கட்டுரை வெளியான இதழ்: ஜூலை 2021
கறவை மாடுகளில் மடிவீக்க நோய் ஏற்படப் பல காரணங்கள் உள்ளன. இருப்பினும், வெவ்வேறு நுண்ணுயிரிகளால் ஏற்படும் பாதிப்பு மிகவும் அதிகமாக உள்ளது. ஸ்டபைலோ காக்கஸ், ஸ்ட்ரெப்டோ காக்கஸ், கொர்னி பாக்டீரியம், எஸ்சொரிஸியாகோலை, மைக்கோ பாக்டீரியம், டியுபாகுளோஸிஸ் போன்ற நுண்ணுயிரிக் கிருமிகள், மாட்டின் மடியிலுள்ள பால் சுரப்பியைத் தாக்கிப் பெருத்த பொருட் சேதத்தை ஏற்படுத்துகின்றன.
நோய் ஏற்பட்டதும் தகுந்த சிகிச்சை அளிக்கா விட்டால் மடியின் பால் சுரப்பி நிரந்தரமாகக் கெட்டு, பால் சுரக்கும் தன்மையை இழந்து விடும். இந்நோய் தாக்கிய பிறகு சிகிச்சை அளிப்பதைவிட நோய் வராமல் இருக்க மேற்கொள்ள வேண்டிய தடுப்பு முறைகளைப் பின்பற்றுவது சிறந்ததாகும்.
தரைச் சுத்தம், மடிச்சுத்தம், பால் கறப்பவர் கைச்சுத்தம், பால் கறக்கும் இயந்தரச் சுத்தம் போன்றவற்றைப் பொறுத்து இந்நோயானது தாக்கும் அல்லது தாக்காது. இரத்தம் மூலமாக அல்லது காம்புத்தொளை வழியாக, இந்நோய் மடியை அடைந்து நோயை ஏற்படுத்தும். மேலும், மடியில் ஏற்படும் காயமும், புண்ணும் இந்நோய்க்கான முக்கியக் காரணங்களாகும்.
நோய் அறிகுறிகள்
கறவை மாடுகளில் மடி பெரிதாக வீங்கி விடும். ஒன்று அல்லது இரண்டு காம்புகள் பாதிக்கப்படும். வீக்கமுற்ற மடி சூடாகவும், தொட்டால் மாட்டுக்கு மிகுந்த வலியையும் தரும். மடியைத் தொட்டால் மாடு உதைக்கும். காம்பு வீங்கிச் சிவந்து காணப்படும். பால் திரியாகவும், மஞ்சளாகவும், இரத்தம் கலந்தும் வரும்.
நாள்பட நாள்பட வீக்கம் குறைந்து, நீரைப் போலப் பால் திரி திரியாக இருக்கும். சில சமயம் வீக்கம் குறையாமல் சீழ்ப்பிடித்து, மடி ஓட்டையாகிச் சீழ் வடியும். பால் முற்றிலும் நின்று விடும் அல்லது வெகுவாகக் குறைந்து விடும்.
தடுப்பு முறைகள்
எப்போதும் தொழுவத்தைத் தூய்மையாக வைத்துக் கொள்ள வேண்டும். பால் கறவையாளர்கள் பாலைக் கறப்பதற்கு முன் தங்கள் கைகளை, சோப்பு மற்றும் கிருமிநாசினியில் கைகளைச் சுத்தம் செய்த பிறகே பாலைக் கறக்க வேண்டும்.
கறவைக்கு முன் மடியை நீர் மற்றும் கிருமிநாசினி மூலம் நன்கு சுத்தம் செய்ய வேண்டும். பிறகு, சுத்தமான துணியால் மடியைத் துடைத்த பிறகு பாலைக் கறக்க வேண்டும்.
பாலைக் கறந்த பிறகும் காம்புகளைக் கிருமிநாசினியால் கழுவ வேண்டும். கறவை எந்திரத்தைப் பயன்படுத்தினால், பாலைக் கறந்ததும் குளிர்ந்த நீரில் நன்கு கழுவ வேண்டும். பிறகு, கிருமிநாசினி மூலம் சுத்தம் செய்ய வேண்டும். எந்த இடத்திலும் பால் தேங்கியிருக்கக் கூடாது.
நோயுற்ற பசுவின் பாலை இறுதியில் கறக்க வேண்டும். அதிலும் நோயுற்ற காம்பைக் கடைசியாகக் கறக்க வேண்டும். கறந்த பாலை, கிருமிநாசினி மருந்துடன் கலந்து அகற்றி விட வேண்டும். மடியிலும் காம்புகளிலும் காயம் ஏற்படாமல் பார்த்துக் கொள்ள வேண்டும்.
கறவை நேரத்தைச் சரியாகக் கடைப்பிடிக்க வேண்டும். மடியில் பாலைத் தேங்க விடாமல் முற்றிலும் கறந்து விட வேண்டும். அடிக்கடி மடிநோய்க்கு உள்ளாகும் மாடுகளைப் பண்ணையில் இருந்து நீக்கிவிட வேண்டும்.
முனைவர் க.தேவகி,
வேளாண்மை அறிவியல் நிலையம்,
முனைவர் கா.செந்தில் குமார், கால்நடை முதுகலை அறிவியல் ஆராய்ச்சி நிலையம்,
முனைவர் ப.இரா.நிஷா, வேளாண்மை அறிவியல் நிலையம், காட்டுப்பாக்கம்.
சந்தேகமா? கேளுங்கள்!