My page - topic 1, topic 2, topic 3

சினைப் பசுக்களைக் காக்கும் சிறந்த வழிமுறைகள்!

சினைப் பசுக்கள் நம் தாய்மார்களுக்கு ஒப்பானவை. அவற்றைச் சிறந்த முறையில் வளர்த்தால் தான், நல்ல கன்றுகளை, அதிகமான பால் உற்பத்தியைப் பெற முடியும்.

சினைப் பசுக்களை உரிய முறையில் பராமரிக்கா விட்டால், குறைந்த எடையுள்ள கன்றுகள், குறைமாதக் கன்றுகள், கன்று வீசுதல்,

குறைவான பால் உற்பத்தி போன்ற விளைவுகள் ஏற்பட்டு, பெருத்த பொருளாதார இழப்பு உருவாகும்.

எனவே, சினைப் பசுக்களைப் பராமரிப்பதில் சிறந்த உத்திகளைக் கையாள வேண்டும்.

சினை ஊசியைப் போடும் போது மருத்துவர் கொடுக்கும் இரசீதைப் பத்திரமாக வைப்பதன் மூலம், பசு ஈனும் காலத்தைத் தோராயமாகத் தெரிந்து கொள்ள முடியும்.

சினை ஊசி போட்ட மூன்று மாதங்களில், கால்நடை மருத்துவர் மூலம், சினைப் பரிசோதனை செய்து சினைத் தன்மையை உறுதி செய்து கொள்ள வேண்டும்.

சினைப்பசுவை மிரட்டுதல், அடித்துத் துன்புறுத்தல் கூடாது. வெய்யிலில் அதிகத் தொலைவுக்கு நடக்க விடக் கூடாது.

கோடையில் சுத்தமான குளிர்ந்த நீரைச் சினைப் பசுக்களுக்குக் கொடுக்கலாம். நோயுற்ற மாடுகளுடன் சினைப் பசுக்களை இருக்க வைக்கக் கூடாது.

மற்ற மாடுகள் சண்டை போடாமல், நாய் போன்ற விலங்குகள் துரத்தாமல் பார்த்துக் கொள்ள வேண்டும். ஏழு மாதச் சினைப் பசுக்களைத் தனியாகப் பராமரிக்க வேண்டும்.

தொழுவத் தரை வழுக்கல் இல்லாமல் இருக்க வேண்டும். சினை மாடுகள் வழுக்கி விழுந்தால் அல்லது அடிபட்டால், கருப்பைச் சுழற்சி ஏற்படவும், சில நேரங்களில் கன்றுகள் இறக்கவும் நேரலாம்.

எனவே, தொழுவத் தரையைப் பாசி, சாணப்பற்று இல்லாமல் பார்த்துக் கொள்ள வேண்டும்.

ஈனுவதற்கு 45-60 நாட்களுக்கு முன், பாலை வற்றச் செய்ய வேண்டும்.

ஈற்றுக்கால அறிகுறிகள்

சினைப் பசுவின் இடுப்பு மற்றும் தொடைத் தசைகள் தளர்ந்து காணப்படும். வாலுக்கு அடியில் குழி உண்டாகும்.

இதைச் சட்டம் உடைதல் அல்லது தட்டு உடைதல் என்று சொல்வார்கள். இந்த அறிகுறி தென்பட்டு 24 முதல் 48 மணி நேரத்தில் கன்று பிறந்து விடும்.

சினைப் பசுவின் வெளிப்புற உறுப்பு தடித்துக் காணப்படும். கன்று பிறக்கும் வரை பிசுபிசுப்பான சளி போன்ற திரவம் வடியும். அடிக்கடி படுப்பதும் எழுவதுமாக இருக்கும்.

கன்றை ஈனும் நேரம் வந்ததும் சினைப்பசு முக்க ஆரம்பிக்கும். ஈன்ற பின் இந்நீர் தானாகவே மறைந்து விடும். மடியும் காம்புகளும் பளபளப்பாக, பெருத்துக் காணப்படும்.

சில நேரங்களில் மடியிலிருந்து சீம்பால் தானாகவே கசியும். பனிக்குடம் உடைந்த ஒருமணி நேரத்தில் ஈன வேண்டும்.

கிடேரிகள் என்றால் இரண்டு மணி நேரம் கூட ஆகலாம். அதற்கு மேலும் ஈனவில்லை என்றால் உடனே கால்நடை மருத்துவர் மூலம் சிகிச்சை யளிக்க வேண்டும்.

ஈற்றுக்குப் பின் கவனிக்க வேண்டியவை

ஈன்று 2-6 மணி நேரத்தில் நஞ்சுக்கொடி விழுந்து விடும். அப்படி விழாமல் போனால், கால்நடை மருத்துவர் மூலம் சிகிச்சை தர வேண்டும்.

மாட்டின் பின்புறத்தை பொட்டாசியம் பெர்மாங்கனேட் கலந்த நீரால் கழுவிவிட வேண்டும்.

குடிப்பதற்கு லேசான சுடுநீரைக் கொடுக்க வேண்டும். அரிசி அல்லது கோதுமைத் தவிடு மற்றும் பசுந் தீவனத்தைக் கொடுக்க வேண்டும்.

பால் உற்பத்திக்கு ஏற்ப, கலப்புத் தீவன அளவைப் படிப்படியாகக் கூட்ட வேண்டும்.

சில நேரங்களில் மடி பெருத்து நீர்க் கோர்த்து இருக்கும். இது தானாகவே மறைந்து விடும். தேவைப்படின் குளிர் ஒத்தடம் கொடுக்கலாம்.

ஈன்றதும் கன்றைப் பால் குடிக்கச் செய்வது, சீம்பாலைக் கறப்பது நஞ்சுக்கொடி தானாக விழ வழி வகுக்கும்.

கருப்பை தொடர்பான நோய்கள் வராமலிருக்கக் கொட்டில் சுத்தமாக இருக்க வேண்டும்.

பால் உற்பத்தி அதிகமுள்ள மாடுகளில் பால் சுரம் ஏற்படலாம். இதற்குக் கால்நடை மருத்துவர் மூலம் சிகிச்சை யளிக்க வேண்டும்.

சில மாடுகளில் ஈன்றதும் அல்லது ஓரிரு நாட்களில் கருப்பை வெளித் தள்ளுதல், இரத்தத்தில் கீடோன் செறிவு கூடுதல் போன்ற சிக்கல்கள் ஏற்படலாம்.

இதற்கு, கால்நடை மருத்துவர் மூலம் தகுந்த சிகிச்சை யளிக்க வேண்டும்.

கன்றை ஈன்ற 60 நாட்களுக்குப் பின் வரும் சினைப் பருவத்தில் கருவூட்டல் செய்து ஆண்டுக்கு ஒரு கன்று பிறக்க வழிசெய்ய வேண்டும்.

இந்த முறைகளைக் கடைப்பிடித்தால், சினைப் பசுக்கள் சிறந்த பாலுற்பத்திப் பசுக்களாக மாறி நமக்குப் பொருளாதார வளர்ச்சியைத் தரும்.


மருத்துவர் அ.இளமாறன், உதவிப் பேராசிரியர், கால்நடை மருத்துவக் கல்லூரி, ஒரத்தநாடு, தஞ்சை மாவட்டம்.

Share:

  சந்தேகமா? கேளுங்கள்!  

 

இன்னும் படியுங்கள்!

Enable Notifications OK No thanks