வெள்ளாடு வளர்ப்பு மேம்பட என்ன செய்ய வேண்டும்?

வெள்ளாடு

செய்தி வெளியான இதழ்: 2018 பிப்ரவரி.

சு, எருமைகளை விட, வெள்ளாடுகள் அதிகமாகப் பாலைக் கொடுக்கும் என்பது பலருக்குத் தெரியாது. ஒரேயளவு தீவனத்தில் ஆடுகள் 46 சத பாலையும், பசுக்கள் 38 சத பாலையும் உற்பத்தி செய்கின்றன.

நார்ச்சத்து உணவை, செம்மறி ஆடுகளை விட 4 சதம், எருமையை விட 8 சதம், பசுவை விட 9 சதம் அளவில், வெள்ளாடுகள் அதிகமாகப் பயன்படுத்துகின்றன.

வெள்ளாடுகளின் தீவனம் குறைந்த விலையில் உள்ளூரிலேயே கிடைப்பதாக, தரமானதாக, சத்துள்ளதாக, எளிதில் செரிக்கக் கூடியதாக இருக்க வேண்டும். உடல் வளர்ச்சி, இனவிருத்தி, அதிக இறைச்சி உற்பத்திக்கு ஏற்றதாக இருக்க வேண்டும்.

இன்னும் பழைய முறையிலேயே ஆடுகளை வளர்க்காமல், இறைச்சிக்கு அல்லது இனவிருத்திக்கு அல்லது குட்டிகள் விற்பனைக்கு என, எந்த நோக்கத்துக்காக வளர்க்கப் போகிறோம் என்பதை, பண்ணையைத் தொடங்கும் முன்பே முடிவு செய்துவிட வேண்டும்.

ஆடுகளை எப்படி வளர்ப்பது, எந்த முறையில் வளர்த்தால் இலாபம் என்பதையும் தெளிவுப்படுத்திக் கொள்ள வேண்டும். அடர் தீவனம் மற்றும் பசுந்தீவனத்தை எந்தளவில், எப்படிக் கொடுக்க வேண்டும் என்பதையும் தெரிந்து கொள்ள வேண்டும். இருக்கும் மேய்ச்சல் நிலத்துக்கு ஏற்ற வகையில், ஆடுகளின் எண்ணிக்கையைத் தீர்மானிக்க வேண்டும்.

தரகர்களிடம் அல்லது சந்தைகளில் இருந்து வெள்ளாடுகளை வாங்கக் கூடாது. ஏனெனில், மண், மணல், தவிடு ஆகியவற்றை நீரில் கலந்து, காலையிலேயே ஆடுகளின் வாயில் ஊற்றி வயிற்றை நிரப்பி விடுவார்கள். இந்த ஆடுகள் திடமாகவும், நல்ல எடையுடனும் இருப்பதைப் போலத் தெரியும். ஆனால், வாங்கி வந்த இரண்டு நாளில் கழிச்சல் உண்டாகி இறந்து விடும்.

எனவே, கால்நடை மருத்துவரின் ஆலோசனையைப் பெற்று, அரசு பண்ணைகள் அல்லது நன்கு பராமரிக்கும் தனியார் பண்ணைகளில் இருந்து தான் ஆடுகளை வாங்க வேண்டும்.

ஆடுகளைத் தாக்கும் நோய்கள், அவற்றைத் தடுக்கும் முறைகளைப் பற்றி, குடற் புழுக்களை நீக்க வேண்டியதன் அவசியத்தைப் பற்றி, என்னென்ன மருந்தை, சுழற்சி முறையில் எப்படிக் கொடுக்க வேண்டும் என்பதைப் பற்றித் தெரிந்து கொள்ள வேண்டும்.

எத்தகைய பெட்டை ஆடுகளை, பொலிக்கிடாவை வாங்க வேண்டும் என்பதையும் அறிந்து கொள்ள வேண்டும். ஆடுகளின் சினை அறிகுறி, ஈனும் அறிகுறி, கிடாவின் பொலிவுத் தன்மை ஆகியவற்றைத் தெரிந்து கொள்ள வேண்டும்.

ஆட்டுப் பண்ணையைத் தொடங்கும் முன் கால்நடை மருத்துவரின் ஆலோசனை அவசியம். மேலும், நன்கு செயல்படும் 5-6 பண்ணைகளைப் பார்வையிட வேண்டும். அங்கே உங்களுக்கு ஏற்படும் ஐயங்களைக் கேட்டுத் தெளிவுபெற வேண்டும். பண்ணையில் ஆர்வத்துடன் செயல்பட வேண்டும்.

வெள்ளாடு மற்றும் செம்மறி ஆடுகளுக்கான தடுப்பூசிகள்

இரணஜன்னித் தடுப்பூசி: ஈன்று 48 மணி நேரத்தில் போட வேண்டும்.

கோமாரி தடுப்பூசி: பிறந்து இரண்டு மாதத்தில், பிறகு, ஆண்டில் இருமுறை, அதாவது, ஜனவரி, ஜூனில் போட வேண்டும்.

ஆட்டம்மைத் தடுப்பூசி: பிறந்து 6 மாதத்தில், அடுத்து, ஆண்டில் ஒருமுறை, அதாவது, மார்ச் மாதம் போட வேண்டும்.

துள்ளுமாரித் தடுப்பூசி: பிறந்து 6 மாதத்தில், அடுத்து, ஆண்டில் இருமுறை, அதாவது, ஏப்ரல், ஆகஸ்ட்டில் போட வேண்டும்.

பி.பி.ஆர். என்னும் ஆட்டுக்கொல்லி நோய்த் தடுப்பூசி: பிறந்து 6 மாதத்தில், அடுத்து, ஆண்டில் இருமுறை, அதாவது, ஆகஸ்ட், செப்டம்பரில் போட வேண்டும்.

நீலநாக்கு நோய்த் தடுப்பூசி: பிறந்து 6 மாதத்தில், அடுத்து, ஆண்டில் ஒருமுறை, அதாவது, செப்டம்பரில் போட வேண்டும்.

அடைப்பான், தொண்டை அடைப்பான் தடுப்பூசி: பிறந்து 6 மாதத்தில், அடுத்து, ஆண்டில் ஒருமுறை, நோய்த் தாக்கமுள்ள பகுதிகளில் மட்டும்.

குறிப்பு: ஒவ்வொரு தடுப்பூசிக்கும் 21 நாள் இடைவெளி இருக்க வேண்டும். வெள்ளாடு மற்றும் செம்மறி ஆடுகளுக்கு 2-ஆம் மாதம் நாடாப்புழு நீக்க மருந்தைக் கொடுக்க வேண்டும்.

அடுத்து, 3 மாதத்துக்கு ஒருமுறை, மழைக்கு முன், தட்டைப்புழு, உருண்டைப் புழு, நாடாப்புழு நீக்க மருந்துகளை, சுழற்சி முறையில் கொடுக்க வேண்டும்.

பண்ணையைத் தொடங்கு முன், வெள்ளாடு வளர்ப்புப் பயிற்சியைப் பெறுவது நல்லது. மாவட்டம் தோறும் உள்ள வேளாண்மை அறிவியல் நிலையம், தமிழ்நாடு கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக் கழகத்தின் பயிற்சி மற்றும் ஆராய்ச்சி மையத்தில், கால்நடைகள் தொடர்பான அனைத்துப் பயிற்சிகளும் வழங்கப்படுகின்றன.

கால்நடைப் பராமரிப்புத் துறை மூலமும் இலவசமாகப் பயிற்சிகள் நடத்தப்படுகின்றன. மேலும், நூல்களையும் வாங்கிப் படிப்பதுடன், பண்ணையில் சிறிய நூலகம் ஒன்றை வைத்துக் கொள்வது மிகவும் பயன் தரும்.

பண்ணைப் பராமரிப்புடன், பதிவேடு பராமரிப்பும் இருந்தால் தான், பண்ணை இலாபத்தில் இயங்குகிறதா, நட்டத்தில் இருக்கிறதா என்பதை அறிந்து, பண்ணையை இலாபத்தில் கொண்டு செல்வதற்கான நடவடிக்கைகளை எடுக்க முடியும்.

வரவு செலவுக் கணக்கைச் சரியாக எழுத வேண்டும். கஷ்டப்பட்டு வளர்க்கும் ஆடுகளை, தகுந்த வயதில் விற்றால் தான் இலாபம் கிடைக்கும்.

அதைப்போல, கருவுறாத மற்றும் நோயுற்ற ஆடுகளை, பண்ணையில் இருந்து நீக்கிவிட வேண்டும். ஆடுகளுக்குச் செயற்கை முறையில் கருவூட்டுவது சிறப்பு. இதுவரையில் கூறியுள்ள கருத்துகளில் கவனம் செலுத்தினால், வெள்ளாடு வளர்ப்பு இலாபமுள்ளதாக அமையும் என்பதில் ஐயமில்லை.


வெள்ளாடு Dr.Jegath Narayanan e1612953778555

டாக்டர் A.R.ஜெகத் நாராயணன், மேனாள் இணை இயக்குநர், கால்நடைப் பராமரிப்புத் துறை, சேலம் – 636 008.

Share:

விவசாயம் / கால்நடை வளர்ப்புக் குறித்து

சந்தேகமா? கேளுங்கள்!


இன்னும் படியுங்கள்!

Discover more from பச்சை பூமி

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading