பருவக் காற்றுகள் வெப்ப மண்டலப் பகுதிகளில் வீசுகின்றன. இவை வெப்ப மற்றும் மிதவெப்ப மண்டல நிலப்பரப்பிலும், கடலின் மேற்பரப்பிலும் ஏற்படும் வேறுபட்ட வெப்ப நிலைகளால் உருவாகின்றன. இந்தக் காற்றுகளால் மழைப் பொழிவும் உண்டாகிறது.
தெற்காசியா, கிழக்கு மற்றும் தென்கிழக்கு ஆசியா, வடக்கு ஆஸ்திரேலியா மற்றும் தென்மேற்கு அமெரிக்கப் பகுதிகளில் பருவ மழைகள் பெய்கின்றன. இந்தியாவில் பருவக்காற்று மற்றும் மழைகளின் தாக்கம் அதிகமாகும்.
பாரம்பரிய விவசாய முறைகள் தென்மேற்குப் பருவ மழையை நம்பியுள்ளன. இந்திய பருவக்காற்று உலகிலேயே மிகவும் அதிகமாக ஆய்வு செய்யப்பட்ட வானிலை வடிவங்களில் ஒன்றாகும்.
இந்தப் பருவ மாற்றங்கள் பல காரணிகளால் உருவாவதால், அவற்றின் திறன் ஒவ்வொரு ஆண்டும் மாறுபடும். பெரும்பாலான காரணிகள் இந்தியா மீதான பருவ மழையின் நிலைகளைக் கட்டுப்படுத்துகின்றன.
மேலும், இக்காரணிகள் நாட்டின் விவசாய வளர்ச்சியை நிர்ணயிக்கின்றன. இந்தியா பருவ மழையை நம்பியிருப்பது தவிர்க்க முடியாதது. அதனால், சில நேரங்களில் இம்மழையை, இந்திய நிதியமைச்சர் என்றும் சொல்லலாம்.
தென்மேற்கு, வடகிழக்குப் பருவமழைகள்
தென்மேற்குப் பருவமழை, தென்மேற்குத் திசையில் அரபிக்கடலில் இருந்து இந்தியாவின் பெரும்பகுதி வரை வீசும் பருவக் காற்றாகும். இக்காற்று, மே மாதம் முதல் இந்தியாவைச் சுற்றி வரும்.
இந்திய வானிலை ஆய்வு மையத்தின் அறிக்கைப்படி, இப்பருவக் காற்றானது ஜுன் முதல் செப்டம்பர் வரை இருக்கும். இது, கோடைக் காலத்தின் இடையில் வீசுவதால், இந்த மாதங்களில் மழை அதிகமாகக் கிடைக்கும். எனவே இது, இந்திய கோடைப் பருவக்காற்று எனவும் அழைக்கப்படும்.
தென்மேற்குப் பருவமழை, இந்திய நிலப்பகுதியில் இருந்து பின்வாங்கும் போது தோன்றும், சற்று பலவீனமான மழைப்பொழிவே, வடகிழக்குப் பருவமழை. இந்தப் பருவக்காற்று வங்காள விரிகுடாவில் ஈரப்பதத்தை எடுத்துக் கொண்டு, அக்டோபர் நவம்பரில் இந்தியாவில், குறிப்பாகத் தமிழகத்தில் மழைப் பொழிவை உண்டாக்குகிறது.
இந்தியாவில் பருவமழை உருவாகும் விதம்
உலகில் தென்கிழக்குப் பருவக்காற்று, பூமத்திய ரேகைக்குத் தெற்கே செல்கிறது. வடகிழக்குப் பருவக்காற்று பூமத்திய ரேகைக்கு வடக்கே செல்கிறது. இடை வெப்ப ஒருங்கிணைப்பு மண்டலம் (Inter-Tropical Convergence Zone) என்பது, வளிமண்டல நில அளவை ஆகும்.
இது, பூமத்திய ரேகையில் இருந்து வேறுபடுகிறது. பொதுவாகப் புவியின் 23.50 டிகிரி சாய்வால், இது பூமத்திய ரேகையில் இருந்து, சற்று வடக்கே இருக்கும். மேலும், வெவ்வேறு காலங்களில் அதன் இடத்தை மாற்றிக் கொள்கிறது.
கோடையில் இந்த இடை வெப்ப ஒருங்கிணைப்பு மண்டலம் (Inter-Tropical Convergence Zone) வடக்கில் நகர்ந்து, இந்தியாவின் வடக்கே அமைகிறது. அங்கே தென்கிழக்குப் பருவக் காற்று புவிப்பரப்பைக் கடந்து செல்லும்.
இது, பூமத்திய ரேகையைக் கடக்கும் போது திசை மாறி, தென்மேற்குப் பருவமழைக் காற்று எனப்படுகிறது. நில மற்றும் கடல் வெப்ப மாற்றத்தால், இது மேலும் வலுவடைந்து, வடகிழக்குப் பருவக் காற்றைப் பின்னுக்குத் தள்ளி முன்னேறிச் செல்லும்.
குளிர் காலத்தில், இடை வெப்ப ஒருங்கிணைப்பு மண்டலம் (Inter-Tropical Convergence Zone) தெற்கு நோக்கி நகரும். மேலும், வெப்ப மாற்றம் குறைவதால், நில மற்றும் கடல் வெப்பம் குறையும்.
எனவே, வடகிழக்குப் பருவமழை வலிமை பெற்று, டிசம்பர் மாதத்தில் உச்ச நிலையை அடையும். வடகிழக்குப் பகுதியிலிருந்து இம்மழை பெய்யும். மேலும், வடகிழக்கு இந்தியா, அந்தமான் மற்றும் தமிழ்நாட்டின் சில பகுதிகளிலும் பெய்யும்.
தென்மேற்குப் பருவமழையைப் பாதிக்கும் காரணிகள்
முதல் நிலை: வெய்யிலால், நிலம் மற்றும் நீர் நிலைகளில் வெப்ப மாற்றம் ஏற்படும். இது, நிலத்தின் மீது குறைந்த அழுத்தத்தையும், கடல் மீது அதிக அழுத்தத்தையும் ஏற்படுத்துவதால், காற்று வீசத் தொடங்கும். ஆனால் இரவு நேரத்தில் அது தலைகீழாக மாறும்.
இரண்டாம் நிலை: இடை வெப்ப ஒருங்கிணைப்பு மண்டலம் (Inter-Tropical Convergence Zone) வடக்கு நோக்கி, கங்கைச் சமவெளிக்கு மேல் இடம் பெயர்வதால், குறைந்த காற்றழுத்தம் உருவாகி, தென்மேற்குப் பருவக் காற்றை, நாட்டின் உட்பகுதிக்கு இழுக்கும்.
மூன்றாம் நிலை: இந்தியப் பெருங்கடலுக்கு 20 டிகிரி தெற்கே, மடகாஸ்கர் தீவின் கிழக்குப் பகுதியில் உயரழுத்தம் உருவாதல். இந்த உயரழுத்தப் பகுதியின் தீவிர நிலையால் இந்திய மழைக்காலம் பாதிக்கப்படுகிறது.
நான்காம் நிலை: கோடையில் திபெத் பீடபூமி அதிகமாகச் சூடேறுதல். இதனால், கடல் மட்டத்தில் இருந்து 9 கி.மீ. உயரம் காற்று எழுவதால், வலுவான காற்றழுத்தம் உண்டாகிறது.
ஐந்தாம் நிலை: இமயமலையின் வடக்கில் மேற்கு நோக்கிய வளிமண்டல ஜெட் ஸ்ட்ரீம் இயக்கம் மற்றும் இந்தியத் தீபகற்பத்தின் மீதான கிழக்கு நோக்கிய வெப்ப மண்டல ஜெட் ஸ்ட்ரீம் இருப்பதால், ஐந்தாம் நிலை உருவாகிறது.
இந்தக் காரணிகளால் இந்தியாவில் குறைந்த அழுத்தம் ஏற்படுவதால், தென்மேற்குப் பருவமழை வலுவடைகிறது. அதன் பிறகு, தென்மேற்குப் பருவக்காற்று உருவாகி நிலத்தை நோக்கி வீசத் தொடங்கும்.
தென்மேற்குப் பருவமழை உருவாதல்
இந்தியப் பெருங்கடலின் தெற்கே வீசும் தென்கிழக்குப் பருவக்காற்று, பூமத்திய ரேகையைக் கடக்கும் போது, புவிச் சுழற்சியால் திசைமாறி, தென்மேற்குப் பருவக்காற்றாக மாறுகிறது.
பூமத்திய ரேகையைக் கடந்த இப்பருவக் காற்று, அரபிக்கடல் மற்றும் வங்காள விரிகுடா என, இரண்டு கிளைகளாகப் பிரிகிறது. அரபிக்கடல் கிளை, மேற்குக் கடற்கரைப் பகுதிகளில் மழையைத் தருகிறது. வங்காள விரிகுடா கிளை, மேற்கு வங்கக் கடற்கரை மற்றும் ஷில்லாங் பீடபூமியின் தெற்குச் சரிவைத் தாக்குகிறது.
ஜூன் 1 இல், தென்மேற்குப் பருவமழை கேரளத்தில் நிலை கொள்ளும். பிறகு, ஜுலை 15 இல் இந்தியா முழுமைக்கும் மழையைக் கொடுக்கும். பருவக்காற்று தொடங்குவதால் நாட்டில் வானிலை மாற்றங்கள் ஏற்படுகின்றன.
அதிக வெப்பம், அதிக ஈரப்பதம், தீவிர மேக மூட்டம், வலுவான காற்றுடன் மிதமான மற்றும் கனமழை பெய்வதன் மூலம், பருவகால மாற்றங்களை வகைப்படுத்தலாம்.
ஜுலை முதல், இடை வெப்ப ஒருங்கிணைப்பு மண்டலம் (Inter-Tropical Convergence Zone) படிப்படியாக பூமத்திய ரேகைக்குத் தெற்கே நகரத் தொடங்கும். மேலும், காற்றின் திசை முழுமையாக மாறி விடும்.
இந்தியாவில் ஜுன் முதல் தொடங்கி, செப்டம்பர் பாதிவரை, 100-120 நாட்கள் பருவமழை நீடிக்கும். பருவக்காற்று, திடீர் மழையுடன் பல நாட்கள் நீடிக்கும்.
இதனால், கண்டம் விரைவாகக் குளிர்வதால், வடக்கு மத்திய ஆசியாவிலும், இந்தியாவின் சிறு பகுதியிலும் அழுத்தம் அதிகமாகும். இப்போது கண்டத்தின் மீதுள்ள உலர்ந்த குளிர்க்காற்று, கடலை நோக்கி வீசி வறண்ட பருவமழைக் காலத்தை, அதாவது, வடகிழக்குப் பருவமழையை உருவாக்கும்.
இந்த மழைப் பொழிவு, வங்காள விரிகுடாவில் இருந்து வரும் காற்று, தென்சீனக் கடலில் இருந்து வரும் காற்று ஆகியவற்றின் கூட்டு விளைவாகும்.
மே மாதத் தொடக்கத்தில் வங்காள விரிகுடாவில் பருவமழை பெய்யும். இது, ஜூனில் இந்தியாவுக்கு வந்து, பிறகு, தென்சீனக் கடலுக்குச் செல்லும். செப்டம்பர் தொடக்கத்தில், பருவமழை குறையத் தொடங்கும். அக்டோபர் நடுவில், இது தீபகற்பத்தின் வடக்குப் பகுதியிலிருந்து முற்றிலும் விலகும்.
டிசம்பர் முதல் வாரத்தில் இருந்து ஜனவரி முதல் வாரம் வரை வடக்கிலிருந்து தெற்கில் திரும்பச் செல்லும். இது, குளிர்காலத் தொடக்கமாகும்.
பருவமழை, அரபிக்கடலிலும், வங்காள விரிகுடாவிலும் நகரும். அதே சமயம் ஈரப்பதத்தையும் பெறும். இந்தப் பருவக் காற்றுகள் அக்டோபரில் இந்தியாவின் தென் மாநிலங்களை அடைந்து, இரண்டாம் சுற்றில் மழையைத் தரும்.
இது, குளிர்காலப் பருவம் எனப்படும். ஜனவரி முதல் வாரத்தில், கர்நாடகம், தமிழ்நாடு, கேரளம் மற்றும் ஆந்திரத்தில் குளிர்காலப் பருவமழை தொடங்கும்.
குளிர் காலத்தில், இமயமலைக்குத் தெற்கே வெப்ப மண்டலக் கிழக்கு ஜெட் ஸ்ட்ரீம் வீசும். இது, மத்திய தரைக் கடற்கரையில் இருந்து வீசி, வட இந்தியப் பகுதியில் குளிர்ந்த மழையை உருவாக்கும். இதைப் போல, பருவமழை மாதங்களில் மத்திய இந்தியாவில் வெப்ப மண்டல ஈஸ்டர் ஜெட் ஸ்ட்ரீம் அமைந்துள்ளது.
கோடையில், திபெத் பீடபூமியிலும், மத்திய ஆசியாவிலும் வெப்பம் அதிகமாக இருக்கும். இது, இந்தியாவில் ஜெட் உருவாக உதவும். இந்த ஜெட் ஸ்ட்ரீம் இந்தியாவின் கிழக்குக் கடற்கரையில் பரவலான மழைப் பொழிவை ஏற்படுத்தும்.
முனைவர் சா.ஆனந்த், ஈரோடு பவானிசாகர் வளங்குன்றா நீருயிரி வளர்ப்பு மையம், பவானிசாகர் – 638 451. ம.முகேஷ் கண்ணா ஸ்ரீ.ஜெயப்பிரகாஷ் சபரி, டாக்டர் எம்ஜிஆர் மீன்வளக் கல்லூரி, பொன்னேரி.
சந்தேகமா? கேளுங்கள்!