மழைக் காலத்தில் வெள்ளாட்டுக் குட்டிகள் பராமரிப்பு!

மழை goat 1

வெள்ளாடுகள் எல்லாத் தட்பவெப்ப நிலைகளிலும், எல்லா நிலங்களிலும் வளர்ந்து, விவசாயிகளின் வருமானத்தை உயர்த்தும் தன்மை மிக்கவை.

வெள்ளாட்டு இறைச்சியை மக்கள் அதிகம் விரும்பி உண்பதால், இதன் தேவை கூடியுள்ளது. அதனால், வெள்ளாடுகளை வளர்ப்போர், சரியான உத்திகளைப் பயன்படுத்தி வளர்த்தால், நல்ல வருவாயைப் பெற முடியும்.

இவ்வகையில், மழைக்கால இறப்பில் இருந்து, வெள்ளாட்டுக் குட்டிகளைப் பாதுகாக்கும் முறைகள் குறித்து இங்கே பார்க்கலாம்.

பொருளாதார இழப்பு

மழைக் காலத்தில் குட்டிகள் பலவிதமான பாதிப்புகளுக்கு உள்ளாவதால், அவற்றின் உற்பத்தித் திறன் குறைகிறது. சில சமயம் இறந்து போகவும் நேர்கிறது.

அதனால், பண்ணையாளர்கள் பெரும் பொருளாதார இழப்பை அடையும் நிலை ஏற்படுகிறது.

கொட்டில் பராமரிப்பு

மழைக் காலத்தில், இடி, மின்னல், மின்சாரம் போன்றவற்றால், எதிர்பாராத விபத்துகள் ஏற்படலாம். எனவே, கொட்டிலில் உள்ள மின் கருவிகளில் மின்கசிவு ஏற்படாமல் பராமரிக்க வேண்டும்.

மின் கம்பங்களில் ஆடுகளைக் கண்டிப்பாகக் கட்டக் கூடாது. ஆட்டுக் கொட்டில் அருகில் இருக்கும் மரங்களைக் கவாத்து செய்ய வேண்டும். இதன் மூலம், அதிகக் காற்றால் மரங்கள் வேரோடு சாய்ந்து கொட்டகை மேல் விழுவதைத் தவிர்க்கலாம்.

தூங்கு மூஞ்சி, வாகை, வாத நாராயணன் போன்ற மரங்கள், அதிவேகக் காற்றின் போது, வேரோடு சாய்ந்து விழும் வாய்ப்புகள் அதிகம். எனவே, இத்தகைய மரங்கள் கொட்டிலின் அருகில் இருந்தால், அவற்றைக் கவாத்து செய்ய வேண்டும்.

மழைக் காலத்தில் ஆட்டுக் கொட்டில் மற்றும் அதன் சுற்றுப் புறத்தில் நீர்த் தேங்காமல் பார்த்துக் கொள்ள வேண்டும்.

ஏனெனில், நீரில் கொசுக்கள் பல்கிப் பெருகும் என்பதால், ஒட்டுண்ணி நோய்கள் பரவும். இதனால், குட்டிகளின் வளர்ச்சி பாதிக்கப்படும்.

சினையாடுகள் ஈனுவதற்கு 15 நாட்கள் இருக்கும் போதே, குட்டி வளர்ப்புப் பகுதியைத் தயார் செய்ய வேண்டும்.

அதாவது, தரையை 10 செ.மீ. அளவில் சுரண்டி எடுத்து விட்டு, புதிதாகச் சரளை மண், மணல் மற்றும் செம்மண்ணைப் பரப்ப வேண்டும். மேலும், சுண்ணாம்புத் தூளையும் போதியளவில் கலந்து, தரையை உருவாக்க வேண்டும்.

குட்டி வளரும் பகுதியிலுள்ள சுவர் மற்றும் கம்பி வலையைத் தீப்பிழம்பால் சுத்தம் செய்ய வேண்டும். இதனால், அங்குள்ள உண்ணி மற்றும் பூச்சிகள் அழிந்து விடும்.

தொழுவச் சுவரைச் சுண்ணாம்பு மூலம் வெள்ளையடிக்க வேண்டும். குடிநீர்த் தொட்டி மற்றும் தீவனத் தொட்டியின் உள்ளேயும் வெளியேயும் சுண்ணாம்பு கொண்டு வெள்ளையடிக்க வேண்டும்.

குட்டிகள் பராமரிப்பு

குட்டி பிறந்ததும் அதன் வாய் மற்றும் மூக்குத் துளையில் ஒட்டியுள்ள கோழையைச் சுத்தம் செய்ய வேண்டும்.

இது, குட்டி சீராக மூச்சுவிட ஏதுவாக அமையும். இதனால், மூச்சுத் திணறல் மற்றும் அதனால் ஏற்படும் இறப்பையும் தவிர்க்க முடியும்.

தொப்புள் கொடியை 2 செ.மீ. அளவு விட்டு நூலால் கட்டி, அதன் கீழ்ப் பகுதியை வெட்டி, டிஞ்சர் அயோடின் அல்லது டெட்டாலைத் தடவிவிட வேண்டும். இதனால், தொப்புள் கொடியின் மூலம் பரவும் நோய்களைத் தவிர்க்கலாம்.

குட்டி பிறந்த அரை மணி நேரத்திலிருந்து 2 மணி நேரத்தில் சீம்பாலைக் குடிக்கச் செய்ய வேண்டும்.

சீம்பாலில் நோயெதிர்ப்புத் திறனுள்ள குளோபுலின் புரதம், வைட்டமின் ஏ, டி மற்றும் ஈ அதிகமாக இருப்பதால், குட்டிகளை நோயிலிருந்து காக்கலாம்.

குட்டிகளின் வளர்ச்சி சிறப்பாக இருப்பதால், நோயினால் இறப்பதைத் தவிர்க்கலாம். சீம்பால் மலம் இளக்கியாகவும் செயல்பட்டு, குட்டிகளின் முதல் சாணத்தை வெளியேற்றும்.

இரண்டு- மூன்று குட்டிகள் பிறக்கும் போது, தாய் ஆட்டில் பால் பற்றாக்குறை இருப்பின், அதே நேரத்தில் ஈன்ற மற்ற ஆடுகளின் பாலைக் குடிக்க வைக்கலாம்.

அல்லது பசும் பாலையும், சுத்தமான நீரையும் சமமாகக் கலந்தும் குடிக்க வைக்கலாம். குட்டிகளுக்கு 3-4 வாரங்கள், பாலை மட்டுமே கொடுக்க வேண்டும்.

பால் இருந்தும் குட்டிகளுக்குக் கொடுக்க மறுக்கும் தாய் ஆட்டின் கீழ்த் தாடையை, சிறிய கயிறால் இறுக்கிக் கட்டினால் அதன் கவனம் முழுவதும் தாடையின் வலியில் தான் இருக்கும்.

இந்த நேரத்தில் குட்டியைப் பால் குடிக்கச் செய்தால், தாய் ஆட்டின் கூச்சம் மாறி, ஓரிரு நாட்களில் பாலைத் தரத் தொடங்கி விடும்.

இரண்டு நாட்கள் கழித்து, குட்டியைத் தனியே பிரித்து, காலை, மாலையில் மட்டும் தாயிடம் பாலைக் குடிக்க விட வேண்டும்.

ஐப்பசி, கார்த்திகை போன்ற மழைக் காலத்தில் பிறக்கும் குட்டிகள், அதிகக் குளிர் காரணமாக இறக்க வாய்ப்பு உள்ளது.

இதைத் தவிர்க்க, கொட்டிலில் தடுப்புகளை அமைத்து, காய்ந்த புல், வைக்கோல், உலர் பொட்டைப் பரப்பி, வெதுவெதுப்பாக வைப்பது அவசியம். மேலும், வெப்பக்கருவி மற்றும் மின் விளக்குகளை எரிய விட்டும் வெப்பம் தரலாம்.

தாதுப்புக்கட்டி

இதை, ஆட்டுக் கொட்டிலில் தாதுப்புக் கட்டித் தொங்க விட்டால், ஆட்டுக் குட்டிகள் மற்றும் சினை ஆடுகள் தமக்குத் தேவையான தாதுச் சத்துகளை எளிதாகப் பெற ஏதுவாக இருக்கும்.

இதில் முக்கியத் தாதுப்புகளான, கால்சியம், பாஸ்பரஸ், சோடியம் குளோரைடு, பொட்டாசியம், கந்தகம், மெக்னீசியம், இரும்பு, துத்தநாகம், தாமிரம், மாங்கனீசு ஆகியன உள்ளன. இதன் மூலம், குட்டிகள் மண்ணை உண்பதைத் தவிர்க்கலாம்.

குடிநீர்

குட்டிகளின் கொட்டிலில் எப்போதும் சுத்தமான குடிநீர் இருக்க வேண்டும். வாயகன்ற பாத்திரத்தில் நீரை வைத்துப் பழக்கப்படுத்த வேண்டும்.

குட்டிகள் சிறுநீர் மற்றும் புழுக்கையை நீரில் விட்டு விடும். இதனால், தொட்டியை அடிக்கடி கழுவி நீரை ஊற்றி வைக்க வேண்டும்.

கொட்டிலுக்கு உள்ளேயே நீரைக் கழுவிக் கொட்டினால், கொட்டிலின் ஈரப்பதம் அதிகமாகி, நோய்கள் வருவதற்கு ஏதுவாகும். ஆகவே, எப்போதும் கொட்டிலில் நீர்த் தேங்காமல் பார்த்துக் கொள்ள வேண்டும்.

குடிநீர்த் தொட்டி பாசி பிடிக்காமல் இருக்க, மாதம் ஒருமுறை அதில் சுண்ணாம்பு மூலம் வெள்ளையடிக்க வேண்டும். இதனால், நீரினால் உண்டாகும் கழிச்சல் நோய் வராமல் தடுக்கலாம்.

மேலும், 15 நாட்களுக்கு ஒருமுறை, பிளிச்சிங் பொடியால் தொட்டியைக் கழுவிவிட வேண்டும்.

கொசு, உண்ணியைக் கட்டுப்படுத்துதல்

குளிர் காலத்தில் கொசு மற்றும் உண்ணிகளால் கால்நடைகள் அவதியுறும். அதிகாலை 1.00 மணி முதல் 7.00 மணி வரையும், மாலை சுமார் 5.00 மணி முதல் இரவு 10.00 மணி வரையும் கொசுத் தொல்லை அதிகமாக இருக்கும்.

இதைக் குறைக்க, கொட்டிலில் வேப்பிலைப் புகை மூட்டம் போடலாம். கொசு விரட்டியையும் பயன்படுத்தலாம்.

கொட்டிலுக்கு அருகில் நீர்த் தேங்கக் கூடாது. கொட்டில் மற்றும் அதன் சுற்றுப் புறத்தில் நீரும் கழிவுநீரும் தேங்கினால், கொசு மற்றும் ஒட்டுண்ணி பெருகி நோய்கள் பரவும்.

குடற்புழு நீக்கம் செய்தல்

குளிர் காலத்தில் மேய்ச்சலுக்குச் செல்லும் ஆடுகள், உருண்டைப் புழுக்களால், குறிப்பாக, ஹெமான்கஸ் உருண்டைப் புழுக்களால் அதிகமாகப் பாதிக்கப்படும்.

இவ்வகைப் புழுக்கள் அதிகளவில் இரத்தத்தை உறிஞ்சுவதால், ஆடுகள் இரத்தச் சோகையுடன் காணப்படும். மேலும், நாடாப் புழுக்கள் மற்றும் கல்லீரல் புழுக்களால், குட்டிகள் மற்றும் ஆடுகளில் தொற்று ஏற்படும்.

இதைத் தடுக்க, மழைக்காலம் தொடங்கு முன்பே, ஆடுகளுக்குக் குடற்புழு நீக்க மருந்தைக் கொடுத்து விட வேண்டும்.

குட்டிகள் இறப்புக்கான காரணங்கள்

ஒவ்வொரு ஆண்டும், மழைக்காலம் மற்றும் மழைக்காலம் முடிந்ததும் ஆடுகளில் நோய்த் தொற்று அதிகளவில் ஏற்படும்.

இதனால், ஆடுகள் இறக்கவும் நேர்வதால், விவசாயிகளுக்குப் பெரியளவில் பொருளாதார இழப்பு உண்டாகும்.

மழைக் காலத்தில் இளம் ஆட்டுக் குட்டிகளின் சுவாச உறுப்புகள் அதிகமாகப் பாதிக்கப் படுவதால், நிமோனியா, சளி, இருமல் போன்றவை வரக்கூடும்.

மேலும், சுவாசக் குழாய் மற்றும் நுரையீரலில், நுண்ணியிரி, நச்சுயிரி மற்றும் பூஞ்சைகள் வளர்ந்து நோயைப் பெருக்கி இறப்பை அதிகமாக்கலாம்.

ஆகவே, மழைக் காலத்தில் அதிகாலை நேரத்தில் ஆடுகளை மேய்ச்சலுக்கு அனுப்பக் கூடாது.

ஏனெனில், அந்த நேரத்தில் ஆடுகளில் நோய்க் கிருமிகளைப் பரப்பும் உண்ணி, நத்தை போன்ற நோய்ப் பரப்பிகள், மேய்ச்சல் நிலத்தில் உள்ள புல் பூண்டுகளின் நுனியில், குளம் குட்டைகளின் ஓரத்தில் அதிக இருக்கும்.

எனவே, நன்றாக வெய்யில் வந்த பிறகு தான் மேய்ச்சலுக்கு அனுப்ப வேண்டும்.

ஒட்டுண்ணி நோய்கள், இளம் குட்டிகளில் பெரிய பாதிப்பை ஏற்படுத்தும். அவற்றில் முக்கியமானது இரத்தக் கழிச்சல் நோய்.

இதற்கு முக்கியக் காரணம், சுகாதாரமற்ற சூழ்நிலையில் குட்டிகளைப் பராமரிப்பது தான்.

கொட்டிலில் நிறைய ஈரப்பதம் இருப்பது மற்றும் ஈன்றுள்ள ஆடுகளை மற்ற ஆடுகளுடன் சேர்த்து விடுவதால், இளம் குட்டிகள் நோய்க்கு உள்ளாகும். எனவே, கொட்டிலைச் சுத்தமாகப் பராமரித்தால், குட்டிகள் நோயின்றி நன்கு வளரும்.

இதுவரை கூறிய பராமரிப்பு முறைகளை மழைக் காலத்தில் பின்பற்றினால், ஆட்டுக் குட்டிகளில் ஏற்படும் நோய்களைத் தடுத்து, உற்பத்தியைப் பெருக்க முடியும். இதனால், குடும்ப வருமானம், நாட்டின் பொருளாதாரம் உயரும்.


மழை BHARATHI 2

ந.பாரதி, இர.சக்திவடிவு, நா.ஸ்ரீபாலாஜி, க.சிவக்குமார், கால்நடை உற்பத்தி மேலாண்மைத் துறை, கால்நடை மருத்துவக் கல்லூரி, நாமக்கல் – 637 002.

Share:

விவசாயம் / கால்நடை வளர்ப்புக் குறித்து

சந்தேகமா? கேளுங்கள்!


இன்னும் படியுங்கள்!

Discover more from பச்சை பூமி

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading