My page - topic 1, topic 2, topic 3

தொழில் துறையில் பயன்படும் முருங்கை!

முருங்கை

முருங்கையின் தாயகம் இந்தியா. இதில் பல்வேறு சத்துகளும், மருத்துவக் குணங்களும் அடங்கி உள்ளன. இதன் இலை, தோல் எரிச்சல் மற்றும் கொப்புளங்களுக்கு மருந்தாகும். இலைச்சாறு, இரத்தழுத்தம் மற்றும் இரத்தச் சர்க்கரையைச் சமப்படுத்தும், குடற் புழுக்களை அழிக்கும்.

இந்த இலைச்சாறுடன் கேரட் சாற்றைக் கலந்து குடித்தால் சிறுநீரக நோய்கள் குணமாகும். இதைப்போல, பூ, காய் மற்றும் வேரிலும் மருத்துவக் குணங்கள் நிறைவாக உள்ளன. நூறு கிராம் முருங்கைக் கீரையில், 1-3 வயதுக் குழந்தைகளுக்குத் தேவையான எல்லாச் சத்துகளும் உள்ளன.

100 கிராம் கீரை, 100 கிராம் காயில் உள்ள சத்துகள்

ஈரப்பதம்: கீரையில் 75 கிராம், காயில் 86.9 கிராம்.

புரதம்: கீரையில் 6.7 கிராம், காயில் 2.5 கிராம்.

கொழுப்பு: கீரையில் 1.7 கிராம், காயில் 0.1 கிராம்.

மாவு: கீரையில் 13.4 கிராம், காயில் 3.7 கிராம்.

கால்சியம்: கீரையில் 440 மி.கி., காயில் 30 மி.கி.

மக்னீசியம்: கீரையில் 24 மி.கி., காயில் 24 மி.கி.

பாஸ்பரஸ்: கீரையில் 70 மி.கி., காயில் 110 மி.கி.

பொட்டாசியம்: கீரையில் 25.9 மி.கி., காயில் 25.9 மி.கி.

காப்பர்: கீரையில் 1.1 மி.கி./கிராம், காயில் 3.1 மி.கி./கிராம்.

இரும்பு: கீரையில் 7 மி.கி., காயில் 5.3 மி.கி.

சல்பர்: கீரையில் 137 மி.கி., காயில் 137 மி.கி.

வைட்டமின் LU: கீரையில் 11,300, காயில் 184.

தயமின்: கீரையில் 0.06 மி.கி., காயில் 0.05 மி.கி.

ரைபோபிளேவின்: கீரையில் 0.05 மி.கி., காயில் 0.07 மி.கி.

நிக்கோட்டிக் அமிலம்: கீரையில் 0.8 மி.கி., காயில் 0.2 மி.கி.

வைட்டமின் சி: கீரையில் 220 மி.கி., காயில் 120 மி.கி.

தொழில்துறைப் பயன்கள்

எண்ணெய்: முருங்கை விதையில் இருந்து 42 சதம் எண்ணெய் கிடைக்கும். இது உராய்வு எண்ணெய்யாக, சமையல் எண்ணெய்யாகப் பயன்படுகிறது. வாசனைத் திரவியம் தயாரிக்க உதவுகிறது. இதில் 70 சதம் ஒயிலிக் அமிலம் உள்ளது. மற்ற சமையல் எண்ணெய்களில் 40 சதம் ஒயிலிக் அமிலம் உள்ளது.

நீர்த்தூய்மை: முருங்கை விதைப் புண்ணாக்கு நீரைச் சுத்தம் செய்ய உதவுகிறது. இதிலுள்ள பாலி எலக்ட்ரோலைட், படிமங்கள் மற்றும் தூசியை நீரின் அடியில் படிய வைக்கிறது. இது இயற்கையாகக் கிடைக்கும் பொருள் என்பதால், குடிநீரைச் சுத்தம் செய்யலாம்.

வீழ்படிவை உண்டாக்கிச் சமையல் எண்ணெய்யைச் சுத்தம் செய்யலாம். இப்போது அசுத்த நீரையும் இது சுத்தம் செய்யும் எனத் தெரிய வந்துள்ளது. ஒரு லிட்டர் நீரைச் சுத்தப்படுத்த ஒரு விதை போதும்.

எரிவாயு தயாரித்தல்: முருங்கை மரத்தை அரைத்து நீரில் கலந்து வடிகட்டும் போது கிடைக்கும் வடிபொருளில் 81 சதம் மீத்தேன் உள்ளது. ஒரு கிலோ வடிபொருளில் இருந்து 580 லிட்டர் மீத்தேன் வாயு கிடைக்கும். எனவே, எதிர் காலத்தில் இது, சிறந்த மாற்று எரிபொருளாகப் பயன்படும்.

கீரைப்பொடி: முருங்கைக் கீரைப்பொடி, மாத்திரையாகத் தயாரிக்கப் படுகிறது. சாம்பார்த் தூள் தயாரிப்பிலும் பயன்படுகிறது. இக்கீரை சிறந்த உணவாகப் பயன்படுகிறது. இப்படி, பல்வேறு சத்துகளுடன் கூடிய தொழில் துறை மூலப் பொருளாகவும் பயன்படுவதால், எதிர்காலத்தில் இதன் தேவை அதிகமாகும்.


முனைவர் மு.சுகந்தி, முனைவர் கரு.பசுபதி, முனைவர் த.பாலசுப்பிரமணியம், கால்நடை அறிவியல் முதுகலை ஆராய்ச்சி நிலையம், காட்டுப்பாக்கம், செங்கல்பட்டு மாவட்டம்.

Share:

  சந்தேகமா? கேளுங்கள்!  

 

இன்னும் படியுங்கள்!

Enable Notifications OK No thanks