காணை அல்லது குளம்புவாய் நோய் எனப்படும் கோமாரி, நச்சுயிரியால் ஏற்படும் கொடிய தொற்று நோயாகும். இது, மாடு, எருமை, செம்மறி ஆடு, வெள்ளாடு மற்றும் பன்றிகளைப் பாதிக்கும்.
கோமாரி நோயால் இந்தியாவில் ஆண்டுதோறும் ரூ.20-22 ஆயிரம் கோடியளவில் இழப்பு ஏற்படுகிறது. மத்திய அரசு 2003 ஆம் ஆண்டு தேசிய கோமாரி நோய்க் கட்டுப்பாட்டுத் திட்டத்தைத் தொடங்கி, ஆண்டுதோறும் ரூ.500 கோடியை அளித்து வருகிறது. ஆனால், 15 ஆண்டுகள் கடந்தும் கோமாரி முழுமையாகக் கட்டுப்படவில்லை. ஏனெனில், கோமாரிக்குக் காரணமான ஆப்தோ நச்சுயிரியில் ஓ, ஏ, சி, ஆசியா 1, சேட் 1, 2, 3 என்னும் ஏழு வகையான குருதி நச்சுயிரிகளும், 60 துணை வகைகளும் உள்ளன.
இவற்றில், ஒரு நச்சுயிரி வகைக்கு எதிரான தடுப்பூசி மூலம் மற்ற வகைகளைக் கட்டுப்படுத்த முடியாது. இவற்றில் இந்தியாவில் ஓ, ஏ, ஆசியா 1 ஆகிய நச்சுயிரி வகைகள் உள்ளன. நம் நாட்டில் இம்மூன்றுக்கும் எதிரான தடுப்பூசிகள் போடப்பட்டு வருகின்றன.
பரவும் முறை
கோமாரியானது, நேரடியாகவும், மறைமுகமாகவும் பரவும். நச்சுயிரிகள், காற்றின் மூலமும், பாதிக்கப்பட்ட விலங்கின் உமிழ்நீர், சிறுநீர், சாணம் மற்றும் பால் மூலமும் பரவும். பாதிக்கப்பட்ட மாடுகளின் தீவனம், தீவனத் தட்டுகள், தண்ணீர், வைக்கோல் மூலமும் பரவும். நோயுள்ள பகுதிகளில் இருந்து வாங்கி வரப்படும் கால்நடைகள் மூலமும் பரவும். தடுப்பூசி போடப்படாத கால்நடைகளைத் தாக்கும். தோல் மற்றும் மேல் திசுக்களில் வளர்ந்து பெருகுவதால், வாய் மற்றும் கால்களுக்கு இடைப்பட்ட பகுதி மற்றும் மடியில் அறிகுறிகள் தென்படும்.
அறிகுறிகள்
கடுங்காய்ச்சல் மற்றும் பசியின்மை. மாடுகளின் வாயிலிருந்து நூலைப் போல உமிழ்நீர் தொங்கும். வலியின் காரணமாக, மாடுகள் காலை உதறிக்கொண்டு இருக்கும். வாயில் கொப்புளங்கள், புண்கள் இருக்கும். மடியிலும் கொப்புளங்கள் காணப்படும்.
மரு.செ.ஜோதிகா,
மரு.மா.மோகனப்பிரியா, முனைவர் க.செந்தில்குமார்,
முனைவர் மா.அருள்பிரகாஷ், மரு.சே.வித்யா,
பன்றி இனவிருத்திப் பிரிவு, கால்நடை அறிவியல் முதுகலை
ஆராய்ச்சி நிலையம், காட்டுப்பாக்கம்-603203.
சந்தேகமா? கேளுங்கள்!