My page - topic 1, topic 2, topic 3

மழைநீர்ச் சேமிப்பு நமது வாழ்வியல்!

மழைநீர்

செய்தி வெளியான இதழ்: 2019 செப்டம்பர்.

மக்கான நீராதாரம் மழைதான். ஆண்டில் சில மாதங்கள் மட்டுமே பெய்யும் மழைநீரை வீணாக்காமல், பூமிக்குள்ளோ, தொட்டிகளிலோ சேமித்து வைப்பதே மழைநீர்ச் சேமிப்பு.

மழைநீரை மண்ணுக்குள் சேமித்தால் நிலத்தடி நீர்மட்டம் உயரும். கடலோரப் பகுதிகளில் கடல்நீர் புகுவது தடுக்கப்படும். நீர்வளம் மிகுந்தால் புவி வெப்பம் மட்டுப்படும். பிறகு, இந்த நீரை நம் தேவைகளுக்கு, கால்நடைகளுக்கு, விவசாயத்துக்கு, ஆலைகளுக்குப் பயன்படுத்தலாம்.

வீடுகள் மற்றும் ஏனைய கட்டடங்களின் கூரைகளில் விழும் சுத்தமான மழைநீரை, இதற்கெனக் கட்டப்பட்ட தொட்டிகளில் சேமித்தால், குடிநீர் உள்ளிட்ட எல்லாத் தேவைகளுக்கும் பயன்படும்.

மழைநீர்ச் சேமிப்பு, காலத்தின் கட்டாயம். இந்தக் கட்டமைப்பை எளிதாக அமைக்கலாம். ஆண்டுக்கு 200 மி.மீ.க்குக் குறைவாக மழை பெய்யும் பகுதிகளில், மழைநீர்ச் சேமிப்பு மிகமிக அவசியம். கட்டட அளவு மற்றும் மழையின் அளவைப் பொறுத்து இதன் அளவு மாறும்.

நிலத்தில் நூறு லிட்டர் மழை பெய்வதாக வைத்துக் கொண்டால், அதில் 40 லிட்டர் நீர், கடலில் கலப்பதாகவும், 35 லிட்டர் நீர் வெய்யிலில் ஆவியாகி விடுவதாகவும், 14 லிட்டர் நீர் பூமிக்குள் செல்வதாகவும், 10 லிட்டர் நீர் மண்ணின் ஈரப்பதமாக மாறுவதாகவும் ஆய்வுகள் கூறுகின்றன.

தற்போது நகரங்களில் இடைவெளியே இல்லாமல் கட்டடங்களைக் கட்டுவதால்; திறந்த வெளியைச் சிமெண்ட் தளமாக, தார்ச் சாலைகளாக மாற்றி விடுவதால்; இங்கு பெய்யும் மழைநீரில் 5 சதம்கூட நிலத்துக்குள் செல்வதில்லை.

இதனாலும், ஆழ்குழாய்க் கிணறுகள் மூலம் நீரை உறிஞ்சுவதாலும், கடலோர நிலத்துக்குள் கடல்நீர் புகுந்து விடுகிறது. அதனால் இப்பகுதி நிலத்தடி நீர், பயன்படுத்த இயலாத அளவில் உப்புநீராக மாறி விடுகிறது. மழைநீர்ச் சேமிப்பின் மூலம் இந்தச் சிக்கலைத் தவிர்க்கலாம்.

தரைவழி மழைநீர் வடிகால் அமைப்பு

இந்த அமைப்பில், வடிகால் மூலம் சேமிப்புப் பகுதிக்கு மழைநீர் செல்கிறது. இதை முறைப்படி வடிவமைத்து, முடிந்த வரையில் மழைநீரைச் சேமித்தால், பயனுள்ளதாக இருக்கும்.

மேற்கூரை மழைநீர் வடிகால்

இந்த அமைப்பில், கூரையில் விழும் மழைநீர், நீர்த்தாரை மற்றும் குழாய் மூலம் சேமிப்புப் பகுதிக்குச் செல்கிறது. இதில், வறட்சிக்குப் பிறகு பெய்யும் முதல் மழைநீரைச் சேமிக்காமல் விட்டு விடுவது நல்லது.

ஏனெனில், இந்நீரில் தூசி, பறவை எச்சம் போன்றவை கலந்திருக்கலாம். நீர்த்தாரை போதுமான சரிவுடனும், பெருமழை நீரையும் வழியச் செய்யும் அளவிலும் இருந்தால், கூரையில் நீர்த் தேங்காமல் இருக்கும்.

கொசு உற்பத்தி, ஆவியாதல், மாசடைதல் மற்றும் பாசி வளர்ச்சியைத் தடுக்கும் வகையில் சேமிப்புத் தொட்டியை நன்றாக மூட வேண்டும். மழைநீர்ச் சேமிப்புத் திட்டம் சிறப்பாக அமைவதற்கான பராமரிப்பு மற்றும் தூய்மைப் பணியைச் செய்ய வேண்டும்.

மரபுவழி மழைநீர்ச் சேமிப்பு

வறட்சி என்னும் சொல் அடிக்கடி பயன்படாத காலத்திலேயே செட்டிநாட்டின் அனைத்து வீடுகளிலும் மழைநீர்ச் சேமிப்பு சிறப்பாக நடந்திருக்கிறது. வானம் பார்த்த பூமியான சிவகங்கை, இராமநாதபுரம் மாவட்டங்களில் மழைநீரை நம்பியே வேளாண்மை உள்ளது.

எனவே, நூறு ஆண்டுகளுக்கு முன்பே காரைக்குடி, கோனாப்பட்டு, ஆத்தங்குடி, இராங்கியம், கானாடு காத்தான், கோட்டையூர், தேவகோட்டை, சிறுகூடல் பட்டி, வலையபட்டி, புதுவயல் உள்ளிட்ட செட்டிநாட்டுப் பகுதியில், மழைநீர்ச் சேமிப்பு அமைப்புடன், வீடுகளைக் கட்டி உள்ளனர்.

அரண்மனை போன்ற வீடுகளாக இருந்தாலும், நீரை உறிஞ்சாத நாட்டு ஓடுகளைத் தான் கூரைக்குப் பயன்படுத்தி உள்ளனர். இந்த ஓடுகளில் விழும் மழைநீர், முற்றத்தில் வந்து கொட்டும் வகையில் அமைத்து, பெரிய பித்தளை அண்டாக்களில் வெள்ளைத் துணி மூலம் வடிகட்டி, அந்த நீரைச் சேமித்து வைத்து, காய்ச்சிப் பருகும் வழக்கம் இன்றும் இருக்கிறது.

பிடித்தது போக மிஞ்சும் மழைநீரை, வீட்டின் ஓரத்தில் கால்வாயை அமைத்து வீட்டின் பின்புறம் உறையுடன் கூடிய தொட்டியில் சேமிக்கின்றனர். மேலும், கழிவு நீரையும் மண்ணுக்குள் கால்வாய் அமைத்து வெளியேற்றி உள்ளனர்.

இப்படி, வீடுகள், கோயில்கள், தெருக்கள் என, எல்லா இடங்களிலும் மழைநீரைச் சேமிக்கும் தொலைநோக்கு அவர்களிடம் இருந்துள்ளது. மருத்துவக் குணங்கள் நிறைந்த செம்புரான் பாறைக் கற்களால் கட்டப்பட்ட குளங்கள் அப்பகுதியில் உள்ளன.

மழைநீர் எங்கே ஓடினாலும் கடைசியில் இந்தக் குளங்களை அடையும் வகையில், கால்வாய்களை அமைத்து உள்ளனர். எனவே, இப்பகுதியில் உள்ள குளங்கள் என்றுமே வற்றுவதில்லை. ஆக, நகரத்தாரின் வீடுகள் யாவும் மழைநீர்ச் சேமிப்பின் அடையாளம் ஆகும்.

நகர்ப்புறங்களில் பயன்பாடு

மழைநீர்ச் சேமிப்பு, நகரங்களில் ஏற்படும் நீர்ப் பற்றாக்குறையைச் சமாளிக்க, நிலத்தடி நீரைக் கூட்ட மற்றும் வெள்ளத்தைக் கட்டுப்படுத்தப் பயன்படுகிறது. சேமிக்கப்படும் மழைநீர் அன்றாட வீட்டுத் தேவைகளுக்குப் பயன்படும். கடின நீருள்ள இடங்களில் மழைநீர்ச் சேமிப்பு அவசியம். இதை நன்றாகச் சுத்திகரித்து, குடிநீராகப் பயன்படுத்தலாம்.

கட்டாய மழைநீர்ச் சேமிப்புத் திட்டம்

தமிழ்நாட்டில் கடந்த 2001 ஆம் ஆண்டு முதல், கட்டாய மழைநீர்ச் சேமிப்புத் திட்டம் அமலில் உள்ளது. இது, முன்னாள் முதல்வர் ஜெயலலிதா அவர்களின் தொலைநோக்குப் பார்வையில் கொண்டு வரப்பட்ட திட்டமாகும்.

இந்தத் திட்டத்தின்படி அனைத்து வீடுகள் மற்றும் கட்டடங்களில் மழைநீர்ச் சேமிப்பை ஏற்படுத்த வேண்டும். தவறினால் மின்சாரம் மற்றும் குடிநீர் இணைப்புகள் துண்டிக்கப்படும்.

இதன் மூலம், சென்னை மற்றும் அதன் சுற்றுப் பகுதிகளில் 50 சதம் வரை நிலத்தடி நீர்மட்டம் மற்றும் அதன் தரம் உயர்ந்தது ஆய்வு மூலம் தெரிய வந்தது.

சேமிப்பு முறைகள்

பெரிய நகரங்களில் உள்ள வீடுகள் மற்றும் கட்டடக் கூரையில் விழும் மழைநீரை, குழாய்கள் மூலம் கொண்டு வந்து, பூமியில் அமைக்கப்படும் தொட்டியில் சேமிக்கலாம். இதற்கு, மழைக்கு முன், கூரையைச் சுத்தமாக வைத்துக் கொள்வது நல்லது.

உறிஞ்சு குழிகள்

தற்போது நகரங்களில் கட்டடங்களைச் சுற்றியுள்ள தரையையும் சிமெண்ட் தளமாக அமைத்து விடுவதால், பெய்யும் மழைநீர் முழுவதும் சாலையில் ஓடிச் சாக்கடையில் கலக்கிறது. கடலோர நகரங்களில் கடலில் கலந்து விடுகிறது.

இதைத் தவிர்த்து மழைநீரை நிலத்தடி நீராக மாற்ற, கட்டடங்களைச் சுற்றி, ஆங்காங்கு 3 அடி ஆழம் 12 அங்குல விட்டமுள்ள குழிகளை அமைத்து, கூழாங்கல் மற்றும் மணலால் நிரப்பி, சிமெண்ட் பலகைகளால் மூடி விடலாம்.

இம்முறையில், ஐந்தரை சென்ட் நிலத்தில் கட்டப்பட்ட வீடுகளைச் சுற்றி 5-6 உறிஞ்சு குழிகள் அமைத்தால், நிலத்தடி நீர் மற்றும் அதன் தரம் உயரும்.

காந்தியின் வீட்டில் மழைநீர்ச் சேமிப்பு

குஜராத் மாநிலம் போர்பந்தரில் மஹாத்மா காந்தி பிறந்த வீட்டின் மைய வெளியின் அடியில் 20 அடி நீளம், 20 அடி அகலம், 15 ஆழத்தில், இருபதாயிரம் காலன் கொள்ளவுள்ள தொட்டியை அமைத்திருந்தனர்.

போர்பந்தர் நிலத்தடி நீர் உப்புக் கரிக்கும் என்பதால், காந்தியின் வீட்டில் மழைநீரைச் சேமித்து ஆண்டு முழுதும் பயன்படுத்தி வந்து உள்ளனர். இந்த வீட்டில் தான் காந்தி குடும்பத்தின் ஐந்து தலைமுறைகளைச் சேர்ந்தவர்கள் வசித்து உள்ளனர்.

மற்ற பகுதிகள்

மழைநீர்ச் சேமிப்பு, இராஜஸ்தான் தார்ப் பாலைவன மக்களின் பாரம்பரிய வழக்கமாக உள்ளது. பெர்முடாத் தீவுகள், அமெரிக்க ஐக்கிய வெர்ஜினியா தீவுகள் மற்றும் அமெரிக்க ஐக்கிய மாநிலமான கொலராடோவின் அனைத்துக் கட்டடங்களிலும், மழைநீர்ச் சேமிப்பு அமைப்பு கட்டாயம் ஆகும். இதற்கான சட்டம் அங்கு நடைமுறையில் உள்ளது.


முனைவர் ச.செல்வராஜ், ஆர்.வி.எஸ்.வேளாண்மைக் கல்லூரி, தஞ்சாவூர் – 613 402. முனைவர் த.சிவசக்தி தேவி, பண்டித ஜவஹர்லால் நேரு வேளாண்மைக் கல்லூரி, காரைக்கால் – 609 603. முனைவர் த.சிவசங்கரி தேவி, நெல் ஆராய்ச்சி நிலையம், ஆடுதுறை – 612 101.

Share:

  சந்தேகமா? கேளுங்கள்!  

 

இன்னும் படியுங்கள்!

Enable Notifications OK No thanks