My page - topic 1, topic 2, topic 3

இல்லறத்தில் சிறந்த இருவாச்சி!

செய்தி வெளியான இதழ்: 2017 பிப்ரவரி.

ந்தியாவுக்குப் பெருமை சேர்க்கும் விதமாகத் தென்னிந்திய மேற்குத் தொடர்ச்சி மலைகள் அமைந்துள்ளன. இந்த மலைகள் பல சிறப்புகளைக் கொண்டுள்ளன. எண்ணற்ற தாவரங்கள் மற்றும் உயிரினங்கள் இங்கே வாழ்கின்றன. அவற்றில் இருவாச்சிப் பறவைகளும் (great Indian hornbill) அடங்கும்.

இருவாச்சிப் பறவை, மஞ்சள், வெள்ளை கறுப்பு ஆகிய நிறங்களில், நீண்ட அலகு மற்றும் இறகுகளைக் கொண்டிருக்கும். இப்பறவையின் மூக்கில் அமைந்துள்ள தலைக்கவசம் (casque) இதற்கு மேலும் ஒரு வாய் இருப்பதைப் போன்ற தோற்றத்தை ஏற்படுத்தும். அதனால், இப்பறவை இருவாய்ப் பறவை, அதாவது, இருவாச்சி என அழைக்கப்படுகிறது.

பெண் இருவாச்சியை விட, ஆண் இருவாச்சியின் தோற்றம் பெரிதாகவும், தலைக்கவசத்தின் முன்னும் பின்னும் கறுப்பாகவும் இருக்கும். பெண் இருவாச்சியின் தலைக்கவசம் மஞ்சளாக இருக்கும். இப்பறவை பறக்கும் போது வெளிப்படும் ஓசை, ஹெலிகாப்டர் பறக்கும் போது உண்டாகும் ஓசையை ஒத்திருக்கும். இப்பறவை பார்ப்பதற்கும், பறக்கும் போது ஏற்படும் ஓசை கேட்பதற்கும் இனிமையாக இருக்கும்.

இருவாச்சிப் பறவைகளில் உலகளவில் 54 உள்ளினங்கள் உள்ளன. இவற்றில் 44 வகைகள், அழிந்து வரும் உயிரினங்களின் பட்டியலில் உள்ளன. இந்தியாவில் ஒன்பது இருவாச்சி வகைகள் உள்ளன. இவற்றில், தமிழ்நாட்டில் மட்டும் நான்கு இனங்கள் உள்ளன. அவை, பெரும்பாத இருவாச்சி, மலபார் இருவாச்சி, சாம்பல் நிற இருவாச்சி, மலபார் பாத இருவாச்சி ஆகும்.

அந்தமான் தீவுகளில் உள்ள நார் கொண்டான் என்னும் வகை, மிகவும் அரிதானதாக உள்ளது. கேரளம் மற்றும் அருணாசலப் பிரதேசத்தின் மாநிலப் பறவை இருவாச்சி ஆகும்.

இல்லற வாழ்க்கைக்குச் சிறந்த எடுத்துக்காட்டாக இருவாச்சியைக் கூறலாம். ஏனெனில், ஓர் ஆண் பறவையும் பெண் பறவையும், கணவன் மனைவியைப் போலச் சேர்ந்து வாழும். இருக்கும் வரையில் தன் இணையை விட்டு விலகாமல் வாழும். பிப்ரவரி முதல் மே வரையான காலத்தில் இந்தப் பறவைகள் இனப்பெருக்கத்தில் ஈடுபடும்.

இதில், ஈடுபடுவதற்கு முன், உயர்ந்த மரங்களில் கூடுகளை அமைக்கும். இதற்கு, மலை வேம்பு, நாவல் மரம், கருவாகை மரம், மாமரம், மருதம், தான்றிக்காய் மரம் ஆகியவற்றில் உள்ள பொந்துகளைத் தேர்ந்தெடுக்கும். பெண் இருவாச்சி தனது இனப்பெருக்கக் காலத்தில் தன் இறகுகளை உதிர்த்துப் படுக்கையை அமைக்கும்.

உணவளிக்க மட்டும் சிறு துளை போன்ற அமைப்பை ஏற்படுத்தும். கூட்டிலுள்ள பெண் இருவாச்சிக்கும் குஞ்சுகளுக்கும் தேவையான இரையைக் கொடுப்பதும், கூட்டைப் பாதுகாப்பதும் ஆண் இருவாச்சியின் முழுநேரப் பணியாகும்.

இருவாச்சியின் அடைக்காலம் 31 நாட்களாகும். பொரித்த குஞ்சுகள் வெளியே வருவதற்கு இரண்டு மாதங்களுக்கு மேலாகும். குஞ்சுகளைப் பொரித்த பிறகு, பெண் இருவாச்சி, அந்த முட்டை ஓடுகளைச் சேகரித்து ஆண் இருவாச்சியிடம் கொடுக்கும். அவற்றை ஆண் இருவாச்சி, கூட்டிலிருந்து எடுத்துச் சென்று அப்புறப்படுத்தும்.

இருவாச்சி அனைத்து உண்ணியாகும். தன் இணைக்கும், குஞ்சுகளுக்கும் வேண்டிய பழங்கள், கொட்டைகள், பூச்சிகள், கணுக்காலிகள் மற்றும் ஊர்வனவற்றைச் சேகரித்துக் கொடுக்கும் வேலையை ஆண் இருவாச்சி செய்யும்.

இருவாச்சிப் பறவைகளின் எச்சம் மூலம், பத்துக்கும் மேற்பட்ட மர வகைகளின் விதைகள் காடு முழுவதும் பரவுகின்றன. அதனால், இருவாச்சிப் பறவையை, காடுகளின் காவலன் என, இயற்கை வல்லுநர்கள் கருதுகின்றனர்.


மருத்துவர் இரா.பிரதீப், முனைவர் மு.பழனிவேல்ராஜன், முனைவர் எ.பிரதீபா, முனைவர் எ.செந்தில்குமார், முனைவர் எஸ்.பிரதாபன், சென்னைக் கால்நடை மருத்துவக் கல்லூரி, சென்னை – 600 007.

Share:

  சந்தேகமா? கேளுங்கள்!  

 

இன்னும் படியுங்கள்!

Enable Notifications OK No thanks