கறவை மாடுகளில் மடிநோயும் தடுப்பு முறைகளும்!

மடி நோய்

செய்தி வெளியான இதழ்: 2017 ஆகஸ்ட்.

ருவ மழையின் காரணமாகக் கறவை மாடுகளுக்குப் பல்வேறு நோய்கள் பரவ வாய்ப்புகள் உள்ளன. அதனால், கறவை மாடுகளில் உற்பத்தித் திறன் குறைவதோடு, அந்த மாடுகள் இறக்கவும் நேரிடும். மழைக் காலத்தில் அதிகப் பொருளாதார இழப்பை ஏற்படுத்தும் மிக முக்கியமான நோய் மடிநோயாகும்.

எனவே, கறவை மாடுகளில் ஏற்படும் மடிநோய்க்கான காரணங்கள், அறிகுறிகள், மேற்கொள்ள வேண்டிய பராமரிப்பு முறைகள் மற்றும் நோய் வராமல் தடுக்கும் முறைகளை, ஒவ்வொரு பண்ணையாளரும் தெரிந்திருக்க வேண்டும்.

மடி நோய்க்கான காரணங்கள்

மடிநோய் ஏற்படப் பல காரணங்கள் உள்ளன. இருப்பினும், முக்கியமாக நுண்ணுயிரி, நச்சுயிரி மற்றும் பூஞ்சைக் கிருமிகள், பால் சுரப்புத் திசுக்களை அயர்ச்சிக்கு உள்ளாக்கி நோயை உண்டாக்கும். இதில், மடியின் ஒரு பகுதி அல்லது அனைத்துப் பகுதிகளும் தாக்கப்படும். நோய்க் கிருமிகள், மாட்டின் மடியிலுள்ள பால் சுரப்பியைத் தாக்கி, பெருத்த பொருள் சேதத்தை ஏற்படுத்தும்.

தரைச் சுத்தம், மடிச் சுத்தம், கறவையாளரின் கைச்சுத்தம், பால் கறவை இயந்திரத்தின் சுத்தம் போன்றவற்றைப் பொறுத்து இந்நோய் ஏற்படும். இரத்தம் மூலம் அல்லது காம்புத் துளை மூலம், நோய்க் கிருமிகள் மடியை அடைந்து மடிநோயை ஏற்படுத்தும். மேலும், மடியில் ஏற்படும் காயம், புண் மற்றும் கறவையாளரின் சுத்தமற்ற கை போன்றவை, இந்நோய்க்கான காரணங்கள் ஆகும்.

மடிநோய் தாக்கிய மாட்டில் கறந்த பிறகு மற்ற மாடுகளில் கறந்தால், மடிநோய் வரக்கூடும். தவறான முறையில் கறந்தாலும், அதாவது, கட்டை விரலை மடக்கிக் கறந்தாலும் மடிநோய் உண்டாகும். மூன்று அல்லது நான்கு ஈத்துக்கு மேற்பட்ட மாடுகளில் மடிநோய் ஏற்படுவதற்கான வாய்ப்புகள் அதிகம். நீண்ட காம்புகள் மற்றும் தொங்கு மடியில் எளிதில் காயம் ஏற்பட்டு மடிநோய்த் தாக்க வாய்ப்புள்ளது.

பொதுவாக, சுத்தமற்ற தரை மற்றும் கறந்ததும் மாடு தரையில் படுக்கும் போது மடிக்காம்புத் துளை வழியே நுண்ணுயிரிகள் மடிக்குள் சென்று பல்கிப் பெருகி மடிநோயை உண்டாக்கும். மடிநோய் ஏற்பட நிறையக் காரணங்கள் இருப்பினும், இந்நோய் மழைக் காலத்தில் ஏற்படும் முக்கியமான தொற்று நோயாகும்.

நோய் அறிகுறிகள்

நோய் தாக்கிய மடியின் பாகம் பெரிதாக வீங்கிச் சிவந்து இருக்கும். பொதுவாக, ஒன்று அல்லது இரண்டு காம்புப் பகுதிகள் பாதிக்கப்படும். வீக்கமுற்ற மடி சூடாகவும், தொட்டால் மிகவும் வலியுடனும் இருக்கும். மாடு மடியைத் தொட விடாது உதைக்கும். பாதிக்கப்பட்ட காம்பில் மற்ற காம்புகளை விட, பாலின் அளவு குறைந்தும் சூடாகவும் இருக்கும். பால் திரிதிரியாக, மஞ்சள் நிறத்தில், இரத்தமும் சீழும் கலந்து வரும். நோய் தீவிரமான நிலையில், பாதிக்கப்பட்ட பாகம் கெட்டியாக மாறி, பால் சுரக்கும் தன்மையை முற்றிலும் இழந்து விடும்.

தடுப்பு முறைகள்

மழைக் காலத்தில் தொழுவத்தை, சாணம், சிறுநீர் இல்லாமல் தூய்மையாக வைத்துக் கொள்ள வேண்டும். தொழுவத் தரையைக் கிருமிநாசினி மூலம் நன்கு கழுவ வேண்டும். அயொடொபார், சோடியம் ஹைப்போ குளோரைட், குளொர்ஹெக்சிடின், போன்ற மருந்துகளை, கிருமி நாசினிகளாகப் பயன்படுத்தலாம். கறவையாளர்கள் பால் கறப்பதற்கு முன் தங்களது கைகளை சோப்பால் நன்கு சுத்தம் செய்து விட்டு, கிருமி நாசினியில் கையைக் கழுவிய பிறகே பாலைக் கறக்க வேண்டும்.

பால் கறவைக்கு முன்னும் பின்னும், ஒரு லிட்டர் நீருக்கு ஒரு கிராம் வீதம் பொட்டாசியம் பெர்மாங்கனேட் கலந்த நீரில் மடியைக் கழுவ வேண்டும். கறவை இயந்திரத்தைப் பயன்படுத்தும் போது, பாலைக் கறந்ததும், குளிர்ந்த நீரில் நன்கு கழுவிய பிறகு, கிருமிநாசினி மூலம் நன்கு சுத்தம் செய்ய வேண்டும்.

மழைக் காலத்தில், காம்பு மற்றும் மடிப்பகுதியில் காயம் ஏற்படாமல் பார்த்துக் கொள்ள வேண்டும். சிறிய காயமாக இருக்கும் போதே, மருந்தைப் போட்டுக் குணமாக்க வேண்டும். இல்லையெனில், காயங்கள் வழியே கிருமிகள் சென்று மடிநோயை ஏற்படுத்தி விடும். கறவை நேரத்தை முறையாகக் கடைப்பிடிக்க வேண்டும். மடியில் பால் தேங்கக் கூடாது. பாலை முற்றுலும் கறந்து விட வேண்டும்.

சினை மாட்டின் மடியைத் தினமும் கண்காணிக்க வேண்டும். நோயுற்ற பசுவை இறுதியில் கறக்க வேண்டும். மேலும், நோயுற்ற காம்பை இறுதியில் கறக்க வேண்டும். நோயுற்ற மாட்டில் கறந்த பாலைப் பயன்படுத்தக் கூடாது.

சிசிச்சை முறைகள்

நோய் அறிகுறிகள் தெரிந்ததும் பாதிக்கப்பட்ட மாட்டைப் பிரித்து, கால்நடை மருத்துவரை அணுகி சிகிச்சை செய்ய வேண்டும். மடிநோயைத் தொடக்க நிலையிலேயே கண்டறிந்து மருத்துவம் செய்யா விட்டால், பால் சுரப்பிகள் நிரந்தரமாகக் கெட்டு, பால் சுரக்கும் தன்மையை இழந்து விடும். இந்நிலையில், நோயுற்ற மடியைச் சரி செய்வது இயலாத செயலாகி விடும்.

கறவை மாடுகள் பாலைத் தரவில்லை என்றால், அவற்றால் பயனேதும் இல்லை. எனவே, கறவை மாடு வளர்ப்பின் மூலம் அதிக இலாபம் பெற, மடிநோய் வராமல் தடுக்க வேண்டும். மழைக் காலத்தில், நோய் வந்த பிறகு மருத்துவம் செய்வதைக் காட்டிலும், மடிநோய் வராமல் இருக்க, தகுந்த முறைகளை மேற்கொள்ள வேண்டும்.

மூலிகை சிகிச்சை

மடிநோய் அறிகுறியைக் கண்டதும் கால்நடை மருத்துவரை அணுக வேண்டும். சிகிச்சை தாமதமாகும் நிலையில் கீழ்க்காணும் மூலிகை முதலுதவியை மேற்கொள்ளலாம். ஒரு மாட்டுக்குத் தேவைப்படும் சோற்றுக் கற்றாழை 250 கிராம், மஞ்சள் பொடி 50 கிராம், சுண்ணாம்பு 5 கிராம் எடுத்துக் கொள்ள வேண்டும்.

பிறகு, உரலில் இட்டுக் கெட்டியாக அரைத்து, கையளவு எடுத்து நீர்விட்டுக் கரைத்து, நீர்த்த நிலையில் கால்நடையின் மடிப்பகுதி முழுவதும் நன்றாகத் தடவ வேண்டும். தினமும் பத்து முறை வீதம், மடிவீக்கம் குறையும் வரை குறைந்தது ஐந்து நாட்களுக்குப் பூச வேண்டும். தினமும் புதிதாக மருந்தைத் தயாரிக்க வேண்டும்.


அ.செந்தில்குமார், பா.பாலமுருகன், சூ.முருகேசன், உழவர் பயிற்சி மையம், தேனி.

Share:

விவசாயம் / கால்நடை வளர்ப்புக் குறித்து

சந்தேகமா? கேளுங்கள்!


இன்னும் படியுங்கள்!