My page - topic 1, topic 2, topic 3

நவீன முறைகளில் மீன் வளர்ப்பு!

PB_eFishery

கட்டுரை வெளியான இதழ்: மே 2021

ணவுத் தேவை காரணமாக மீன் வளர்ப்புத் தொடர்ந்து முன்னேறி வருகிறது, கடந்த 20 ஆண்டுகளாக மீன் வளர்ப்பில் நல்ல முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது. குறைவான நிலத்தையும் நீரையும் பயன்படுத்தி உற்பத்தியைப் பெருக்குவதன் மூலம், மீன் உணவில் பயன்படுத்தப்படும் மீன் எண்ணெய் மற்றும் மீன் துகளின் பயன்பாட்டைக் குறைக்கலாம். எனினும், புதிய தொழில் நுட்ப உதவியின்றி மீன் உற்பத்தியை இரு மடங்காக ஆக்கினால் சுற்றுச்சூழல் பாதிப்புகளும் இரு மடங்காகும்.

மேலும் நீரின் தரம், நோய்கள், உணவு மற்றும் உணவு முறை, நாற்றங்கால் மற்றும் வளர்ச்சிக் குளங்கள் சார்ந்த உத்திகள் இன்றைய மீன் வளர்ப்பில் முக்கியச் சிக்கல்களாக உள்ளன. இவற்றில் இருந்து மீள்வதற்கு, புதிய மீன் வளர்ப்பு உத்திகள் வழி வகுக்கின்றன. இவ்வகையில், மீன் உற்பத்தியை மேம்படுத்தும் புதிய உத்திகளைப் பற்றி இங்கே பார்க்கலாம்.

உயிரிக் கூழ்மத்திரள் உத்தி

இது, கார்பன் மற்றும் நைட்ரஜன் மூலக்கூறுகளைச் சமநிலையில் இணைப்பதன் மூலம், நீரின் தரத்தை மேம்படுத்தும் புதிய நுட்பமாகும். உயிரிக் கூழ்மத்திரள் என்பது, நுண்ணுயிரிகள், தாவர மிதவைகள், கரிமத் துகள்களான மலக்கழிவு மற்றும் உண்ணப்படாத உணவுப் பொருள்கள் ஆகியவற்றின் கூட்டமைப்பாகும். ஒவ்வொரு துகளும் பாக்டீரியாவால் சுரக்கப்படும் களியைப் போன்ற திரவத்தால் இணைந்துள்ளது. இந்த உயிரிக் கூழ்மத்திரள், நீரிலுள்ள கழிவுப் பொருள்களைக் கிரகித்துப் புரதமாக மாற்றும்.

மேலும், இது மீன்களின் இயற்கை உணவாகும். உயிரிக் கூழ்மத் துகள்களை உருவாக்க, கார்பன் மூலதனத்தை அதிகமாக்க வேண்டும். இதை உணவின் மூலம் அல்லது வெளியில் இருந்து அளிக்கலாம். கார்பன்-நைட்ரஜன் சேர்க்கையைச் சரியாக முறைப்படுத்தினால் உயிரிக் கூழ்மத்திரள் அளவைக் கூட்டலாம். இதன் மூலம், நீரிலுள்ள நைட்ரஜன் காரணிகளின் அளவு குறைந்து நீரின் தரம் மிகும்.

இதனால் மேலும் பல நன்மைகள் உள்ளன. அவையாவன: வளர்ப்பு மீன்களுக்கு உயிரிக் கூழ்மத்திரள் உணவாகும். உயிரிக் கட்டுப்பாடு அளவாகச் செயல்படும். நைட்ரஜன் நச்சுக் கழிவு குறையும். குறைந்த நீர் மாற்றம் அல்லது நீரை மாற்றாமலே மீன்களை வளர்க்கலாம். மீன் வளர்ப்பில் தீவனச் செலவு குறையும். மறுசுழற்சி முறையில் தரப்படும் சத்துகள் பயன்படுத்தப்படும்.

சுழல்நீர்த் தொட்டிகளில் மீன் வளர்ப்பு

இது, குறைந்த நீரை, மறுசுழற்சி முறையில் மீண்டும் மீண்டும் பயன்படுத்தி மீன்களை வளர்க்கும் மூடிய அமைப்புள்ள நிலம் சார்ந்த உத்தியாகும். இதன் மூலம் உணவுப் பாதுகாப்பை அதிகமாக்கி, சுற்றுச்சூழலுக்கு ஏற்படும் பாதிப்பைக் குறைக்கலாம்.

இந்தச் சுழல்நீர்த் தொட்டிகளில் பலபடி முறையில் நீரிலுள்ள கரிமப் பொருள்கள் மற்றும் உயிர்க் காற்றைப் பயன்படுத்தும் பொருள்களான, எண்ணெய், கொழுப்பு, சத்துகள், நீரில் கரையாத் துகள்கள் மற்றும் நோய்க் காரணிகள், கழிவு நீரிலிருந்து நீக்கப்படுவதால் நீரானது தூய்மையாகி மீண்டும் பயன்படும்.

இயந்திர வடிகட்டிகளான, மண் வடிகட்டி, தடைக்காப்பு வடிகட்டி, முரசு வடிகட்டியின் மூலம் கரையாத திடக்கழிவுகள் நீக்கப்படும். பிறகு திரவக் கழிவுகள் உயிரி வடிகட்டி மூலம் நீக்கப்படும். கழிவுநீரில் உள்ள அம்மோனியா, நைட்ரைட்-நைட்ரஜன் மற்றும் கரிமப் பொருள்கள் போன்ற திரவக் கழிவுகளை, இயற்கை முறையில் உடைத்து நீரைச் சுத்தம் செய்யும்.

அதிக அடர்த்தி மீன் உற்பத்தியில், மீன் வளர்ச்சிக்கும், வளர்சிதை மாற்றத்துக்கும் உயிர்க்காற்று முக்கியமாகும். இதன் அளவை, காற்றேற்றம் மற்றும் ஆக்சிஜனேற்றம் முறையில் அதிகமாக்கலாம். இந்தக் காற்றேட்டத்தின் மூலம் ஆக்சிஜன் நீரில் கரைந்து செறிவூட்டப்படும். நீரிலுள்ள அமில காரத் தன்மையைச் சரியான முறையில் பராமரிக்க, சுண்ணாம்பு அல்லது சோடியம் ஹைட்ராக்ஸைடு தொடர்ச்சியாக நீரில் அளிக்கப்படும்.

குறைவான அமில காரத்தன்மை, நீரில் கரைந்துள்ள கரியமில வாயுவைக் கூட்டி, நீரின் தரத்தைப் பாதிக்கச் செய்யும். சரியான கார அமிலத் தன்மையைப் பராமரிக்க, காற்றேட்டத்தின் மூலம் நீரில் கரைந்துள்ள கரியமில வாயுவைக் குறைக்கலாம். இதைப் போல, நீரின் வெப்பநிலை சுழல்நீர்த் தொட்டிகளில் முக்கியக் காரணியாகச் செயல்படும்.

இதைச் சரியாகப் பராமரிக்க, வெப்பமூட்டி அல்லது குளிரூட்டியைப் பயன்படுத்தலாம். இறுதியில் நீரைப் பயன்படுத்துவதற்கு முன், நீரானது புற ஊதாக் கதிர்கள் அல்லது ஓசோன் மூலம் கிருமிகளைக் கொன்று சுத்தப்படுத்தும். இவ்வகை மீன் வளர்ப்பு முறையில் பல்வேறு நன்மைகள் உள்ளன. அவையாவன:

குறைந்த நீரும் நிலமும் போதும். எளிதாக நீரின் தரத்தைச் சரி செய்யலாம். சாதகமான வானிலையைச் சார்ந்திருப்பதில்லை. அதிக அடர்த்தியில் விருப்பம் போல மீன்களை வளர்க்கலாம். ஆற்றலுள்ள உணவு மாற்றுத்திறன் மிக்கது. மீனின் உடல்நிலை மற்றும் செயல் திறனை அதிகரிக்கலாம்.

அக்குவாபொனிக்ஸ்

இது, மீன் வளர்ப்பு மற்றும் மண்ணற்ற தாவர வளர்ப்பை ஒன்றாகச் சேர்த்து வளர்க்கும் முறையாகும். இவ்வமைப்பு, ஒன்றையொன்று சார்ந்து சம நிலையில் மறுசுழற்சி முறையில் வளர்க்கக் கூடிய நவீன உணவு உற்பத்தி முறையாகும். மீன் தொட்டிகளில் இருந்து பெறப்படும் சத்துமிகு கழிவு நீரானது, மண்ணற்ற தாவர வளர்ப்புத் தளங்களுக்கு உரமாகச் செயல்படும்.

இந்த உரமானது, மீன் தொட்டிகளில் உள்ள மீன்களின் மலக்கழிவு, பாசிகள் மற்றும் சிதைவுறும் மீன் உணவில் இருந்து கிடைப்பதாகும். இல்லையெனில், இக்கழிவுகள் மீன் தொட்டிகளில் நச்சுத் தன்மையைக் கூட்டி, மீனின் வளர்ச்சியைப் பாதிக்கச் செய்யும். மண்ணற்ற தாவர வளர்ப்புப் படுக்கையானது ஓர் உயிரி வடிப்பானாக இயங்கி, நீரிலுள்ள அம்மோனியா, நைட்ரேட், பாஸ்பரஸ் போன்ற நச்சுப் பொருள்களை உறிஞ்சும்.

இதனால், நீரானது தூய்மையாகி மீண்டும் மீன் தொட்டியில் பயன்படும். தாவரங்களின் வேர்கள் மற்றும் கற்களில், நைட்ரஜன் மூலம் வாழும் நுண்ணுயிரிகள், நைட்ரஜனை மறுசுழற்சி செய்யும். தாவரங்களில் பயன்படும் நைட்ரேட்டானது நைட்ரஜனாக மாறும். இதனால், நீரானது மீன் வளர்ப்புத் தொட்டிக்கு மீண்டும் வரும்போது, நைட்ரஜன் காரணிகளின் அளவு, மீன் வளர்ப்புக்கு ஏற்றதாக இருக்கும்.

நன்மைகள்: குறைந்த நீர் போதும். செயற்கை உரங்கள் தேவையில்லை. வளமான விளைநிலம் தேவையில்லை. பூச்சி மற்றும் நோயின் பாதிப்புக் குறையும். களையெடுக்கத் தேவையில்லை. தாவரங்கள் நன்கு வளரும். இம்முறையை எளிதில் அமைக்கலாம்.

ஒரு பாலின மீன் வளர்ப்பு

இது, அதிக வளர்ச்சி மற்றும் சிறந்த உணவு மாற்றுத்திறனைச் சார்ந்த ஆண் அல்லது பெண் மீன்களை மட்டும் கொண்ட பண்ணை முறையாகும். எடுத்துக்காட்டாக, பெண் கெண்டை, சால்மன் மற்றும் நன்னீர் ஆண் இறால் மற்றும் திலேப்பியாவை வளர்த்தால், அதிகமான உற்பத்தியை எட்டலாம். சில மீன் இனங்களில் ஆண் மீன்கள், பெண் மீன்களை விட விரைவாக விற்பனை எடையை அடையும். இத்தகைய மீன் இனங்களை ஒற்றைப் பாலின முறையில் வளர்த்தால் அதிக இலாபத்தை அடையலாம்.

இப்போது நவப் பெண் மீன் தொழில் நுட்பம் மிகத் தரமாகப் பயன்படுகிறது. இதில், பெண் மீன்களை பாலின மாற்றம் மூலம் ஆண் மீனாக மாற்றி, அனைத்து ஆண் சந்ததிகளைப் பெறலாம். இந்த உத்தியில், இள வயதிலேயே ஆண் மீன்களின் ஆணுறுப்புச் சுரப்பியை அறுவைச் சிகிச்சை மூலம் நீக்கி விட்டுப் பெண்ணினமாக மாற்றுகிறார்கள். இவை நவப் பெண் மீன்கள் எனப்படுகின்றன.

இவை வெளிப்பார்வைக்குப் பெண்ணாகவும், மரபு வழியில் ஆணாகவும் இருக்கும். சாதாரண ஆண் மீனுடன் நவப் பெண் மீன்கள் இனப்பெருக்கம் மூலம் உருவாக்கும் சந்ததிகள் அனைத்தும் ஆணாகவே இருக்கும். மாறுபட்ட பெண் மீன் உத்தியைக் கொண்டு, ஆண் நன்னீர் இறால் குஞ்சுகளை உற்பத்தி செய்யலாம். இதனால், உற்பத்தி இரண்டு மடங்காகும். உணவு மாற்றுத்திறன் மற்றும் வளர்ச்சித் திறன் சிறப்பாக இருக்கும்.

ஐ.எம்.டி.ஏ.

இது, வேறுபட்ட உணவு நிலையைக் கொண்டுள்ள உயிரினங்களை, நன்னீர் அல்லது உவர் நீரில் வளர்க்கும் பன்மடங்கு மீன் வளர்ப்பு முறையாகும். வேறுபட்ட உணவு அடுக்குகள் மற்றும் மீனினங்களைக் கொண்ட இம்முறையில், ஒன்றின் கழிவு, சத்து இடைவிளை பொருள் மற்றும் உணவுக்கழிவு மற்றொரு மீனுக்கு உணவாகவோ, சக்தியாகவோ, உரமாகவோ மீண்டும் பயன்படும்.

இதில் மாறுபட்ட மீனினங்களுக்கு இடையே சக்தி வாய்ந்த பிணைப்பு உருவாகும். ஐ.எம்.டி.ஏ. என்பது, உணவு மீன்களுடன், கரிமக் கழிவை உண்ணும் மீன்கள் மற்றும் கனிமக் கழிவை உண்ணும் நீர்வாழ் உயிரினங்களை ஒன்றாக வளர்க்கும், வளங்குன்றாச் சுற்றுச்சூழல் பொருளாதாரச் சமநிலையுள்ள உத்தியாகும்.

இந்த அமைப்பில், ஊணுண்ணி அல்லது இறாலின் உணவுச் சங்கிலி, மேல் தளத்தில் இருக்கும். இதன் மூலம் வெளியாகும் கரிம, கனிமப் பொருள்களை அடித்தளத்தில் உள்ள கடல் பாசிகள் உறிஞ்சிக் கொள்ளும். இம்முறையில் நீர் தரமாக இருக்கும். உணவின் தேவை குறையும். உணவு உற்பத்தி அதிகமாகும். உணவு நிலையின் பயனையும் கூட்டலாம்.

நிலையான சுற்றுச்சூழலை, பொருளாதார அமைப்பை உருவாக்கலாம்.  பொருளாதாரம் அதிகமாகும். அனைத்து உணவு நிலைகளையும் திறமையாகப் பயன்படுத்தலாம். சூழ்நிலை அமைப்பில் எதிர் விளைவுகள் ஏற்படுவது குறையும்.

இயற்கை முறை மீன் வளர்ப்பு

இது, சூழல் மேலாண்மை மற்றும் உற்பத்தியைப் பெருக்கும் முறையாகும். இதன் மூலம் உயிரியல் இயக்கம் மற்றும் சுழற்சியைக் கூட்டலாம். குறைந்த முதலீடு மற்றும் முழு நிர்வாகம் மூலம், இயற்கையுடன் இணைந்த மீன் வகைகளின் உற்பத்தியைப் புதுப்பித்துப் பெருக்கலாம்.

இதன் முக்கியக் குறிக்கோள், உயிரின நலத்தை மேம்படுத்தல், நிலம், நீர் மற்றும் விலங்குகளுக்கு இடையிலுள்ள தொடர்பின் மூலம் உற்பத்தியைப் பெருக்குதல் மற்றும் நிலையான சமூக, பொருளாதார, சுற்றுச்சூழல் மிக்க உற்பத்தி அமைப்பை ஏற்படுத்துவதாகும்.

சூழல் பாதிப்புகளைக் கண்காணித்தல், பல்லின வளர்ப்பைப் பயன்படுத்தல், இயற்கைத் தாவரங்களையும், பண்ணைகளையும் இணைத்தல், உள்நாட்டு மீனினங்களைப் பயன்படுத்துதல், செயற்கை உற்பத்திப் பொருள்கள் பயன்பாட்டைத் தவிர்த்தல் போன்ற கருத்துகளை அடிப்படையாகக் கொண்டு செயல்படும்.

நன்மைகள்: நிலையான மற்றும் வளங்குன்றா மீன் உற்பத்திப் பண்ணைகள். சுற்றுச்சூழல் பாதுகாப்பு. அதிகச் சத்துப் பாதுகாப்பு. வேலை வாய்ப்பைப் பெருக்குதல். சிறந்த உணவை உருவாக்குதல். நோய் எதிர்ப்புத் திறனைப் பெருக்குதல். குறைந்த முதலீடு.

வளர்ச்சியை ஈடு செய்யும் உத்தி

இம்முறையில், குறிப்பிட்ட வளர்ச்சி நிலையில், மற்ற சாதாரண மீன்களின் வளர்ச்சியை விட அதிக வேகமாக மீன்கள் வளரும். இது, போதிய சத்துள்ள உணவை அளிப்பதன் மூலம் ஏற்படுகிறது. இம்முறையில் மீனுக்குத் தரப்படும் உணவின் அளவு முதலில் குறைவாகவும் பின்பு அதிகமாகவும் இருக்கும். இதனால் அதிக வளர்ச்சியை அடையும்.

எடுத்துக்காட்டாக மூன்று வாரம் வரையில் தேவையை விடக் குறைவான உணவும், பின்பு மூன்று வாரத்துக்குத் தேவையை விட அதிகமான உணவும் தரப்படும். இந்த முறையில் வளரும் மீன்கள், சாதாரண முறையில் வளரும் மீன்களை விட அதிக எடையை அடையும்.

நன்மைகள்: அதிக வளர்ச்சி மற்றும் உற்பத்தி. கூடுதல் பிழைப்புத் திறன். அதிக நோயெதிர்ப்புத் திறன். குறைந்த காலத்தில் விற்பனை எடையை அடைதல்.

விவசாயிகள் செயல்படுத்தினால் மட்டுமே ஒரு தொழில் நுட்பம் பயனுள்ளதாக அமையும். இங்கே கூறியுள்ள புதிய தொழில் நுட்பங்களும், மீன் வளர்ப்பு முறைகளும், மீன் வளர்ப்பில் சிறந்த விளைவுகளை உருவாக்கி, வருவாயைப் பெருக்கும் நோக்கில் கொண்டு வரப்பட்டவை. சூழலைப் பாதிக்காமல், திடமான உயிரிகளை அதிக வளர்ச்சியுடன் உற்பத்தி செய்வதே இந்த உத்திகளின் முக்கிய நோக்கமாகும்.


PB_EZHILMATHI

செ.எழில்மதி,

பா.அகிலன், டக்டர் எம்.ஜி.ஆர். மீன்வளக் கல்லூரி,

பொன்னேரி, திருவள்ளூர் மாவட்டம்.

Share:

  சந்தேகமா? கேளுங்கள்!  

 

இன்னும் படியுங்கள்!

Enable Notifications OK No thanks