My page - topic 1, topic 2, topic 3

வருவாயைப் பெருக்கும் வாத்து வளர்ப்பு!

வாத்துக் குஞ்சுகளை மூன்று வாரம் வரை மிகவும் கவனமாக வளர்க்க வேண்டும். முதல் வாரத்தில் குண்டு மின்விளக்கு மூலம் குஞ்சுகளுக்கு வெப்பம் கொடுக்க வேண்டும். முதல் வாரம் 90 டிகிரி பாரன்ஹீட், இரண்டாம் வாரம் 85 டிகிரி பாரன்ஹீட், மூன்றாம் வாரம் 80 டிகிரி பாரன்ஹீட் வெப்பம் கொடுக்க வேண்டும்.

செய்தி வெளியான இதழ்: 2018 அக்டோபர்.

நாட்டுக் கோழிகளை விட வாத்துகள் அதிக முட்டைகளை இடும். ஐப்பசி முதல் பங்குனி வரையில் முட்டைகள் நிறையக் கிடைக்கும். வாத்து முட்டையின் எடை, கோழி முட்டையின் எடையை விட 10-20 கிராம் கூடுதலாக இருக்கும். விலையும் அதிகம் என்பதால், வாத்து வளர்ப்போருக்கு வருமானம் கூடும்.

நிறையச் செலவில் தங்குமிடம் அமைக்கத் தேவையில்லை. இரவில் வாத்துகளை அடைக்க, மூங்கில் பட்டி இருந்தால் போதும். வாத்துகள் இரவில் முட்டைகளை இடுவதால் எளிதாகச் சேகரிக்கலாம். வாத்துகள் 2-3 ஆண்டுகள் வரை முட்டைகளை இடும்.

வாத்து இனங்கள்

காக்கி கேம்பல்: வணிக நோக்கில் முட்டை உற்பத்திக்கு ஏற்றது. இலண்டனில் இருந்து இறக்குமதி செய்யப்பட்டது. இது, பான் வெள்ளை ரன்னர் மற்றும் மல்லார்டு இனத்தின் கலப்பாகும். பெண் வாத்தின் பின்புறம், காக்கி கலந்த பழுப்பு நிறத்திலும், கழுத்து, தலை, இறகுகள் காக்கி நிறத்திலும் இருக்கும்.

மூக்கு பச்சையாகவும், கால்கள் கருமை கலந்த ஆரஞ்சு நிறத்திலும் இருக்கும். ஆண் வாத்தின் கழுத்து, கரும்பழுப்பு நிறத்திலும், இறகுகள் காக்கி நிறத்திலும் இருக்கும்.

மூக்கு கரும் பச்சையாக, கால்கள் பழுப்புக் கலந்த ஆரஞ்சு நிறத்தில் இருக்கும். ஓராண்டில் 300 முட்டைகள் வரை இடும். பெட்டை வாத்து 2-2.2 கிலோவும், ஆண் வாத்து 2.2-2.4 கிலோவும் இருக்கும். முட்டை 65-75 கிராம் இருக்கும்.

இந்தியன் ரன்னர்: காக்கி கேம்பெலுக்கு அடுத்தபடியாக இவ்வினம் ஆண்டுக்கு 200 முட்டைகளை இடும். இந்த வாத்துகள் வெள்ளை, கறுப்பு மற்றும் சாக்லேட் நிறத்தில் இருக்கும். கழுத்து நீண்டு, நேராக, மெலிதாக இருக்கும்.

இறைச்சி வாத்து

வெள்ளை பெக்கின்: இந்த வாத்தினம் வியட்நாமில் இருந்து இறக்குமதி செய்யப்பட்டது. இந்தியச் சூழலுக்கு மிகவும் ஏற்றது. குறைந்த தீவனத்தை உண்டு விரைவாக வளர்ந்து, நல்ல இறைச்சியைத் தரும். ஆனால், ஐயில்பெரியை விட எடை குறைவாக இருக்கும்.

இதன் தலை பெரிதாக இருக்கும். தசைநார்கள் மஞ்சளாக, முட்டை வெள்ளையாக இருக்கும். இது, 2.2-2.5 கிலோ எடையை 42 நாட்களில் அடைந்து விடும்.

ஐயில்பெரி: இறகு வெள்ளையாக இருக்கும், மூக்கு பெரிதாக, கண்கள் சிவப்பாக இருக்கும். தசை வெள்ளையாக இருக்கும். ஆண் வாத்து 4.5 கிலோவும், பெண் வாத்து 4 கிலோவும் இருக்கும்.

அலங்கார இனம்

இவ்வகை வாத்துகள், அழகாக, எடை குறைவாக இருக்கும். கறுப்பு கிழக்கு இந்தியா, டெகாய், மல்லார்டு, மந்தரின் ஆகியன, அலங்கார வாத்துகள் ஆகும்.

வளர்ப்பு முறை

கோழிகளை வளர்ப்பதைப் போலவே, ஆழ்கூளம் மற்றும் கூண்டில் வளர்க்கலாம். இது தீவர வளர்ப்பு முறையாகும். நீர் இருந்தால் தான் வாத்துகளை வளர்க்க முடியும் என்பதில்லை. குடிக்க மட்டும் நீர் இருந்தால் போதும்.

நல்ல காற்றோட்டம் வேண்டும். எலித்தொல்லை இருக்கக் கூடாது. கூடாரமாக அல்லது அரை வட்டமாக கூரை இருக்கலாம். தரை, சாதாரணமாக அல்லது கம்பிகளால் இருக்கலாம்.

மிதத் தீவிர வளர்ப்பு முறையில், திறந்தவெளி அமைப்பை ஒட்டியே கொட்டகை இருக்க வேண்டும். முறையான வடிகால் வசதி இருக்க வேண்டும். இரவில் தங்கும் கொட்டகைக்கு இருபுறமும், வடிகால் இருக்க வேண்டும்.

குஞ்சு வளர்ப்பு

வாத்துக் குஞ்சுகளை மூன்று வாரம் வரை மிகவும் கவனமாக வளர்க்க வேண்டும். முதல் வாரத்தில் குண்டு மின்விளக்கு மூலம் குஞ்சுகளுக்கு வெப்பம் கொடுக்க வேண்டும். முதல் வாரம் 90 டிகிரி பாரன்ஹீட், இரண்டாம் வாரம் 85 டிகிரி பாரன்ஹீட், மூன்றாம் வாரம் 80 டிகிரி பாரன்ஹீட் வெப்பம் கொடுக்க வேண்டும்.

காக்கி கேம்பெல் குஞ்சுகளுக்கு 3-4 வாரம் வரை வெப்பம் தர வேண்டும். இறைச்சி வகையைச் சேர்ந்த பெக்கின் குஞ்சுகளுக்கு 2-3 வார வெப்பம் போதும். வெய்யில் காலத்தில் வாத்துக் குஞ்சுகளை 8-10 நாட்கள் வெப்பக் கூடுகளில் வைக்கலாம். குளிர் காலத்தில் 2-3 வாரம் வைத்திருக்க வேண்டும்.

முதல் 4 வாரம் வரை, ஒரு வாரத்துக்குத் தீவனத் தொட்டியில் 2 அங்குலம், நீர்த் தொட்டியில் 1 அங்குலம் இடவசதியை அளிக்க வேண்டும். அதற்கு மேல் வயது ஏற ஏற, தீவனத் தொட்டியில் 4 அங்குலம், நீர்த் தொட்டியில் 2 அங்குலம் இடவசதியை அளிக்க வேண்டும். வாத்துக் குஞ்சுகளின் தலையும் கண்ணும், மூழ்கும் அளவில் நீர்த்தொட்டி ஆழமாக இருக்க வேண்டும்.

வளரும் வாத்துகள் பராமரிப்பு

தீவிர வளர்ப்பு முறையில், ஒரு வாத்துக்கு 4-5 சதுர அடி தேவை. மிதத் தீவிர வளர்ப்பு முறையில், இரவில் தங்க 3 சதுர அடியும், பகலில் மேய்வதற்கு 10-15 சதுர அடியும் தேவை. ஒரு வாத்துக்கு முதல் 24 வாரங்களுக்கு 18 கிலோ தீவனம் தேவைப்படும்.

முட்டையிடும் வாத்துகள் பராமரிப்பு

வாத்துகள் அதிகாலையிலேயே முட்டைகளை இட்டு விடும். முட்டையிடும் வாத்துக்கு, ஆழ்கூள முறையில் 3-4 சதுர அடி இடவசதி தேவை. 5-6 மாத வயதில் முட்டையிடத் தொடங்கும். அடுத்து, 5-6 வாரங்களுக்குப் பிறகு தான் உற்பத்தி அதிகமாக இருக்கும்.

வாத்துகளுக்குச் சூரிய ஒளி மிகுதியாகக் கிடைத்தால், நல்ல முட்டை உற்பத்தி இருக்கும். ஆழ்கூள முறையில் வளரும் வாத்துகள், காலை 9 மணிக்குள் 95-98 சதவீத முட்டைகளை இட்டு விடும்.

தீவன மேலாண்மை

காலையிலும் மாலையிலும் தீவனத்தைக் கொடுக்க வேண்டும். வாத்துகளுக்குப் பிடித்த ஈர மாவாக அல்லது குச்சித் தீவனமாக இருக்கலாம். குச்சித் தீவனத்தில் வீணாவது குறையும். மேலும், குறைந்த அளவே போதும். நார்ச்சத்து நிறைந்த தீவனம் மிகவும் ஏற்றது.

மேய்ச்சல் முறையில் வளரும் வாத்துகள், உதிர்ந்த நெல் மணிகள், சிறிய மீன்கள், நத்தைகள், பூச்சிகள், மண் புழுக்கள், பசும் புற்கள் போன்றவற்றை விரும்பி உண்ணும். சித்திரை முதல் புரட்டாசி வரை, மேய்ச்சல் வசதி இல்லாமல் போவதால் தீவனம் தரப்பட வேண்டும்.

தொடக்கத்தில் குஞ்சுகளுக்கு வேக வைத்த அரிசி, அரிசிக் குருணையைக் கொடுக்க வேண்டும். வளர்ந்த பின், மற்ற வாத்துகளுடன் மேய்ச்சலுக்கு அனுப்ப வேண்டும்.

கலப்புத் தீவனம்

0-2 வார இறைச்சி வாத்துக்கு: மக்காச்சோளம் 30 கிலோ, கம்பு 10 கிலோ, அரிசிக்குருணை 10 கிலோ, சோயாப் புண்ணாக்கு 25 கிலோ, சூரியகாந்தி புண்ணாக்கு 10 கிலோ, மீன் தூள் 5 கிலோ, எண்ணெய் நீக்கிய அரிசித் தவிடு 8 கிலோ, தாதுப்பு 2 கிலோ. மற்றும் வைட்டமின் 250 கிராம், உப்பு 400 கிராம், தாதுகள் 100 கிராம், ஈரலூக்கி 100 கிராம்.

3-7 வார இறைச்சி வாத்துக்கு: மக்காச்சோளம் 30 கிலோ, கம்பு 10 கிலோ, அரிசிக்குருணை 10 கிலோ, சோயாப் புண்ணாக்கு 10 கிலோ, சூரியகாந்தி புண்ணாக்கு 10 கிலோ, மீன் தூள் 5 கிலோ, எண்ணெய் நீக்கிய அரிசித் தவிடு 22 கிலோ, தாதுப்பு 2 கிலோ, கால்சைட் 1 கிலோ. மற்றும் வைட்டமின் 250 கிராம், உப்பு 400 கிராம், தாதுகள் 100 கிராம், ஈரலூக்கி 100 கிராம்.

0-2 வார முட்டை வாத்துக்கு: மக்காச்சோளம் 30 கிலோ, கம்பு 10 கிலோ, அரிசிக்குருணை 10 கிலோ, சோயாப் புண்ணாக்கு 20 கிலோ, சூரியகாந்தி புண்ணாக்கு 10 கிலோ, மீன் தூள் 5 கிலோ, எண்ணெய் நீக்கிய அரிசித் தவிடு 13 கிலோ, தாதுப்பு 2 கிலோ. மற்றும் வைட்டமின் 250 கிராம், உப்பு 400 கிராம், தாதுகள் 100 கிராம், ஈரலூக்கி 100 கிராம்.

3-9 வார முட்டை வாத்துக்கு: மக்காச்சோளம் 30 கிலோ, கம்பு 10 கிலோ, அரிசிக்குருணை 15 கிலோ, சோயாப் புண்ணாக்கு 15 கிலோ, சூரியகாந்தி புண்ணாக்கு 10 கிலோ, மீன் தூள் 5 கிலோ, எண்ணெய் நீக்கிய அரிசித் தவிடு 12.5 கிலோ, தாதுப்பு 2 கிலோ, கால்சைட் 0.5 கிலோ. மற்றும் வைட்டமின் 250 கிராம், உப்பு 400 கிராம், தாதுகள் 100 கிராம், ஈரலூக்கி 100 கிராம்.

10-20 வார முட்டை வாத்துக்கு: மக்காச்சோளம் 30 கிலோ, கம்பு 10 கிலோ, அரிசிக்குருணை 10 கிலோ, சோயாப் புண்ணாக்கு 10 கிலோ, சூரியகாந்தி புண்ணாக்கு 10 கிலோ, மீன் தூள் 5 கிலோ, எண்ணெய் நீக்கிய அரிசித் தவிடு 22 கிலோ, தாதுப்பு 2 கிலோ, கால்சைட் 1 கிலோ. மற்றும் வைட்டமின் 250 கிராம், உப்பு 400 கிராம், தாதுகள் 100 கிராம், ஈரலூக்கி 100 கிராம்.

20 வாரத்துக்கு மேற்பட்ட வாத்துக்கு: மக்காச்சோளம் 20 கிலோ, கம்பு 15 கிலோ, அரிசிக்குருணை 15 கிலோ, சோயாப் புண்ணாக்கு 15 கிலோ, சூரியகாந்தி புண்ணாக்கு 10 கிலோ, மீன் தூள் 5 கிலோ, எண்ணெய் நீக்கிய அரிசித் தவிடு 14 கிலோ, தாதுப்பு 2 கிலோ, கால்சைட் 2 கிலோ, கிளிஞ்சல் 2 கிலோ. மற்றும் வைட்டமின் 250 கிராம், உப்பு 400 கிராம், தாதுகள் 100 கிராம், ஈரலூக்கி 100 கிராம்.

நீர் மேலாண்மை

வாத்துகளுக்கு நீர்த்தேவை அதிகமாக இருப்பினும், நீந்துமளவில் நீர் அவசியம் இல்லை. வாத்துகள், நீர்த் தொட்டிகளில் அலகு முழுவதையும் நனைக்கும் அளவில் நீர் எப்போதும் இருக்க வேண்டும். போதுமான நீர் இல்லா விட்டால், வாத்துகளின் கண்கள் சிவந்து. செதில் செதிலாகக் காணப்படும். தீவிர நிலையில் பார்வை இல்லாமல் போகவும் வாய்ப்பு உண்டு. மேலும், அவ்வப்போது நீர்த் தொட்டிகளைச் சுத்தப்படுத்தி வைக்க வேண்டும்.

இனப்பெருக்க வாத்துகள் பராமரிப்பு

இனப்பெருக்கம் செய்ய, 6-8 மாத ஆண், பெண் வாத்துகளைத் தேர்வு செய்யலாம். நல்ல இனச் சேர்க்கைக்கு, பெட்டை வாத்துகளை விட, ஆண் வாத்துகள் 4-5 வாரங்கள் மூத்தவையாக இருக்க வேண்டும். ஆறு அல்லது எட்டுப் பெண் வாத்துகளுக்கு ஒரு ஆண் வாத்து இருக்க வேண்டும்.

இறைச்சி வாத்துகளில் இவ்விகிதம் குறைவாக இருக்க வேண்டும். அடைக்காலம் 28 நாட்கள் ஆகும். 6-8 மாத வாத்துகள் இட்ட முட்டைகளையே அடையில் வைக்க வேண்டும். இனச்சேர்க்கை முடிந்து 10 நாட்களில் பெட்டை வாத்துகள் முட்டையிடத் தொடங்கும்.

முட்டைகளை 14-16 டிகிரி செல்சியஸ் வெப்ப நிலையில் 80 சத ஈரப்பதம் உள்ள இடத்தில் சேமித்து வைக்க வேண்டும். குஞ்சுப் பொரிப்புக்குச் செயற்கைப் பொரிப்பானையும் பயன்படுத்தலாம்.

நோய்களில் இருந்து காத்தல்

வாத்து பிளேக், பூசண நச்சு நோய், பாசுரெல்லா நோய் போன்றவை வாத்துகளைத் தாக்கும். இவற்றைத் தடுக்கும் முக்கிய வழி, பூசணம் தாக்கிய தீவனத்தை வாத்துகளுக்குத் தராமல் இருப்பது தான்.

வாத்து பிளேக்கைத் தடுக்கத் தடுப்பூசிகள் உள்ளன. இதை, 8-12 வார வயதில் போட்டு விட வேண்டும். வைரஸ் கிருமிகளால் கல்லீரல் பாதிக்கப்பட்டால் இறப்பு வீதம் மிகும்.

எனவே, வாத்துக் காலரா கழிச்சல் நோயைத் தடுக்க, 3-4 வார வயதில் ஒரு மில்லி மருந்தை, வாத்தின் கீழ்ப்பகுதியில் உள்ள தோலில் போட வேண்டும். வாத்துக் கொள்ளை நோயைத் தடுக்க, 8-12 வார வயதில் ஒரு மில்லி மருந்தை, கீழ்ப்பகுதியில் உள்ள தோலில் போட வேண்டும்.

தட்டைப் புழுக்கள், உருளைப் புழுக்கள், நாடாப் புழுக்கள், வாத்துகளின் உடலிலுள்ள சத்துகளை உறிஞ்சும். இரத்தச் சிவப்பு அணுக்களை அழிக்கும். இதனால், வாத்துகளுக்கு இரத்தச் சோகை ஏற்படும். இதிலிருந்து வாத்துகளைக் காக்க, குடற்புழு நீக்க மருந்தைக் கொடுக்க வேண்டும்.


மருத்துவர் வ.குமரவேல், முனைவர் சு.செந்தூர் குமரன், வேளாண்மை அறிவியல் நிலையம், குன்றக்குடி, சிவகங்கை மாவட்டம்.

Share:

  சந்தேகமா? கேளுங்கள்!  

 

இன்னும் படியுங்கள்!

Enable Notifications OK No thanks