செய்தி வெளியான இதழ்: 2017 ஜூலை.
நல்லதோர் தொடக்கம் நல்லதோர் முடிவு என்பதற்கேற்ப, கோழிப் பண்ணைகளில் இளம் கோழிக் குஞ்சுகளைச் சிறந்த முறையில் பராமரித்தால், அந்தப் பண்ணையின் உற்பத்தித் திறன் அதிகமாகும். நல்ல பராமரிப்புடன் சரிவிகிதத் தீவனமும் கொடுத்து வளர்த்தால், பண்ணையின் உற்பத்தித் திறன் மேலும் அதிகமாகும்.
இப்போது, கோழிகளின் வளர்ச்சி மிக வேகமாக உள்ளது. குறிப்பாகக் கறிக்கோழிகளின் எடை 40 நாட்களில் ஏறத்தாழ 50 மடங்கு அதிகரிக்கிறது. கோழிக்குஞ்சுத் தீவனம் மற்றும் பராமரிப்பில் நவீனத் தொழில் நுட்பங்களைப் பின்பற்றி வளர்த்தல், கோழி வளர்ப்பு மிகுந்த இலாபமுள்ள தொழிலாக அமையும்.
ஆரம்பக்காலத் தீவனத்தின் முக்கியத்துவம்
கோழி இறைச்சி உற்பத்திக்கு ஆகும் மொத்தச் செலவில் தீவனத்துக்கு மட்டும் ஆகும் செலவு 70-75 சதவிகிதம். கோழிகளின் தீவன மாற்றுத்திறனை அதிகரித்து, தீவனச் செலவைக் குறைப்பதன் மூலம் உற்பத்திச் செலவு குறையும். ஆகவே, பண்ணையின் இலாபம் பெரிதும் தீவன மேலாண்மையைச் சார்ந்தே அமைகிறது.
கோழிக்குஞ்சுகள் சிறந்த முறையில் வளர்வதற்கு, முட்டையிலிருந்து குஞ்சு வெளிவந்ததும் தீவனம் அளிக்கப்பட வேண்டும். தீவனத்தை உண்ணத் தொடங்கியதும், உணவுக்குடல் செயல்படத் தொடங்கும். இதனால், குஞ்சுகளுக்குத் தேவையான சத்துகள் கிடைப்பதுடன், சிறந்த நோய் எதிர்ப்பாற்றலும் கிடைக்கும்.
நல்ல நோய் எதிர்ப்புத் திறனுள்ள கோழிக்குஞ்சுகள் நுண் கிருமிகளின் தாக்கத்திலிருந்து காக்கப்படும். மேலும், வளர்சிதை மாற்றக் கோளாறுகளால் பாதிக்கப்படாமல் நன்கு வளர்ந்து சிறந்த தீவன மாற்றுத்திறனை வெளிப்படுத்தும். இப்படி, கோழிக்குஞ்சுகள் பொரிந்ததுமே தீவனத்தை அளித்து வரும் போது, முதல்வார எடை வழக்கமான எடையை விட அதிகமாவதுடன் விற்பனை எடையும் கூடும். மேலும், பண்ணையில் உள்ள கோழிகளின் எடை, ஏற்ற இறக்கமின்றி ஒரே சீராக இருக்கும். இதனால், பண்ணையை இலாபகரமாக நடத்த முடியும்.
கோழி உற்பத்தியில் மஞ்சள் கருவின் பங்கு
மஞ்சள் கரு, அதிகப் புரதம் மற்றும் கொழுப்பு அமிலங்களால் ஆனது. கோழி முட்டையில் இருக்கும் கரு வளர்வதற்குத் தேவைப்படும் எரிசக்தி முழுவதும் மஞ்சள் கருவிலிருந்து தான் கிடைக்கிறது. முட்டையிலிருந்து வெளிவந்த பிறகு, கோழிக் குஞ்சுக்குள் எஞ்சியுள்ள மஞ்சள் கருவில் நோய் எதிர்ப்பு சக்திக்குத் தேவையான புரதங்கள் அதிகளவில் காணப்படும். குஞ்சு பொரிந்தவுடன் உடனடியாகத் தீவனம் அளிக்கும் போது, எஞ்சியுள்ள மஞ்சள் கரு விரைவாகவும், முழுவதும் கிரகிக்கப்பட்டு சிறந்த நோய் எதிர்ப்பாற்றலை உருவாக்கும்.
குஞ்சுப் பொரிப்பானில் அனைத்துக் குஞ்சுகளும் ஒரே நேரத்தில் பொரிப்பதில்லை, முதலில் பொரிந்த குஞ்சுகள் அதிக நேரம் குஞ்சு பொரிப்பானுக்குள் இருக்கும். மேலும், குஞ்சுகளைத் தரம் பிரித்தல், தடுப்பு மருந்து அளித்தல் போன்ற பணிகளால் அதிக நேரத்தைக் குஞ்சு பொரிப்பான் கூடத்தில் செலவிட நேரிடும். பிறகு, பண்ணைகளுக்குக் கொண்டு செல்லப்பட்டுத் தீவனம் அளிக்கப்படும்.
இப்படி, குஞ்சுகளுக்குக் காலம் தாழ்த்தி தீவனம் அளிக்கும் போது, கோழிக் குஞ்சுக்குள் எஞ்சியுள்ள மஞ்சள் கரு நோய் எதிர்ப்பாற்றல் உற்பத்திக்குப் பயன்படாமல், எரிசக்தி, புரதத்துக்காக மட்டும் பயன்படும். இப்படி வளரும் கோழிகள், நோய் எதிர்ப்புத் திறனைக் குறைவாகக் கொண்டிருப்பதால், எளிதில் நோய்க்கிருமிகளின் தாக்குதலுக்கு உள்ளாகும். இதனால், இறப்பு அதிகமாவதுடன் உற்பத்தித் திறனும் குறையும்.
கோழிகளின் வளர்ச்சியில் அரம்பக்காலத் தீவனத்தின் பங்கு
முட்டைகளில் இருந்து குஞ்சுகள் வெளிவந்ததும் உடனடியாக உணவை அளிப்பதால், உடல் அணுக்களின் எண்ணிக்கை மற்றும் தசை வளர்ச்சி அதிகமாகும். இதனால், கோழிகளின் எடை விரைவாகக் கூடுவதுடன் உற்பத்தித் திறன் மேம்படும். குடல்பகுதி விரைவாக வளர்ந்து சத்துகள் சிறந்த முறையில் கிரகிக்கப்படும். எனவே, தீவன மாற்றுத்திறனும் அதிகமாகும். அதனால், பண்ணையை இலாபகரமாக நடத்த இயலும்.
கோழிக் குஞ்சுகளுக்கான தீவன மேலாண்மை
கோழிக்குஞ்சுகள் பண்ணைக்கு வருவதற்கு முன்பாகவே பண்ணையில் தீவனக் கலன்களையும், குடிநீர்க் கலன்களையும் தேவைக்கேற்ப சீரான இடைவெளியில் தயாராக வைக்க வேண்டும். இளம் குஞ்சுகளைக் குஞ்சுத் தடுப்பானுக்குள், அதாவது, 200 முதல் 300 குஞ்சுகளுக்கு ஒரு தடுப்பான் வீதம் அமைத்து வளர்க்க வேண்டும். கோடைக் காலத்தில் இரண்டு வாரம், குளிர்காலத்தில் மூன்று வாரம் வரை வெப்பம் கொடுக்கப்பட வேண்டும்.
தீவனக்கலன்களின் எண்ணிக்கை குஞ்சுகளின் எண்ணிக்கைக்குத் தக்கவாறு (1:50) இருக்க வேண்டும். தீவனக் கலன்களைச் சரியான உயரத்தில் அமைத்தால், தீவனம் அதிகளவில் உண்ணப்படுவதுடன், தீவன விரயமும் குறையும். முதல்வாரக் குஞ்சுகளுக்கு ஒரு நாளைக்குத் தேவைப்படும் தீவனத்தை ஒரே தடவையில் அளிக்காமல், ஒருமணி நேரத்துக்கு ஒருமுறை என அளித்தால், குஞ்சுகள் அதிகளவில் தீவனத்தை உட்கொள்ள ஏதுவாகும். இதனால், குஞ்சுகளின் எடை விரைவாகக் கூடுவதுடன் தீவன மாற்றுத்திறனும் அதிகமாகும்.
அன்றாடம் தீவனக் கலன்களில் உள்ள பழைய தீவனத்தை அகற்றிச் சுத்தப்படுத்தி விட்டு புதிய தீவனத்தைப் போட வேண்டும். இதனால், தீவனக் கலன்களின் மூலம் பரவும் பூசணத் தொற்றைத் தவிர்க்கலாம்; பாதிப்பில்லாமல் குஞ்சுகளை வளர்க்கலாம்.
புறக்கடையில் வளர்க்கப்படும் நாட்டுக்கோழிகள் அரிசி, சோளம், கம்பு போன்ற தானியங்களையும், வயல்வெளிகளில் உள்ள புல், புழு, பூச்சிகளையும் உண்டு வளரும். ஆனால், பண்ணையில் வளர்க்கப்படும் கோழிகள், தானியங்களுடன், புண்ணாக்கு, தவிடு, தாதுப்புகள், வைட்டமின் கலவைகளைக் கொண்டு தயார் செய்யப்பட்ட அடர் தீவனத்தை உண்டு வளரும். கோழிக்குஞ்சுகள் போதுமான எடையை அடைய, அடர் தீவனத்தைச் சரியான அளவில் கலந்து அரைத்துக் கொடுக்க வேண்டும்.
நூறு கிலோ தீவனக் கலவைக்குத் தேவையான பொருள்கள்
மக்காச்சோளம் 47 சதம்,
சோளம் 5 சதம்,
அரிசிக் குருனை 5 சதம்,
சோயாப் புண்ணாக்கு 37 சதம்,
தாதுப்புக் கலவை 2 சதம்,
வைட்டமின் கலவை 1 சதம்,
கால்சைட் 1 சதம்,
டி.சி.பி 1.50 சதம்,
உப்பு 0.50 சதம்.
கோழிப் பண்ணைகளில் கோழிக்குஞ்சுகளின் தீவன மேலாண்மை மற்றும் பராமரிப்பில் அதிகக் கவனம் செலுத்துவதன் மூலம், பண்ணையின் உற்பத்தித் திறனைப் பன்மடங்கு அதிகரிக்க இயலும்.
மரு.வ.குமரவேல், சு.செந்தூர்குமரன், வேளாண்மை அறிவியல் நிலையம், குன்றக்குடி, சிவகங்கை மாவட்டம்.
சந்தேகமா? கேளுங்கள்!