பாரம்பரிய மீட்பும் இரசாயனம் இல்லாத விவசாயமும்!

பாரம்பரிய விவசாயம்

பாரம்பரிய வேளாண்மைத் தொழில் நுட்ப அறிவு என்பது, பல நூறு ஆண்டுகளாக விவசாயிகள் தங்கள் அனுபவத்தில் கற்றறிந்த விவசாய உத்திகளாகும். அறிவியல் தொழில் நுட்பங்கள் வளராத காலத்தில், விதை முதல் அறுவடை ஏற்படும் சிக்கல்கள் அனைத்துக்கும் இயற்கை முறைகளைப் பயன்படுத்தித் தீர்வு கண்டனர். மேலும், தங்களின் அனுபவ உத்திகளைத் தங்களின் பிள்ளைகளுக்கும் கற்பித்தனர்.

பாரம்பரிய அறிவுப் பயன்பாடும் விளைவுகளும்

விவசாயிகள் சாகுபடி செய்யும் பயிர்கள், அவர்கள் வாழும் நில அமைப்பு, மண்ணின் தன்மை மற்றும் கால நிலைக்கு ஏற்ப, இந்தப் பாரம்பரிய அறிவு மற்றும் தொழில் நுட்பங்கள் உருவாயின. இவற்றுக்கான பயன்பாட்டுப் பொருள்களாக, விவசாயிகளின் வசிப்பிடத்தில், விளை நிலத்தில் கிடைக்கின்ற பொருள்கள் மற்றும் அவர்கள் பயன்படுத்திய மிகச் சாதாரணப் பொருள்களே அமைந்தன.

எடுத்துக் காட்டாக, பயிர்களில் நோய் மற்றும் பூச்சித் தாக்குதலைக் கட்டுப்படுத்த, வேப்ப எண்ணெய், மிளகாய்க் கரைசல், புகையிலைக் கரைசல் போன்றவற்றைப் பயன்படுத்தினர்.

இன்று பயன்படுத்தும் அனைத்து வேளாண் உத்திகளையும் அந்தக் காலத்திலேயே நம் முன்னோர்கள், எவ்வித இயந்திர உதவியுமின்றிப் பயன்படுத்தினர். அவர்களின் அனுபவ நுட்பங்கள் அனைத்தும் இயற்கையானவை. எனவே, மண்ணின் தன்மைக்கும், மனித மற்றும் கால்நடைகளின் நலத்துக்கும் எவ்விதக் கேடும் நிகழவில்லை.

புதிய வேளாண் உத்திகளின் வருகை

மக்கள் பெருக்கம் மற்றும் காலநிலை மாற்றம் காரணமாக, உள்நாட்டு உற்பத்தியின் அளவு போதுமானதாக இல்லாததால், உற்பத்தியைப் பெருக்கும் நோக்குடன், கலப்பின விதைகள், இரசாயன உரங்கள், பூச்சிக்கொல்லி மற்றும் நோய்த்தடுப்பு மருந்துகள் அறிமுகம் செய்யப்பட்டன. அதனால், உணவு உற்பத்தியில் தன்னிறைவு கிடைத்தது. உயர் விளைச்சலை அனுபவித்த நாம் தொடர்ந்து இரசாயனங்களை அதிகமாகப் பயன்படுத்தி, இரசாயன மோகத்துக்கு உட்படும் நிலை ஏற்பட்டது.

மெல்ல மெல்ல பாரம்பரிய வேளாண் உத்திகள், பாரம்பரியப் பயிர் வகைகள் நம்மிடமிருந்து மறைந்தன. இரசாயன இடுபொருள்கள் மண்ணின் தன்மையை, சுற்றுச்சூழலைக் கெடுப்பதுடன், மனித நலத்துக்கும் அச்சுறுத்தலாய் மாறியுள்ளன. இந்நிலை தொடர்ந்தால், எதிர்கால மக்களின் நலனும் கேள்விக்குறியாகும்.

இந்நிலையை மாற்ற அரசு, அரசு சாரா நிறுவனங்கள், வேளாண்மை மற்றும் சூழல் அமைப்புகள், விழிப்புணர்வுப் பரப்புரைகளை மேற்கொண்டும் பல்வேறு காரணங்களால் எதிர்பார்த்த பயன் கிடைக்கவில்லை. ஆனாலும், தற்போது இயற்கை விவசாயத்தின் அவசியம், உடல் நலம் சார்ந்த விழிப்புணர்வு நம்மிடம் வளரத் தொடங்கியுள்ளது.

மேலை நாடுகளில் இதற்கான வரவேற்பு மிகுதியாக இருந்தாலும், இந்தியா போன்ற வளரும் நாடுகளில், இயற்கை மற்றும் பாரம்பரிய வேளாண்மை குறித்த விவாதம் எழுந்து வருவது, நல்ல மாற்றத்தின் தொடக்கமாகும்.

பாரம்பரிய நுட்பங்களை மீட்டெடுத்தல்

கேடு தரும் இரசாயன விவசாயத்தில் இருந்து மீள்வதற்கு, பாரம்பரிய அறிவு மற்றும் தொழில் நுட்பங்களை மீட்டெடுக்க வேண்டும். இதற்கு விவசாயிகள் மட்டுமின்றி அனைவரின் பங்களிப்பும் அவசியம். குறிப்பாக, வேளாண்மைக் கல்லூரிகள் மற்றும் ஆராய்ச்சி நிலையங்கள், வேளாண்மைத் துறை, சமூக அமைப்புகள், இயற்கை விவசாய அமைப்புகளின் ஒருங்கிணைந்த பங்களிப்பு மிகவும் தேவை.

வேளாண் முதுநிலை மாணவர்கள், பாரம்பரிய அறிவு மற்றும் தொழில் நுட்பங்கள் சார்ந்த ஆய்வுகளை மேற்கொள்ள வேண்டும். நாட்டின் அனைத்துப் பகுதிகளிலும் பயன்படுத்திய பாரம்பரியத் தொழில் நுட்பங்களைக் கண்டறிந்து அவற்றை ஆவணப்படுத்த வேண்டும்.

மேலும், அவற்றின் சிறப்புகளைக் குறிப்பிடுவதுடன், அவற்றுக்கும் அறிவியலுக்கும் உள்ள தொடர்பையும் கண்டறிய வேண்டும். பிறகு, இந்தத் தொழில் நுட்பங்களை ஆய்வுக்கு உட்படுத்தி, விவசாயப் பயன்பாட்டுக்குக் கொண்டு செல்ல வேண்டும்.

இவற்றைத் தொடர்ந்து பயன்படுத்தினால், இரசாயனம் இல்லாத விவசாயத்தை உறுதி செய்யலாம். நலமான எதிர்காலத்துக்கும் வழி வகுக்கலாம்.


பாரம்பரிய வேளாண் பாரம்பரிய அறிவு 3 e1712384443533

முனைவர் இரா.இராஜசேகரன், உதவிப் பேராசிரியர், தொன்போஸ்கோ வேளாண்மைக் கல்லூரி, சகாயத் தோட்டம், வேலூர் – 631 151.

Share:

விவசாயம் / கால்நடை வளர்ப்புக் குறித்து

சந்தேகமா? கேளுங்கள்!


இன்னும் படியுங்கள்!

Discover more from பச்சை பூமி

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading