தமிழ்நாட்டு வெள்ளாடுகள்!

வெள்ளாடு

செய்தி வெளியான இதழ்: 2018 ஆகஸ்ட்.

ந்திய கிராமப் பொருளாதாரம் கால்நடை வளர்ப்பைப் பெரிதும் சார்ந்துள்ளது. கிராமங்களில் குறு, சிறு மற்றும் நடுத்தர விவசாயிகள், நிலமற்றவர்கள் குறைந்தளவில் வெள்ளாடுகளை வளர்த்து வருகின்றனர். தற்போது, பண்ணையாக வைத்து வளர்க்கும் அளவில், வெள்ளாடு வளர்ப்பு இலாபமுள்ள தொழிலாக வளர்ந்துள்ளது.

குறைந்த முதலீட்டில் இத்தொழிலைச் செய்யலாம். பணம் தேவைப்படும் போது ஆடுகளைச் சந்தையில் விற்று விடலாம். அதனால் தான் வெள்ளாடுகளை, ஏழைகளின் நடமாடும் வங்கி என்கிறோம். வெள்ளாட்டை ஏழைகளின் பசு என்றும் சொல்லலாம்.

பாரதி குறிப்பிட்டதைப் போல, அண்டிப் பிழைக்கும் ஆட்டை ஆதரிக்க வேண்டும். வெள்ளாடுகள் பெருகி வருவதன் மூலம், இறைச்சித் தேவையை ஓரளவுக்குச் சரிக்கட்ட முடிகிறது.

வெள்ளாடுகளால் ஏற்படும் நன்மைகள்

ஆண்டு முழுவதும் வேலைவாய்ப்புக் கிடைக்கிறது. ஒன்றுக்கு மேற்பட்ட குட்டிகள் பிறப்பதால் அதிக இலாபம் கிடைக்கிறது, ஆட்டுப்பாலில் உள்ள கொழுப்பும் புரதமும் எளிதில் செரிக்கும். இதிலுள்ள வைட்டமின் பி, அயர்ச்சி மற்றும் மலச்சிக்கலுக்கு மருந்தாகப் பயன்படுகிறது.

இறைச்சியை உண்பதில் எந்த மதக் கட்டுப்பாடும் இல்லை. ஒரு வெள்ளாட்டில் இருந்து கிடைக்கும் சாணமும் சிறுநீரும், அரை ஏக்கர் நிலத்தை வளமாக்கும் உரமாகும்.

வெள்ளாடுகளுக்கு நோயெதிர்ப்புத் திறன் மிகுதி. அதனால், நோய்ப் பாதிப்பு குறைவு. குறைந்த தீவனத்தில் சிறந்த உற்பத்தியைக் கொடுக்கும். எடுத்துக் காட்டாக, பசுவின் ஒருநாள் உணவில், ஐந்தில் ஒரு பாகம், எருமையின் ஒருநாள் உணவில், எட்டில் ஒரு பாகம், ஒரு வெள்ளாட்டுக்குப் போதும்.

வெள்ளாடுகளின் வகைகள்

வெள்ளாடுகளில் பல்வேறு இனங்கள் உள்ளன. எளிதில் அடையாளம் காணத்தக்க தோற்றம் மற்றும் குணங்களில் வெவ்வேறு பகுதிகளில் இந்த ஆடுகள் உள்ளன. ஒவ்வொரு இனத்தின் பெயரும், வாழும் பகுதி மற்றும் நிறத்தை அடிப்படையாகக் கொண்டுள்ளது.

இந்தியாவில் ஏறத்தாழ இருபது வெள்ளாட்டு இனங்கள் உள்ளன. இவற்றில் பெரும்பாலான இனங்கள் இறைச்சிக்காகத் தான் வளர்க்கப் படுகின்றன. அவற்றில், தமிழ்நாட்டு வெள்ளாட்டு இனங்களைப் பற்றிப் பார்ப்போம்.

கன்னி ஆடு

கன்னி ஆடுகள் தமிழ்நாட்டின் விருதுநகர் மாவட்டத்தில் சாத்தூர் மற்றும் சிவகாசி வட்டங்களிலும், தூத்துக்குடி மாவட்டத்தில் கோவில்பட்டி, விளாத்திக்குளம் வட்டங்களிலும், கரிசல் மண் மற்றும் குன்றுகள் நிறைந்த பகுதிகளிலும் இருக்கும்.

கிடா ஆடு 50 கிலோவும், பெட்டை 30 கிலோவும் இருக்கும். உடல் முழுவதும் கறுப்பாகவும், முன் தலை மற்றும் காதுகளில் இரண்டு வெள்ளைக் கோடுகளும் இருக்கும். அடிவயிறு, கால்களின் உட்பகுதி, கால் குளம்புகளின் மேல்பகுதி வெள்ளையாக இருக்கும்.

இந்த ஆடுகளைப் பால்கன்னி என்றும், வெண்மைக்குப் பதில் சிவப்பாக இருந்தால் செங்கன்னி என்றும் அழைக்கலாம். ஒரு ஈற்றில் இந்த ஆடு 2-4 குட்டிகளை ஈனும்.

இவை, உயரமாக, அதாவது 85 சென்டி மீட்டர் உயரம் இருக்கும். கன்னி ஆடுகள் தேவைப்பட்டால், திங்கள் கிழமை தோறும் தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியில் நடக்கும் வாரச் சந்தையில் வாங்கலாம்.

கொடி ஆடு

கொடி ஆடுகள் திருநெல்வேலி, தூத்துக்குடி மாவட்டப் பகுதிகளிலும், அதையொட்டிய இராமநாதபுரத்திலும் உள்ளன. உயர்ந்து நீண்ட கழுத்தும், உயர்ந்த காலும், மெலிந்த உடலமைப்பும் கொண்டவை. இந்த ஆடுகள் இரண்டு நிறங்களைக் கொண்டிருக்கும்.

வெள்ளை நிறத்தில் கருமை நிறத்தை அள்ளித் தெளித்ததைப் போல இருந்தால், கரும்போரை அல்லது புல்லைப் போரை என்றும், வெள்ளையில் செந்நிறம் கலந்து இருந்தால் செம்போரை எனவும் அழைக்கப்படும்.

பொதுவாக, போரை ஆடுகள் என அழைக்கலாம். இந்த ஆடுகள் 100 சென்டி மீட்டர் உயரம், கிடா ஆட்டின் எடை 40-70 கிலோ, பெட்டை ஆட்டின் எடை 32 கிலோ இருக்கும். இந்த ஆடுகளுக்குக் கொம்புகள் இருக்கும். கடலோர மாவட்டங்களுக்கு ஏற்ற ஆடுகள்.

சேலம் கறுப்பு

இந்த ஆடுகள் சேலம் மாவட்டத்தின் ஓமலூர், மேச்சேரிப் பகுதிகளில் உள்ளன. உடல் முழுதும் கறுப்பாக இருக்கும். கொம்புகள் பின்னோக்கி வளைந்திருக்கும். ஈற்றுக்கு ஒரு குட்டி தான் போடும். இந்த ஆடுகளை வரை ஆடுகள் என்றும் சொல்லலாம்.

பள்ளை ஆடு

பள்ளை ஆடுகள் மிகவும் குட்டையாக இருக்கும். கால் குட்டையாவும், உடம்பு அகன்றும் இருக்கும். நிறையக் குட்டிகளை ஈனும். சிறிய கொம்புகள் மற்றும் மூலிக் காதுகள் இந்த ஆடுகளின் முக்கிய அடையாளங்கள். இந்த ஆடுகளைக் குள்ள ஆடு, சீனி ஆடு என்றும் சொல்லலாம்.

மோளை ஆடு

ஈரோடு மாவட்டம் கோபிச்செட்டிபாளையப் பகுதி மற்றும் கோபி மற்றும் குன்னத்தூர் வட்டத்தில் மோளை ஆடுகள் உள்ளன. நடுத்தர உயரம், நல்ல சதைப்பற்று, தூய வெள்ளை இந்த ஆடுகளின் அடையாளங்கள். தலைச்சேரி ஆடுகளைப் போல இருக்கும். ஓர் ஈற்றில் 2-4 குட்டிகளை ஈனும். உடல் எடை 30-36 கிலோ இருக்கும்.

தமிழ்நாட்டு இனங்களைத் தவிர, ஜமுனாபாரி, தலைச்சேரி போன்ற வெளி மாநில இனங்களையும் வளர்த்து வருகின்றனர். மேலும், இனம் சாராத வெள்ளாடுகள் நிறையவே உள்ளன. இவற்றைப் பொதுவாக நாட்டு ஆடுகள் என்று கூறலாம்.


வெள்ளாடு JEYAKUMAR

மரு.ம.ஜெயக்குமார், முனைவர் இரா.சரவணன், மரு.ம.மலர்மதி, மரு.ப.கணபதி, நா.முரளி, மரு.பெ.கோபு, கால்நடை மருத்துவக் கல்லூரி, நாமக்கல் – 637 002.

Share:

விவசாயம் / கால்நடை வளர்ப்புக் குறித்து

சந்தேகமா? கேளுங்கள்!


இன்னும் படியுங்கள்!

Discover more from பச்சை பூமி

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading