My page - topic 1, topic 2, topic 3

பால் மாடுகள் சினைத் தரிப்பதற்கான வழிமுறைகள்!

மாடு

செய்தி வெளியான இதழ்: 2018 ஜனவரி.

சுக்களும், எருமைகளும் ஆண்டுக்கொரு முறை ஈன வேண்டும். அப்படி ஈன்றால் தான் தொடர்ந்து பயன் பெற முடியும். அதிகளவில் பாலைத் தரும், ஜெர்சி, பிரிஸியன் கலப்பின மாடுகள் மூலம், தொடர்ந்து பாலைப் பெற வேண்டுமெனில், சரியான காலத்தில் கருவூட்டல் செய்ய வேண்டும்.

ஒரு மாடு கருத்தரிப்பது, அதன் உடல் நலம், கருப்பை நலம், சினைப் பருவம், கருவூட்டல், கருவூட்டலுக்குப் பயன்படுத்தும் காளை நலன், விந்துவின் தன்மை, பராமரிப்பு, தீவனம் ஆகிய பல பண்புகளைச் சார்ந்துள்ளது. இவற்றில் ஏதாவது ஒன்று குறைந்தாலும் சினைத் தரிக்காது. ஆகவே, சினைப் பிடிப்பில் கவனிக்க வேண்டிய முறைகள் குறித்துப் பார்க்கலாம்.

தீவனமும், தாதுப்புகளும்

பசுவும், எருமையும் நல்ல உடல் நலத்துடன் இருந்தால் தான் கருத்தரிக்கும். இதற்கு, சரிவிகிதக் கலப்புத் தீவனத்தைக் கொடுக்க வேண்டும். தவிடு, பொட்டு, புண்ணாக்குக் கலந்த தீவனம் தரப்பட வேண்டும். மாட்டின் எடை மற்றும் தரும் பாலின் அளவைப் பொறுத்து, தீவனத்தின் அளவு மாறுபடும்.

இத்துடன் தாதுப்புகளையும் சேர்த்துக் கொடுக்க வேண்டும். இரும்புச்சத்து, சுண்ணாம்பு, பாஸ்பரஸ், சோடியம், பொட்டாசியம், குளோரின், மெக்னீசியம், கந்தகம், அயோடின், மாங்கனீஸ், துத்தநாகம், கோபால்ட், தாமிரம் போன்ற உப்புகள் சேர்ந்ததே தாதுப்புக் கலவை. இது, மாட்டின் கருப்பை வளர்ச்சிக்கு மிகவும் தேவை.

குடற்புழு நீக்கமும், நோய்த் தடுப்பும்

பொதுவாக, எல்லா உடலிலும் குடற் புழுக்கள் இருக்கும். ஆனால், அதிகமானால் தான் சிக்கல். மாட்டுக்குப் பசியிருக்காது. சரியாகச் செரிக்காது. இதனால், கருத்தரிப்புத் தாமதப்படும். எனவே, குடற் புழுக்களை நீக்குவது அவசியம்.

இதற்கென உள்ள மருந்தைக் கொடுத்து, குடற் புழுக்களை அகற்ற வேண்டும். இவ்வகையில், கருவூட்டல் செய்வதற்கு ஒரு மாதத்துக்கு முன், குடற்புழு நீக்க மருந்தைக் கொடுக்க வேண்டும். முக்கியமாக, கோமாரி, வெக்கை நோய்களைத் தடுக்க, ஆண்டுக்கொரு முறை தடுப்பூசியைப் போட வேண்டும். இல்லையெனில், கருத்தரிப்புத் தாமதப்படும்.

கருவூட்டல் காலம்

அதிக வெப்பமும், வெப்பக் காற்றும் கருத்தரிப்பைத் தடுக்கும். ஆகவே தான், கோடைக் காலத்தில் நிறைய மாடுகள் சினைப் பிடிப்பதில்லை. குளிர்ந்த சூழ்நிலை கருத்தரிப்பை அதிகரிக்கும். பருவ மழையால் குளிர்ந்த சூழ்நிலையும், மிதமான வெப்பமும் இருக்கும். ஆகவே, வெய்யில் காலத்தில் சினைத் தரிக்காத மாடுகள், குளிர் காலத்தில் சினைத் தரிக்க நிறைய வாய்ப்புண்டு.

கருவூட்டல் செய்தல்

இருபத்தொரு நாட்களுக்கு ஒருமுறை கறவை மாடுகள் சினைப் பருவத்துக்கு வரும். இப்படி இல்லாமல், 10-15 நாட்களுக்கு ஒருமுறை அல்லது 30-40 நாட்களுக்கு ஒருமுறை சினைப் பருவம் ஏற்பட்டால், கால்நடை மருத்துவரை அணுகி, தகுந்த சிகிச்சையை அளிக்க வேண்டும்.

சினைக்கு வந்து 12 மணி நேரம் கழித்து, கருவூட்டல் செய்ய வேண்டும். இதற்கு, மாலையில் சினைப் பருவம் தெரிந்தால், அடுத்த நாள் காலையிலும், காலையில் தெரிந்தால், அன்று மாலையிலும் கருவூட்டல் செய்ய வேண்டும்.

இந்த முறைகளைக் கடைப்பிடித்தால் ஆண்டுக்கொரு கன்று என்னும் இலக்கை அடைய முடியும் என்பதில் ஐயமில்லை.


ஆ.புன்னகை அரசி, சு.பிரகாஷ், ச.ஜெயந்தி, ந.கார்த்திகேயன், கால்நடை மருத்துவக் கல்லூரி, ஒரத்தநாடு, தஞ்சாவூர் – 614 625.

Share:

  சந்தேகமா? கேளுங்கள்!  

 

இன்னும் படியுங்கள்!

Enable Notifications OK No thanks