செய்தி வெளியான இதழ்: 2018 அக்டோபர்.
இரத்தக் கழிச்சல் நோய், இறைச்சிக் கோழிகள் மற்றும் நாட்டுக் கோழிகளை, நேரடியாகவும் மறைமுகமாகவும் தாக்கி, பொருளாதார இழப்பை ஏற்படுத்தும். நேரடியாகத் தாக்கி இறப்பை ஏற்படுத்தும் இந்நோய், செரிக்கும் தன்மையைக் குறைத்து, கோழிகளின் எடை மற்றும் நோய் எதிர்ப்புத் திறனைத் குறைத்து, பல நோய்கள் ஏற்பட மறைமுகக் காரணமாகிறது.
பண்ணை அமைப்பு மற்றும் தட்பவெப்பச் சூழ்நிலை தான் இந்நோய் பரவுவதைத் தீர்மானிக்கும். பண்ணையில் காற்றோட்டம் இல்லாமல் இருத்தல், மழைச்சாரல் கொட்டகைக்குள் விழுதல் ஆகியவற்றால் ஈரமாகும் பண்ணைக் கூளம், ஐமீரியா என்னும் இரத்தக் கழிச்சல் நோய்க்கிருமி வளர்வதற்கு ஏற்றதாகி விடுகிறது. கோடை மழையால், வெப்பமும், ஈரப்பதமும் பண்ணையில் கூடினாலும் இரத்தக் கழிச்சல் ஏற்படும்.
நோய்க்காரணி
புரோட்டோசோவா என்னும் ஓரணு வகை ஐமீரியாக்களே இந்நோய்க் காரணிகள். இப்படி, கோழிகளைத் தாக்கும் 11 வகை ஐமீரியாக்கள் கண்டறியப் பட்டுள்ளன. அவற்றுள் ஐ.டெனல்லா பெருங்குடலையும், ஐ. நெகாட்ரிக்ஸ், ஐ. அசொரிளினா, ஐ. மாக்ஸிமா ஆகியன சிறுகுடலையும் தாக்கும்.
இக்கிருமிகள் ஊசிஸ்ட் என்னும் கடின முட்டைகளாக, கோழிகளின் குடலில் இருந்து வெளிவரும். இவை ஆறு மாதங்களுக்கு மேல் வெய்யில் மற்றும் மழையால் பாதிக்கப்படாமல் இருக்கும். கோழிகள் இந்த முட்டைகளை மீண்டும் உண்ணும் போது இரத்தக் கழிச்சல் உண்டாகும்.
நோய்க்கான சூழல்கள்
3-6 வார வயதுள்ள குஞ்சுகள். சத்துக் குறையுள்ள கோழிகள். ஈரமான கூளம். போதிய இடவசதி இல்லாமல், குறைந்த இடத்தில் அதிகக் கோழிகளை வளர்த்தல். மழை மற்றும் வெய்யில்.
பரவும் முறை
ஏற்கெனவே நோயுற்ற கோழிகளின் எச்சம். கொட்டகையின் கூளம், நீர்க் குழாய்கள் மற்றும் சுத்தமில்லாத தீவன மற்றும் குடிநீர்க் கலன்கள். நோயுள்ள அடுத்த பண்ணைத் தீவனம், மனிதர்கள், வாகனங்கள், பறவைகள். நோயால் இறந்த கோழிகளை முறைப்படி அகற்றாமல் இருத்தல் மற்றும் அந்தக் கோழிகளை மற்ற கோழிகள் கொத்துதல். நோயுள்ள பண்ணைக் கூளத்தைச் சரியான முறையில் அகற்றாமல் இருத்தல்.
நோய் அறிகுறிகள்
கோழிகள் பசியின்றி இருத்தல் மற்றும் அதிகமாக இறத்தல். கோழிகளின் உடலில் நீர் வறட்சி ஏற்படுதல் மற்றும் கோழிகள் குறுகி அமர்தல். உடல் சோர்தல் மற்றும் மெலிதல். குறைவாக உண்ணுதல். கோழிக் கொண்டை வெளிர்தல். சளி அல்லது இரத்தம் தோய்ந்த செரிக்காத எச்சம். குடல் புண்கள் மற்றும் சிறுகுடல் அல்லது பெருங்குடலில் செரிக்காத உணவுடன் இரத்தம் கலந்திருத்தல்.
தடுப்பு முறைகள்
பண்ணையின் பக்கச்சுவர் 1.5 அடிக்கு மிகாமல் இருக்க வேண்டும். பண்ணையின் நீளவாட்டம் கிழக்கு மேற்காக இருக்க வேண்டும். இதனால் நல்ல காற்றோட்டம் கிடைக்கும்.
பண்ணையில் எப்போதும் கூளம் ஈரமில்லாமல் இருத்தல். மழைக் காலத்தில் கூளத்தின் உலர் தன்மையைப் பாதுகாக்க, தென்னைக் கழிவு அல்லது மரத்தூளை ஆழ்கூளத்தில் கலந்து கூளத்தின் நீர் உறிஞ்சும் தன்மையைக் கூட்டி, கூளம் கெட்டியாகாமல் பார்த்துக் கொள்தல்.
காலை மாலையில் நன்கு கிளறி விட்டு, கூளம் கெட்டியாவதைத் தவிர்த்தல். கோழிகளின் வயதுக்கு ஏற்ப போதிய இடவசதி அளித்தல். இரத்தக் கழிச்சல் ஏற்பட்டால், கால்நடை மருத்துவர் மூலம் உடனடியாக சிகிச்சை அளித்தல். பண்ணையைச் சுத்தமாக வைத்திருத்தல்.
க.அருளானந்தம், பா.பாலமுருகன், உழவர் பயிற்சி மையம், தேனி.
சந்தேகமா? கேளுங்கள்!