வெள்ளாடுகளில் இனப்பெருக்கப் பராமரிப்பு!

வெள்ளாடு

வெள்ளாடு வளர்ப்பு, மற்ற கால்நடைகள் வளர்ப்பைக் காட்டிலும், அதிக இலாபம் தரும் தொழிலாகும். ஊரக வேலை வாய்ப்பை உருவாக்கி, வறுமை ஒழிப்புக்குத் துணையாக விளங்குவதில், வெள்ளாடு சிறந்து விளங்குகிறது.

இந்தியாவில் ஏழைகளின் பசு எனப்படும் வெள்ளாடு, ஐரோப்பிய நாடுகளில் பச்சிளம் குழந்தைகளுக்குப் பால் தரும் செவிலித்தாய் எனப்படுகிறது.

சிறு, குறு விவசாயிகள் மற்றும் நிலமற்ற மக்களின் வாழ்க்கை ஆதாரமாக விளங்கும் வெள்ளாடுகளை வளர்க்க, குறைந்த செலவே ஆகும். இவற்றைச் சாலை ஓரங்களில், தரிசு நிலங்களில், மலைச் சரிவுகளில் மேயவிட்டு வளர்க்கலாம்.

அனைத்துப் புல் பூண்டுகளை, இலை தழைகளை, மற்ற கால்நடைகள் உண்ணாத பொருள்களைக் கூட உண்டு வாழும். வருவாய் மற்றும் வேலை வாய்ப்பைத் தருவதால், வெள்ளாடு ஏழைகளின் நடமாடும் வங்கியெனப் போற்றப்படுகிறது.

நன்மைகள்

குறைந்த முதலீட்டில் குறைந்த செலவில் வளர்க்கலாம். உற்பத்தி மற்றும் பல குட்டிகளை ஈனும் திறன், தீவன மாற்றுத் திறன் இதற்கு அதிகம். அனைவரும் விரும்பும் பால், இறைச்சி, தோல், உரம் கிடைக்கும். இரண்டு ஆண்டுகளில் மூன்று முறை ஈனும். வெள்ளாட்டுப் பால், சளி மற்றும் சுவாசச் சிக்கலைக் குணமாக்கும்.

இனத்தேர்வு

வளர்ப்பு முறைக்கு ஏற்ப, இனங்களைத் தேர்வு செய்யலாம். ஜமுனாபாரி, பார்பாரி, பீட்டல், தலைச்சேரி ஆடுகளில் அதிகளவில் பால் கிடைக்கும். ஜமுனாபாரி, போயர், சிரோகி ஆடுகளில் இறைச்சி அதிகமாகக் கிடைக்கும்.

தலைச்சேரி, பார்பாரி ஆடுகள், நிறையக் குட்டிகளை ஈனும். பாஷ்மினா, அங்கோரா ஆடுகளில், நல்ல உரோமம் கிடைக்கும். தமிழ்நாட்டில் கொட்டில் முறையில் வளர்க்க, போயர், ஜமுனாபாரி, தலைச்சேரி, சிரோகி இனங்கள் ஏற்றவை.

இனப்பெருக்கம்

வெள்ளாடு வளர்ப்பில், இனப்பெருக்க பராமரிப்பு மிகவும் முக்கியம். பெட்டை ஆடு 6-8 மாதத்திலும், கிடா 8-10 மாதத்திலும் இனப்பெருக்கப் பருவத்தை அடையும்.

ஆனால், பெட்டை ஆட்டை 12-15 மாதத்திலும், கிடாவை 18 மாதத்திலும் இனச் சேர்க்கைக்கு விட வேண்டும். பெட்டை ஆடுகள் 19-21 நாட்களுக்கு ஒருமுறை சினைக்கு வரும். இப்பருவம் 24-28 மணி நேரம் வரையில் இருக்கும்.

சினைப்பருவ அறிகுறிகள் தெரிந்து 12 மணி நேரம் கழித்து 24 மணி நேரத்தில் தரமான கிடாவுடன் இனச் சேர்க்கை செய்ய வேண்டும். இனப் பெருக்கம் செய்ய, 20-30 ஆடுகளுக்கு ஒரு பொலிக்கிடா இருக்க வேண்டும்.

இனச் சேர்க்கை செய்த 21 நாட்களுக்குப் பிறகு பெட்டைகளில் சினைப்பருவ அறிகுறி தெரிந்தால், மீண்டும் இனச்சேர்க்கை செய்ய வேண்டும்.

சினை அறிகுறிகள்

சினைக்குத் தயாராக உள்ள ஆடுகள், அடிக்கடி கத்தும். நிதானமின்றி, வாலை ஆட்டிக் கொண்டு, தீவனத்தில் விருப்பம் இல்லாமல் இருக்கும். மற்ற ஆடுகள் மீது தாவும். பிற ஆடுகள் தம் மீது தாவுவதை விரும்பும். பால் உற்பத்தி அளவு குறையும்.

பிறப்பு உறுப்புத் தடித்திருக்கும். அதிலிருந்து வழவழப்பான திரவம் வழியும். வெள்ளாடுகளில் சினை அறிகுறிகள் தெளிவாகத் தெரியாது. எனவே, பொலிக் கிடாவைக் காலை, மாலையில் பெட்டை ஆடுகளுடன் திரிய விட வேண்டும்.

சினைக்காலம் 145-150 நாட்களாகும். சினையான ஆடுகளின் வயிறு கருவூட்டல் செய்த இரண்டு மாதத்தில் பெரிதாகத் தெரியும். ஒரு ஆடு சினையாக உள்ளதா இல்லையா என்பதைக் காலை நேரத்தில் அறியலாம்.

வெறும் வயிறாக உள்ள காலை நேரத்தில் சினையில்லா ஆடுகளின் வயிறு ஒட்டியும், சினை ஆடுகளின் வயிறு பெருத்தும் இருக்கும். வயிற்றின் அடியில் ஒருபுறத்தில் ஒரு கையை வைத்து, மறுபுறம் இருந்து இன்னொரு கையால் மெதுவாக அழுத்திப் பார்த்தால் குட்டி இருப்பது தெரியும்.

ஈனுதல்

ஈற்றுக் காலத்தில் ஆடு அமைதியற்றுக் கத்திக் கொண்டே இருக்கும். வயிறு சுருங்கி விரிந்தபடி இருக்கும். அடிக்கடி உட்கார்ந்து எழுந்தபடி இருக்கும். மூச்சுத் திணறல் இருக்கும். தரையைக் காலால் பிராண்டும்.

இந்த அறிகுறிகள் தெரிந்த ஒரு மணி நேரத்தில், குட்டியை ஈன்று விடும். குட்டி, முன்னங் கால்களை நீட்டி, தலையைக் கால்களின் மேல் வைத்தபடி வெளிவரும்.

ஒன்றுக்கு மேற்பட்ட குட்டிகள் பிறப்பதாக இருந்தால், முதல் குட்டி பிறந்து சில நிமிடங்களில் இருந்து ஒரு மணி நேரத்தில் அடுத்த குட்டிப் பிறந்து விடும். இதற்கு மேலும் தாமதம் ஏற்பட்டால், உடனே கால்நடை மருத்துவரை அணுக வேண்டும்.

ஈன்று அரை மணியில் இருந்து எட்டு மணி நேரத்தில் நஞ்சுக்கொடி வெளிவந்து விடும். தாய் ஆட்டுக்குச் சரியான முறையில் அடர் தீவனம், பசுந்தீவனம் கொடுத்தால், அதன் கருப்பை சுருங்கி 45 நாட்களில் மீண்டும் சினைக்கு வரும். இல்லையேல் 7-9 மாதங்களுக்குப் பிறகு தான் சினைக்கு வரும்.


வெள்ளாடு Raghavendran

வ.பா.இராகவேந்திரன், இ.சுப்ரமணியன், ப.அருணாசலம், வேளாண்மைக் கல்லூரி, மதுரை – 625 104.

Share:

விவசாயம் / கால்நடை வளர்ப்புக் குறித்து

சந்தேகமா? கேளுங்கள்!


இன்னும் படியுங்கள்!

Discover more from பச்சை பூமி

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading