ஊட்டம் மிகுந்த மரவகைத் தழைகள்!

மரவகை kalyana murungai

செய்தி வெளியான இதழ்: 2017 ஆகஸ்ட்.

விவசாயத்தின் முக்கிய அங்கமாகக் கால்நடைகள் விளங்குகின்றன. எனினும், கால்நடைகளுக்குத் தேவையான சத்துகள் போதியளவில் கிடைப்பதில்லை. சத்துப் பற்றாக்குறையைப் போக்க, ஒருங்கிணைந்த பண்ணையம் சிறந்த வழியாக அமைகிறது. ஒருங்கிணைந்த பண்ணையில் மரவகைத் தீவனப் பயிர்கள் முக்கியப் பங்கு வகிக்கின்றன.

தீவனப்பயிர் உற்பத்திக்கான இடப்பற்றாக்குறை ஏற்படும் போது மரவகைத் தீவனப் பயிர்கள் கால்நடைகளுக்கான சத்துப் பற்றாக்குறையை நிவர்த்தி செய்வதில் முக்கியப் பங்கு வகிக்கின்றன. மரவகைத் தீவனப் பயிர்களான அகத்தி, சூபாபுல், கிளைரிசிடியா ஆகியன பயறுவகை குடும்பத்தைச் சார்ந்தவை.

எனவே, இவ்வகை மரங்கள் வளிமண்டல நைட்ரஜனை ஈர்த்து வேர் முடிச்சுகள் மூலம் மண்ணில் நிலை நிறுத்துகின்றன. இவ்வகை மரங்களிலிருந்து ஒன்பது மாதம் கழித்து இலைகளை அறுவடை செய்ய இயலும். பொதுவாக மரத்தழைகள் கலப்புத் தீவனத்துக்கு மாற்றாகப் பயன்படுகின்றன.

பயறுவகை மரங்களின் 9-12 கிலோ தழைகள் 2.5-3.0 கிலோ கலப்புத் தீவனத்துக்குச் சமமாகும். மரவகைத் தழைகளில் உள்ள சத்தைப் பற்றி அறிந்து கொண்டால், கலப்புத் தீவனத்தின் அளவைக் குறைத்துக் கொடுக்கலாம்.

மர வகைகள்

சூபாபுல்: புரதம்: 21 சதம்,
அகத்தி: புரதம்: 22 சதம்,
கல்யாண முருங்கை: புரதம்: 26 சதம்,
கிளைரிசிடியா: புரதம்: 22 சதம்,
கருவேல்: புரதம்: 12 சதம்,
வெள்வேல்: புரதம்: 14 சதம்,
குடைவேல்: புரதம்: 9.6 சதம்.

பொதுவாக, சூபாபுல், அகத்தி போன்ற மரத்தழைகளில் 20-25 சதவிகிதம் புரதச்சத்து உள்ளது. மரத்தழைகள் மற்ற பசுந்தீவனங்களைக் காட்டிலும் சத்து மிகுந்தவை. இந்தத் தழைகளில் புரதச்சத்து அதிகமாக இருப்பதால் இவற்றை நார்ச்சத்து மிகுந்த வேளாண் கழிவுகளான, வைக்கோல், சோளத்தட்டை, நிலக்கடலைக் கொடி, கேழ்வரகுத் தாள், உளுந்து மற்றும் பச்சைப்பயறு செடிகளுடன் கலந்து கால்நடைகளுக்கு அளிக்கலாம். இதனால், கால்நடைகளில் சத்துப் பற்றாக்குறை தீர்வதுடன், அவற்றின் தீவனம் உண்ணும் திறனும் அதிகரிக்கிறது.

பொதுவாக ஆடுகளுக்கு மரவகைத் தீவனங்கள் மிகவும் அவசியமாகும். குறிப்பாக, வெள்ளாடுகள் பல்வகைத் தீவனப் பயிர்களை விரும்பி உண்ணுகின்றன. எனவே, மரவகைத் தீவனப் பயிர்கள் அவற்றின் தீவனக் கலவையில் இருப்பது மிகவும் அவசியமாகும். குறைந்தது அவற்றின் தீவனக் கலவையில் 20 சதம் மரத்தழைகள் இருக்க வேண்டும்.

இதனால், ஆடுகளின் வளர்ச்சியும் உற்பத்தித் திறனும் அதிகரிக்கின்றன. மேலும், தீவனக் கலவையில் 20 சதம் மரத்தழைகளைச் சேர்ப்பதன் மூலம், வளரும் கன்றுகளின் வளர்ச்சி, 60 சதம் வரை அதிகரிக்கிறது.

மரத்தழைகளில் உள்ள அதிகப் புரதச்சத்தால் கால்நடைகள் இவற்றை உண்ணத் தயங்கும். இதைத் தவிர்க்க, மரத்தழைகளை 12 மணிநேரம் வாட வைத்துக் கொடுக்க வேண்டும். இந்தத் தழைகளில் 2 சத உப்புக் கரைசலைத் தெளிக்க வேண்டும். இரண்டு சத வெல்லக் கரைசலை ஓரிரு நாட்கள் தெளித்து வைத்து, பிறகு இட்டால், கால்நடைகளின் உண்ணும் திறனை அதிகரிக்க இயலும்.

மேலும், மரத்தழைகளைச் சிறுசிறு துண்டுகளாக வெட்டி, கால்நடைகள் விரும்பி உண்ணும் மற்ற தீவனப் பயிர்களுடன் கலந்து அளிக்க வேண்டும். இந்த முறைகள் மூலம், கால்நடைகள் மரத்தழைகளை உண்ணும் திறனை அதிகரிக்கலாம்.

எனவே, வேளாண் பயிர்களுக்கு அல்லது மரவகைப் பயிர்களுக்கு இடையே, தீவன மரங்களான, அகத்தி, சூபாபுல் போன்ற மரங்களை வளர்த்தால், கால்நடைகளின் சத்துப் பற்றாக்குறையைப் போக்கி அதிக இலாபம் ஈட்ட முடியும்.


மரவகை SUGANTHI e1629915824578

முனைவர் மு.சுகந்தி, முனைவர் ப.சுரேஸ் சுப்பிரமணியன், முனைவர் ஹ.கோபி, கால்நடை அறிவியல் முதுகலை ஆராய்ச்சி நிலையம், காட்டுப்பாக்கம், காஞ்சிபுரம் – 603 203.

Share:

விவசாயம் / கால்நடை வளர்ப்புக் குறித்து

சந்தேகமா? கேளுங்கள்!


இன்னும் படியுங்கள்!

Discover more from பச்சை பூமி

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading