செய்தி வெளியான இதழ்: 2018 நவம்பர்.
நமது உடலுக்குத் தேவையான அனைத்துச் சத்துகளும் பாலில் சரியான அளவில் இருப்பதால் இது சரிவிகித உணவு எனப்படுகிறது. அதனால் சத்துகள் கெடாமல் பாலை உற்பத்தி செய்ய வேண்டும்.
பாலைச் சுத்தமாகக் கறக்காத நிலையில், காசநோய், தொண்டைப் புண், டிப்தீரியா, டைபாய்டு, வயிற்றுப்போக்குப் போன்றவை ஏற்படலாம். மேலும், பாலானது கிருமிகளைப் பெருக்கும் ஊடகமாக உள்ளதால், இந்தக் கிருமிகள் பாலின் தரத்தைக் கெடுத்து விடும். இவற்றைத் தவிர்த்துச் சுத்தமான முறையில் பாலை உற்பத்தி செய்ய வேண்டும்.
மாட்டுத் தொழுவம்
கொட்டகை: சற்று உயரமான இடத்தில் தொழுவத்தை அமைக்க வேண்டும். நல்ல வெளிச்சம் காற்றோட்டம் இருக்க வேண்டும். மழைநீர், கழிவுநீர் வழிந்தோட வகை செய்ய வேண்டும். தரை, சொரசொரப்பாக இருக்க வேண்டும். இது, மாடுகள் வழுக்கி விழாமல் இருக்க உதவும்.
மாடுகள் படுக்கும் போது, மடியும் காம்புகளும் தரையில் படுவதால் நுண்ணுயிரி நோய்த் தொற்று ஏற்படலாம். எனவே, தரையில் நுண்ணுயிரிகள் இல்லாமல் பார்த்துக் கொள்ள வேண்டும்.
தினசரி இருமுறை சாணத்தை அகற்றிச் சுத்தம் செய்ய வேண்டும். இல்லையேல், ஈக்கள், கொசுக்கள் பெருகும். பால் கறக்கும் இடத்தை, வாரம் இருமுறை பினாயில், டெட்டால் மற்றும் சுண்ணாம்பால் சுத்தப்படுத்த வேண்டும்.
கறவை மாடுகள்
மாடுகளின் மடி, காம்புகள், தொடை, தொடை இடுக்குகள், வால்களில் ஒட்டியிருக்கும் சாணத்தைச் சுத்தப்படுத்த வேண்டும். பாலைக் கறப்பதற்கு ஒருமணி நேரத்துக்கு முன், தொழுவத்தைக் கழுவ வேண்டும். கறவை வேளையில் தொழுவத்தைச் சுத்தப்படுத்தவோ, வைக்கோல் இடவோ கூடாது.
தகுந்த கிருமி நாசினியால் மடியைச் சுத்தம் செய்து, சுத்தமான துணியால் மடி மற்றும் காம்புகளைத் துடைக்க வேண்டும். இதனால், நுண்ணுயிரிகள் பாலில் சேர்வது வெகுவாகக் குறையும். கறவையின் போது சில மாடுகள் வாலை வீசிக்கொண்டே இருக்கும். இதைத் தவிர்க்க, மாட்டின் தொடையிடுக்கில் வாலைக் கட்டி விடலாம்.
கறவையாளர்
பால் கறவையாளர் நோயற்றவராக இருக்க வேண்டும். பாலைக் கறக்கும் போது, புகைத்தல், எச்சில் துப்புதல், இருமுதல் கூடாது. கறவைக்கு முன், கைகளைச் சோப்பால் கழுவித் துணியால் துடைக்க வேண்டும். இதனால், கறவையாளர்கள் மூலம், பாலுக்குள் செல்லும் நுண்ணுயிரிகள் குறையும்.
கறவைப் பாத்திரம்
கறவைப் பாத்திரங்களை முதலில் நீரில் கழுவ வேண்டும். பிறகு, ஒரு லிட்டர் நீருக்கு 200 கிராம் பிளிச்சீங் பௌடர் வீதம் கலந்த கலவையால் கழுவி வெய்யிலில் நன்கு உலர்த்திய பிறகே கறவைக்குப் பயன்படுத்த வேண்டும்.
இதனால், பாத்திரங்களில் உள்ள கிருமிகளைக் களைய முடியும். பாத்திரங்களின் வாய் குறுகியும் அடிப்பகுதி அகன்றும் இருக்க வேண்டும். எவர் சில்வர், அலுமினியப் பாத்திரங்கள் மிகவும் ஏற்றவை.
கறவையின் போது பின்பற்ற வேண்டியவை
காம்புகளில் நுழைந்துள்ள கிருமிகள் பாலில் சேராமல் தடுப்பதற்கு, முதல் பாலைத் தரையில் பீய்ச்சிவிட வேண்டும். கறந்த பின்பும் சில நிமிடங்கள் காம்புத் துளைகள் திறந்தே இருக்கும். இந்த நேரத்தில் நுண்ணுயிரிகள் மடிக்குள் சென்று மடிநோயை ஏற்படுத்தலாம்.
எனவே, பாலைக் கறந்ததும் மாடுகள் படுக்காமல் இருக்க, பசுந் தீவனத்தைக் கொடுக்கலாம். கறந்த பின்பு காம்புகளைக் கிருமி நாசினியில் முக்கியெடுக்க வேண்டும். இது, நோய்த்தொற்று ஏற்படுவதைத் தவிர்க்கும்.
கறந்த பாலை உடனடியாகச் சுத்தமான, மெல்லிய துணியால் வடிகட்டி, பாலில் சேர்ந்த தூசை நீக்க வேண்டும். பிறகு உடனடியாக 10 டிகிரி செல்சியஸ் அல்லது அதற்குக் குறைந்த வெப்ப நிலையில் குளிர வைக்க வேண்டும். இதனால், பாலிலுள்ள நுண்ணுயிரிகள் மேலும் வளராமல் தடுக்கலாம். இல்லையெனில் பால் விரைவில் கெட்டு விடும்.
கு.மஞ்சு, இரா.இளவரசி, த.பாலசுப்பிரமணியம், ஹ.கோபி, பன்றி இனவிருத்திப் பிரிவு, கால்நடை அறிவியல் முதுகலை ஆராய்ச்சி நிலையம், காட்டுப்பாக்கம் – 603 203.
சந்தேகமா? கேளுங்கள்!