பொலிக் காளைகளில் தாதுப்புகளின் முக்கியத்துவம்!

பொலிக் காளை polik kaalai

விலங்குகளின் இனப்பெருக்கச் செயல்திறன் என்பது, மரபியல், சத்து மேலாண்மை, சுற்றுச்சூழல் போன்ற பல்வேறு காரணிகளைச் சார்ந்துள்ளது (குமார், 2003). சரியான தீவன மேலாண்மை என்பது, இனப்பெருக்கக் காளைகளுக்கு மிகவும் முக்கியம்.

இனவிருத்திக் காளைகளின் உடல் நலத்தைப் பேணவும், விந்து உற்பத்தியைக் கூட்டவும், அவற்றின் தீவனத்தில் மிகவும் அவசியமான சத்துகள் இருக்க வேண்டும். அந்தச் சத்துகள் முறையே, ஆற்றல், புரதம், நீர், வைட்டமின், தாதுப்புகள் என்று பகுக்கப்பட்டு உள்ளன.

இவற்றில் தாதுப்புகள் மிகமிக முக்கியமானவை. நுண் தாதுப்புகள், காளைகள் இனப்பெருக்கத் திறனில் முக்கியப் பங்கு வகிக்கின்றன. தாதுப்புகள் குறைபாடு, உடல் கட்டமைப்பு மற்றும் நோய் எதிர்ப்பாற்றலில் குறைபாட்டை ஏற்படுத்தி;

வளர்ச்சி, உற்பத்தி மற்றும் இனப்பெருக்கச் செயல்திறனைப் பாதிக்கச் செய்யும். உடல் பராமரிப்பு, வளர்சிதை மாற்றம் மற்றும் வளர்ச்சியில், தாதுப்புகள் முக்கியப் பங்கு வகிக்கின்றன.

நுண் தாதுப்புகள் கால்நடைகளின் தீவனத்தில் ஒரு கிலோவுக்கு 100 மி.கி. வீதம் இருக்க வேண்டும் (மெக்டுவல் 1992 மற்றும் என்.ஆர்.சி.1996). இவை ஒரு கிலோவுக்கு 50 மி.கி. வீதம் கால்நடைகளின் உடலில் உள்ளன.

காளையின் பராமரிப்புத் தேவையை விட, இனப்பெருக்கம் மற்றும் நோயெதிர்ப்பு சக்திக்குத் தாதுப்புகளின் தேவை அதிகம்.

துத்தநாகம், செம்பு, மாங்கனீசு, கோபால்ட், இரும்பு, அயோடின் ஆகியன, பல்வேறு நொதிகள் மற்றும் புரதச் செயல் திறனில் முக்கியப் பங்கு வகிக்கின்றன. அதனால், இவை காளைகளின் இனப்பெருக்கத் திறனை அதிகரிக்க மிகவும் அவசியமாகும்.

தற்காலச் சூழ்நிலையில், கால்நடைகளுக்கு வழங்கப்படும் பசுந்தீவனங்கள், அடர் மற்றும் உலர் தீவனங்களில், நுண் தாதுப்புகளின் அளவு குறைவாக உள்ளது.

நிலப்பரப்பு மற்றும் வேளாண் காலநிலைப் பகுதிகளைப் பொறுத்தவரை, இந்தியா மிகவும் வேறுபட்டுள்ளது. எனவே, குறிப்பிட்ட அளவுள்ள தாதுப்புகளை எல்லாப் பகுதிகளுக்கும் ஏற்றதாகக் கொடுக்க முடியாது. இடத்துக்கு இடம் ஏற்படும் பற்றாக்குறைக்கு ஏற்ப, நுண் தாதுப்புகளைத் தீவனத்தில் சேர்ப்பது அவசியம்.

துத்தநாகம்

நோயெதிர்ப்பு ஆற்றல் மற்றும் சில குறிப்பிட்ட இனப்பெருக்க இயக்குநீர் உருவாவதில் துத்தநாகம் முக்கியப் பங்கு வகிக்கிறது. டெஸ்ட்டோஸ்டிரான், தீவனத்தில் உள்ள துத்தநாகத்தின் அளவைப் பொறுத்து அமைகிறது.

துத்தநாகம், விதைப்பைகள் செயல்பாட்டை அடினைல் சைக்கிலேஸ் அமைப்பு மூலம் செயல்படுத்தி, டெஸ்ட்டோஸ்டிரான் சுரப்பில் ஈடுபடுகிறது. இது, ஹைப்போதலாமஸ் பிட்யூட்டரி இனப்பெருக்க அச்சு இயல்பாகச் செயல்பட மிகவும் தேவை.

ஏனெனில், FSH, LH, ப்ரோலாக்டின் (prolactin) ஆகியவற்றின் உற்பத்தி மற்றும் சுரப்பில், துத்தநாகம் முக்கியப் பங்கு வகிக்கிறது. இது, டெஸ்ட்டோஸ்டிரான் உற்பத்தியை ஒழுங்குபடுத்துகிறது.

காளைகளில் துத்தநாகக் குறைபாடு, விதைப்பை வளர்ச்சி, விந்தணு உற்பத்தி, விந்தின் தரம் ஆகியவற்றைக் குறைக்கிறது. காப்பர், கேட்மியம், கால்சியம், இரும்பு ஆகிய கனிமங்கள், குடலில் துத்தநாகத்தின் உறிஞ்சுதலைக் குறைப்பதுடன், இதன் வளர்சிதை மாற்றத்தில் பாதிப்பை ஏற்படுத்துகிறது.

துத்தநாகத்தின் தேவை, கால்நடைகளின் தீவனத்தில் 40 பி.பி.எம். ஆக (என்.ஆர்.சி.2001) உள்ளது. இது, 500 பி.பி.எம்.க்கு அதிகமானால், கால்நடைகளுக்கு நச்சுத் தன்மையை ஏற்படுத்தும்.

துத்தநாகத்தின் அளவு இரத்த பிளாஸ்மாவில் இருப்பதைவிட 10 முதல் 15 மடங்கு விந்து பிளாஸ்மாவில் அதிகமாக உள்ளது (டாமி மற்றும் பலர் 2001 – ராய் 2006). துத்தநாகக் குறை, தரம் குறைந்த விந்தணுவை உருவாக்கும்.

செலினியம்

இது, விந்தணு உற்பத்திக்கு அவசியமாகும். மேலும், குளுட்டதையோன் பெராக்ஸிடேஸ், தைரிடாக்சின் ரிடக்டேஸ் போன்ற செலினோ புரதங்களின் முக்கியக்கூறாக உள்ளது (நோபிலாங் மற்றும் குழுவினர் 2011). ஆக்ஸிஜனேற்ற எதிர்ப் பொருள்களிடமிருந்து விந்தணுக்களைப் பாதுகாப்பதில் முக்கியப் பங்கு வகிக்கிறது.

தீவனத்தில் 0.1 பி.பி.எம். அளவில் செலினியம் இருக்க வேண்டும். எப்.டி.ஏ. 1987 இன்படி, நோயெதிர்ப்புத் தன்மைக்கு 0.3 பி.பி.எம். ஆகச் செலினியம் இருக்க வேண்டும். தீவனத்தில் 5 பி.பி.எம்.க்கு மேல் இருந்தால் நச்சாக அமையும்.

சோடியம் செலினேட், விந்தின் அளவை அதிகரித்தல், விந்தணுக்களின் அசைவு, அடர்த்தி போன்றவற்றை அதிகரித்து, விந்தின் தரத்தைச் சீர்படுத்துகிறது (மலாய் மற்றும் குழுவினர் 2009). ஈஸ்ட் ஏற்றப்பட்ட செலினியம், செலினேட்டை விட விந்துப்பையின் அளவு அதிகரித்தல் மற்றும் டெஸ்ட்டோஸ்டிரான் அளவு அதிகரித்தலில் முக்கியப் பங்கு வகிக்கிறது.

மாங்கனீசு

இது, காளைகளின் இனப்பெருக்கத்தில் முக்கியப் பங்கு வகிக்கிறது. பசுந்தீவனங்களில் மாங்கனீசு போதுமான அளவில் உள்ளது. ஆனால், அடர் தீவனங்களில் அதன் அளவு குறைந்தே காணப்படுகிறது (பந்தேரி மற்றும் குழுவினர் 2014). ஊறுகாய்ப் புல்லை விட வைக்கோலில் மாங்கனீசு மிகவும் அதிகமாக உள்ளது என்று ஆய்வுகள் கூறுகின்றன (பல்ஸ் 1994).

இது, கொழுப்பு உற்பத்திக்கு மிகவும் அவசியம் (கப்பல் – ஜடன்வர் 1999). மேலும், அப்படி உற்பத்தியான கொழுப்பு இறுதியில் ஸ்டீராய்டுகள் முறையில் ஈஸ்ட்ரோஜன், ப்ரொஜெஸ்டரான் மற்றும் டெஸ்டோஸ்டிரான் உற்பத்திக்குத் தேவை.

போதியளவு ஸ்டீராய்டுகள் உற்பத்தி இல்லாத போது, இனப்பெருக்கக் கண நீர்களின் அளவு குறைந்து காணப்படும். அது, குறைவான விந்தணு உற்பத்திக்கு வழி வகுக்கும். ஒரு கிலோ தீவனத்தில் 40 மி.கி. வீதம் மாங்கனீசு இருக்க வேண்டும் (என்.ஆர்.சி. 1996). அதன் அளவு 1000 பி.பி.எம்-ஐத் தாண்டினால் அது நச்சாகி விடும்.

இது, பருவமடைதல் சார்ந்த இயக்கு நீர்களின் அளவை அதிகப்படுத்தும். காளையின் விந்தணுவை ஆக்சிஜனேற்ற அழுத்தத்துக்கு எதிராகப் பாதுகாக்கவும், கரு முட்டையோடு விந்தணுவானது கருவுறவும், இது, மிக முக்கியமானதாக அமைகிறது.

தாமிரம்

இது, விந்து செல் பாதுகாப்புக்குத் தேவையான சூப்பர் ஆக்சைடு டெஸ்மியூட்டைஸ் என்னும் நொதிக்கு மிகவும் முக்கியம். மேலும், இது பிட்யூட்டரி சுரப்பிலிருந்து வரும் லூட்டினைசிங் கணநீர் வெளியேற்றத்துக்கு அவசியம் தேவைப்படுகிறது (ஸ்லிவ்கோவா மற்றும் குழுவினர் – 2009).

பெண் இனப்பெருக்கப் பாதையில் விந்தணு செல்லும் போது, அதைச் சுற்றியுள்ள தேவையில்லாத கொழுப்புப் படலங்களை அகற்றத் தாமிரம் தேவைப்படுகிறது (அகர்வால் மற்றும் பிரபாகரன் 2005).

தாமிரக் குறைபாடு இனச் சேர்க்கையில் ஈடுபடுவதற்கான ஆவலைக் குறைக்கிறது. மேலும், விந்தின் தரத்தையும் குறைக்கிறது. இதன் குறைபாடு விதைப் பையில் பாதிப்பை ஏற்படுத்தி, காளைகளில் மலட்டுத் தன்மையைக் கூட ஏற்படுத்தக் கூடும். மாடுகளின் தீவனத்தில் தாமிரத்தின் அளவு 10 பி.பி.எம். (என்.ஆர்.சி. 1996) இருக்க வேண்டும்.

இருப்பினும், தாமிரத்தின் அளவு இனத்துக்கு இனம் மாறுபடும் (முள்ளீஸ் மற்றும் குழுவினர் 2003 மற்றும் வார்டு மற்றும் குழுவினர் 1995). ஒரு கிலோ தீவனத்தில் 100 மி.கி.க்கு மேல் தாமிரம் இருப்பின் அது நச்சுத் தன்மையை ஏற்படுத்தும்.

தாமிரம் பிற தாதுகளுடன் குறிப்பிட்ட விகிதத்தில் இருக்க வேண்டும். எடுத்துக்காட்டாக துத்தநாகம் மற்றும் தாமிரம் 4:1, தாமிரம் மற்றும் மாலிப்டினம் 6:1 மற்றும் இரும்புச்சத்து, தாமிரம் 40:1 என்னும் அளவில் இருக்க வேண்டும் (ஹஜ்ஜின்ஸ் 2000).

எனவே, தாமிரத்தைப் பிற தாதுகளுடன் சரியான விகிதத்தில் கலந்து அளிப்பதன் மூலம், தரமான விந்தணுக்களை உற்பத்தி செய்ய இயலும். கோடையில் கால்நடைகளின் உடலில் தாமிரத்தைத் தக்க வைத்துக் கொள்ளும் ஆற்றல் குறைகிறது. எனவே, தாமிரத்தைக் கூடுதலாக அளிப்பது அவசியமாகிறது.

அயோடின்

அயோடின் குறையால், பருவ முதிர்ச்சி அடைதலில் தாமதம், கருத்தரிக்காமை, பாலின ஈர்ப்புக் குறை, விந்தணுத் தரத்தில் குறைபாடு ஆகியன ஏற்படும். இது, தைராக்ஸின் என்னும் இயக்குநீர் உருவாகத் தேவைப்படுகிறது.

தீவனத்தில் அயோடின் 0.25 பி.பி.எம். இருக்க வேண்டும் (என்ஆர்சி 2001). இந்த அளவு 50 பி.பி.எம்-ஐத் தாண்டினால், அது நச்சாகி விடும்.

கோபால்ட்

இது, உயிர்ச்சத்து பி12 இன் முக்கியக் கூறாகும். தைமின் உற்பத்திக்கு கோபால்ட் அவசியமாகும். தைமின் டி.என்.ஏ. உற்பத்திக்கு அவசியமாகும். விலங்குகளின் வளர்ச்சியிலும் இனப்பெருக்கத்திலும் கோபால்ட் முக்கியப் பங்கு வகிக்கிறது.

ஒரு கிலோ தீவனத்தில் 0.1 மி.கி. கோபால்ட் வீதம் இருக்க வேண்டும் (என்ஆர்சி 2001). இது, 10 மில்லி கிராமைத் தாண்டினால் அது நச்சாகி விடும்.

இரும்புச்சத்து

இது, காளைகளின் இனப்பெருக்க அமைப்பின் உயிரணுக்கள் மற்றும் திசுக்களில் இடம் பெற்றுள்ளது. வளரும் விந்தணுக்களுக்கு இரும்புச்சத்து மிகவும் அவசியமாகிறது.

இது, விதைப்பைத் திசுக்களுக்கு மேல், ஒரு பாதுகாப்பு அடுக்காகவும் செயல்படுகிறது (வாய்ஸ் மற்றும் பலர் 2003). இரும்புச்சத்து, கேட்டலேஸ் என்னும் நொதியின் முக்கியக் கூறாகும்.

கேட்டலேஸ் என்பது முக்கிய ஆக்சிஜனேற்ற நொதியாகும். இது, ஆர்.ஓ.எஸ். உற்பத்தியில் ஏற்றத் தாழ்வுகளைத் தடுத்து, உயிர்மக் கட்டமைப்பைப் பாதுகாக்கிறது. மேலும், H2O2 -வை ஆக்சிஜனாகவும், நீராகவும் உடைக்கிறது.

இரும்புச்சத்து, விந்தணு உருவாக்கம் மற்றும் விந்தணு வளர்சிதை மாற்றத்தை வழி நடத்துகிறது (வைஸ் மற்றும் குழுவினர் 2003).

இது, சைட்டோகிரோம் என்னும் நொதியின் முக்கியக் கூறாகும். சைட்டோகிரோம் எலக்ட்ரான் கடத்து சங்கிலியின் நொதியாகும். மேலும், விந்தணு இயக்கத்தில் முக்கியப் பங்கு வகிக்கிறது.

கால்நடைகளின் தீவனத்தில் இரும்புச் சத்தின் தேவை 50 பி.பி.எம். ஆகும் (எம்ஆர்சி 2001). அதன் அளவு 1000 பி.பி.எம். என்னும் அளவைத் தாண்டினால் அது நச்சாகி விடும். இரத்தத்தில் அதிகமாக இரும்புச்சத்து, வளர்சிதை மாற்றத்தில் கோளாறுகளை ஏற்படுத்தும்.

பொதுவாக, காளைகளின் இனப்பெருக்கத் திறனைச் சரியான நுண் தாதுப்புகள் மூலம் சமநிலைப்படுத்தலாம். அந்தத் தாதுப்புகள் மற்ற தாதுகளோடு தொடர்பில்லாமலும், அதிகமாக இல்லாமலும் இருக்க வேண்டும்.

கரிம நுண் தாதுப்புகள் சிறந்த தீர்வைத் தரும். ஏனெனில், அவை குடல் வழியே அதிகமாக உறிஞ்சப்படும்.

மேலும், அவை மற்ற தாதுகளுடன் சிறியளவில் தொடர்புடையவை. அயர்ச்சியின் போது செலினியம், தாமிரம், துத்தநாகம், மாங்கனீசு ஆகிய ஆக்ஸிஜனேற்றிகளைத் தீவனத்தில் அளித்தால், அவை, காளைகளின் உடல் நலத்தையும் கருவுறுதலையும் மேம்படுத்தும்.


பொலிக் காளை R RUTHRA KUMAR

இர.ருத்ரகுமார், .செல்வராஜு, கி.செந்தில்குமார், .பழனிசாமி, இரா.யோகேஸ்வரி, து.கோபிகிருஷ்ணன்,

கால்நடைப் பெருக்கம் மற்றும் ஈனியல் துறை, கால்நடை மருத்துவக் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையம், நாமக்கல் – 637 002.

Share:

விவசாயம் / கால்நடை வளர்ப்புக் குறித்து

சந்தேகமா? கேளுங்கள்!


இன்னும் படியுங்கள்!

Discover more from பச்சை பூமி

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading