கோடையில் இறைச்சிக் கோழிகள் பராமரிப்பு!

இறைச்சிக் கோழி HP fcad08cb4c0f399fe6cd76e2aeabf376

றைச்சிக்கோழி, புரதம், தாதுப் பொருள்கள், வைட்டமின்கள் அடங்கிய சரிவிகித உணவைத் தரும் பறவையாகும்.

இது விரைவாக வளர்ந்து அதிக உணவை இறைச்சியாக மாற்றும் திறன் மிக்கது.

இறைச்சிக் கோழிப் பண்ணைத் தொழில், நல்ல வருமானம் மற்றும் ஆண்டு முழுவதும் வேலை வாய்ப்பைத் தரும் தொழிலாகும்.

தமிழகத்தில் பெரும்பாலான இறைச்சிக் கோழிப் பண்ணைகள் ஒரே இடத்தில் அதிகளவில் கோழிகளை வளர்க்கும் வகையில் அமைந்துள்ளன.

இந்தக் கோழிப் பண்ணைகள் ஆழ்கூள அமைப்பு முறையில் தான் உள்ளன.

கோடையில் நிலவும் அதிக வெப்பம், இறைச்சிக் கோழிகளின் உற்பத்தித் திறனை மிகவும் பாதிக்கச் செய்கிறது.

பொதுவாக, இறைச்சிக் கோழி 25-27 டிகிரி செல்சியஸ் வெப்ப நிலையில் சிறப்பாக வளரும்.

வெப்பம் மிகுந்தால் இவற்றின் உண்ணும் திறன் குறைந்து விடும். இதனால், உடல் எடை வெகுவாகப் பாதிக்கப்படும்.

இது வெப்ப அயர்ச்சி எனப்படும். சில சமயம் இதனால் கோழிகள் இறக்கவும் நேர்வதால் வருவாய் இழப்பு ஏற்படும்.

வெப்ப அயர்வுக்கு உள்ளான கோழிகளைக் கண்டறிதல்

இந்நிலைக்கு உள்ளான கோழிகள் பெருமூச்சு விடும். தீனி எடுப்பதைக் குறைத்துக் கொள்ளும்.

நீரை அதிகமாகக் குடிக்கும். மற்ற கோழிகளில் இருந்து பிரிந்து இருக்கும்.

பண்ணையில் காற்றோட்டம் மற்றும் குளிர்ச்சி மிகுந்த சுவர் ஓரத்தில் செல்லும்.

வெப்ப அயர்விலிருந்து கோழிகளைக் காத்தல்

கொட்டிலைச் சுற்றிலும் நிழலைத் தரும் மரங்களை வளர்க்க வேண்டும்.

கொட்டிலின் நீளவாட்டம் கிழக்கு மேற்காக இருக்க வேண்டும். இதனால், வெய்யில் நேரடியாகத் தாக்கும் வாய்ப்புக் குறையும்.

கொட்டிலில் நல்ல காற்றோட்டம் இருக்க வேண்டும். கொட்டிலின் கூரை 35 டிகிரிக்கு மேல் இருக்க வேண்டும்.

இது, கொட்டிலில் உருவாகும் வெப்பம் வெளியே செல்ல ஏதுவாக அமையும்.

கொட்டிலின் உட்புறம் வெள்ளை நிறத்தில் இருக்க வேண்டும். வெள்ளை நிறம் சூரிய ஒளியைச் சிதறடித்து, கொட்டிலில் குளிர்ச்சியை உண்டாக்கும்.

கூரையில் பனையோலை, தென்னங்கீற்று போன்றவற்றைப் பரப்பி நீரைத் தெளித்து, கொட்டிலின் வெப்பத்தைக் குறைக்க வேண்டும்.

கொட்டிலுக்குள் 40-50 அடி இடைவெளியில் 36 அங்குல மின்விசிறிகளை அமைக்க வேண்டும்.

கோழிகளின் குடிநீர்க் குழாய்கள் மூலம் 2-3 முறை நீரைப் பீய்ச்சி விட்டு வெப்பத்தைக் குறைக்கலாம்.

கொட்டில் கூரையில் நீரைப் பனியைப் போலத் தெளிக்கும் கருவிகளைப் பத்தடி இடைவெளியில் அமைக்கலாம்.

கொட்டிலின் பக்கவாட்டில், வெப்பக் காற்றை வெளியேற்றும் காற்றுப் போக்கிகளை அமைக்கலாம்.

கோடையில் கோழிக்கான இட வசதியை 1.2 சதுரடியாகக் கூட்ட வேண்டும்.

தீவன மேலாண்மை

வெப்பம் குறைவாக இருக்கும் போது, இறைச்சிக் கோழிகளுக்குத் தீவனத்தை இட வேண்டும். குறிப்பாக, காலை 8 மணி முதல் மாலை 6 மணி வரை தரக்கூடாது.

தீவனத்தில் எரிசக்தியின் அளவைக் கூட்ட வேண்டும். இதைக் கொழுப்புச் சத்துக் குறைவாக உள்ள தீவன மூலப் பொருள்கள் மூலம் தர வேண்டும்.

தீவனத்தில் புரதம் சற்றுக் குறைவாக இருக்க வேண்டும். அமினோ அமிலங்கள் சரியான அளவில் இருக்க வேண்டும்.

குறிப்பாக, லைசின், மிதியோனின் அவசியம் இருக்க வேண்டும்.

அம்மோனிய குளோரைடு 0.3-1.0%, சோடியம் பை கார்பனேட் 0.5% அளவில் கொடுத்தால், கோழிகள் தீவனம் மற்றும் குடிநீரை நன்கு எடுத்துக் கொள்ளும்.

கோழிகளின் குடிநீரில், ஒரு லிட்டர் நீருக்கு ஒரு கிராம் வீதம் அஸ்கார்பிக் அமிலத்தைக் வீதம் கலக்க வேண்டும்.

ஏ, பி, சி, இ வைட்டமின்களைத் தந்தால், வெப்ப அயர்வைத் தடுக்கலாம்.

இறைச்சிக் கோழி வளர்ப்பின் நன்மைகள்

வளர்ப்புக் காலம் 6-7 மாதங்கள் மட்டுமே. ஒன்றுக்கு மேற்பட்ட கோழிகளை ஒரே இடத்தில் வளர்க்கலாம்.

கால்நடைகளைக் காட்டிலும் குறைந்த தீவனத்தில் அதிக இறைச்சியை உற்பத்தி செய்யலாம்.

முதலீடு செய்து குறைந்த காலத்தில் வருமானத்தை ஈட்டலாம்.

முட்டைக்கோழி வளர்ப்புக்கான முதலீட்டை விட, இறைச்சிக் கோழிக்கான முதலீடு சற்றுக் குறைவாக இருக்கும்.

மற்ற இறைச்சி வகைகளை விட, கறிக்கோழி இறைச்சிக்கு மக்களிடம் நல்ல வரவேற்பு உள்ளது.

இறைச்சிக் கோழிப் பண்ணையின் எதிர்காலம்

கடந்த பத்து ஆண்டுகளில் இறைச்சிக் கோழி வளர்ப்பில் இந்தியா அதிக முன்னேற்றம் அடைந்து உள்ளது.

தரமான கோழிக் குஞ்சுகள், மருந்துகள் மற்றும் கருவிகள், பண்ணை நிர்வாகிகளுக்கு எளிதில் கிடைக்கின்றன.

பண்ணை நிர்வாகம் சிறப்பாக இருப்பதால், நோய்த் தாக்கமும், அதனால் கோழிகள் இறப்பும் வெகுவாகக் குறைந்து உள்ளன.

மத்திய மாநில அரசுகளின் உதவியால், இறைச்சிக் கோழி வளர்ப்பு எதிர்காலத்தில் நல்ல முன்னேற்றத்தை அடையும்.


இறைச்சிக் கோழி KATHIRVELAN C 1 e1710657611524

முனைவர் சி.கதிர்வேலன், த.மணிமாறன், செ.பானுப்பிரியா, கால்நடை மருத்துவக் கல்லூரி, நாமக்கல்.

Share:

விவசாயம் / கால்நடை வளர்ப்புக் குறித்து

சந்தேகமா? கேளுங்கள்!


இன்னும் படியுங்கள்!

Discover more from பச்சை பூமி

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading