கியிருத்தல்: பால் வற்றிய காலத்தில் மாடுகளுக்கு நிறையளவில் தீவனம் அளிக்கக் கூடாது. 50 சதப் பசுந்தீவனம், நன்கு மென்று சாப்பிடும் அளவில் இருக்க வேண்டும்.

இப்படி, கறவை மாடுகளின் நிலைமாற்றக் காலத்தில், அவற்றைக் கவனமாகப் பராமரித்தால், சுகமான ஈற்றில் நல்ல கன்றையும், நிறையப் பாலையும் பெற்றுப் பயனடையலாம்.


மா.வெங்கடேசன், சோ.யோகேஷ்பிரியா, ப.செல்வராஜ், கால்நடை மருத்துவக் கல்லூரி, ஒரத்தநாடு, தஞ்சாவூர் மாவட்டம்.

Share:

விவசாயம் / கால்நடை வளர்ப்புக் குறித்து

சந்தேகமா? கேளுங்கள்!


இன்னும் படியுங்கள்!

Discover more from பச்சை பூமி

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading