மனிதர்கள் மற்றும் விலங்குகளுக்கிடையே பரவும் நோய்கள், விலங்குவழி நோய்கள் (Zoonotic Diseases) என்று அழைக்கப்படுகின்றன.
நுண்ணுயிரி நோய்கள்
அடைப்பான் நோய் (ஆந்த்ராக்ஸ்), கருச்சிதைவு நோய் (புரூசெல்லோசிஸ்), காம்ப்பைலோ பாக்டீரியோசிஸ் (காம்ப்பைலோ வயிற்றுப் போக்கு), டெர்மட்டோ ஃபைலோசிஸ் (டெர்மட்டோ ஃபைலோசிஸ் தோல் நோய்), சுழல் நோய் (லிஸ்டீரியோசிஸ்), எலிக்காய்ச்சல் (லெப்டோஸ்பைரோசிஸ்), க்யூ காய்ச்சல் மற்றும் காசநோய் (டியூபர்குலோசிஸ்)
நச்சுயிரி நோய்: போலிமாட்டம்மை (போலி பசு அம்மை)
பூஞ்சை நோய்: படர்தாமரை (தோல் பூஞ்சை நோய்)
ஒரு செல் உயிரி நோய்: க்ரிப்டோஸ் போரிடியோசிஸ்
புற ஒட்டுண்ணி நோய்: ஸ்கேபிஸ் (சார்காப்டிஸ் வகைச் சொறி சிரங்கு)
அடைப்பான் நோய் (ஆந்த்ராக்ஸ்)
இந்நோய்க் காரணி பேசில்லஸ் ஆந்த்ராக்சிஸ் ஆகும். இந்நோய், நோயுற்ற மாடுகளுடன் வைத்திருக்கும் நேரடித் தொடர்பு, சரியாக வேக வைக்கப்படாத மாட்டிறைச்சியை உண்ணுதல், கொசுக்கள் போன்ற பூச்சிகள் கடித்தல் மற்றும் பாக்டீரிய ஸ்போர்கள் காற்றில் பரவுவதால் ஏற்படுகிறது.
மாடுகளில் அறிகுறிகள்: மிகத் தீவிரமாக நோயுற்ற மாடுகள் திடீரென இறத்தல், சில சமயங்களில் இறப்பதற்கு முன் நடுங்குதல், தடுமாற்றம், மூச்சித் திணறல். இறந்த மாட்டின் நாசி, வாய், ஆசனவாய் போன்ற உடல் துளைகளில் இருந்து உறையாத இரத்தக் கசிவு ஏற்படுதல். நோய் தீவிரமான நிலையில், அதிகக் காய்ச்சல், பசியின்மை, மயக்கநிலை, சோர்வு காணப்படுதல். பால் உற்பத்தி, திடீரென்று குறைதல். சில சமயங்களில், சிவப்பு அல்லது மஞ்சள் நிறத்தில் பால் இருத்தல். சினை மாடுகளில் கருச்சிதைவு ஏற்படுதல்.
மனிதர்களில் அறிகுறிகள்: தோலில் ஏற்படும் ஆந்த்ராக்ஸ்: தோலில் கொப்புளங்கள், அரிப்பு, வீக்கம், கொப்புளங்கள் உடைந்து வலியற்ற கரும் புண்கள் ஏற்படுதல்.
சுவாசப் பாதையில் ஏற்படும் ஆந்த்ராக்ஸ்: காய்ச்சல், தலைவலி, உடல்வலி, சோர்வு, வாந்தி, நெஞ்சுவலி, மூச்சுத் திணறல், இருமல், குழப்பநிலை காணப்படுதல்.
செரிமான மண்டலத்தில் ஏற்படும் ஆந்த்ராக்ஸ்: கடும் வயிற்றுவலி, இரத்தம் கலந்த வாந்தி, இரத்தம் கலந்த வயிற்றுப் போக்கு, வயிற்று வீக்கம் ஏற்படுதல்.
தடுப்பு முறைகள்: நோய் நிலவும் பகுதிகளில் கால்நடைகளுக்குத் தடுப்பூசி போடுதல், பாதிக்கப்பட்ட விலங்குகளைத் தனிமைப்படுத்தல் மற்றும் நோயால் இறந்த விலங்குகளை ஆழமான குழிகளில் புதைத்தல் அல்லது எரித்து அப்புறப்படுத்தல்.
கருச்சிதைவு நோய்(புரூசெல்லோசிஸ்)
இந்நோய்க் காரணி புரூசெல்லா அபார்டஸ் ஆகும். இந்நோய், கருச்சிதைவு ஏற்பட்ட பசுவின் நச்சுக்கொடி, இறந்த கரு, கரு திரவங்களைக் கையாளுதல். காய்ச்சாத பால் மற்றும் சரியாகப் பதப்படுத்தப்படாத பால் பொருள்களை உண்ணுதல் மற்றும் காற்றில் பரவுதல் மூலம் ஏற்படும்.
மாடுகளில் அறிகுறிகள்: கருவுற்ற மாடுகளில் பொதுவாக இரண்டாவது பாதி கர்ப்ப நிலையில் கருச்சிதைவு ஏற்படும். அல்லது பலவீனமான கன்று, கன்று இறந்து பிறத்தல் ஏற்படும். கருச்சிதைவுக்குப் பின் நச்சுக்கொடி தங்குதல், கருப்பை அயர்ச்சி மற்றும் கருப்பைத் தொற்று ஏற்படும். ஒருமுறை கருச்சிதைவு ஏற்பட்ட மாடுகளில் அடுத்தடுத்த கருவுறுதல்களில் பாதிப்பு இருப்பதில்லை. நாள்பட்ட நோய்ப் பாதிப்பில் மூட்டுவாதம் ஏற்படும்.
மனிதர்களில் அறிகுறிகள்: காய்ச்சல், குளிர்க் காய்ச்சல், தலைவலி, தசைச்சோர்வு, உடல் வலி, நிணநீர்க் கட்டிகள் வீக்கம், இரவில் அதிகமாக வியர்த்தல் ஏற்படும். நாள்பட்ட தீவிர நோய் நிலையில், ஆண்களில் விந்தகம் மற்றும் விந்தகப் பையைச் சுற்றி வீக்கம் ஏற்படும். இதயச்சுவர் அயர்ச்சி, நரம்பு மண்டலப் பாதிப்பு, கல்லீரல் மற்றும் மண்ணீரல் அயர்ச்சி ஏற்படும். எலும்புகள் மற்றும் மூட்டுகளில் நோய்க்கிருமித் தொற்றுத் தங்குவதால் மூட்டுவாதம், முதுகெலும்புப் பாதிப்பு ஏற்படும்.
தடுப்பு முறைகள்: பதப்படுத்தாத பால் பொருள்களை உண்பதைத் தவிர்த்தல், பாதிக்கப்பட்ட மாடுகள் மற்றும் அவற்றின் இனப்பெருக்கக் கழிவுகளைக் கையாளும் போது பாதுகாப்புக் கையுறைகளை அணிதல், கைகளைச் சுத்தமாகக் கழுவுதல்.
காம்ப்பைலோ பாக்டீரியோசிஸ் (காம்ப்பைலோ வயிற்றுப்போக்கு)
இந்நோய்க் காரணி, காம்ப்பைலோ பாக்டர் ஜிஜினை, காம்ப்பைலோ பாக்டர்கோலை ஆகும். இந்நோய், காய்ச்சாத பால் மற்றும் சரியாகப் பதப்படுத்தப்படாத பால் பொருள்கள், சரியாக வேகாத மாட்டிறைச்சியை உண்ணுதல் மூலம் பரவும்.
மாடுகளில் அறிகுறிகள்: கன்றுகளில் தீவிர வயிற்றுப்போக்கு மற்றும் காய்ச்சல் காணப்படும்.
மனிதர்களில் அறிகுறிகள்: நீர்த்த வயிற்றுப்போக்கு, காய்ச்சல், குமட்டல், வாந்தி, வயிற்றுவலி, தலைவலி, தசைச்சோர்வு, இரத்தம் கலந்த மலம் வெளியேறுதல் ஏற்படும். மேலும், இதயச்சுவர் அயர்ச்சி, மூட்டுவலி, மூளைச் சவ்வு அயர்ச்சி, குடல் அயர்ச்சி போன்ற அறிகுறிகள் அரிதாகக் காணப்படும்.
தடுப்பு முறைகள்: பதப்படுத்தாத பால் பொருள்களை உண்பதைத் தவிர்த்தல், கைகளைச் சுத்தமாகக் கழுவுதல்.
டெர்மட்டோ ஃபைலோசிஸ் (டெர்மட்டோ ஃபைலோசிஸ் தோல் நோய்)
இந்நோய்க் காரணி டெர்மட்டோஃபைலஸ் காங்கோலென்சிஸ் ஆகும். இந்நோய், தோலில் உள்ள நோய்க் கிருமிகளின் நேரடித் தொடர்பின் மூலம் பரவும்.
மாடுகளில் அறிகுறிகள்: நிலை 1: தோலில் முடிகள் ஒன்றோடொன்று ஒட்டிக் கொண்டு தூரிகையைப் போலக் காணப்படும். நிலை 2: காயங்கள் ஒன்று சேர்ந்து படையைப் போலக் காணப்படும். நிலை 3: 0.5-2.0 செ.மீ. விட்டமுள்ள மரு போன்ற மாற்றங்கள் ஏற்படும்.
மனிதர்களில் அறிகுறிகள்: கைகள் மற்றும் உள்ளங் கைகளில் வலியற்ற சீழ் கொப்புளங்கள் தோன்றும். அவை உடைந்து புண்கள், அரிப்பு ஏற்பட்டுத் தழும்புகளாக மாறும்.
தடுப்பு முறைகள்: பாதிக்கப்பட்ட கால்நடைகளைக் கையாளும் போது பாதுகாப்புக் கையுறைகளை அணிதல் மற்றும் கைகளைச் சுத்தமாகக் கழுவுதல்.
சுழல் நோய் (லிஸ்டீரியோசிஸ்)
இந்நோய்க் காரணி, லிஸ்டீரியா மோனோசைட்டோ ஜென்ஸ் ஆகும். இந்நோய், காய்ச்சாத பால் மற்றும் சரியாகப் பதப்படுத்தப்படாத பால் பொருள்களை உண்ணுதல். பாதிக்கப்பட்ட பசு, ஈனும் போது நச்சுக்கொடி மற்றும் கருதிரவங்களைக் கையாளுதல் மூலம் பரவும்.
மாடுகளில் அறிகுறிகள்: மூளை அயர்ச்சி, இளங்கன்று இறப்பு, இரத்த நச்சேற்றம், சோர்வு, காய்ச்சல், தடுமாற்றம், அதிக உமிழ்நீர்ச் சுரப்பு, கழுத்துத் திருகு, முகம் மற்றும் தொண்டையில் உள்ள தசைகள் செயலிழப்பு, விழிவெண்படல அயர்ச்சி, மாறுகண் பார்வை போன்ற அறிகுறிகள் காணப்படும்.
நடக்க முடிந்த நிலையில், பாதிக்கப்பட்ட மாடு சுற்றிச் சுற்றி வட்டமிட்டு நடக்கும். இது இந்நோயின் மிக முக்கிய அறிகுறியாகும். நோயின் கடைசி நிலையில், மாடு அசை போடுவது போலத் தாடையை அசைத்துக் கொண்டே இருக்கும். கருவுற்ற மாடுகளில் கர்ப்பத்தின் மூன்றாம் நிலையில் கருச்சிதைவு மற்றும் மடிநோய் ஏற்படும்.
மனிதர்களில் அறிகுறிகள்: காய்ச்சல், சளி, தசைவலி, சோர்வு, தலைவலி, கழுத்துப் பிடிப்பு, குழப்பநிலை, தடுமாற்றம் மற்றும் வலிப்பு ஏற்படும். பெண்களில் கர்ப்பத்தின் இரண்டாம் மற்றும் மூன்றாம் கால நிலையில் கருச்சிதைவு ஏற்படும். மேலும், குளிர்க் காய்ச்சல், தலைச்சுற்றல், தலைவலி காணப்படும்.
தடுப்பு முறைகள்: உணவுப் பொருள்களைக் கழுவிப் பயன்படுத்துதல், இறைச்சியை நன்கு சமைத்து உண்ணுதல், சரியாகப் பதப்படுத்தப்பட்ட பால் பொருள்களை உண்ணுதல்.
எலிக்காய்ச்சல் (லெப்டோஸ்பைரோசிஸ்)
இந்நோய்க் காரணி லெப்டோஸ்பைரா ஹார்ட்ஜோ, லெப்டோஸ்பைராபொமோனா ஆகும். பாதிக்கப்பட்ட மாட்டின் சிறுநீரிலுள்ள நோய்க் கிருமிகள் நீர் மற்றும் உணவை மாசுபடுத்துவதால் பரவும். மாசுபட்ட சிறுநீர் மற்றும் குடிநீர் மூலம் சுவாசப்பாதை வழியாகச் செல்வதாலும் நோய்த்தொற்று ஏற்படும்.
மாடுகளில் அறிகுறிகள்: பொதுவாகத் தீவிர நோய் நிலை, கன்றுக் குட்டிகளில் ஏற்படும். காய்ச்சல், பசியின்மை, விழிவெண்படல அயர்ச்சி, வயிற்றுப்போக்கு, இரத்தம் கலந்த சிறுநீர், இரத்தச்சோகை, மஞ்சள் காமாலை, மூளைச்சவ்வு அயர்ச்சி மற்றும் நுரையீரல் அயர்ச்சி ஏற்படும்.
லெப்டோஸ்பைரா ஹார்ட்ஜோ வகையானது, பசுக்களில் கருச்சிதைவு மற்றும் பால் உற்பத்திக் குறைவை ஏற்படுத்தும். பால் மஞ்சள் அல்லது இரத்தம் கலந்த நிறத்தில் காணப்படும். கருச்சிதைவுக்குப் பிறகு மலட்டுத் தன்மை ஏற்படலாம்.
மனிதர்களில் அறிகுறிகள்: தீவிர இரத்த நச்சேற்ற நிலை: காய்ச்சல், குளிர், தலைவலி, பலவீனம், நிணநீர்க் கட்டிகள் வீக்கம், வயிற்று வலி, குமட்டல், வாந்தி, அரிப்பு, தொண்டை வலி, இருமல், நெஞ்சுவலி, ஒளிக் கூச்சம் ஏற்படும்.
மஞ்சள் காமாலை நிலை: தீவிரமான தலைவலி, கழுத்துப் பிடிப்பு, மூளைச்சவ்வு அயர்ச்சி. மூளை, தண்டு வடம், கல்லீரல், சிறுநீரகப் பாதிப்பு, கடும் மஞ்சள் நிறச் சிறுநீர், அதாவது, இரத்தம் கலந்து வெளியேறுதல் நிகழும்.
தடுப்பு முறைகள்: எலிகளைக் கட்டுப்படுத்துதல், நீர்த் தேங்குவதைத் தவிர்த்தல், பாதிக்கப்பட்ட விலங்குகளைப் பாதுகாப்பாகக் கையாளுதல், குளம் குட்டைகளைப் பயன்படுத்துவதைத் தவிர்த்தல்.
க்யூ காய்ச்சல்
இந்நோய்க் காரணி, காக்சியெல்லாபர்னெட்டை ஆகும். இந்நோய், காய்ச்சாத பால் மற்றும் சரியாகப் பதப்படுத்தப்படாத பால் பொருள்கள், சரியாக வேக வைக்காத மாட்டிறைச்சியை உண்ணுதல். பாதிக்கப்பட்ட மாடுகளுடன் நேரடித் தொடர்பு மற்றும் உண்ணிகள் கடிப்பதாலும் பரவும்.
மாடுகளில் அறிகுறிகள்: பொதுவாக அறிகுறிகளற்ற நோய் நிலையே காணப்படும். பசியின்மை, மலட்டுத் தன்மை, கருச்சிதைவு ஏற்படலாம். பாதிக்கப்பட்ட பசுவின் நச்சுக்கொடி மற்றும் கருத்திரவங்களில் பாக்டீரியா அதிகமாகப் பரவும்.
மனிதர்களில் அறிகுறிகள்: காய்ச்சல், குளிர், வியர்த்தல், சோர்வு, தலைவலி, தசைவலி, குமட்டல், வாந்தி, வயிற்றுப்போக்கு, வயிற்று வலி, நெஞ்சு வலி, இருமல், உடல் எடை குறைதல் ஏற்படும். தீவிர நோய் நிலையில், நுரையீரல் அயர்ச்சி மற்றும் கல்லீரல் அயர்ச்சி ஏற்படும். பெண்களில் கருச்சிதைவு, குழந்தை இறந்து பிறத்தல், குறைப் பிரசவம், பலவீனமான குழந்தைப் பிறப்பு ஏற்படலாம்.
நாள்பட்ட நோய் நிலையில், இதய உட்சுவர் அயர்ச்சி, மூச்சுத் திணறல், இரவில் வியர்த்தல், உடல் எடையிழப்பு, கால் வீக்கம் ஏற்படும்.
தடுப்பு முறைகள்: இறந்த கருக்கள் மற்றும் இனப்பெருக்கவழிக் கழிவுகளைப் பாதுகாப்பாக அகற்றுதல், கன்றுப் பிறப்பில் உதவும் போது பாதுகாப்புக் கையுறைகள் மற்றும் கண்ணாடியை அணிதல், கைகளைச் சுத்தமாகக் கழுவுதல், பதப்படுத்தாத பால் பொருள்களைத் தவிர்த்தல்.
காசநோய் (டியூபர்குலோசிஸ்)
இந்நோய்க் காரணி மைக்கோபாக்டீரியம் போவிஸ் ஆகும். இந்நோய், காய்ச்சாத பால் மற்றும் சரியாகப் பதப்படுத்தப்படாத பால் பொருள்கள், சரியாக வேக வைக்காத மாட்டிறைச்சியை உண்ணுதல். பாதிக்கப்பட்ட சளி, திசுக்கள், உடல் திரவங்களைக் கையாளுதல் மற்றும் காற்றினால் சுவாசப் பாதையில் தொற்று ஏற்படுதல் மூலம் பரவும்.
மாடுகளில் அறிகுறிகள்: இந்நோய், மாடுகளில் பொதுவாக நாள்பட்ட வலுவிழப்பை ஏற்படுத்தும். இருப்பினும், தீவிர நோய் நிலை சில சமயங்களில் ஏற்படும். பாதிக்கப்பட்ட மாடுகளில் தீவிர உடல் எடையிழப்பு ஏற்பட்டு எலும்பும் தோலுமாக ஆகி விடும். மேலும், வலுவின்மை, பசியின்மை, காய்ச்சல், நிணநீர்க் கட்டிகளில் வீக்கம் ஏற்படும்.
காலை நேர உடற்பயிற்சி மற்றும் குளிர்ந்த வானிலையின் போது அதிகமாக இருமல் ஏற்படும். நிணநீர்க் கட்டிகள் வீங்குவதால் சுவாசப்பாதை அடைப்பு, மூச்சுத் திணறல், அசையூண் வயிற்று உப்புசம், உணவை விழுங்க முடியாமை போன்றவை ஏற்படும்.
மனிதர்களில் அறிகுறிகள்: காய்ச்சல், உடல் எடையிழப்பு, உடல் வலி ஏற்படும். நிணநீர்க் கட்டிகள் வீங்குவதால் நுரையீரல், தோல், எலும்பு, மூட்டு, இனப்பெருக்க மண்டலம், சிறுநீரக மண்டலம், செரிமானப் பாதை, மூளை, தண்டுவடம் போன்ற பல்வேறு உறுப்புகளில் பாதிப்புகள் ஏற்படலாம்.
தடுப்பு முறைகள்: பதப்படுத்தப்படாத பால் மற்றும் பால் பொருள்களைத் தவிர்த்தல்.
போலி மாட்டம்மை (போலி பசு அம்மை)
இந்நோய்க் காரணி பாராபாக்ஸ் வைரஸ் ஆகும். இந்நோய், பால் கறக்கும் போது நோய்த் தொற்றுள்ள பசுவின் மடி மற்றும் காம்புகளைக் கையாளுதல். நோய்க் கிருமிகள் உள்ள பொருள்கள், சுற்றுச்சூழல் மற்றும் மாசுப்பட்ட கைகளிலிருந்து பரவும்.
மாடுகளில் அறிகுறிகள்: பாதிக்கப்பட்ட பசுவின் மடி மற்றும் காம்புகளில் முதலில் சிறுசிறு சிவப்பு அம்மைக் கொப்புளங்கள் தோன்றும். பிறகு, சீழ் கொப்புளங்கள், காயங்கள் ஏற்பட்டுப் படைகளாக மாறும். இத்தொற்றில் மடி மற்றும் காம்புகளில் காயம் ஆறிய பகுதிகளைச் சுற்றிக் குதிரை லாடம் போன்ற அமைப்புள்ள அல்லது வட்டவடிவப் படைகள் காணப்படும்.
காயங்கள் குணமாக 7-12 நாட்கள் வரை ஆகலாம். காயங்கள் ஆறிய பிறகும் அவற்றின் தழும்புகள் புடைப்புகளைப் போலக் காணப்படலாம். இந்நோய், பாதிக்கப்பட்ட மாட்டிலிருந்து பண்ணையிலுள்ள பிற மாடுகளுக்கு மிக எளிதில் பரவுவதால், நோய்ப் பாதிப்பு அதிகமாகக் காணப்படும்.
மனிதர்களில் அறிகுறிகள்: கைகள் மற்றும் விரல்களில் சிறுசிறு சிவப்புக் கொப்புளங்கள் தோன்றி, பின் கட்டிகளைப் போலக் காணப்படும். சில வாரங்களில் காயங்கள் தாமாகவே குணமாகி விடும்.
தடுப்பு முறைகள்: சுகாதாரமான பால் கறக்கும் முறைகளைப் பின்பற்றுதல், பாதிக்கப்பட்ட பசுக்களைக் கையாளும் போது பாதுகாப்புக் கையுறைகளை அணிதல், பாலைக் கறந்த பிறகு கைகளைச் சுத்தமாகக் கழுவுதல்.
படர் தாமரை (தோல் பூஞ்சை நோய்)
இந்நோய்க் காரணிகள், மைக்ரோஸ்போரம், ட்ரைக்கோப்பைட்டான் பூஞ்சை இனங்கள் ஆகும். இந்நோய், பாதிக்கப்பட்ட மாடுகளுடன் நேரடித் தொடர்பு, மாசுபட்ட சுற்றுச்சூழல் மற்றும் பிற பொருள்களில் இருந்து தோல் மூலம் பரவும்.
மாடுகளில் அறிகுறிகள்: சாம்பல் அல்லது வெள்ளை நிறத்தில், உலர்ந்த முடிகளற்ற காயங்கள் ஏற்படும். முகம் மற்றும் கழுத்துப் பகுதியில் அதிகமாகத் தொற்று ஏற்படும். காயமுள்ள தோல் பகுதி தடித்துப் பழுப்புநிறப் படைகளாக மாறும். படை உதிர்ந்த பிறகு அந்தப் பகுதி ரோமங்களின்றிக் காணப்படும்.
மனிதர்களில் அறிகுறிகள்: உடலிலுள்ள அனைத்துப் பகுதிகளிலும் உள்ள தோல், கை மற்றும் கால் நகங்களில் தொற்று ஏற்படும். அரிப்பு, வட்டவடிவப் படர் தாமரை, சிவந்த செதில் செதிலான தோல், முடி கொட்டுதல் போன்றவை ஏற்படும்.
தடுப்பு முறைகள்: சுகாதாரமாக இருத்தல், கைகளைச் சுத்தமாகக் கழுவுதல்.
க்ரிப்டோஸ்போரிடியோசிஸ்
இந்நோய்க் காரணி, க்ரிப்டோஸ்போரிடியம் இனங்கள் ஆகும். இந்நோய்க் கிருமிகள், சுற்றுச்சூழலில் அதிக நாட்கள் பிழைத்திருக்கக் கூடியவை. எனவே, நோய்க் காரணிகள் மற்றும் அவற்றின் வித்துகளால் மாசுப்பட்ட மண், உணவு மற்றும் நீரின் மூலம் பரவும்.
மாடுகளில் அறிகுறிகள்: இந்நோய்த் தொற்று முதல் சில வாரங்ளே ஆன இளங் கன்றுகளை அதிகமாகப் பாதிக்கும். நீர்த்த வயிற்றுப்போக்கு, பசியின்மை, உடல் எடையிழப்பு ஏற்படும்.
மனிதர்களில் அறிகுறிகள்: இதனால் நீர்த்த வயிற்றுப்போக்கு, வயிற்றுவலி, நீர்ச்சத்துக் குறைபாடு, குமட்டல், வாந்தி, காய்ச்சல், பசியின்மை, உடல் எடையிழப்பு ஏற்படும்.
தடுப்பு முறைகள்: சுகாதாரமாக இருத்தல், கைகளைச் சுத்தமாகக் கழுவுதல். பதப்படுத்தப்படாத பால் மற்றும் பால் பொருள்களைத் தவிர்த்தல்.
ஸ்கேபிஸ் (சார்காப்டிஸ் வகைச் சொறி சிரங்கு)
இந்நோய்க் காரணிகள், சார்காப்டஸ் ஸ்கேபியை (போவிஸ் வகை) தோல் சிற்றுண்ணிகள் ஆகும். இவற்றின் மூலம், பாதிக்கப்பட்ட மாடுகள், நோய்த்தொற்றுள்ள சுற்றுச்சூழலிலிருந்து பரவும்.
மாடுகளில் அறிகுறிகள்: இந்தச் சிற்றுண்ணிகள், தலை, கழுத்து, தோள்பட்டைப் பகுதிகளில் தோலுக்கடியில் ஆழமாகப் புதைந்து பெருகி, உடலின் பிற பகுதிகளுக்கும் பரவும். ஆறு வாரங்களில் உடல் முழுவதும் பாதிப்பு ஏற்படலாம். இதனால் தீவிர அரிப்பு, கொப்புளங்கள், படைகள் ஏற்பட்டு, தோல் தடித்து மடிப்புகளாக மாறி விடும்.
மனிதர்களில் அறிகுறிகள்: தீவிரத் தோல் அரிப்பு, குறிப்பாக இரவில் ஏற்படும். பொதுவாகத் தலை, முகம், கழுத்து, உள்ளங்கை, பாதம் ஆகிய பகுதிகளில் பாதிப்புக் காணப்படும்.
தடுப்பு முறைகள்: பாதுகாப்புக் கையுறைகளை அணிதல், கைகளைச் சுத்தமாகக் கழுவுதல்.
இதுவரை நாம் பார்த்ததில், விலங்குகளிடமிருந்து மனிதர்களுக்குப் பரவும் பல்வேறு நோய்கள், அதிகப் பாதிப்பு மற்றும் அதிக வீரியமுள்ள நோய்கள் இறப்பை ஏற்படுத்தும் வகையில் உள்ளன. கால்நடை வளர்ப்பு மற்றும் கால்நடை மருத்துவத் துறையில் உள்ளவர்கள் இத்தகைய நோய்களால் அதிகமாகப் பாதிக்கப்படுகிறார்கள்.
எனவே, தொழில் சார்ந்த விலங்குவழி நோய்களில் இருந்து மனிதர்கள் பாதுகாப்பாக இருப்பதற்கு, விழிப்புணர்வு மற்றும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்வது அவசியமாகும். விலங்குவழி நோய்கள் பரவும் விதம் மற்றும் அவற்றின் தடுப்பு முறைகளை அறிந்து கொள்வதன் மூலம் அவற்றிலிருந்து நம்மைத் தற்காத்துக் கொள்ளலாம்.
ம.சிவக்குமார், இரா.ரிஷிகேசவன், இரா.மகேஸ்வரி,
கால்நடைப் பொது சுகாதாரம் மற்றும் நோய் நிகழ்வாய்வியல் துறை,
கால்நடை மருத்துவக் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையம், தேனி- 625 534.
சந்தேகமா? கேளுங்கள்!