கோடையில் நாட்டுக் கோழிகள் பராமரிப்பு!

கோழி 14 fun facts about chickens 3064 2298 15bb3ad98da09dd1f07a6b80c960d60e

ழங்காலம் தொட்டே விவசாயத்துடன் கால்நடைகள் மற்றும் கோழி வளர்ப்புத் தொழில் நடந்து வருகிறது.

அதிலும், நாட்டுக்கோழி வளர்ப்பு உபரி வருமானம் தரக்கூடிய தொழிலாகச் செய்யப் படுகிறது. பெரும்பாலான மக்கள் நாட்டுக்கோழி முட்டை மற்றும் இறைச்சியை விரும்பி வாங்கி உண்கின்றனர்.

இதனால், நாட்டுக்கோழி வளர்ப்பு அண்மைக் காலத்தில், ஒரு சுய தொழிலாக மாறியுள்ளது.

பொதுவாக, நாட்டுக் கோழிகள் நோயெதிர்ப்பு சக்தி மிக்கவை தான். ஆனாலும், பல்வேறு பருவநிலை மாற்றங்களால், அவற்றின் உடல் நிலையில் மாற்றம் ஏற்பட்டு நோய்த் தொற்றுக்கு உள்ளாகின்றன.

இதிலிருந்து நாட்டுக் கோழிகளை மீட்க, வருமுன் காக்கும் நவீனப் பாரமரிப்பு முறைகளைக் கையாள வேண்டும்.

கோடையில் வெப்பநிலை அதிகமாக இருக்கும். எனவே, கோடைக் காலமான பிப்ரவரி, மார்ச், ஏப்ரல், மே ஆகிய மாதங்களில் பல்வேறு பிரச்சினைகளைப் பண்ணையாளர்கள் எதிர்கொள்ள நேர்கிறது.

அதிக வெய்யிலால் வெப்ப அயர்ச்சி மற்றும் உற்பத்தித் திறனில் பாதிப்பு ஏற்படலாம். இதனால், முட்டை உற்பத்தியும் இறைச்சி உற்பத்தியும் பாதிக்கப்படும்.

கோழிகள் இறந்தும் போகலாம். இந்நிலையில், நாட்டுக்கோழி முட்டைக்கும், இறைச்சிக்கும் போதிய விலை கிடைக்காமல் போகலாம்.

எனவே, நாட்டுக்கோழி வளர்ப்பில் கோடைக்காலக் கொட்டில் பராமரிப்பு, தீவனம், குடிநீர்ப் பராமரிப்பு மற்றும்
நோய்ப் பராமரிப்பு உத்திகளைச் சரியாகக் கடைப்பிடித்தால் பொருளாதார இழப்பைத் தவிர்க்கலாம்.

கொட்டில் பராமரிப்பு

கோழிக் கொட்டிலின் மேற்கூரை அதிக வெப்பத்தைத் தாங்கும் பொருளாக இருக்க வேண்டும். வெப்பத்தைக் கீழே இறக்காத வகையில் இருத்தல் அவசியம்.

பனையோலை, தென்னங் கீற்று ஆகியன, வெப்பத்தைக் கீழே இறக்காத தன்மை மிக்கவை. மங்களூர் ஓடு, ஆஸ்பெஸ்டாஸ் அட்டை மற்றும் துத்தநாகத் தகடுகளைக் கொண்டும் கூரை போடலாம்.

ஆனால், இவற்றைப் பயன்படுத்தும் போது, கூரையின் உயரத்தில் இருந்து 2 அடிக்குக் கீழே, கம்பி வலையால் பரண் அமைத்து, அதன்மேல் பனையோலை அல்லது தென்னங் கீற்றைப் போட வேண்டும்.

இதனால், கொட்டிலுக்குள் அதிக வெப்பம் சூழ்வதைத் தவிர்க்கலாம். கூரையில் சுண்ணாம்பைப் பூசி அல்லது அலுமினிய அட்டைகளைப் போட்டு, வெப்பத் தாக்குதலைக் குறைக்கலாம்.

வெப்பம் அதிகமாக இருக்கும் போது, கூரையின் மீது நீரைத் தெளிக்கலாம். இதைப் போலக் கோழிகள் மீதும் நீரைத் தெளிக்கலாம்.

கொட்டிலில் மின்விசிறி அல்லது நீர்ப் புகைப்பான் மூலம் வெப்பத்தைக் குறைக்கலாம்.

பக்கவாட்டில் தொங்கும் திரைகளில், பக்கச் சுவர்களில் கோணிகளைத் தொங்க விட்டு நீரைத் தெளிக்கலாம்.

ஒன்றுக்கு மேற்பட்ட கோழிக் கொட்டிலை அமைக்கும் சூழலில், அவற்றுக்கான இடைவெளி 75 முதல் 100 அடி இருப்பது நல்லது.

கொட்டிலின் இருபுறமும் உயரமான மரங்களை வளர்த்து வெப்ப நிலையைக் குறைக்கலாம்.

வளர்ந்த கோழிகளுக்கான இடவசதியை 20 சதம் கூட்ட வேண்டும். இளம் குஞ்சுகளுக்கும் இட வசதியைக் கூட்டித் தர வேண்டும்.

தீவனப் பராமரிப்பு

கலப்புத் தீவனத்தை நீரில் பிசைந்து ஈரப்பதத்தில் அளிக்க வேண்டும். இளங்காலைப் பொழுதிலும், வெய்யில் குறைந்த மாலையிலும் தீவனம் அளிக்க வேண்டும்.

வைட்டமின் மற்றும் தாதுப்புக் குறையைப் போக்க, சராசரி அளவை விட, 5-10 சதம் கூடுதலாகத் தீவனத்தில் சேர்த்துத் தர வேண்டும்.

அதைப்போல, தினமும் கால்சியம் 3.5 கிராம், பாஸ்பரஸ் 400 மி.கி. கொடுக்க வேண்டும்.

முட்டையிடும் நாட்டுக் கோழிகளுக்குத் தினமும் மாலையில் இடும் தீவனத்துடன் 2 கிராம் கிளிஞ்சலைச் சேர்த்துத் தர வேண்டும்.

ஒரு லிட்டர் நீருக்கு 30 கிராம் சமையல் சோடா வீதம் குடிநீரில் கலந்து கொடுக்க வேண்டும்.

இதைத் தீவனத்தில் சேர்த்துக் கொடுக்க நினைத்தால், ஒரு கிலோ தீவனத்துக்கு 50 கிராம் வீதம் கலந்து கொடுக்கலாம்.

குடிநீர்ப் பராமரிப்பு

கோடையில் குளிர்ந்த நீரை மட்டுமே கோழிகளுக்குக் கொடுக்க வேண்டும். தினமும் 4-5 முறை கொடுப்பது நல்லது.

நீரைக் குளிர்விக்க, குடிநீர்த் தட்டுகளில் பனிக்கட்டித் துண்டுகளைப் போட்டு வைக்கலாம்.

குழாய் வழியே குடிநீரை வழங்கும் சூழலில், குழாய்களில் வெய்யில் படும்போது நீரும் சூடாக இருக்கும். இதைத் தவிர்க்க, குடிநீர்க் குழாயை பூமிக்குள் ஆழமாகப் பதிக்கலாம்.

அல்லது குடிநீர்க் குழாயைக் கொட்டிலின் உட்புறம் வருமாறு அமைக்கலாம். நிப்பிலில் குடிநீரைத் தரும் போது, 4-5 முறை குழாயிலிருந்து நீரை வெளியேற்றி விட்டால், வெப்பம் கணிசமாகக் குறையும்.

ஒருநாள் குஞ்சுகளைத் தவிர, மற்ற அனைத்துப் பருவக் கோழிகளுக்கும் தரப்படும் குடிநீரின் வெப்பநிலை, அவற்றின் வெப்ப நிலையை விடக் குறைவாக இருக்க வேண்டும்.

பொதுவாக, 25-30 டிகிரி சென்டிகிரேடு உள்ள சராசரி வெப்ப நிலையில், 100 கிராம் தீவனத்தை உண்ணும் நாட்டுக் கோழிகள், 200-250 மி.லி. நீரைக் குடிக்கும்.

கோடையில் வெப்பநிலை 30-32 டிகிரி சென்டிகிரேடை விடக் கூடும் போது, இயல்பை விட 4 சத நீரைக் கூடுதலாகக் குடிக்கும்.

குடிநீர் சுத்தமாக இருப்பது மிகவும் முக்கியம். இதில் நுண்ணுயிர்கள், நச்சுமிகு தாதுப்புகள் இருப்பது கோழிகளின் உடல் நலத்தைப் பாதிக்கும்.

குடிநீர் மூலம் பரவும் நோய்க் கிருமிகளைக் கட்டுப்படுத்த, ஆயிரம் லிட்டர் நீருக்கு 5 கிராம் பிளீச்சிங் பௌடர்

அல்லது 10 லிட்டர் நீருக்கு ஒரு மில்லி அயோடோபார் மருந்து வீதம் கலந்து கொடுக்க வேண்டும்.

நோய்ப் பராமரிப்பு

மற்ற விலங்குகளைப் போலக் கோழிகளுக்கு வியர்வைச் சுரப்பிகள் இல்லாததால், உடலியக்க வெப்பத்தை வெளியேற்ற முடியாமல் இறந்து விடுகின்றன.

ஆனால், சுற்றுப்புற வெப்ப நிலைக்கு ஏற்ப, உடல் வெப்ப நிலையை மாற்றிக் கொள்ளும் பண்பு கோழிகளுக்கு உண்டு.

கோடை வெப்பம் 38-43.5 டிகிரி சென்டிகிரேடு வரை இருப்பதால், முட்டையிடும் கோழிகளில் உற்பத்தித் திறன் குறையும்.

மேலும், வெப்ப அயர்ச்சி மற்றும் இதர நோய்க் கிருமிகளின் பாதிப்புக்குக் கோழிகள் உள்ளாக நேரிடும்.

சுற்றுப்புற வெப்பநிலை, உடல் வெப்ப நிலையை விடக் கூடுதலாக இருந்தால், வெப்ப அயர்ச்சிக்கு உள்ளாகிக் கோழிகள் இறக்க நேரிடும்.

அதாவது, நாக்கு உலர்ந்து, இரத்த அளவு குறைந்து, இதயத் துடிப்பு மிகுந்து, இரத்த நாளங்கள் விரிந்து, இரத்தழுத்தம் குறைந்து, மூச்சுத் தினறல் ஏற்பட்டு,

நரம்பு மண்டலம், சுவாச மண்டலம் மற்றும் இரத்த ஓட்ட மண்டலம் முற்றிலும் செயலிந்து, நாட்டுக் கோழிகள் உடனடியாக இறந்து விடும்.

கடும் வெப்பத்தால், நாட்டுக் கோழிகளின் வளர்ச்சி மற்றும் முட்டையிடும் கோழிகளின் உற்பத்தித் திறன் குறைந்து விடும்.

முட்டைக்கூடு மெலிந்து சொரசொரப்பாக இருக்கும். வெள்ளைக் கழிச்சல், கோழியம்மை போன்ற தொற்று நோய்கள் அதிகளவில் தாக்கலாம் என்பதால், அவற்றுக்கான தடுப்பூசியை முன்கூட்டியே சரியான காலத்தில் போட்டு விட வேண்டும்.

இதுவரை கூறியுள்ள முறைகளைக் கோடையில் தவறாது கடைப்பிடித்தால், நாட்டுக் கோழியில் ஏற்படும் வெப்ப அயர்ச்சி மற்றும் இறப்பைக் குறைத்து, பண்ணை உற்பத்தியைப் பெருக்கலாம்.


கோழி DR.V.PALANISAMY

முனைவர் வெ.பழனிச்சாமி, மு.ச.முருகன், கால்நடை மருத்துவப் பல்கலைக் கழகப் பயிற்சி மற்றும் ஆராய்ச்சி மையம், இராஜபாளையம், விருதுநகர் – 626 117.

Share:

விவசாயம் / கால்நடை வளர்ப்புக் குறித்து

சந்தேகமா? கேளுங்கள்!


இன்னும் படியுங்கள்!

Discover more from பச்சை பூமி

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading