My page - topic 1, topic 2, topic 3

சினையூசி போட்ட மாடுகளைப் பராமரிப்பது எப்படி?

செய்தி வெளியான இதழ்: 2017 அக்டோபர்.

றவை மாடு வளர்ப்பில் இலாபம் என்பது, அதன் பால் உற்பத்தியைப் பொறுத்தே அமைகிறது. பால் உற்பத்தி அதிகமாக வேண்டுமானால், மாடுகளுக்குச் சரியான நேரத்தில் கருவூட்டல் செய்ய வேண்டும். இப்போது மாடுகளில் செயற்கை முறையில் கருவூட்டல் செய்வதே அதிகளவில் நடைபெறுகிறது. இப்படிச் செயற்கை முறையில் கருவூட்டல் செய்த மாடுகளை, கருவூட்டல் செய்த நாளில் எப்படிப் பராமரிக்க வேண்டும் என்பதை விளக்குகிறது இந்தக் கட்டுரை.

ஒரு மாட்டிலிருந்து ஆண்டுக்கு ஒரு கன்று என்னும் கொள்கையில் சரியாக இருந்தால் தான் பால் பண்ணைத் தொழிலில் நல்ல இலாபத்தைக் காண முடியும். இதற்கு, குறித்த நேரத்தில் மாட்டைச் சினைப் பிடிக்கச் செய்ய வேண்டும். இல்லையெனில், சினையற்ற மாடுகளுக்கான பராமரிப்பு மற்றும் தீவனச் செலவு என, தேவையற்ற செலவுகளை எதிர்கொள்ள நேரிடும். செயற்கை முறையில் கருவூட்டல் செய்த மாடுகளைப் பராமரிப்பது என்பது, பண்ணை மேலாண்மையில் முக்கியமாகும்.

சுற்றுப்புற வெப்பம் குறைவாக இருக்கும் அதிகாலை அல்லது மாலையில் மாடுகளுக்குச் செயற்கை முறை கருவூட்டலைச் செய்வது மிகவும் நல்லது. இதற்காகக் கால்நடை மருத்துவ மனைக்கு அழைத்துச் செல்லும் போதும், பிறகு வீட்டுக்கு அழைத்து வரும் போதும், மாடுகளை அடித்து விரட்டக் கூடாது. சினையூசியைப் போட்ட பிறகு மருத்துவ மனையில் அரைமணி நேரம் வைத்திருந்து, வீட்டுக்கு அழைத்து வருவது நல்லது.

வீட்டுக்கு வந்த பிறகு, குளிர்ந்த நீரை ஊற்றி மாட்டைக் குளிப்பாட்ட வேண்டும். செயற்கை முறையில் கருவூட்டல் செய்த மாட்டை, கீழே படுக்க விடாமல் கயிற்றை மேலே தூக்கிக் கட்டி, நிற்க வைக்கத் தேவையில்லை. கருவூட்டல் செய்த நாளில் அதிக வெய்யிலில் மேய்ச்சலுக்கு மாட்டை அனுப்பக் கூடாது. அதைப்போல, அந்த நாளில் வெய்யிலில் அதிகத் தொலைவுக்கு மாட்டை ஓட்டிச் செல்லவும் கூடாது.

சரிவிகிதத் தீவனத்தை அளிக்க வேண்டும். தேவையான அளவு பசுந்தீவனம் அளிக்கப்பட வேண்டும். கருவூட்டல் செய்த 15-21 நாட்களுக்குள் மீண்டும் சினைப்பருவம் ஏற்படுகிறதா என்பதைக் கவனிக்க வேண்டும். சினையூசி போடப்பட்ட மாட்டுக்கு அன்றைய நாள் முழுவதும் தீவனம் போடாமல் இருப்பது மிகவும் தவறு. சினையூசி போடப்பட்ட மாட்டுக்கான பத்தியம் என்று எதுவும் இல்லை.


சு.பிரகாஷ், ம.செல்வராஜு, ச.மனோகரன், கா.இரவிக்குமார், ம.பழனிசாமி, கால்நடை மருத்துவக் கல்லூரி, நாமக்கல் – 637 002.

Share:

  சந்தேகமா? கேளுங்கள்!  

 

இன்னும் படியுங்கள்!

Enable Notifications OK No thanks