செய்தி வெளியான இதழ்: 2017 செப்டம்பர்.
காளான் பல நூறு கோடி ஆண்டுகளுக்கு முன்பே தோன்றியிருந்தாலும், சில நூறு ஆண்டுகளாக மட்டுமே உணவுப் பொருளாகப் பயன்பட்டு வருகிறது. காளான் பூசண வகையைச் சார்ந்தது. தாவர உணவாகவே காளான் கருதப்பட்டாலும், தாவரங்களைப் போல, இது ஒளிச் சேர்க்கையில் ஈடுபடுவதில்லை. ஆகவே தான் காளான் பச்சையமற்ற தாவரமாகக் கருதப்படுகிறது.
காளான்களின் வகைகள்
காளானில் சிப்பிக் காளான், மொட்டுக் காளான், வைக்கோல் காளான், சிடேக் காளான், ஜெல்லிக் காளான், குளிர்காலக் காளான், வெள்ளிக்காது காளான், நெமகோ காளான் எனப் பலவகைகள் உள்ளன. ஆனாலும், நம் அன்றாட உணவில் பயன்படுபவை, சிப்பிக் காளான் மற்றும் மொட்டுக் காளான் வகைகள் மட்டுமே.
இந்தக் காளான்களைக் கொண்டு, சத்து மற்றும் சுவைமிக்க சூப் வகைகள், பொரியல் உணவுகள், வருத்தும் சுட்டும் செய்யப்படும் பதார்த்தங்கள், பொரித்தும் வருத்தும் செய்யப்படும் பண்டங்கள், அவியல் பதார்த்தங்கள், பிரியாணி வகைகள், குழம்பு வகைகள், கூட்டு, குருமா, ஊறுகாய் என, விதவிதமாகத் தயாரிக்கலாம்.
பயன்கள்
காளானில் புரதச்சத்து மட்டுமின்றி, நம் உடலுக்குத் தேவையான மாவுச்சத்து, உயிர்ச் சத்து, தாதுச்சத்து போன்றவை அதிகமாக உள்ளன. காய்கறிகள் மற்றும் பழங்களில் இருக்கும் புரதத்தைவிட, உலர்ந்த காளானில் 20-35 சதவிகிதம் புரதச்சத்து அதிகமாக உள்ளது.
உடல் வளர்ச்சிக்குத் தேவையான லைசின், ட்ரிப்டோபன் போன்ற அமினோ அமிலங்கள் காளானில் நிறைந்து இருப்பதால், குழந்தைகளின் உடல் வளர்ச்சிக்கு ஏற்ற சிறந்த உணவாக உள்ளது. நோயெதிர்ப்பு சக்தியைத் தரும் உயிர்ச்சத்து பி மற்றும் சி (தையமின், ரைபோபிளேவின் மற்றும் நியாசின்) அதிகளவில் உள்ளன.
காளானில் உள்ள நார்ச்சத்து எளிதில் செரிக்கவும், குடலில் கழிவுகளைத் தேங்க விடாமல் வெளியேற்றவும் பயன்படுகிறது. குறைந்தளவு கொழுப்புச் சத்தையும் மாவுச் சத்தையும் கொண்டுள்ள காளான், உடல் எடையைக் குறைக்க விரும்புவோர் மற்றும் சர்க்கரை நோய், இருதய நோய் உள்ளோர்க்கும் ஏற்ற உணவாகும். காளானில் உள்ள சோடியம், பொட்டாசியம் போன்ற சத்துகள், இரத்த அழுத்தத்தைக் குறைக்க உதவுகின்றன.
புரதச்சத்து நிறைந்த காளானை முழு உணவாகவும், காளான் சப்பாத்தி, காளான் கெட்சப், காளான் ரொட்டி, காளான் சிப்ஸ் காளான் பன்னீர், காளான் கட்லெட், காளான் வருவல், காளான் பிரியாணி, காளான் சூப், காளான் பஜ்ஜி, காளான் ஆம்லேட் போன்றும் தயாரித்து உண்ணலாம். காளானில் 80 சதம் ஈரப்பதம் இருப்பதால், எளிதில் கெட்டு விடும். எனவே, காளானில் உள்ள ஈரப்பதத்தை நீக்கிப் பொடியாக்கியும் பல உணவுப் பொருள்களைத் தயாரிக்கலாம்.
புதிதாகப் பறித்து வேர் நீக்கிக் கழுவிய காளானை ஒரு நிமிடம் ஆவியில் வேக வைத்து, வெய்யிலில் இரண்டு நாட்கள் வரை உலர்த்த வேண்டும். இப்படி உலர்ந்த காளானை மாவாக அரைத்து, காளான் நூடுல்ஸ், காளான் அப்பளம், சூப் கலவை மற்றும் சப்பாத்தி மாவுடன் சேர்த்தும் உணவுப் பொருள்களைத் தயாரிக்கலாம்.
காளானில் உள்ள சத்துகள்
புரதம்: 3.1 சதம்,
மாவுப்பொருள்: 5.3 சதம்,
ஈரப்பதம்: 90 சதம்,
கொழுப்பு: 0.4 சதம்,
நார்ப்பொருள்: 1.1 கிராம்,
கால்சியம்: 6 மில்லி கிராம்,
பாஸ்பரஸ்: 110 மில்லி கிராம்,
இரும்புச்சத்து: 1.5 மில்லி கிராம்,
தாதுப்புகள்: 1.4 மில்லி கிராம்.
பிற பயன்கள்
காளான் வளர்ப்புக்குப் பிறகு கிடைக்கும் வைக்கோலில் புரச்சத்து மிகுந்து இருப்பதால், கால்நடைகளுக்குத் தீவனமாகக் கொடுத்துப் பால் உற்பத்தியைப் பெருக்கலாம். மேலும், இந்த வைக்கோலை, சாண எரிவாயுக் கலனிலும் பயன்படுத்தலாம். இந்த வைக்கோலை மண் புழுக்கள் விரும்பி உண்பதால், மண்புழு உரத் தயாரிப்பிலும் பயன்படுத்தலாம்.
முக்கியக் குறிப்பு
இயற்கையாக வளரும் காளான்கள் சில சமயங்களில் விஷத் தன்மையில் இருக்கும். எடுத்துக்காட்டாக, காளான்கள் பல்வேறு நிறங்களில், மாட்டுக் கொட்டகைக் கழிவுநீர் வெளியேறும் இடத்திலும், மழைக்காலத்தில் ஈரமான கால்நடைச் சாணத்திலும், கோழி எச்சத்திலும், மழை பெய்து ஓய்ந்த சில மணித்துளிகளில் வயல் வரப்புகளில் வெள்ளையாகவும், குடையை விரித்ததைப் போன்றும் காணப்படும்.
இவற்றை நறுக்கினால் துர்நாற்றம் அடிக்கும். மேலும், குப்பை மேடுகள், குட்டைகள், வரப்புகள், தோட்டத்துக் கழிவுப் பொருள்கள் மற்றும் மரத்துண்டுகளில் பழுப்பு நிறத்தில் காணப்படும் இந்தக் காளான்கள் யாவும் நச்சுத் தன்மையில் இருப்பதால் உணவுக்குப் பயன்படுவதில்லை. எனவே, அறிவியல் முறையில், சுகாதாரமான சூழலில், காளானை வளர்த்து உணவுக்குப் பயன்படுத்தலாம்.
காளான் நல்ல உணவுப் பொருளாகவும், தனிச்சுவை மிக்கதாகவும் உள்ளது. மேலும், நோயற்ற வாழ்வுக்குத் தேவையான சத்துகளையும், மருத்துவக் குணங்களையும் கொண்டுள்ளது. எனவே, சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரையிலான அனைவரும் காளானை அன்றாட உணவில் சேர்த்துக் கொண்டால், அவரவருக்குத் தேவையான புரதச்சத்தை முழுமையாகப் பெற்று நலமாக வாழலாம்.
முனைவர் பெ.க.தேன்மொழி, முனைவர் எஸ்.செந்தூர் குமரன், வேளாண்மை அறிவியல் நிலையம், குன்றக்குடி, சிவகங்கை – 630 206.
சந்தேகமா? கேளுங்கள்!