பன்றிக் குட்டிகள் பராமரிப்பு!

வெண்பன்றிப் பராமரிப்பில் ஈற்றுக்காலம் மிகவும் முக்கியமாகும். ஏனெனில், ஒரு பண்ணையின் இலாப நட்டக் கணக்கு இதைப் பொறுத்தே அமைகிறது.

எனவே, குட்டிகளை ஈனும் இடம் சுத்தமாக, குறிப்பாக, தரைப்பகுதி காய்ந்து இருக்க வேண்டும்.

ஈற்றறையில் தாயும் குட்டிகளும் உருண்டு படுக்கும் போது, நசுங்கி இறந்து விடாமல் இருக்க, தரையில் இருந்து 25 செ.மீ. உயரத்தில், 5 செ.மீ. விட்டமுள்ள இரும்புக் கம்பிகளை அமைக்க வேண்டும்.

தரையில் கொஞ்சம் வைக்கோலைப் பரப்பி, மெல்லிய படுக்கையை அமைக்க வேண்டும்.

குட்டிகளுக்குப் போதுமான வெப்பம் அறையில் இருக்க வேண்டும். ஏனெனில், வெப்பமும் சுத்தமும் இல்லாத பண்ணைகளில் 70 சதம் வரை இறப்பு நிகழ்கிறது.

குட்டிகளைப் பிரித்து வளர்க்கும் காலம் முதல், விற்பனைக் காலம் வரையில், 25-30 சதம் இறப்பு ஏற்படுகிறது.

எனவே, குட்டிகள் பிறந்து இரண்டு வாரம் வரை, அவற்றுக்கு அளிக்கும் பராமரிப்பு முறைகளே, பண்ணையின் வெற்றியை முடிவும் செய்யும்.

தாயின் வயிற்றிலேயே தொடங்கும் பராமரிப்பு

தாயின் வயிற்றில் இருக்கும் போதே, குட்டிகளுக்கான பராமரிப்புத் தொடங்கி விடும். பன்றியின் சினைக்காலம் 114 நாட்களாகும்.

சினைப் பன்றிகளைத் தனி அறையில் வைத்துப் பராமரிக்க வேண்டும். ஏனெனில், பன்றிகள் சண்டையிட்டுக் கொள்ளும் போது, கருச்சிதைவு ஏற்படலாம்.

சினைப் பன்றிகளின் கால் நகங்களைச் சரியான அளவில் வெட்டிவிட வேண்டும். ஏனெனில், குட்டிகள் இறப்புக்கு, இந்த நகங்கள் காரணமாக அமையலாம்.

ஈற்றறையைக் கிருமிநாசினி மூலம் சுத்தம் செய்த பிறகு, அங்கே சினைப் பன்றிகளை விட வேண்டும்.

சினைப் பன்றியின் உணவில், மூன்றில் ஒரு பங்கு, அரிசித் தவிடு அல்லது கோதுமைத் தவிடாக இருக்க வேண்டும்.

மேலும், மூன்றில் ஒரு பங்கு தீவனத்தைக் குறைத்துக் கொடுக்க வேண்டும். ஈற்றுக்காலம் 12 மணி நேரம் இருக்கும் போது, தீவனம் தருவதை நிறுத்தி விட வேண்டும்.

ஈனும் காலம்

தாய்ப்பன்றி ஈனும் காலத்தில், அனுபவமுள்ள பணியாளர் அங்கே இருக்க வேண்டும்.

தாய்ப் பன்றியின் பால் காம்புகள் பெருத்து, பால் வடியத் தொடங்கும். பால் தோன்றிய 24 மணி நேரத்தில் குட்டிகள் பிறந்து விடும்.

எல்லாக் குட்டிகளும் பிறப்பதற்கு, 2-5 மணி நேரம் ஆகி விடும். பிறந்த குட்டிகளை எடுத்து வெப்பமான பகுதியில் வைக்க வேண்டும்.

குட்டிகளின் மூக்கிலுள்ள திரவத்தைச் சுத்தம் செய்து, சுவாசத்தைக் கூட்ட வேண்டும்.

தொப்புள் கொடியை 2.5 செ.மீ. இடைவெளி விட்டு, வெட்டி விட்டு டிஞ்சர் அயோடினைத் தடவிவிட வேண்டும்.

அடுத்து, குட்டிகள் பிறந்து இரண்டு மணி நேரத்தில் சீம்பாலைக் குடிக்க விட வேண்டும்.

சீம்பாலில், புரதம், வைட்டமின் மற்றும் நோயெதிர்ப்பு சத்துகள் இருப்பதால், குட்டிகள் வேகமாக வளரும்.

குட்டிகளை ஈன்று 12 மணி நேரம் கழித்தே, தாய்ப் பன்றிக்கு உணவைத் தர வேண்டும்.

ஊசிப் பற்களை அகற்றுதல்

குட்டிகள் பிறக்கும் போதே நான்கு ஜோடி ஊசிப் பற்கள் கூர்மையாக இருக்கும்.

தாயிடம் குட்டிகள் பால் குடிக்கும் போது, இந்தப் பற்களால் காம்புகளில் காயம் ஏற்படலாம். எனவே, கால்நடை மருத்துவர் மூலம், இந்தப் பற்களைக் கத்தரித்து விட வேண்டும்.

இரத்தச் சோகையைத் தடுத்தல்

இரும்புச் சத்துப் பற்றாக் குறையால் இரத்தச்சோகை ஏற்பட்டு, குட்டிகள் இறந்து போக வாய்ப்புண்டு.

இதைத் தடுக்க, வாய் மூலம் அல்லது ஊசி மூலம், இரும்புச் சத்தை வழங்க வேண்டும்.

தாய்ப் பன்றியின் மடியில், 10 லிட்டர் வெந்நீரில் அரைக் கிலோ இரும்பு சல்பேட்டைக் கலந்து, குட்டிகள் பிறந்ததில் இருந்து தினமும் தடவிவிட வேண்டும்.

இது, குட்டிகள் பாலைக் குடிக்கும் போது உள்ளே சென்று, இரத்தச் சோகையைத் தடுக்கும்.

குட்டிகள் பிறந்து மூன்றாம் நாள் இன்பெரான் என்னும் இரும்புச் சத்து மருந்தை, குட்டிக்கு ஒரு மில்லி வீதம் ஊசி மூலம் அளிக்க வேண்டும்.

இரண்டாம் ஊசியை, இரண்டு வாரம் கழித்து அளிக்க வேண்டும்.

குட்டித் தீவனம்

இரண்டு மூன்று வார வயதுள்ள குட்டிகள், பாலுடன், உலர்ந்த உணவையும் உண்ண ஆவலாக இருக்கும்.

இந்த நேரத்தில் 65 சதம் மக்காச் சோளம், 14 சதம் கடலைப் புண்ணாக்கு, 5 சதம் வெல்லப்பாகு, 10 சதம் கோதுமைத் தவிடு, 5 சதம் மீன் தூள் மற்றும் நோயெதிர்ப்பு சத்துள்ள தீவனத்தை அளிக்க வேண்டும்.

பாலின் அளவு குறையக் குறைய, கலப்புத் தீவனத்தை அதிகமாகக் கொடுக்க வேண்டும்.

ஆண்மை நீக்கம் செய்தல்

இன விருத்திக்குத் தேவைப்படாத குட்டிகளில், இரண்டாம் வாரத்திலேயே ஆண்மை நீக்கம் செய்து விட வேண்டும். இதைத் தகுந்த கால்நடை மருத்துவர் மூலம் மேற்கொள்ள வேண்டும்.

இதைச் செய்யும் போது, சரியான சுகாதார முறைகளைக் கையாள வேண்டும்.

குட்டிகளின் விதைகளை நீக்கிய பிறகு, அந்த இடத்தில் நோயெதிர்ப்புப் பொடியைத் தெளிக்க வேண்டும்.

ஆண்மை நீக்கம் செய்வது, குட்டிகளின் விரைவான வளர்ச்சிக்கு, தரமான இறைச்சிக்கு வழி வகுக்கும்.

ஆதரவற்ற குட்டிகளை வளர்த்தல்

குட்டிகளை ஈன்று விட்டுத் தாய்ப்பன்றி இறந்து விடுதல், நிறையக் குட்டிகளை ஈனுதல், தாய்ப் பன்றியில் மடிநோய் ஏற்படுதல் போன்றவற்றால், குட்டிகள் ஆதரவற்ற நிலைக்குத் தள்ளப்படும்.

இத்தகைய குட்டிகளை இரண்டு முறைகளில் பராமரிக்கலாம். அதாவது, மற்ற பன்றிகளில் பால் குடிக்க விடலாம். அல்லது அகலமான தட்டில் பாலுக்கு மாற்றுப் பொருளை வழங்கலாம்.

பாலுக்கு மாற்றுப் பொருளாக, ஒரு லிட்டர் பசும்பாலில், ஒரு முட்டை மஞ்சள் கருவைக் கலந்து தரலாம்.

இத்துடன், இரும்புச் சத்துப் பற்றாக் குறையைப் போக்க, கால் தேக்கரண்டி இரும்பு சல்பேட் பொடியைக் கலந்து கொடுக்கலாம்.

தாயிடமிருந்து குட்டிகளைப் பிரித்தல்

எட்டு வாரத்தில் தாயிடமிருந்து குட்டிகளைப் பிரித்து வளர்க்க வேண்டும். தினமும் சற்று நேரம் தாயிடமிருந்து பிரித்து வளர்த்துப் பழக்கிய பிறகு, முற்றிலும் பிரித்து வளர்க்க வேண்டும்.

இந்தக் குட்டிகளுக்கு நல்ல வளர் தீவனத்தைத் தர வேண்டும். குட்டிகளின் எடையைப் பதிவு செய்து வைக்க வேண்டும்.

வெண் பன்றிகளில் பெற்றோரின் குண நலன்கள் மரபணுக்கள் மூலம் குட்டிகளுக்கு எடுத்துச் செல்லப்படும்.

அவையாவன: பிறக்கும் குட்டிகளின் எண்ணிக்கை, தாயிடமிருந்து பிரிக்கும் போது உள்ள குட்டிகளின் எண்ணிக்கை மற்றும் எடை, மூன்று வாரத்தில் உடல் எடை, தினசரி கூடும் எடை, தீவனத்தை இறைச்சியாக மாற்றும் திறன்.

நோய்த்தடுப்பு முறைகள்

தாயிடமிருந்து குட்டிகளைப் பிரித்து இரண்டு வாரம் கழித்து, வாய் மூலம் குடற்புழு நீக்க மருந்தை, மாதந்தோறும் வழங்க வேண்டும்.

மேலும், இந்த நேரத்தில் பன்றிக் காய்ச்சல் நோய்க்கான தடுப்பூசியைப் போட வேண்டும்.

இதைத் தாயிடமிருந்து பிரிப்பதற்கு ஒரு வாரத்துக்கு முன்பும் செய்யலாம்.


முனைவர் பா.குமாரவேல், முதல்வர், கால்நடை மருத்துவக் கல்லூரி, உடுமலைப்பேட்டை, திருப்பூர் மாவட்டம்.

Share:

விவசாயம் / கால்நடை வளர்ப்புக் குறித்து

சந்தேகமா? கேளுங்கள்!


இன்னும் படியுங்கள்!