கோழிகளைத் தாக்கும் முக்கியமான தொற்று நோய், சிறு மூச்சுக்குழல் நோயாகும். வைரஸ்களால் ஏற்படும் இந்நோய், முட்டை உற்பத்தியாகும் குழாயையும், கோழிகளின் சிறுநீரகத்தையும் தாக்கும். இது, கோழிக் குஞ்சுகளின் எந்த வயதிலும் ஏற்படும். ஆனால், ஆறு வார வயதுக்குள் உள்ள கோழிக் குஞ்சுகள் தான் இந்நோயால் அதிகளவில் பாதிக்கப்படும்.
இந்நோயால் பாதிக்கப்படும் முட்டைக் கோழிகளில் முட்டை உற்பத்தியும், முட்டையின் தரமும் பாதிக்கப்படும். இறைச்சிக் கோழிகளில் இறைச்சி உற்பத்தித் திறன் பாதிக்கப்படும். மைக்கோபிளாஸ்மா மற்றும் ஈ.கோலை போன்ற நுண் கிருமிகளும், சிறு மூச்சுக்குழல் நோயுடன் சேர்ந்து கொண்டு, நோய்த் தாக்குதலை அதிகரித்து நோய்க் காலத்தை நீட்டிக்கும்.
கரோனா வைரசும் இந்நோயை ஏற்படுத்தும் முக்கியமான காரணியாகும். இந்த வைரஸ், பொதுவான இரசாயனங்கள் மற்றும் இயற்பியல் காரணிகளால் எளிதில் கொல்லப்பட்டு விடும்.
நோய் பரவும் முறை
இந்த நோய்க்கு உள்ளாகியுள்ள கோழிகளின், சளி, எச்சம் மற்றும் முட்டை ஓடுகளில் வைரஸ் இருக்கும். குளிர் காலத்தில் இந்த வைரஸ் சுற்றுப்புறத்தில் சில நாட்களுக்கு உயிரோடு இருக்கும். எனவே, குளிர் காலத்தில் நோயின் தாக்கம் அதிகமாக இருக்கும். ஆனாலும் இந்நோய், எப்போது வேண்டுமானாலும் கோழிகளைத் தாக்கும்.
கோழிப் பண்ணையில் கோழிகளிடம் உள்ள நேரடித் தொடர்பால், இந்நோய் எளிதில் பரவும். முட்டைகள் வழியாக எளிதில் பரவும். நோய்க் கிருமிகளால் அசுத்தமாகும் உயிரற்ற பொருள்கள் மூலமும் பரவும். காற்று, நோய்க் கிருமிகளால் அசுத்தமாகும் தீவனம், நீர், உபகரணங்கள், துணிகள், நோயுள்ள கோழிகளுடன் ஏற்படும் நேரடித் தொடர்பு மற்றும் மனிதர்களால் இந்நோய் எளிதாகப் பரவும்.
நோய் அறிகுறிகள்
ஆறு வார வயதுக்குள் உள்ள கோழிக் குஞ்சுகளில், தும்மல், இருமல், மூச்சு விடச் சிரமப்படுதல், கண்கள் மற்றும் மூக்கிலிருந்து நீர் வடிதல் போன்ற அறிகுறிகள் காணப்படும். கொட்டகையைச் சூடாக்கும் வெப்ப ஆதாரத்தின் கீழ் கோழிக்குஞ்சுகள் அடைந்து கிடக்கும். அவற்றின் முகமும், முகத்திலுள்ள சைனஸ்களும் வீங்கிக் காணப்படும்.
இந்நோயால் பாதிக்கப்படும் கோழிக் குஞ்சுகளில் 25-60 சதம் இறப்புக்கு உள்ளாகும். இந்நோய், 1-2 வாரம் வரை நீடிக்கும். இதனால் பாதிக்கப்படும் கோழிகள் மூச்சு விடும் சப்தம், கோழிக் கொட்டகைக்கு வெளியேயும் கேட்கும்.
வளரும் கோழிகள் மற்றும் வயது முதிர்ந்த கோழிகளில், இந்நோய் அறிகுறிகள் குறைவாகக் காணப்படும். இக்கோழிகளில், சுவாச மண்டல அறிகுறிகளும், இறப்பும் குறைவாக இருக்கும். முட்டையிடும் கோழிகள் இந்நோயால் பாதிக்கப்பட்டால், அவற்றின் முட்டை உற்பத்தி 5-50% வரை திடீரெனக் குறைந்து விடும்.
முட்டையிடும் கோழிகளில் முட்டை உருவாகும் குழாய் இந்நோயால் பாதிக்கப்படுவது பொதுவாக நடக்கும். மேலும், ஒழுங்கற்ற முட்டைகள், முட்டை ஓடு மெல்லியதாக இருத்தல், முட்டை ஓடு சொரசொரப்பாக இருத்தல், தோல் முட்டைகள் உருவாதல் ஆகிய முட்டை மாற்றங்கள் நிகழும். முட்டையின் தரம் குறைந்து, அதிலுள்ள அல்புமின், நீரைப்போல மாறிவிடும்.
இந்நோய், சிறுநீரகத்தைத் தாக்குவதால், கோழிகள் சோர்ந்து, இறகுகளைத் துருத்திக் கொண்டு இருக்கும். அவற்றின் எச்சம் நீராக இருக்கும். மேலும், கோழிகள் நீரை அதிகமாகக் குடிக்கும். இறப்பு விகிதம் 0.5-1 சதம் ஏற்படும்.
நோய்த்தடுப்பு மற்றும் கட்டுப்படுத்துதல்
முறையான சுகாதார மேலாண்மை முறைகள் மற்றும் தடுப்பூசி அளித்தால் இந்நோயைக் கட்டுப்படுத்தலாம். நோயெதிர்ப்பு சக்தியைத் தூண்டும் வைட்டமின் ஈ போன்ற பொருள்களை உணவில் அளித்தல் வேண்டும். தீவனத்தில் நச்சுப் பொருள்கள் இல்லாமல் பார்த்துக் கொள்ள வேண்டும்.
இறந்த கோழிகளையும், ஆழ்கூளத்தையும் முறையாக அப்புறப்படுத்த வேண்டும். பயன்படுத்திய கோணிப்பைகள், திரைச்சீலைகள் போன்றவற்றை எரித்து விட வேண்டும். அல்லது அவற்றில் சுண்ணாம்பைத் தெளித்து, ஆழமாகக் குழி தோண்டிப் புதைத்து விட வேண்டும்.
நோயுள்ள கொட்டகையில் இருக்கும் தீவனத் தட்டுகள் மற்றும் குடிநீர்த் தட்டுகளை 5% ஃபார்மலின் மூலம் கிருமி நீக்கம் செய்ய வேண்டும். புதிய கோழிக் கொட்டகையில், ஃபார்மலின் புகை மூட்டம் போட வேண்டும். ஒரு கொட்டகையில் வேலை செய்யும் பணியாளரை மற்ற கொட்டகைக்குள் அனுமதிக்காமல் இருக்க வேண்டும்.
முட்டைக் கோழிகளுக்கு அளிக்கப்படும் தடுப்பு மருந்துகள்
5-7 நாட்களில் ஐபி லைவ் தடுப்பு மருந்து கண் வழியாக.
28-30 நாட்களில் ஐபி லைவ் தடுப்பு மருந்து கண் வழியாக.
80 நாட்களில் ஐபி லைவ் தடுப்பு மருந்து குடிநீர் வழியாக.
112-114 நாட்களில் ஐபி செயலிழக்கப்பட்டது தோலின் அடிப்பகுதி வழியாக.
280 நாட்களில் ஐபி செயலிழக்கப்பட்டது தோலின் அடிப்பகுதி வழியாக.
முனைவர் கோ.கலைச்செல்வி, பல்கலைக் கழக மைய ஆய்வகம், கால்நடை நலக்கல்வி மையம்,
தமிழ்நாடு கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக் கழகம், சென்னை – 600 051.
சந்தேகமா? கேளுங்கள்!