கட்டுரை வெளியான இதழ்: ஜூலை 2021
மீன் உற்பத்தியில் மீன்களின் உணவுக்காகச் செலவிடப்படும் தொகையே அதிகம். மேலும், இப்போது வரை உலகளவில், மீன்தூள் மற்றும் மீன் எண்ணெய்யே, மீன் உணவில் புரதம் மற்றும் கொழுப்பு ஆதாரமாகப் பயன்படுகின்றன.
ஆனால், இனி வரும் காலங்களில் இந்த மீன் தூளின் விலை அதிகமாக வாய்ப்புள்ளதால், மீன் உற்பத்திச் செலவும் அதிகமாகும்.
இதைக் கருத்தில் கொண்டு இந்த மீன் தூளுக்கு மாற்றாக மற்ற விலங்கினப் புரதங்களைப் பயன்படுத்தும் ஆய்வுகள் நடந்து வருகின்றன. அத்தகைய புரதங்களில் இறால் ஓட்டுத்தூளும் ஒன்றாகும்.
இறால் மற்றும் இறால் ஓடுகள்
மீன் மற்றும் இறால் பதன ஆலைகளில் இருந்து வெளியேறும் கழிவுகளை விலங்குகளுக்கு உணவாகப் பயன்படுத்தலாம். இறால் பதன ஆலைகளில் இறாலின் மேல் ஓடுகள் கழிவாக ஒதுக்கப்படுகின்றன.
இறால்களில் உள்ள மேல் ஓடுகள் 35-45% ஆகும். விலங்குகளுக்கு உணவாக அமையும் இந்த ஓடுகளில் சுவையைக் கூட்டும் காரணிகளும் உள்ளன.
புரதம் நிறைந்த இறால் ஓடுகளில் அமினோ அமிலம், கொழுப்பு மற்றும் நிறத்தைக் கூட்டும் கரோட்டினாய்டு (Carotenoids) என்னும் காரணிகளும் உள்ளன. இந்த இறால் ஓடுகளைத் தூளாக்கி மீன் அல்லது இறால்களுக்கு உணவாக அளித்தால் அவற்றின் வளர்ச்சி அதிகமாகும்.
புரதம் மற்றும் கொழுப்பைத் தவிர்த்து, கைடின் (Chitin) என்னும் மூலப்பொருளும் இருப்பதால், இறால் ஓடு சிறந்த விலங்கினப் புரதமாக விளங்குகிறது.
இறால் தூள்
இறால் ஓடுகளிலுள்ள சத்துகள்: இறால் ஓடுகளில் மீன் தூள் அளவுக்குப் புரதம் இல்லையெனினும், மீன்களுக்குத் தேவையான 35%க்கு மேல் புரதம் உள்ளது. இறால் ஓடுகளைக் காய வைக்கும் முறை மற்றும் அரைக்கும் முறையைப் பொறுத்து, அவற்றின் புரதம் மற்றும் கொழுப்பு அளவுகள் மாறுபடும்.
ஓவனில் காய வைத்து அரைத்த இறால் ஓடுகளில் 46% புரதம், 9.8% கொழுப்பு, 4.4% நீர், 14.3% கைடின் இருக்கும். வெய்யிலில் உலர்த்தி அரைத்த இறால் ஓடுகளில் 44.4% புரதம், 8.4% கொழுப்பு, 5.8% நீர், 15% கைடின் இருக்கும். வேக வைத்து அரைத்த தூளில் 42.2% புரதம், 6.2% கொழுப்பு, 8% நீர், 17.6% கைடின் இருக்கும்.
நன்னீர் மீன் உணவில் இறால் தூளின் பங்கு: நன்னீரில் வாழும் கட்லா மீன்கள் இதை உண்டால், சாதாரண உணவை உண்ணும் போது இருப்பதை விட, உடல் எடை, நீளம் ஆகியன அதிகமாக இருக்கும். சாதாக் கெண்டை மீன் உணவில் மீன் தூளுக்கு மாற்றாக 32% வரை இறால் தூளைச் சேர்க்கலாம். இதனால், மீனின் உடல் எடையும் அமினோ அமிலங்களும் அதிகமாகும்.
திலேப்பியா மீன்களும் இறால் தூளை உண்ணும். குறிப்பாக, நயில் திலேப்பியா மீனினங்களின் உணவில் மீன் தூளுக்கு மாற்றாக 100% இறால் தலை ஓட்டுத்தூளைச் சேர்க்கலாம். இதனால், மீனின் வளர்ச்சி மற்றும் இறைச்சியின் தரத்தில் எதிர் விளைவு ஏதும் ஏற்படுவதில்லை. ஆனால், ட்ரௌட் (Trout) மீன் உணவில் இறால் தூளை 50% வரை மட்டுமே பயன்படுத்தலாம்.
இப்படி, மீன் தூளையும் இறால் தூளையும் சமமாகக் கலந்து கொடுக்கும் போது, ட்ரௌட் மீன்களில் வளர்ச்சியும் செரிக்கும் தன்மையும் பெருகும். நன்னீர் அலங்கார மீன்களாகிய கொய் கெண்டை மீன்களும் இறால் உணவை உண்ணும் போது அதிக வளர்ச்சியை அடையும். இறால் தூளில் நிறைந்துள்ள கரோட்டினாய்டுகளால் மீன்களின் நிறங்களும் செம்மையாகும்.
ஈரோடு வளங்குன்றா நீருயிரி வளர்ப்பு மையத்தில், கொய் கெண்டை நன்னீர் அலங்கார மீன் உணவில், மீன் தூளுக்கு மாற்றாக 50% இறால் ஓட்டுத்தூளைச் சேர்த்துக் கொடுத்ததில், வழக்கமான உணவை உண்டபோது இருந்ததை விட 25% வளர்ச்சி அதிகமாக இருந்தது.
கடல் மீன் உணவில் இறால் தூளின் பங்கு: இறால் தூளைக் கடல் மீன்களுக்கும் உணவாக இடலாம். குறிப்பாக, விலமீன் உணவில் கோல்டன் இறால் எனப்படும் ப்லெய்சோனிக (Pleisonika sp) இறால்களை 12% சேர்த்துக் கொடுத்தால் மீன்களின் வளர்ச்சி அதிகமாகும். இறால்களில் உள்ள கரோட்டினாய்டுகளை மீன்களின் உணவு வழியே கொடுப்பதால் மீன்களின் நிறங்களும் செம்மை பெறும்.
ஓட்டுடலிகளின் உணவில் இறால் தூளின் பங்கு: ஓட்டுடலிகளுக்கு, குறிப்பாக வனாமி (Penaeus vannamei) என்னும் பசிபிக் வெள்ளை இறாலின் உணவில் 18% வரை மீன் தூள் அல்லது சோயா மாவுக்கு மாற்றாக இறால் தூளைக் கொடுத்தால் வழக்கமான உணவால் கிடைக்கும் வளர்ச்சியைக் காட்டிலும் கூடுதல் வளர்ச்சி கிடைக்கும்.
பினயஸ் மோனோடான் (Penaeus monodon) இறால் உணவில் இறால் ஓட்டுத்தூளை 31% வரை சேர்க்கலாம். இதனால் 54% மீன் தூள் கலந்த உணவில் கிடைப்பதை விட உடல் எடை அதிகமாகும்.
எனவே, புரதம், கொழுப்பு, வைட்டமின், மினரல், மற்றும் கைடின் நிறைந்த இறால் ஓடுகளைக் கழிவாக ஒதுக்காமல் மீன் தூளுக்கு மாற்றாகப் பயன்படுத்தினால், சுற்றுச்சூழல் மாசைத் தவிர்க்கலாம். மீன் தூளின் தேவை மற்றும் மீன் உணவுச் செலவைக் குறைக்கலாம்.
ஸ்ரீ.ஜெயப்பிரகாஷ்சபரி,
முனைவர் சா.ஆனந்த், வளங்குன்றா நீருயிரி வளர்ப்பு மையம்,
பவானிசாகர்-638451, ஈரோடு மாவட்டம்.
சந்தேகமா? கேளுங்கள்!