கட்டுரை வெளியான இதழ்: ஜூன் 2021
மழைக்கால நோய்களில் முக்கியமானது தொண்டை அடைப்பான். பண மதிப்புள்ள கால்நடைகளைத் திடீரெனத் தாக்கி, மிகச் சீக்கிரத்தில் அவற்றை இறக்கச் செய்து விடும் கொடிய நோய். இதைப் பற்றி இங்கே பார்க்கலாம்.
இந்நோயானது பாசுரெல்லா மல்டோசிடா என்னும் நுண்ணுயிரியால் ஏற்படுகிறது. இந்நோய், பெரும்பாலும் மழைக் காலத்தில், குறிப்பாக, நீரானது தங்கும் தாழ்வான பகுதிகளில் இதன் தாக்கம் அதிகமாக இருக்கும்.
நோய் அறிகுறிகள்
கால்நடைகளுக்குத் திடீரெனக் கடுமையான காய்ச்சல் ஏற்படும். கண்கள் சிவந்து வீங்கிக் காணப்படும். வாயிலிருந்து உமிழ்நீர் வடியும். தொண்டைப் பகுதியில் இருந்து தொடங்கி, கழுத்துப் பகுதி மற்றும் மார்புப் பகுதி வரை மிகப்பெரிய நீர் தேங்கிய வீக்கம் காணப்படும். இந்த வீக்கம் வெப்பமாகவும், வலியோடு கூடியதாகவும் இருக்கும். இதனால், கால்நடைகளுக்கு மூச்சுத் திணறல் ஏற்படும். மேலும், 24 மணி நேரத்தில் கால்நடைகள் இறந்து விடும்.
தடுப்பு முறைகள்
வளர்ந்த நிலையில் உள்ள எல்லா மாடுகளுக்கும், ஆறு மாதங்களைக் கடந்த கன்றுகளுக்கும், மழைக்காலம் தொடங்குவதற்கு ஒரு மாதத்துக்கு முன்பே தடுப்பூசியைப் போட்டுவிட வேண்டும். அடுத்து, ஒவ்வொரு ஆண்டும் தொடர்ந்து தடுப்பூசியைச் செலுத்திவிட வேண்டும்.
நோய்கள் வந்த பிறகு சிகிச்சை அளிப்பதை விட, நோய்கள் வருவதற்கு முன், அவற்றை வர விடாமல் தடுப்பதற்கான நடவடிக்கைகளை எடுத்தால் தான் கால்நடைகளைக் காப்பாற்றி, நாம் எதிர்பார்க்கும் நன்மைகளை அவற்றின் மூலம் அடைய முடியும்.
இதைக் கால்நடைகளை வளர்ப்போர் கவனத்தில் கொண்டு செயல்பட வேண்டும். இதுவே, கால்நடை வளர்ப்பில் உள்ள மக்களுக்கு நாம் விரும்பிக் கூறிக் கொள்ளும் ஆலோசனையாகும்.
முனைவர் க.தேவகி,
வேளாண்மை அறிவியல் நிலையம், முனைவர் கா.செந்தில் குமார்,
கால்நடை முதுகலை அறிவியல் ஆராய்ச்சி நிலையம்,
முனைவர் ப.இரா.நிஷா, வேளாண்மை அறிவியல் நிலையம், காட்டுப்பாக்கம்.
சந்தேகமா? கேளுங்கள்!