செய்தி வெளியான இதழ்: 2017 ஏப்ரல்.
கோடைக் காலத்தில் கோழிகளைப் பராமரிப்பது என்பது முக்கியமானது. இந்தக் காலத்தில் உண்டாகும் அதிக வெப்பத் தாக்கத்தால், கோழிகளின் உற்பத்தித் திறன் பாதிக்கப்படும். வெப்ப நிலையில் ஏற்படும் மாறுதல்களால் கோழிகள் அசாதாரண அறிகுறிகளை ஏற்படுத்தும். சாதகமான வெப்பநிலை 21-24 டிகிரி செல்சியஸ்.
உயர் காற்றோட்டம் இருக்கும் போது, கோழிகள் ஒரு நிமிடத்துக்கு 20க்கும் மேற்பட்ட தடவைகள் சுவாசிக்கும். இதனால், உணவு உண்ணும் திறன் குறைவதால் உடலின் சத்தின் அளவு குறையும். எனவே, கோழிகளின் உற்பத்தித் திறன் பாதிக்கப்படும்.
கதிர்வீச்சு, வெப்பச் சலனம், கடத்தல், ஆவியாதல் மூலம், கோழிகளின் உடலில் இருந்து வெப்பம் வெளியேறும். இந்த நான்கு காரணிகளும் பறவை மற்றும் சுற்றுச்சூழல் வெப்ப நிலைக்கு ஏற்ப மாறுபடும். கோழிகளின் தாடி, கால்பகுதி, தோல், உரோமங்கள் இல்லாத இடம், இறக்கையின் அடிப்பகுதி ஆகியவற்றின் வழியாக வெப்பம் வெளியேறும்.
வெப்பத்தால் ஏற்படும் விளைவுகள்
கோடை வெப்பத்தின் காரணமாகக் கோழியினங்களில் பல்வேறு உடலியல் மற்றும் நோயியல் மாற்றங்கள் ஏற்படும். அவையாவன: சுற்றுப்புறத்தில் நிலவும் அதிக வெப்பத்தால் கோழிகளில் தீவனம் எடுத்துக் கொள்ளும் அளவு குறையும். ஏனெனில், சுற்றுப்புற வெப்பம் அதிகமாக இருக்கும் போது, கோழிகளின் குறைந்தளவு ஆற்றலே உடல் வெப்ப நிலையைச் சமப்படுத்தப் பயன்படுகிறது.
கோடையின் தொடக்கத்தில் கோழிகளின் நீரைப் பருகும் திறன் இரு மடங்காக அதிகரிக்கும். ஏனெனில், கோடையில் உடலில் உற்பத்தியாகும் மிகுதியான வெப்பம், சுவாசிக்கும் போது வெளியாகும் காற்றின் மூலம் நீராவியாக வெளியேறும்.
அதிகமாக இருக்கும் சுற்றுப்புற வெப்பம், கோழிகளின் சுவாசிக்கும் எண்ணிக்கை மற்றும் உடல் வெப்ப நிலையை அதிகரிக்கும். கோழிகளில் வியர்வைச் சுரப்பி இல்லாததால், அவற்றின் வேகமான மூச்சு வாங்குதல் காரணமாக, உடலில் உற்பத்தியாகும் அதிக வெப்பமானது வெளியேறும். வெளிப்புற வெப்பநிலை உயர்வானது, கோழிகளில் உற்பத்தியாகும் வெப்பத்தின் அளவையும், உடலின் வழியாக வெப்பம் வெளியேறும் திறனையும் குறைக்கும்.
மேலும் அதிகமான சுற்றுப்புற வெப்பம், கோழிகளில் ஆக்ஸிஜன் உட்கொள்ளும் அளவு, இரத்தழுத்தம், நாடித்துடிப்பு, தைராய்டு சுரப்பியின் அளவு மற்றும் அதன் செயல்பாடு, இரத்தத்தில் கால்சியத்தின் அளவு மற்றும் உடல் எடையைக் குறைக்கும். கோழிகளில் வெளிப்புற ஒட்டுண்ணிகளின் தாக்கம், மழைக்காலத்தைத் தொடர்ந்து வரும் கோடையில் அதிகமாகக் காணப்படும். மேலும் அதிகமான சுற்றுப்புற வெப்பமானது, காற்றின் அதிகளவு ஒப்புமை ஈரப்பதத்துடன் இணைந்து காக்சிடியோசிஸ் நோய் பரவ வழி வகுக்கும்.
வெப்பநிலையும் காற்றின் ஒப்புமை ஈரப்பதமும் அதிகமாக இருக்கும் போது, உடலிலுள்ள அதிகளவு வெப்பத்தை வெளியேற்ற முடியாத நிலையில் கோழிகள் இறந்து விடும். கோடையில் அதிக எடையுள்ள கறிக்கோழிகளில் இறப்பு விகிதம் அதிகரிக்கும். அதிகமான சுற்றுப்புற வெப்பம், கோழி முட்டையோட்டின் தகுதியைக் குறைக்கும்.
சுற்றுப்புற வெப்பம் 26 டிகிரி செல்சியசுக்கும் அதிகமாகும் போது, அடர்த்திக் குறைந்த லிப்போ புரோட்டீன் மற்றும் விட்டிலோஜெனின் அளவு குறையும். இதனால், கோழி முட்டைகளின் அளவு குறையும். கோடை வெப்பத்தால், கோழிகளின் நோயெதிர்ப்புத் திறன், இனப்பெருக்கத் திறன், குஞ்சு பொரிப்புத் திறன் ஆகியன குறையும்.
வெப்பத்தைத் தடுக்கும் முறைகள்
அதிகமான சுற்றுப்புற வெப்பத்தால் ஏற்படும் விளைவுகளை, பண்ணை மற்றும் சரியான தீவன மேலாண்மை மூலம் கட்டுப்படுத்தலாம். அவையாவன: சரியான பொருளைக் கொண்டு கூரையை அமைப்பதன் மூலம், 5-10 டிகிரி செல்சியஸ் வரையில் வெப்பத்தைக் குறைக்கலாம். ஆறு அங்குல அடர்த்தியுள்ள கூரை, கோழிகளுக்கு உகந்த சூழலைக் கொடுக்கும். பெரிய பண்ணைகளில் பயன்படுத்தப்படும் அலுமினியக் கூரைத் தகடுகள் வெப்பத்தை அதிகமாகத் தாங்கும்.
தரைக்கும் கூரைக்கும் இடையிலான உயரம் போதியளவில் இருக்க வேண்டும். அதைப்போல, கூரையின் கீழ்ப்பகுதி, ஒரு மீட்டர் தொங்கலாக இருக்க வேண்டும். இது நேரடியாகச் சூரிய வெளிச்சம் உள்ளே நுழைவதையும், மழைநீர் உள்ளே தெறிப்பதையும் தடுக்கும்.
அதைப்போல, கூரையின் மேலாக இன்னொரு அடுக்கைப் போடுதல், நீர்ப் புகாத வெண் சாயம், அலுமினியச் சாயத்தைப் பூசுதல் மூலம், சூரிய ஒளியைப் பிரதிபலிக்கச் செய்யலாம். கூரையின் உட்புறத்தில் கறுப்புச் சாயத்தைப் பூசி வெப்பத்தை ஈர்க்கச் செய்யலாம்.
வறண்ட பகுதிகளில் கோழிப் பண்ணையின் அமைப்பு, கிழக்கு மேற்காக இருக்க வேண்டும். இதனால், சூரியவொளி அதிகளவில் பண்ணைக்குள் விழுவது தடுக்கப்படும். பண்ணையின் அகலம் பத்து மீட்டர் இருக்க வேண்டும். இதைவிட அகலம் கூடினால், காற்றோட்டம் சரியாக இருக்காது. இந்நிலையில் எந்திர முறையில் காற்றோட்டத்தைக் கொடுக்கலாம்.
குளிர்விப்பான் அல்லது தெளிப்பான்களைக் கூரையின் மேல் பொருத்தி, 10-18 மணி நேரம் இயக்குவதன் மூலம் பண்ணையின் உள்வெப்பத்தைக் குறைக்கலாம். பண்ணையைச் சுற்றிலும் மரங்களை வளர்த்து நிழலைப் பெறலாம். மேலும், சூறாவளிக் காற்றின் வேகத்தைக் கட்டுப்படுத்திப் பண்ணையைப் பாதுகாக்கலாம். வெப்பத்தைத் தாங்கும் கோழிகளை வளர்க்கலாம்.
கோடையில் கோழிகளின் உடலில் வெப்பம் அதிகமாவதைத் தடுக்க, 9 முதல் 18 மணி நேரம் வரையில் தீவனம் அளிப்பதைத் தவிர்க்க வேண்டும். மேலும், தீவனத்தில் உள்ள கார்போஹைடிரேட், புரதம் ஆகியவற்றின் அளவைக் குறைத்து, கொழுப்புச் சத்தின் அளவை அதிகப்படுத்த வேண்டும்.
கோழிகள் நெரிசலாக இருப்பதைத் தவிர்க்க 10 சத அளவில் தளத்தை அதிகப்படுத்த வேண்டும். நனைந்த படுக்கைப் பொருள்கள் அதிக வெப்பத்தை உண்டாக்குவதால், அந்தப் பொருள்களின் அடர்த்தி, கோடையில் 6 செ.மீ. குறைவாக இருக்க வேண்டும்.
முனைவர் க.தேவகி, முனைவர் ப.இரா.நிஷா, முனைவர் க.வேல்முருகன், வேளாண்மை அறிவியல் நிலையம், காட்டுப்பாக்கம், காஞ்சிபுரம் – 603 203.
சந்தேகமா? கேளுங்கள்!