மண் என்பது, உலகின் முக்கிய இயற்கை வளங்களில் ஒன்று. ஒரு அங்குல மண் உருவாக 300-1000 ஆண்டுகள் ஆக வேண்டும். ஒரு செடி செழிப்பாக வளர்ந்து அதிக மகசூலைத் தருவதற்கு, சூரியவொளி, கரியமில வாயு, ஆக்ஸிஜன், நீர், தாதுப்புகள், மண் பிடிமானம் மற்றும் மண் வெப்பம் வேண்டும்.
இவற்றில் முதல் மூன்றும் சூரியன் மற்றும் காற்று மூலம் கிடைத்து விடும். மற்றவை மண்ணிலிருந்து தான் கிடைக்க வேண்டும். பெருமழை, காற்று மற்றும் வெப்பத்தால், மண்ணிலுள்ள தாதுகள் நீங்கி விடுகின்றன. இதனால், மண்வளம் குறைகிறது. எனவே, அதிக மகசூலுக்கும், சுற்றுச்சூழலைக் காக்கவும், மண்வள நிர்வாகம் அவசியம்.
வளமான மண்
செடியின் வளர்ச்சிக்குத் தேவைப்படும் தழை, மணி, சாம்பல் சத்து ஆகியன, செடிக்குக் கிடைக்கும் நிலையில் இருக்கும். போரான், கினோசின், கோபால்ட், செம்பு, இரும்பு, மாங்கனீசு, மெக்னீசியம், மாலிப்டினம், கந்தகம், துத்தநாகம் ஆகிய தாதுகள் போதியளவில் இருக்கும்.
மண்ணின் அமைப்பு மற்றும் ஈரத்தைக் காக்கும் அங்ககப் பொருள்கள் இருக்கும். மண்ணின் கார அமிலத் தன்மை 6.0 முதல் 6.8 வரை இருக்கும். நீர் நன்கு வடியும் நிலையில் இருக்கும். பயிர் வளர்ச்சிக்கு வேண்டிய நுண்ணுயிர்கள் நிறைந்திருக்கும். மண்கண்டம் ஆழமாக இருக்கும்.
மண்ணிலுள்ள குறைகள்
வேதிப் பெருள்களால் ஏற்படும் சிக்கல்கள்: உவர் தன்மை, களர் தன்மை, அமிலத் தன்மை மற்றும் சத்துகள் அதிகமாதல்.
இயல்நிலை மாற்றங்களால் ஏற்படும் சிக்கல்கள்: மண்ணில் அதிகமாக அல்லது குறைவாக நீர்ப்புகும் தன்மை, கடினத் தன்மை, கடினமான மேற்பரப்பு, சொதசொதப்பான மண், மணல் கலந்த மண்.
உவர் மண்: இந்த மண்ணில் நீரில் கரையும் உப்புகள் அதிகமாக இருப்பதால், பயிரின் வளர்ச்சி பாதிக்கப்படும். இதில் மின்கடத்தும் திறன் 4 டி.எஸ்.எம்.1 என இருப்பதால், முக்கிய மற்றும் பக்கக் கால்வாய்களை 60 செ.மீ. ஆழம், 45 செ.மீ. அகலத்தில் அமைத்து, மண்ணில் உள்ள உப்பை வழிந்தோடச் செய்ய வேண்டும். சாகுபடிக்கு 10-15 நாளுக்கு முன், எக்டருக்கு 12.5 டன் தொழுவுரத்தை இட வேண்டும்.
களர் மண்: இதில், 15 சத சோடியமும், 8.5 அளவில் அமில காரத் தன்மையுள்ள சோடிய உப்புகள் அதிகமாக இருக்கும். இந்நிலத்தை வளமாக்க, தகுந்த ஈரம் இருக்கும் போது உழ வேண்டும். தேவையைப் பொறுத்து ஜிப்சத்தை இட வேண்டும்.
நீர்த் தேங்கக் கூடாது. வடிகால் வசதியை ஏற்படுத்தி, கரையும் உப்புகளை வழிந்தோடச் செய்ய வேண்டும். எக்டருக்கு 6.25 டன் பசுந்தாள் உரத்தை இட்டு உழுது விட வேண்டும்.
அமில மண்: இதில், அமில காரத் தன்மை 6 க்குக் குறைவாக இருக்கும், ஹைட்ரஜன், அலுமினியம் அதிகளவில் இருப்பதால், மணிச்சத்து, சாம்பல் சத்து, கால்சியம், மக்னீசியம், மாலிப்டினம் மற்றும் போரான் பற்றாக்குறை ஏற்படும். இவ்வகை மண், ஊட்டி, கொடைக்கானல், ஏற்காடு மலைப் பகுதிகள் மற்றும் புதுக்கோட்டையில் உள்ளது.
இதைச் சரி செய்ய, தேவையான அளவில் சுண்ணாம்பை நிலத்தில் இட்டு உழ வேண்டும். டோலமைட், மரத்தூள், மரக்கூழ் ஆலையில் இருந்து வரும் சுண்ணாம்பு, சுண்ணாம்புக் கல்லையும் பயன்படுத்தலாம்.
இரும்பு மற்றும் அலுமினிய நச்சு: நீர்த் தேங்கியுள்ள மண்ணில் அதிகச் செறிவுடன் இரும்பு மற்றும் அலுமினியம் இருக்கும். இவ்வகை மண், கன்னியாகுமரி, புதுக்கோட்டை ஆகிய மாவட்டங்களில் உள்ளது. இதைச் சரிப்படுத்த, தேவையான அளவில் சுண்ணாம்பையும், தழை, மணி, சாம்பல் சத்தையும் கலந்து இட வேண்டும்.
அங்கக எருவை இடலாம். தேவையான அளவில் சுண்ணாம்பு, 5 சதம் துத்தநாக சல்பேட், 1 சதம் டிஏபி, 1 சதம் பொட்டாஷ் ஆகியவற்றை, தூர் விடும் போதும், கதிர் வரும் போதும் தெளிக்கலாம்.
இறுக்கமில்லாச் சேற்று மண்: நெகிழும் தன்மையில் இருப்பதால், வேலை செய்யும் ஆட்களை இம்மண் கீழே இழுக்கும். பயிர்களுக்கும் பிடிப்புக் கிடைக்காது.
இதைச் சரி செய்ய, எட்டு மடங்கு மணலை நிலத்தில் பரப்பி, 400 கிலோ எடையுள்ள கல்லுருளை அல்லது எண்ணெய்த் தொட்டியால் உருட்ட வேண்டும். மேலும், எக்டருக்கு 2 டன் சுண்ணாம்பு வீதம் ஆண்டுக்கு மூன்று முறை இட்டு உழ வேண்டும்.
மணல் சார்ந்த மண்: இதில், மணல் மிகுதியாக இருப்பதால், நீரும் சத்துகளும் பயிருக்குக் கிட்டா நிலையில் அடிமண்ணுக்கு ஓடிவிடும். இதைச் சரிப்படுத்த, எட்டு மடங்கு கற்களை நிலத்தில் இட்டு, 400 கிலோ எடையுள்ள கல்லுருளை அல்லது எண்ணெய்த் தொட்டியால் மூன்று ஆண்டுக்கு ஒருமுறை, தகுந்த ஈரப்பதம் இருக்கும் போது உருட்ட வேண்டும். கடற்கரை மணல் கலந்த நிலத்தில் ஏரி வண்டலை இடலாம்.
கடினமான களிமண்: இதில், களிமண் துகள்கள் அதிகமாக இருப்பதால், உள்ளே புக முடியாமல் நீரும், சத்துகளும் மேலேயே தங்கி விடும். இதைச் சரிப்படுத்த, எக்டருக்கு நூறு டன் ஆற்று மணலை இட வேண்டும். கோடையில், இறக்கைக் கலப்பை அல்லது வட்டக் கலப்பையால் ஆழமாக உழவு வேண்டும்.
குறைவாக நீர்ப் புகும் கருமண்: இதைச் சரிப்படுத்த, நூறு வண்டிச் செம்மண் கலந்த இருபொறை மண்ணை இட வேண்டும். கோடையில், இறக்கைக் கலப்பை அல்லது வட்டக் கலப்பையால் ஆழமாக உழவு வேண்டும். எக்டருக்கு 25 டன் தொழுவுரம், மட்கிய தென்னை நார்க்கழிவு, ஆலைக்கழிவு ஆகியவற்றில் ஒன்றை இடலாம்.
அதிகளவில் நீர்ப்புகும் செம்மண்: இதைச் சரிப்படுத்த, எக்டருக்கு 25 டன் ஏரி வண்டல் அல்லது கருமண்ணை இடலாம். மேலும், எக்டருக்கு 25 டன் தொழுவுரம், மட்கிய தென்னை நார்க்கழிவு, ஆலைக்கழிவு ஆகியவற்றில் ஒன்றை இட வேண்டும், கோடையில், இறக்கைக் கலப்பை அல்லது வட்டக் கலப்பையால் ஆழமாக உழவு வேண்டும்.
உளிக் கலப்பையின் பயன்கள்: பெரும்பாலான நிலங்களில் அடிமண் கடினமாக இருக்கும். இதனால், பயிர்களுக்கு வேண்டிய சத்துகள் கிடைக்காமல் விளைச்சல் குறையும். மேலும், நீரும் காற்றும் உள்ளே செல்வதும் தடைபடும்.
இதைச் சரிப்படுத்த, உளிக் கலப்பை மூலம் 50 செ.மீ. இடைவெளியில் குறுக்கு நெடுக்காக உழ வேண்டும். இது, 45 செ.மீ. ஆழம் வரையுள்ள மண்ணைக் கிளறி விடும்.
பிறகு, எக்டருக்கு 12.5 டன் தொழுவுரம், மட்கிய தென்னை நார்க்கழிவு, ஆலைக்கழிவு ஆகியவற்றில் ஒன்றை இட வேண்டும், அடுத்து, நாட்டுக் கலப்பையால் இருமுறை உழுது, மண்ணில் உரத்தைக் கலக்க வேண்டும்.
ஈரத்தைக் காக்கும் தாவரங்கள்: வறண்ட பகுதிகளில் உள்ள கருமண் நிலத்தில் ஈரப்பதத்தைக் காக்க, வெட்டிவேர் அல்லது எலுமிச்சைப் புல்லை, சரிவுக்குக் குறுக்கே மற்றும் மேட்டுப் பகுதியை ஒட்டி 0.5 மீ. இடைவெளியில் வளர்க்க வேண்டும்.
ரா.அஜய்குமார், வானவராயர் வேளாண்மை நிறுவனம், பொள்ளாச்சி, கோயம்புத்தூர் – 642001. க.சிவசபரி, ஜே.கே.கே.முனிராஜா வேளாண்மைக் கல்லூரி, தூக்க நாயக்கன் பாளையம், ஈரோடு – 638 506.
சந்தேகமா? கேளுங்கள்!