கறவை மாடுகளில் பேறுகாலப் பராமரிப்பு!

மாடு cow 1

செய்தி வெளியான இதழ்: ஏப்ரல் 2017.

ளர்ப்புக்கு நன்றிக் கடனாகத் தங்களையே தரவல்லவை கால்நடைகள். இத்தகைய பெருமைக்கு உரிய கால்நடை இனப் பெருக்கத்தின் முக்கிய நிகழ்வு ஈற்றுக்காலம். அதாவது, பேறுகாலம். இந்த நேரத்தில் ஏற்படும் கவனக் குறையால், பிறக்கும் கன்றுகள் இறக்க நேரிடுகிறது. சில நேரங்களில் தாய்ப் பசுக்களும் கூட இறக்க நேரிடுகிறது. இதனால், பேரிழப்பைச் சந்திக்கும் நிலை உண்டாகிறது. இந்த நிலை ஏற்படாமல் இருக்க, ஈற்றுக் காலத்தில் கவனமாக இருப்பது மிக மிக அவசியமாகும்.

ஈற்றுக்கு முந்தைய பராமரிப்பு

ஈற்றுப் பருவத்தில் உள்ள மாட்டை மற்ற மாடுகளில் இருந்து பிரித்துத் தனியிடத்துக்கு, குறிப்பாக, ஈனும் அறை என இருந்தால் அங்கே மாற்ற வேண்டும். அந்த இடமானது கிருமி நாசினியால் தூய்மை செய்யப்பட்டிருக்க வேண்டும். தரையில், மென்மையான, சுத்தமான, ஈரத்தை உறிஞ்சும் தன்மையுள்ள குப்பையைப் பரப்ப வேண்டும். ஈற்றுக் காலத்துக்கு ஓரிரு வாரத்துக்கு முன், சத்தான தீவனம், தாதுப்புக் கலவை, வைட்டமின் இ, செலினியம் ஆகியவற்றைக் கொடுக்க வேண்டும். இதன் மூலம், கன்றை ஈன்ற பிறகு நஞ்சுக்கொடி தங்குதல் வராமல் செய்ய முடியும்.

ஈற்றுக்கால அறிகுறிகள்

பால்மடி பெரிதாகவும், அகன்றும் காணப்படும். இடுப்பின் இருபக்கமும் குழிவாகவும், தளர்ந்தும் இருக்கும். இனப்பெருக்க உறுப்பின் உதடுகள் தளர்ந்தும் வீங்கியும் இருக்கும். அடர்ந்த சளியைப் போன்ற திரவம் இனப்பெருக்க உறுப்பிலிருந்து வெளிப்படும். ஈற்றுக்காலம் நெருங்கும் போது, மாடானது பதட்டமாகவும், அமைதியற்றும் காணப்படும்.

ஈற்றின் போது கவனிக்க வேண்டியவை

கன்றை ஈனப்போகும் நிலையில், தாய்மாடு அடிக்கடி படுக்கவும் எழவும் செய்யும். ஈற்றுவலியால் அசாதாரண நிலையில் காணப்படும். இந்த அறிகுறிகள் தெரிந்ததும், சற்றுத் தள்ளியிருந்து மாட்டைக் கவனித்துக் கொண்டிருக்க வேண்டும். சாதாரண நிலையில், கன்று பிறக்க 2-3 மணி நேரமாகலாம். இதுவே முதல் ஈற்றென்றால் 4-5 மணி நேரமாகலாம்.

கன்று வெளிவருவதற்கு முன்பாக, அண்டலாய்க் திரவம் அடங்கிய பனிக்குடம் என்னும் பை, வெளியில் தென்பட்ட சிறிது நேரத்தில் உடையும். உடனே, கன்றின் கால் மற்றும் தலைப்பகுதி, மாட்டின் யோனியில் இருந்து வெளியே தெரியும். பிறகு, மாட்டின் கருப்பை மற்றும் வயிற்றின் அழுத்தம் காரணமாக, கன்றானது கருப்பையில் இருந்து வெளியே தள்ளப்படும். இந்த நிலையில், ஏதேனும் மாற்றம் தெரிந்தால், உடனே கால்நடை மருத்துவரின் உதவியை நாட வேண்டும்.

ஈற்றுக்குப் பிந்தைய பராமரிப்பு

கன்று பிறந்த 8-12 மணி நேரத்தில் நஞ்சுக்கொடி வெளியேறி விட வேண்டும். அப்படி நடக்காத நிலையில், உடனே கால்நடை மருத்துவரின் உதவியை நாட வேண்டும். தாயும் கன்றும் இளஞ்சூடான நீரைப் பருகச் செய்ய வேண்டும். வெளியே வரும் நஞ்சுக்கொடியை மாடு உண்டு விடாமல் அகற்ற வேண்டும். இளஞ்சூடான வெந்நீரால் கன்றைக் குளிப்பாட்ட வேண்டும். ஈரமான தவிடு, கச்சா சர்க்கரை கலந்த கலவையை, மாட்டுக்குக் கொடுக்க வேண்டும்.

பால் கறவை

கன்றானது சீம்பாலைக் குடிக்கும் போது சுரக்கும் கணநீர் மாட்டின் கருப்பையைச் சுருங்கச் செய்கிறது. முதன் முதலாகப் பாலைக் கறப்பதற்கு முன், பால் காம்புகளின் அனைத்து அடைப்புகளும் நீங்கியுள்ளதை உறுதி செய்துகொள்ள வேண்டும். பாலைக் கறப்பதற்கு முன், மடியைக் கிருமி நாசினியால் சுத்தம் செய்ய வேண்டும். இது மடிநோய் வராமல் தடுக்கும். பால்மடியின் வீக்கம் வற்றும் வரை, ஒரு நாளைக்கு மூன்று நேரம் கூடப் பாலைக் கறக்கலாம். மேலும், பனிக்கட்டி ஒத்தடம் கொடுக்கலாம்.

தாய் மாட்டுக்கு அதன் எடை மற்றும் கறக்கும் பாலின் அளவுக்குத் தக்கவாறு சத்தான தீவனத்தை அளிக்க வேண்டும். தாதுப்புக் கலவையையும் அளிப்பதன் மூலம், அதன் பால் சுரக்கும் தன்மை கூடும். மேலும், பருவத்துக்கும் விரைவாக வரச்செய்ய முடியும்.


சு.அழகர், சி.மணிவண்ணன், சு.பிரகாஷ், இரா.ரவிக்குமார், ச.மனோகரன், மா.செல்வராஜ், கால்நடை மருத்துவக் கல்லூரி, நாமக்கல் – 637 002.

Share:

விவசாயம் / கால்நடை வளர்ப்புக் குறித்து

சந்தேகமா? கேளுங்கள்!


இன்னும் படியுங்கள்!

Discover more from பச்சை பூமி

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading