My page - topic 1, topic 2, topic 3

இன்றைய கன்றே நாளைய பசு!

செய்தி வெளியான இதழ்: 2018 அக்டோபர்.

ன்றைய கன்றுகள் தான் நாளைக்குப் பசுக்களாக, காளைகளாக மாறப் போகின்றன. எனவே, கன்றுகளை மிகுந்த கவனத்துடன் வளர்க்க வேண்டும். பசுவின் சராசரி சினைக்காலம் 285 நாட்கள். எருமையின் சினைக்காலம் 300 நாட்கள்.

கறவை மாடுகளுக்குச் சினை ஊசியைப் போட்ட நாளைக் குறித்து வைத்துக் கொண்டால், இந்த மாடுகள் ஈனப் போகும் நாளைக் கணக்கிட்டுக் கொள்ளலாம். சினை ஊசியைப் போட்ட நாளிலிருந்து மூன்று மாதம் பின்னோக்கிக் கணக்கிட்டு, அத்துடன் ஒரு வாரத்தைக் கூட்டினால், பசு மாடுகள் ஈனப் போகும் நாள் தோராயமாகத் தெரியும்.

எடுத்துக்காட்டாக, ஏப்ரல் முதல் தேதியில் ஒரு பசுவுக்குச் சினை ஊசியைப் போட்டால், மூன்று மாதம் பின்னோக்கிச் செல்லும் போது ஜனவரி மாதம் வரும். அத்துடன் ஒரு வாரத்தைக் கூட்டிக் கொண்டால் ஜனவரி முதல் வாரத்தில் அந்தப் பசு ஈன்று விடும்.

எருமைகளுக்கு இரண்டு மாதங்கள் பின்னோக்கிச் செல்ல வேண்டும். அதாவது, மார்ச்சில் சினை ஊசியைப் போட்டால், ஜனவரி மாதம் கணக்கு வரும். அத்துடன் ஒரு வாரத்தைச் சேர்த்தால், ஜனவரி முதல் வாரத்தில் அந்த எருமை ஈன்று விடும்.

பிறந்த 12 மணி நேரத்தில் சீம்பாலைக் கன்று குடித்தால் தான் அதிலுள்ள சத்துகளும், நோயெதிர்ப்பு அணுக்களும் கன்றின் உடலில் முழுதாகச் சேரும். காலம் கடந்தால் இவற்றை உறிஞ்சும் தன்மையைக் கன்றின் குடல் இழந்து விடும்.

கிராமங்களில் பாலைக் கறப்பதற்கு முன், கன்றைப் பால் குடிக்க விடுவது வழக்கம். ஒரு சிலர் பாலைக் கறந்த பிறகு கன்றைக் குடிக்க விடுவார்கள். முதலில் வரும் பாலில் 1-2 சதம் கொழுப்புச் சத்து இருக்கும்.

கறவையின் நடுவில் வரும் பாலில் 3-4 சதம் கொழுப்புச் சத்து இருக்கும். கடைசிப் பாலில் 10 சதம் கொழுப்புச் சத்து இருக்கும். எனவே, பாலைக் கறப்பதற்கு முன் கன்றைக் குடிக்க விடுவதே நல்லது.

வாய்க்காணை அல்லது கோமாரி என்னும் தொற்று நோயால் பாதிக்கப்பட்டு உள்ள தாய்ப்பசுவின் மடியில் கன்றைக் குடிக்க விடக்கூடாது. ஏனெனில், தாயிடமுள்ள நோய்க் கிருமிகள் பாலின் வழியாகச் சென்று, கன்றின் இதயத்தைத் தாக்கும். இதனால், கன்று உடனே இறந்து விடும்.

இந்த நேரத்தில், காய்ச்சிய பாலைத் தான் கன்றுக்குத் தர வேண்டும். குடற் புழுக்களால் ஏற்படும் பாதிப்பைத் தடுக்க, கன்று பிறந்த இரண்டு நாளில் குடற்புழு நீக்க மருந்தைத் தர வேண்டும். பிறகு, மாதம் ஒருமுறை என, ஆறு மாதங்கள் வரை தர வேண்டும். இந்த மருந்தை, கால்நடை மருத்துவரின் ஆலோசனைப்படி தான் தர வேண்டும்.

நாட்டின மாடுகள் குறைந்து கலப்பின மாடுகள் பெருகியுள்ள நிலையில், கன்றுகள் இறப்பது தவிர்க்க முடியாததாக உள்ளது. இதனால், விவசாயிகளுக்குப் பொருளாதார இழப்பு உண்டாகிறது. குறிப்பாக, எருமைக் கன்று இறந்தால், தாயின் பால் சுரப்பு, பெருமளவில் குறைந்து விடுகிறது.

கன்றுகள் இறப்பு என்பது, பருவக்காலம், சீம்பால் கிடைக்காமல் போதல், குடற் புழுக்கள், தீவனம், கறவை மாடுகளின் இனம் போன்றவற்றால் நிகழ்கிறது. மழை பெய்யும் போது தொழுவத்தில் ஏற்படும் ஈரக்கசிவு, சுத்தமற்ற தொழுவம், மழைக் காலத்தில் இயற்கையாகவே கன்றுகளுக்கு ஏற்படும் நோயெதிர்ப்புக் குறைவு போன்றவையும் கன்றுகள் இறப்புக்குக் காரணமாகின்றன.

பாலை விடச் சீம்பாலில் பன்மடங்கு நோயெதிர்ப்பு ஆற்றல் உள்ளது. சீம்பாலைத் தராமல் வளர்க்கப்படும் கன்றுகள் நோயெதிர்ப்பு சக்தியின்றி இறக்கின்றன.

தடுப்பு மருந்தைத் தராத நிலையில், கன்றுகளின் குடலில் வளரும் புழுக்கள் பலவாகப் பெருகி, சத்துகளை உறிஞ்சி நலிவடையைச் செய்வதால், நாளடைவில் கன்றுகள் இறந்து விடுகின்றன.

கன்றுகளுக்குத் தீவனம் அளிக்கிறோம் என்னும் நம்பிக்கையில், நேரடியாக மாட்டுத் தீவனத்தைத் தருவதும், தேவைக்கு அதிகமாக அல்லது குறைவாகப் பாலைக் கொடுப்பதும், கன்றுகள் இறப்புக்கு வழியாகி விடுகின்றன. வெளிநாட்டு மாடுகளின் இரத்த அளவு 50%க்கு மேல் கூடக்கூட, கன்று இறப்பும் கூடுகிறது.

வெய்யில் காலத்தில் தருவதைப் போல இரண்டு மடங்கு வைட்டமின் ஏ, மழைக் காலத்தில் கன்றுகளுக்குத் தேவை. ஆனால், மழைக் காலத்தில் சுரக்கும் சீம்பாலில் இந்தச் சத்து குறைவாகவே இருப்பதால் கன்றுகள் எளிதில் நோய்க்கு உள்ளாகின்றன.

ஆகையால், இந்தக் காலத்தில் கன்றுத் தீவனத்தில் வைட்டமின் ஏ-யைக் கூடுதலாகத் தர வேண்டும். மருத்துவரின் ஆலோசனைப்படி வைட்டமின் ஏ-யை ஊசி மூலம் செலுத்தலாம். தொழுவத்தில் ஈரக்கசிவு இருக்கக் கூடாது. சாணம், சிறுநீர் போன்ற கழிவுகளை உடனே அகற்ற வேண்டும்.

மாடுகளுக்கு நான்கு வயிற்றறைகள் இருந்த போதும், கன்று பிறந்ததும் அதன் வயிறு, ஒரு வயிறு விலங்கின் வயிற்றைப் போலவே செயல்படுகிறது. எனவே, கன்றின் எடையில் பத்தில் ஒரு பங்குப் பாலை அதற்குத் தர வேண்டும். அது வளர வளர, பாலைப் படிப்படியாக நிறுத்தி, கன்றுத் தீவனத்தைத் தர வேண்டும். மூன்றாம் வாரம் முதல் இந்தத் தீவனத்தைத் தரலாம். மாட்டுக்கான தீவனத்தை நேரடியாகத் தரக்கூடாது.

மாடுகளுக்குச் சினை ஊசியைப் போடும் போது, அது எந்த இனத்தின் விந்து என்பதை, கால்நடை மருத்துவரிடம் கேட்டுத் தெரிந்து கொள்ள வேண்டும். பிறகு, அந்த ஊசியில் பிறந்த கன்று, கிடேரிக் கன்றாக இருந்தால், அது வளர்ந்து சினைக்கு வரும் போது, அதே இனத்தின் விந்தைச் செலுத்தலாம். இதனாலும் கன்றுகள் இறப்புக் குறையும்.

கன்றுகள் இறப்பதால் பால் உற்பத்திக் குறைகிறது. கிடேரிக் கன்றுகள் இறந்தால், பசுக்கள் உருவாவது குறையும். காளைக் கன்றுகள் இறந்தால் உழவு மாடுகள் உருவாவது குறையும்.

எப்படிப் பார்த்தாலும், கன்றுகள் இறப்பு, பொருளாதார இழப்பையே ஏற்படுத்தும். அதனால், கன்றுகளைக் கவனமாகப் பேணுவோம்; பொருளாதார உயர்வை அடைவோம்.


டாக்டர் வி.இராஜேந்திரன், மேனாள் இணை இயக்குநர், கால்நடைப் பராமரிப்புத் துறை, நத்தம், திண்டுக்கல் – 624 404.

Share:

  சந்தேகமா? கேளுங்கள்!  

 

இன்னும் படியுங்கள்!

Enable Notifications OK No thanks