My page - topic 1, topic 2, topic 3

மலட்டுத் தன்மையை மாற்றுவது எப்படி?

மலட்டுத் தன்மைக்கான காரணங்களை நான்கு வகையாகப் பிரிக்கலாம். பசுக்களுக்கோ காளைகளுக்கோ இனவிருத்தி உறுப்புகளில் பிறவிக் குறைகள் இருந்தால் மலட்டுத் தன்மை ஏற்படும்.

செய்தி வெளியான இதழ்: 2018 செப்டம்பர்.

ப்போது, பால் பண்ணைத் தொழில் பெரிய தொழிலாக வளர்ந்துள்ளது. கால் படி அரைப்படி பாலைக் கொடுத்த நாட்டு மாடுகளைத் தவிர்த்து, இப்போது லிட்டர் கணக்கில் பாலைக் கொடுக்கும் கலப்பினக் கறவை மாடுகளை வளர்த்து வருகிறோம். பால் பண்ணைத் தொழிலைச் செய்ய அனைத்து வங்கிகளும் கடனுதவி செய்து வருகின்றன.

இந்நிலையில், ஆண்டுதோறும் பசுக்கள் ஈன்று கொண்டே இருந்தால் தான், பால் பண்ணைப் பொருளாதாரம் சிறப்பாக அமையும். ஆனால், சில பசுக்களில் ஏற்படும் மலட்டுத் தன்மையால், இந்த இலக்கை அடைய முடிவதில்லை.

மலட்டுத் தன்மைக்கான காரணங்களை நான்கு வகையாகப் பிரிக்கலாம். பசுக்களுக்கோ காளைகளுக்கோ இனவிருத்தி உறுப்புகளில் பிறவிக் குறைகள் இருந்தால் மலட்டுத் தன்மை ஏற்படும்.

கறவை மாடுகளின் உடலில் சில நாளமில்லாச் சுரப்பிகள் சரிவர இயங்கவில்லை என்றால் மலட்டுத் தன்மை உருவாகும். இவற்றில், முதலில் கூறிய பிறவிக் குறையைச் சரி செய்ய இயலாது. அடுத்து, கூறப்பட்டதில், சிலவற்றைக் குணப்படுத்தலாம்; சிலவற்றைக் குணப்படுத்த முடியாது.

பாக்டீரியா போன்ற நுண் கிருமிகளால் மலட்டுத் தன்மை ஏற்படும். முக்கியமாக, கறவை மாடுகளின் உடலில் சத்துக் குறை இருந்தால், மலட்டுத் தன்மை உண்டாகும். இப்போது கூறிய குறைகளை மருந்துகள் மூலம் சரி செய்து விடலாம்.

நுண்கிருமிகளால் ஏற்படும் மலட்டுத் தன்மை

கறவை மாடுகளில் அபார்ஷன் என்னும் கன்று வீச்சு நோய், புருசெல்லா அபார்ட்டஸ், விப்ரியோசிஸ், டிரைக்கோ மோனியாசிஸ் போன்ற பாக்டீரிய வகைகளால் ஏற்படுகிறது. நோயுற்ற காளைகளை இனவிருத்தியில் பயன்படுத்தும் போது, இவ்வகை பாக்டீரியாக்கள், பசுக்களுக்குப் பரவுகின்றன.

எனவே, காளைகளைத் தவிர்த்து விட்டு, செயற்கை முறையில் கருவூட்டல் செய்தால், இந்நோய்த் தாக்குதல் இராது. கால்நடை மருத்துவர் ஆலோசனைப்படி செயல்பட்டால், கருச்சிதைவு நோயைக் குணப்படுத்தலாம்.

சத்துக் குறையால் ஏற்படும் மலட்டுத் தன்மை

கறவை மாடுகளின் இனவிருத்தித் திறனில், சில வைட்டமின்கள் மற்றும் தாதுப்புகளுக்குப் பெரும் பங்குண்டு. குறிப்பாக, வைட்டமின்கள் ஏ, இ மற்றும் கால்சியம், பாஸ்பரஸ், அயோடின் போன்ற தாதுப்புகள், மாடுகளின் உடலில் குறைந்தால் மலட்டுத் தன்மை உண்டாகும்.

வெறும் பருத்திக்கொட்டை, புண்ணாக்கை மட்டுமே கொடுத்து வந்தால், கறவை மாடுகள் விரைவில் சினையாகாது. எனவே, வைட்டமின் ஏ நிறைந்த புற்களான கோ.3, கோ.4 மற்றும் குதிரை மசால், வேலி மசால் போன்ற புரதம் நிறைந்த தீவனங்களையும் கொடுக்க வேண்டும்.

மலட்டுத் தன்மையைத் தவிர்க்கும் வழிகள்

பசுக்கள் மற்றும் சினைக் கிடேரிகளை மாதம் ஒருமுறை கால்நடை மருத்துவரிடம் காட்டிச் சோதிக்க வேண்டும். இதனால், ஏதேனும் குறையிருந்தால் உடனே சரி செய்ய வாய்ப்புண்டு.

தொழுவத்தைச் சுத்தமாகப் பராமரிக்க வேண்டும். இதனால், பாக்டீரியாக்கள் கறவை மாடுகளின் இனவிருத்தி உறுப்பில் புகாமல் தடுக்க முடியும். கறவை மாடுகள், 21 நாட்களுக்கு ஒருமுறை இனவிருத்திக்கு வருகின்றனவா என்பதைக் கவனிக்க வேண்டும்.

காலையில் சினைப்பருவ அறிகுறிகள் தெரிந்தால், அன்று மாலையிலும், மாலையில் அறிகுறி தெரிந்தால், அடுத்த நாள் காலையிலும், செயற்கைக் கருவூட்டல் செய்ய வேண்டும்.

மாடுகள் சினைக்கு வரும்போது எக்காரணம் கொண்டும் கிராமத்தில் உள்ள காளைகளைப் பயன்படுத்தக் கூடாது. இதனால், பால்வினை நோய்கள் தாக்கும். இதனால், சினையான பின்னால் கருச்சிதைவு ஏற்படலாம்.

எனவே, செயற்கைக் கருவூட்டலே சிறந்தது. நோயுற்ற கால்நடைகளை, மற்ற கால்நடைகளில் இருந்து பிரித்துப் பராமரிக்க வேண்டும்.

ஈனும் போது, மாடுகள் சிரமப்பட்டாலோ, நஞ்சுக்கொடி விழாமல் இருந்தாலோ கவனமாகச் செயல்பட வேண்டும். நஞ்சுக்கொடியை அகற்ற, தகுதியற்ற நபர்களின் உதவியை நாடக்கூடாது.

அவர்கள் நஞ்சுக்கொடியை எடுக்கும் போது, கருப்பையில் சினைப் பிடிக்க உதவியாக இருக்கும் காட்டிலிடன் என்னும் விதைகளையும் வெளியே எடுத்து விட வாய்ப்புண்டு. இதனால், மலட்டுத் தன்மை உண்டாகும். நஞ்சுக் கொடியை நீக்க, கால்நடை மருத்துவரையே நாட வேண்டும்.


டாக்டர் வி.இராஜேந்திரன், முன்னாள் இணை இயக்குநர், நத்தம், திண்டுக்கல் – 624 401.

Share:

  சந்தேகமா? கேளுங்கள்!  

 

இன்னும் படியுங்கள்!

Enable Notifications OK No thanks