வெள்ளாட்டுக் கிடாக்குட்டிகள் வளர்ப்பு!

வெள்ளாட்டு goat 1 1

ப்போது, இறைச்சியை விரும்பி உண்ணும் பழக்கம் மக்களிடம் மிகுந்து வருகிறது. இதைப் போல, எல்லோர்க்கும் வேலைவாய்ப்பு என்பது கேள்விக்குறியாக உள்ளது. இத்தகைய சூழலில் வெள்ளாடு வளர்ப்பு மிகச் சிறந்த தொழிலாகும். குறைந்த முதலீடு போதும். வெள்ளாடுகள் மூலம், இறைச்சி, தோல், உரோமம், எரு ஆகிய பொருள்கள் கிடைக்கின்றன.

ஆடுகளை இனப்பெருக்கம் செய்து குட்டிகளைப் பெற்று விற்பனை செய்து இலாபம் ஈட்டலாம். இல்லையேல், 2-3 மாத வயதுள்ள கிடாக் குட்டிகளை வாங்கி ஆறேழு மாதங்கள் நன்றாக வளர்த்து, இறைச்சிக்காக விற்பனை செய்து நல்ல இலாபம் அடையலாம். இதற்குத் தேவை, எளிமையான கொட்டில், தீவனம் அளிக்கத் தேவையான வசதி, மருந்துக் குளியல் தொட்டி ஆகியன ஆகும்.

எளிமையான கொட்டில்

இறைச்சிக்காக வளர்க்கப்படும் கிடாக் குட்டிகளுக்குக் குறைந்த செலவில் எளிய கொட்டிலை அமைக்கலாம். அதே சமயம், மழை, வெய்யில், பனிக் காலத்தில், இரவு நேரத்தில் பாதுகாப்பு உள்ளதாக அமைக்க வேண்டும். ஒரு கிடாய்க்கு 10-15 சதுரடிக் கொட்டிலும், 15-30 சதுரடி திறந்த வெளியும் இருக்க வேண்டும். சுற்றுச் சுவருக்குப் பதில், 5-6 அடி உயரமுள்ள கம்பி வலையை அமைத்துச் செலவைக் குறைக்கலாம்.

தீவனம் அளிக்கத் தேவையான வசதி

தீவனத் தொட்டிகளை மரத்தில் அல்லது இரும்பு, தகரத்தில் செய்யலாம். பத்துக் கிடாக்களுக்கு 10 அடி நீளம், 2 அடி அகலம், 1.5 அடி உயரம் உள்ள தீவனத் தொட்டி போதும். குடிநீர்த் தொட்டிகளை, சிமெண்ட், பிளாஸ்டிக் அல்லது இருப்புத் தகட்டில் செய்து கொள்ளலாம். பசுந்தீவனத்தைச் சிறிய துண்டுகளாக நறுக்கிப் போட்டால், தீவனம் வீணாகாது.

மருந்துக் குளியல் தொட்டி

ஆடுகளில் புற ஒட்டுண்ணிகள் பாதிப்பு அதிகளவில் இருக்கும். இதனால் தான் ஆடுகளை, ஒட்டுண்ணிகளின் அருங்காட்சியகம் என்று கூறுவர். புற ஒட்டுண்ணிகளின் பாதிப்பைக் குறைக்க, கிடாய்களுக்கு மருந்துக் குளியல் அளிக்க வேண்டும். இதற்கு, குறைந்த செலவில் சிமெண்ட் உறையை வைத்து, மருந்துக் குளியல் தொட்டியைக் கட்டிக் கொள்ளலாம்.

பராமரிப்பு முறைகள்

எளிய கொட்டில் முறை: கொட்டில், சமமான, மேடான, உறுதியான தரைப் பகுதியில் இருக்க வேண்டும். நல்ல வடிகால் வசதி, காற்றோட்ட வசதி இருக்க வேண்டும். வெய்யிலின் பாதிப்பைக் குறைக்க, கொட்டிலின் நீளவாட்டம் கிழக்கு மேற்காக இருக்க வேண்டும். நன்கு வளர்ந்த கிடாய்க்கு 15-20 சதுரடி இடவசதி தேவை.

கொட்டிலின் நீளம், கிடாக்களின் எண்ணிக்கைக்கு ஏற்பவும், அகலம் இருபது அடிக்கு மிகாமலும் இருக்க வேண்டும். திறந்த வெளிப் பகுதி, கொட்டிலைப் போல, இரண்டு மடங்கு இருந்தால், கிடாக்கள் உலாவ ஏதுவாக இருக்கும்.

தீவனப் பராமரிப்பு: இறைச்சிக்காக வளர்க்கும் கிடாக்களில் நல்ல இலாபம் பெற, தீவனத்தில் அதிகக் கவனம் செலுத்த வேண்டும். அதாவது, தீவனம் தரமாக, செலவு குறைந்ததாக இருக்க வேண்டும். இத்தொழில் இலாபமிக்கதாக அமைய, சரியான தீவன முறையைக் கடைப்பிடிக்க வேண்டும். தீவனங்களை, பசுந்தீவனம், உலர் தீவனம், அடர் தீவனம் என, மூன்று வகைகளாகப் பிரிக்கலாம்.

பசுந்தீவனத்தில் புரதம், தாதுப்புகள், உயிர் சத்துகள், குறிப்பாக, உயிர்ச்சத்து ஏ மற்றும் ஈ ஆகியன உள்ளன. பசுந்தீவனங்களில் பயறுவகை, புல்வகை, தானிய வகை மற்றும் மரவகைத் தீவனங்களைக் கிடாக்களுக்குக் கொடுக்க வேண்டும். வளர்ந்த கிடாக்களுக்கு, தினமும் 3-5 கிலோ பசுந்தீவனம், இரண்டு கிலோ உலர் தீவனம், 250 கிராம் அடர் தீவனம் தரப்பட வேண்டும்.

காயடித்தல்: இறைச்சிக்கு வளர்க்கும் கிடாக்களைக் காயடித்து விட வேண்டும். இதற்குச் சரியான வயது 2-3 மாதம் ஆகும். இதனால், இறைச்சியின் சுவை கூடும். உடல் எடையும் விரைவாக அதிகரிக்கும். ஆட்டுத் தோலின் தரம் உயர் மதிப்புள்ளதாக இருக்கும். பண்ணையில் கிடாக்கள் அமைதியாக இருக்கும்.

தாதுப்புக் கட்டி: இதில், முக்கியத் தாதுப்புகளான கால்சியம், பாஸ்பரஸ், சோடியம் குளோரைடு, பொட்டாசியம், கந்தகம் மக்னீசியமும்; குறைவாகத் தேவைப்படும் இரும்பு, துத்தநாகம், தாமிரம், மாங்கனீசு போன்றவையும் அடங்கி இருக்கும். தாதுப்புக் கட்டியை ஆட்டுக் கொட்டிலில் கட்டித் தொங்க விட்டு, கிடாக்களுக்குத் தேவையான தாதுகளைத் தர வேண்டும்.

குடற்புழு நீக்கம்: மாதம் ஒருமுறையென, ஆறு மாதம் வரை, ஆட்டுக் குட்டிகளுக்குக் குடற்புழு நீக்கம் செய்ய வேண்டும். பிறகு மூன்று மாதங்களுக்கு ஒருமுறை, அதாவது, பருவமழை தொடங்கு முன்பு ஒரு முறையும், மழையின் போது ஒரு முறையும், மழைக்குப் பின் இரு முறையும் கொடுக்க வேண்டும்.

ஜனவரி – மார்ச் காலத்தில், தட்டைப்புழு நீக்க மருந்து, ஏப்ரல் – ஜூன் காலத்தில், உருளை மற்றும் நாடாப்புழு நீக்க மருந்து, ஜூலை – செப்டம்பர் காலத்தில், தட்டைப்புழு நீக்க மருந்து, அக்டோபர் – டிசம்பர் காலத்தில், உருளை மற்றும் நாடாப்புழு நீக்க மருந்து தரப்பட வேண்டும்.

புறஒட்டுண்ணி நீக்கம்: வெள்ளாடுகளை, பேன், உண்ணி, தெள்ளுப்பூச்சி, மூக்குப்புழு போன்ற புற ஒட்டுண்ணிகள் அதிகமாகத் தாக்கும். இதனால், குட்டிகளில் வளர்ச்சிக் குறை ஏற்படும். எனவே, இவற்றைக் கட்டுப்படுத்த, மூன்று மாதங்களுக்கு ஒருமுறை கிடாக்களுக்கு மருந்துக் குளியல் அளிக்க வேண்டும்.


வெள்ளாட்டு S.ILAVARASAN

மரு.ச.இளவரசன், மரு.த.அ.விஜயலிங்கம், மரு.ந.வ.இராஜேஷ், கால்நடை மருத்துவப் பல்கலைக்கழகப் பயிற்சி மற்றும் ஆராய்ச்சி மையம், இராமநாதபுரம் – 623 503.

Share:

விவசாயம் / கால்நடை வளர்ப்புக் குறித்து

சந்தேகமா? கேளுங்கள்!


இன்னும் படியுங்கள்!

Discover more from பச்சை பூமி

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading