My page - topic 1, topic 2, topic 3

புறக்கடையில் கினிக்கோழி வளர்ப்பு!

செய்தி வெளியான இதழ்: 2014 ஆகஸ்ட்.

மீப காலங்களில் கினிக்கோழிகள் இறைச்சிக்காகவும் முட்டைக்காகவும் அதிகளவில் வளர்க்கப்படுகின்றன. இவற்றின் இறைச்சி, கோழி இறைச்சியை விடச் சிவப்பாகவும் நல்ல மணத்துடனும் இருப்பதால், மக்களால் விரும்பி உண்ணப்படுகிறது. கினிக்கோழிகள் வெப்பம் மிகுந்த பகுதிகளிலும், குளிர்ந்த பகுதிகளிலும் வாழும் தன்மை மிக்கவை. மற்ற கோழிகள் பல்வேறு நோய்களுக்கு உள்ளாவது போல், கினிக்கோழிகள் நோய்களுக்கு உள்ளாவதில்லை. மேலும், மற்ற கோழியினங்களைக் காட்டிலும் கினிக்கோழிகளில் வெளிப்புற ஒட்டுண்ணிகளின் தாக்கம் குறைவு.

கினிக்கோழிகள், மற்ற கோழிகளை விட, 8-10 டிகிரி செல்சியஸ் வெப்பத்தை அதிகமாகத் தாங்கும் ஆற்றல் படைத்தவை. அதனால், வெப்பம் மிகுந்த நம் நாட்டில் வளர்க்க ஏற்றவை. கினிக்கோழிக் குஞ்சுகள், மூச்சுத் திணறலைத் தாங்கக் கூடியவை என்பதால், மேய்ச்சலுக்காக அதிகத் தொலைவுக்கும் கொண்டு செல்லலாம். அடர் தீவனத்தை உட்கொண்டு, அதிகமாக முட்டைகளையும் இறைச்சியையும் தரும் திறன் கொண்டவை.

தீவனத்தில் உள்ள நச்சுப் பொருள்களைத் தாங்கும் தன்மை உள்ளதால், பூஞ்சைகளால் தாக்கப்பட்ட தீவனத்தைக் கூடக் கினிக்கோழிகளுக்கு உணவாகக் கொடுக்கலாம். மேலும், தீவனத்தில் உள்ள செல்லுலோஸை நல்ல முறையில் செரிக்கும் தன்மை கினிக் கோழிகளுக்கு உண்டு. கினிக்கோழி இறைச்சியில் மற்ற கோழியினங்களின் இறைச்சியில் உள்ளதை விட கொலஸ்ட்ரால் குறைவாகவே உள்ளது. கினிக்கோழிகளுக்கு ராணிக்கெட் தடுப்பூசியை மட்டும் போட்டால் போதும். வறட்சியான பகுதியிலும் வளரும் தன்மை இந்தக் கோழிகளுக்கு உள்ளதால், கிராமப்புறங்களில் வளர்க்க ஏற்றவை. கால்நடைகளுடன் சேர்த்து வளர்க்கலாம்.

கினிக்கோழி முட்டை ஓடு சற்றுக் கடினமானது. எனவே, போக்குவரத்தில் அதிகமாகச் சேதம் ஏற்படுவதில்லை. மேலும், இம்முட்டைகள் நாட்டுக்கோழி முட்டைகளைப் போலும், சுவையாகவும் இருப்பதால், அனைவராலும் பெரிதும் விரும்பப்படுகின்றன. நீண்ட நாட்களுக்குக் கெடாமல் இருக்கும்.

இப்படிப் பல்வேறு சிறப்பியல்களைக் கொண்ட மூன்று வகைக் கினிக்கோழிகள் இந்தியாவில் உள்ளன. பியர்ஸ், வெள்ளை, லேவண்டர் எனப்படும் இந்த இனங்கள், மார்ச் முதல் செப்டம்பர் வரையான காலத்தில் இன விருத்தியில் ஈடுபடும். ஆனால், விலங்கினப் புரதத்தை இவற்றின் தீவனத்தில் சேர்த்தால், ஆண்டு முழுவதும் இன விருத்தியில் ஈடுபடுத்தலாம். ஒரு சேவலுக்கு நான்கு அல்லது ஐந்து கோழிகள் வீதம் வைத்து இனவிருத்தி செய்யலாம். இந்திய கினிக்கோழிகள், 36 முதல் 38 வார வயதில் முட்டையிடத் தொடங்கும். ஆண்டுக்கு 60 முதல் 100 முட்டைகள் வரை இடும்.

மேம்படுத்தப்பட்ட கினிக்கோழிகள் 28 வார வயதில் முட்டையிடத் தொடங்கும். ஒரு கோழி, ஆண்டுக்கு 150 முதல் 160 முட்டைகளை இடும். முட்டையின் எடை 43 முதல் 48 கிராம் வரை இருக்கும். கினிகோழிகள் 13 வாரத்தில் 1.2 கிலோ எடையை அடையும். கினிக்கோழிக் குஞ்சு கீட் எனப்படும். ஒருநாள் குஞ்சு 16-17 கிராம் இருக்கும். கினிக்கோழிகளின் அடை காக்கும் காலம் 27 நாட்களாகும்.

பிற கோழிகளை வளர்ப்பதைப் போல, கினிக்கோழிகளையும் வீட்டின் கொல்லைப்புறத்தில் வளர்க்கலாம். இரவு நேரத்தில் இக்கோழிகள் தங்குவதற்குச் சிறிய கொட்டகை அமைத்தல் நல்லது. மரங்களில் அல்லது கூரைகளில் தங்க வைத்தால் இவற்றைப் பிடிப்பது மிகவும் கடினம்.

தீவனத்தைத் தினமும் காலையில் கொடுத்து வந்தால், இரவில் கோழிகள் வீட்டுக்கு வந்து சேரும். தீவனத்தின் புரதமும் கலோரியும் கோழிகளின் வயதுக்கு ஏற்றவாறு இருக்க வேண்டும். 6 வாரம் வரை 22% புரதமும், 7-28 வாரம் வரை 14% புரதமும், 29-64 வாரம் வரை 17-18% புரதமும் உள்ள தீவனத்தைக் கொடுக்க வேண்டும். இந்தத் தரத்திற்கு ஏற்றவாறு நவதானியங்கள், புண்ணாக்கு வகைகள், தவிடு, விலங்கினப் புரத வகைகளைத் தேவையான அளவுகளில் அரைத்துக் கொடுக்கலாம்.

பிறந்தது முதல் 8 வார வயது வரையுள்ள கினிக்கோழிக் குஞ்சுக்கு ஒரு நாளைக்கு 25 கிராம் தீவனம் கொடுக்க வேண்டும். 9-14 வார வயதுள்ள கோழிக்கு ஒரு நாளைக்கு 75 கிராம் தீவனமும், வளர்ந்த கினிக்கோழிக்கு ஒரு நாளைக்கு 100 கிராம் தீவனமும் கொடுக்க வேண்டும். அடர்தீவனச் செலவைக் குறைக்க, புல், சூபாபுல், முயல் மசால், வேலிமசால் இலைகளைத் தீவனமாகக் கொடுக்கலாம்.

கினிக்கோழிகளுக்கு நோயெதிர்ப்பு சக்தி அதிகம். இரத்தக் கழிச்சல் நோயினைத் தவிர்க்க, காக்சிடியோசிஸ் மருந்துகளைத் தீவனத்தில் சேர்க்கலாம். இரண்டு மாதத்துக்கு ஒருமுறை கினிக்கோழிகளுக்குக் குடற்புழு நீக்கம் செய்யப்பட வேண்டும். மேலும், நுண்ணுயிர்களால் ஏற்படும் நோய்களைத் தவிர்க்க நுண்மக்கொல்லியை அளிக்கலாம்.

0-7 நாள் வயதுள்ள கினிக்கோழிக் குஞ்சுகளுக்கு ஆர்டிவி-எஃப் வகை இராணிக்கெட் தடுப்பூசியையும், 8 வார வயதும் அதற்குமேல் வயதுள்ள கோழிகளுக்கு ஆர்டிவிகே வகை இராணிக்கெட் தடுப்பூசியையும் அவசியம் போட வேண்டும். இதுவரை கூறிய நுட்பங்களைக் கையாண்டு கினிக்கோழிகளை வளர்த்தால் சிறந்த பயனை அடைய முடியும்.


மருத்துவர் க.தேவகி, உதவிப் பேராசிரியை, முனைவர் பா.குமாரவேல், பேராசிரியர் மற்றும் தலைவர், வேளாண்மை அறிவியல் நிலையம், காட்டுப்பாக்கம்.

Share:

  சந்தேகமா? கேளுங்கள்!  

 

இன்னும் படியுங்கள்!

Enable Notifications OK No thanks