My page - topic 1, topic 2, topic 3

கறவை மாடுகளின் வளர்ச்சிக்கு அவசியமாகும் தாதுப்புக் கலவை!

கால்நடை

செய்தி வெளியான இதழ்: 2018 ஜனவரி.

றவை மாடுகளின் வளர்ச்சிக்கும், சினைக் காலத்தில் கன்று வளர்ச்சிக்கும் பாலுற்பத்திக்கும் தாதுப்புகள் அவசியமாகும். பால் மாடுகளுக்கு வைட்டமின்களும் தாதுப்புகளும் சிறிதளவே தேவைப்பட்டாலும், இவற்றை அளிக்கா விட்டால் இனவிருத்திச் செயல்கள் வெகுவாகப் பாதிக்கப்படும். சினைக் காலத்தில் தரப்படும் தாதுப்புகள், தேவைக்கு அதிகமாக இருப்பின், அவை, அந்த மாடுகளின் உடலில் சேமித்து வைக்கப்பட்டு, ஈற்றுக்குப் பின் பாலுற்பத்திக்குப் பயன்படுத்தப்படும். எனவே, பால் வற்றிய மாடுகளுக்கும் தாதுப்புக் கலவையை அவசியம் அளிக்க வேண்டும்.

வைட்டமின்கள் மற்றும் தாதுப்புகள் மிக அதிகளவில் பச்சைத் தீவனங்கள் மூலம் கிடைக்கின்றன. எனவே, ஒவ்வொரு மாட்டுக்கும் அன்றாடம் 20-30 கிலோ பசுந்தீவனத்தைக் கொடுக்க வேண்டும். ஒரு நாளைக்குப் பத்து லிட்டர் பாலைத் தரும் 400 கிலோ எடையுள்ள மாட்டுக்கு, 47 கிராம் கால்சியம், 35 கிராம் பாஸ்பரஸ் தேவை. கலப்புத் தீவனத்தில் தாதுப்புகள் சேர்க்கப்படுவதால், அடர் தீவனத்தைத் தரும் போது, தனியாகத் தாதுப்புக் கலவையைத் தரத் தேவையில்லை.

ஆனால், அடர் தீவனத்தைக் கொடுக்காத நிலையில், தவிடு, பொட்டு, புண்ணாக்கு ஆகியவற்றுடன், தினமும் 30-50 கிராம் தாதுப்புக் கலவையைக் கொடுக்க வேண்டும். அதாவது, கன்றுக்கு 10 கிராம், கிடேரிக்கு 25 கிராம், சினை மாட்டுக்கு 30 கிராம், பால் கறவையில் உள்ள மாட்டுக்கு 50 கிராம், காளை மாட்டுக்கு 30 கிராம், ஆட்டுக்கு 10 கிராம் கொடுக்க வேண்டும். தாதுப்புக் கலவையுடன் 30 கிராம் சாப்பாட்டு உப்பையும் சேர்த்துக் கொடுக்க வேண்டும். இதனால், பாலுற்பத்திக் கூடும்.

சாப்பாட்டு உப்பு இல்லாமல், ஐஎஸ்ஐ தரத்தில் தயாரிக்கப்படும் தாதுப்புக் கலவையில், கால்சியம் 23%, பாஸ்பரஸ் 12%, மெக்னீசியம் 6.5%, இரும்பு 0.5%, கந்தகம் 0.5%, தாமிரம் 0.77%, மாங்கனீசு 0.12%, அயோடின் 0.076%, கோபால்ட் 0.012%, துத்தநாகம் 0.38%, புளுரின் 0.07%, செலினியம் 0.3% இருக்கும்.

தாதுப்புகளின் பயன்கள்

உடல் வளர்ச்சியும், பாலுற்பத்தியும் கூடும். பாலில் கொழுப்பில்லாத திடப் பொருள்களின் அளவு அதிகமாகும். கிடேரிகள் வேகமாக வளர்ந்து சினைக்கு வரும். கால்நடைகளின் உடல் நலம் மேம்படும். இதனால், நோய்த் தாக்கம் குறையும்; பொருளாதார இழப்புத் தவிர்க்கப்படும். தீவனத்தில் உள்ள சத்துகள் நன்கு செரிக்கும். சினைப்பருவமின்மை, கருத்தங்காமை, கருச்சிதைவு, நஞ்சுக்கொடி தங்குதல் போன்ற சிக்கல்கள் பெருமளவில் தடுக்கப்படும். பொலிக் காளைகளில் விந்தணு உற்பத்தியும் தரமும் உயரும்.

கால்நடைகளின் நலன் கருதியும், கால்நடை வளர்ப்போரின் பயன் கருதியும், தமிழ்நாடு கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக் கழகம், தாதுப்புக் கலவையைத் தயாரித்து, பல்கலைக் கழகப் பயிற்சி மற்றும் ஆராய்ச்சி நிலையங்கள், உழவர் பயிற்சி மையங்கள், வேளாண்மை அறிவியல் நிலையங்கள் மற்றும் இதர விரிவாக்க நிலையங்கள் மூலம் விற்பனை செய்து வருகிறது.


PB_Dr.Usha Kattuppakkam

முனைவர் சு.உஷா, முனைவர் ந.குமாரவேலு, கால்நடை அறிவியல் முதுகலை ஆராய்ச்சி நிலையம், காட்டுப்பாக்கம், காஞ்சிபுரம் – 603 203.

Share:

  சந்தேகமா? கேளுங்கள்!  

 

இன்னும் படியுங்கள்!

Enable Notifications OK No thanks