My page - topic 1, topic 2, topic 3

பன்றி இனப் பெருக்கப் பராமரிப்பு!

வெண்பன்றிப் பண்ணையில் நவீன இனவிருத்திப் பண்புகளைக் கையாள்வது மிகவும் முக்கியம் ஆகும்.

வெண்பன்றிகள் மூலம் நிறையக் குட்டிகளைப் பெற்று, நல்ல இலாபத்தை அடைய, சிறந்த பன்றிகளைத் தேர்வு செய்து, தரமான உணவை வழங்கி, நோயற்ற நிலையில் பேணிக் காக்க வேண்டும்.

சரியான இனவிருத்தி முறை

பன்றிப் பண்ணைகளில் வெளி இனவிருத்தி மற்றும் கலப்பின இனவிருத்தி முறையைக் கடைப்பிடித்து வருகின்றனர்.

வெளி இனவிருத்தி முறை என்பது, நெருங்கிய தொடர்பற்ற இருவகைப் பன்றிகளைச் சேர்க்கை செய்து, புதிய வம்சாவளியை உருவாக்குவது ஆகும்.

எடுத்துக் காட்டாக, நம் நாட்டுப் பன்றி யினங்களுடன் வெளிநாட்டு இனங்களான, யார்க்ஷையர், லான்ட்ரேஸ் போன்ற பன்றிகளைச் சேரவிட்டு, நம் நாட்டுப் பன்றிகளின் எடை மற்றும் உற்பத்தித் திறனைக் கூட்டலாம்.

இனவிருத்திக்கு ஏற்ற பெண் பன்றிகள்

பண்ணையில் நன்கு வளர்க்கப்படும் பெண் பன்றிகள், 75 கிலோ எடையை அடைந்ததும், அவற்றைப் பிரித்து மேய்ச்சல் முறையில் வளர்க்க வேண்டும்.

பத்து மாத வயதை அடைந்த பெண் பன்றி, இரண்டாம் முறை சினைப் பருவத்துக்கு வரும் போது இனச்சேர்க்கை செய்ய வேண்டும்.

ஏனெனில், முதல் சினைப் பருவத்தில், கரு முட்டைகள் குறைவாக இருக்கும். ஆனால், இரண்டு, மூன்றாம் பருவங்களில் கரு முட்டைகள் உற்பத்தி அதிகமாக இருக்கும்.

பொதுவாக, 90-100 கிலோ எடையுள்ள இளம் பெண் பன்றிகளை இனச் சேர்க்கை செய்ய வேண்டும்.

சினைப்பருவம்

பெண் பன்றியுடன் கிடாப் பன்றியைச் சேர விடும் நேரமே சினைப் பருவம் எனப்படுகிறது.

இளம் பெண் பன்றிகள் 7-8 மாதங்களில் சினைக்குத் தயாராகி விடும். ஆனால், பத்து மாதங்கள் கழித்து இனச் சேர்க்கைக்கு விடுவதே மிகவும் நல்லது.

ஏனெனில், அப்போது தான் இனப்பெருக்க உறுப்புகள் நன்கு வளர்ந்திருக்கும். ஆனால், நாட்டுப் பன்றிகள், 1.5-2 வயதில் தான் சினைக்கு வருகின்றன.

பெண் பன்றிகளில் சினைப் பருவம், 2-3 நாட்கள் வரை, அதாவது, 40-65 மணி நேரம் வரை இருக்கும்.

சினைக்கு வந்த இரண்டாம் நாளில், முதல் முறையாக இனச் சேர்க்கைக்கு விட வேண்டும்.

அடுத்து, பன்னிரண்டு மணி நேரம் கழித்து, மீண்டும் இனச் சேர்க்கை செய்வது மிகவும் சிறந்தது.

சினைப்பருவ அறிகுறிகள்

பெண் பன்றிகள் 21 நாட்களுக்கு ஒருமுறை சினைப் பருவத்துக்கு வரும். அதாவது, மூன்று வாரங்களுக்கு ஒருமுறை சினை அறிகுறிகளை வெளிக் காட்டும்.

பெண் பன்றிகள் அமைதியின்றி இங்குமங்கும் அலையும், கத்தும். பெண் உறுப்பு தடித்தும் சிவந்தும் இருக்கும். மற்ற பன்றிகள் மீது தாவ முயலும்.

பிறப்பு உறுப்பில் இருந்து கண்ணாடி போன்ற திரவம் வடியும். சரியாக உண்ணாது. அடிக்கடி சிறுநீர்க் கழிக்கும்.

பெண் பன்றியின் முதுகில் கையை வைத்து அழுத்தினால், அது அப்படியே நிற்கும்.

மேலும், தனது காதுகளை விறைப்பாக வைத்திருக்கும். இதுவே, இனச் சேர்க்கை செய்ய சரியான நேரம். இனச் சேர்க்கை அமைதியான சூழலில் நடக்க வேண்டும்.

சினைப்பருவப் பெண் பன்றியை, காலை நேரத்தில் தனியறையில் விட்டு, அத்துடன் சிறந்த கிடாப் பன்றியை விட வேண்டும்.

இனச் சேர்க்கை முடிந்ததும் அவற்றைத் தனித்தனியே பிரித்து விட வேண்டும்.

அடுத்து, மாலை நேரத்தில் அல்லது மறுநாள் காலையில் மீண்டும் இனச் சேர்க்கைக்கு விட வேண்டும்.

இரண்டு மாதங்களுக்குப் பிறகு, பெண் பன்றியின் வயிறு பெருத்துக் கீழிறங்கி இருக்கும். மடிக் காம்புகளும் பெருத்து இருக்கும்.

பெண் பன்றியின் சினைக்காலம் சராசரியாக 114 நாட்களாகும். அதாவது, மூன்று மாதம், மூன்று வாரம், மூன்று நாட்கள்.

இதை வைத்துச் சினைப் பன்றி ஈனும் நாளை அறிய முடியும். எடுத்துக் காட்டாக, ஜனவரி 1 இல் இனச் சேர்க்கை செய்யப்பட்ட பன்றி ஏப்ரல் 24 ஆம் தேதி குட்டிகளை ஈனும்.

அதாவது, இனச் சேர்க்கை நாளிலிருந்து 114 நாட்களைக் கூட்டிக் கொள்ள வேண்டும். பெண் பன்றிகள் சினையாகாத நிலையில், 18-24 நாட்களில் மீண்டும் சினைக்கு வரும்.

இனச் சேர்க்கை நாள், ஈனும் நாள், குட்டிகளைப் பிரிக்கும் நாள், மீண்டும் இனச் சேர்க்கை செய்யும் நாள் போன்ற, இனப்பெருக்கப் பராமரிப்பு விவரங்களைக் குறிப்பேட்டில் பதிவு செய்து வைப்பது நல்லது.

எடுத்துக் காட்டாக, இனச் சேர்க்கை செய்த பன்றியைக் குறிப்பேடு பதிவு மூலம், அடுத்த பருவத்தைக் கவனித்து வர வேண்டும்.

ஒரு பன்றி 3-4 முறை தொடர்ந்து கருவுறாமல் பருவத்துக்கு வந்தால், அதைக் கால்நடை மருத்துவரிடம் காட்டி சிகிச்சை அளிக்கலாம் அல்லது பண்ணையில் இருந்து நீக்கி விடலாம்.

ஈன்ற பன்றியை மீண்டும் இனச்சேர்க்கை செய்யும் காலம்

குட்டிகளை ஈன்ற பெண் பன்றி 2-4 நாட்களில் மீண்டும் சினைக்கு வரும். அப்போது சேர்க்கைக்கு விடக்கூடாது.

பொதுவாக நான்காம் வாரத்தில், தாயிடமிருந்து குட்டிகளைப் பிரிக்கும் வழக்கம் உள்ளது.

அதைத் தொடர்ந்து, 6-10 நாட்களில் மீண்டும் சினைக்கு வரும். அப்போது இனச் சேர்க்கை செய்வது நல்லது.

ஒரே இனத்தைச் சேர்ந்த தாய்க்குப் பிறந்த பெண் பன்றிகளை, வேறொரு தாய்க்குப் பிறந்த ஆண் பன்றியுடன் இனச் சேர்க்கைக்கு விட வேண்டும்.

வெளியில் இருந்து பன்றிகளை வாங்கும் போது, பதிவேடுகளைச் சரிபார்த்து, வெவ்வேறு வம்சாவளியில் பிறந்த ஆண், பெண் பன்றிகளை வாங்க வேண்டும்.

ஏனெனில், நெருங்கிய தொடர்புள்ள ஆண், பெண் பன்றிகளை இனவிருத்திக்கு விட்டால், பிறக்கும் குட்டிகளில் பல்வேறு குறைகள் ஏற்படலாம்.

வெண்பன்றி வளர்ப்புக்கால அட்டவணை

பருவ வயது: 6-7 மாதங்கள்.

சினைக்குத் தயாராகும் வயது: 9 மாதங்கள்.

சினைக்குத் தயாராகும் போது எடை: 70-90 கிலோ.

பருவச்சுழற்சி: 19-23 நாட்கள்.

சரியான சினைச் சேர்க்கை: 12-14 மணி இடைவெளியில் இருமுறை.

சினைக்காலம்: 114 நாட்கள்.

பிறக்கும் குட்டிகள்: ஓர் ஈற்றில் 10-12.

எல்லாக் குட்டிகளையும் ஈன ஆகும் காலம்: 2-6 மணி நேரம்.

ஓராண்டில் ஈனுதல்: இரண்டு முறை.

இனவிருத்திக்கு உதவும் காலம்: 8-10 ஆண்டுகள்.

ஈற்றுக்குப் பிறகான சினைப்பருவம்: 35 நாட்கள் கழித்து.

பாலூட்டும் காலம்: 56 நாட்கள்.

தாயிடமிருந்து குட்டிகளைப் பிரித்தல் : 2 மாதம் கழித்து.

விற்பனை வயது: 6-8 மாதங்கள்.

விற்பனை எடை: 70-80 கிலோ.

ஆண்மை நீக்கக் காலம்: 3-4 மாதங்களில்.

கோரைப்பல்லை வெட்டும் காலம்: பிறந்த சில மணி நேரங்களில்.

குடற்புழு நீக்க மருந்தளித்தல்: தாயிடமிருந்து பிரித்து இருவாரம் கழித்து.


முனைவர் பா.குமாரவேல், முதல்வர், கால்நடை மருருதுவக் கல்லூரி, உடுமலைப்பேட்டை, திருப்பூர் மாவட்டம்.

Share:

  சந்தேகமா? கேளுங்கள்!  

 

இன்னும் படியுங்கள்!

Enable Notifications OK No thanks